Latest News :

பாரதிராஜா தலைமையில் புதிய சங்கம்! - அதிர்ச்சியில் கோலிவுட் தயாரிப்பாளர்கள்
Monday August-03 2020

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் தயாரிப்பாளர்களுக்கான சங்கம் இருக்கும் நிலையில், பாரதிராஜா தலைமையில் மற்றொரு தயாரிப்பாளர்கள் சங்கம் ஒன்று உருவாகியுள்ளது. தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரியில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த சங்கம் குறித்து பாரதிராஜா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

 

இது குறித்து பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

கொஞ்சம் வலியோடுதான் தொடங்குகிறேன். பிரசவம் வலி மிக்கதுதான்.  ஆனால் பிறப்பு அவசியமாச்சே.

 

அப்படித்தான் இந்த இன்னொரு முயற்சியும்...  புதிய சங்கத்தின் பிறப்பும் அவசியமாகிறது. 

 

தாய் என்பவள் இன்னொரு உயிரை இவ்வுலகிற்குப் பரிசளிப்பவள். தனக்குள்ளேயே எல்லாவற்றையு வைத்துக் கொண்டிருப்பவள் அல்ல. தாய்க்கு ஒரு பிரசவம் எப்படி வலிக்குமோ அதே வலி பிள்ளைக்கும் இருக்கும். 

 

தாயிலிருந்து இன்னொன்றாய் பிரியும் குழந்தைக்கு உள்ள பெருவலியை இங்கு யாருமே பேசுவதில்லை. அதன் வலியை அப்பிள்ளை வெளிப்படுத்தாதால், அவ்வலியை நாம் உணராமலே போய்விடுகிறோம் . 

 

ஆனாலும் நான் வெளிப்படுத்தத் தெரிந்த குழந்தை. இன்னொரு சங்கம் என்ற குழந்தை முயற்சி எனக்கு வலிக்கவே செய்கிறது. வலிக்க வலிக்கவே பிறக்க வேண்டியதும் அவசியமாகிறது. 

 

கடந்த எனது அறிக்கையில் சக தயாரிப்பாளர்களிடம் கலந்து பேசித்தான் இன்னொரு சங்கம் பற்றி முடிவெடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தேன். 

 

அடிப்படைப் பேச்சு வார்த்தைகளின் போதே செய்திகள் காற்றில் கசியத் தொடங்கி சில கருத்து வேறுபாடுகளைப் பரப்பத் தொடங்கிவிடுகின்றன. 

 

முழுமையான முடிவெடுக்கும் முன் காதுகள் முந்திக் கொண்டுவிடுகின்றன. 

 

இப்போதைய காலகட்டத்தில் இன்னொரு சங்கம் அவசியமாகிறது. 

 

ஒரு மடை அடைத்துக் கொண்டால் இன்னொரு மடையைத் திறப்பது போல்தான் இதுவும். நாம் செயல்பட்டே ஆண்டுகளாகிவிட்டன. 

 

பட வெளியீடுகள், பணம் போட்டவர்களின் அபாய நிலை, எதிர்காலக் கேள்விக் குறி எல்லாவற்றிற்கும் பதில் தேடுவது முக்கியம். 

 

தாய் சங்கத்தை உடைக்கவில்லை. அவள் அப்படியே மெருகுற இருப்பாள். திரை வீட்டின் ஆளுமை அவள்தான். அவளை விட்டு யாரும் எங்கும் போகவில்லை. பிரித்தெடுக்கவும் இல்லை. 

 

இது செயல்பட வேண்டிய காலகட்டம். கொரானாவினால் நுரையீரல் பாதிக்கப்பட்ட சினிமாவை நம் திரையகத்தைச் சார்ந்தவர்களே மருந்து கொடுத்து சரியாக்க வேண்டிய நேரம் இது.

 

கையைப் பிசைந்து கொண்டே இன்னும் எவ்வளவு நாட்கள் காத்திருப்பது? அதனால் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

நிர்வாகிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தறிந்து மற்ற நிர்வாகிகள் குழுவினர் விபரம் பின்னர் அறிவிக்கப்படும். பாரதிராஜாவாகிய எனது தலைமையில் உறுப்பினர் சேர்க்கை இன்றிலிருந்து தொடங்குகிறோம். 

 

இதைப் பிரித்தாள்கிறோம் என யாரும் நினைக்க வேண்டாம். சில முக்கிய முடிவுகளுக்காய் உழைக்க இருக்கிறோம். 

 

நிறைவாக சொல்வதென்றால், இப்பிறப்பின் செயல்பாடுகள்  சினிமாவின் ஆரோக்கியம் கருதியே தொடங்குகிறது! 

 

பிள்ளைகளும், தோழர்களும், இணை வயதினரும், என்னை மூத்தோரும் இந்த அவசியத்தை  இக்கட்டான சூழல் கருதி புரிந்துகொள்ள வேண்டுகிறேன். 

 

இவ்வாறு பாரதிராஜா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News

6864

50 வது வருடத்தில் மீண்டும் படம் இயக்கும் கே.பாக்யராஜ்!
Wednesday January-07 2026

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...

’மெல்லிசை’ படம் பற்றி மனம் திறந்த நடிகர் கிஷோர்!
Tuesday January-06 2026

நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...

’பராசக்தி’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!
Tuesday January-06 2026

டாவ்ன் (Dawn Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில்,  சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘பராசக்தி’...

Recent Gallery