Latest News :

நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘தங்கலான்’ படத்தின் கிளிம்ப்ஸ்!
Wednesday April-17 2024

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ திரைப்படம் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஏப்.17) ‘தங்கலான்’ படத்தின் சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச் செய்யும் விதத்தில் இருப்பதோடு, நடிகர் விக்ரமின் கடுமையான உழைப்பை வெளிக்காட்டும் விதத்தில் அமைந்துள்ளது.

 

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கும் ’தங்கலான்’ திரைப்படம் எப்போது வெளியாகும்? என்ற கேள்வியோ ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் படத்தின் காட்சிகள் கொண்ட சிறப்பு வீடியோ விக்ரம் ரசிகர்களை கொண்டாட வைத்திருப்பதோடு, உலக திரை ரசிர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது.

 

இந்த சிறப்பு கிளிம்ப்ஸ் வீடியோ குறித்து இயக்குநர் பா.இரஞ்சித் கூறுகையில், “தங்கலான் திரைப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று சாகச கதையாக உருவாகி இருக்கிறது. இப்படத்திற்காக. சியான் விக்ரம் முழுமையான ஈடுபாட்டுடன் கூடிய பங்களிப்பை அளித்திருக்கிறார்.  ஒட்டுமொத்த படக்குழுவினரும்  கடினமாக உழைத்திருக்கிறார்கள். இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான  ஜியோ ஸ்டுடியோஸ், எங்கள் தயாரிப்பாளரான ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல் ராஜாவுடன் இணைந்திருப்பதால் நான் மிகவும் உற்சாகமாக உள்ளேன். ஞானவேல் ராஜா இந்த திரைப்படத்தை வழங்குகிறார். இந்தத் திரைப்படம் ஜியோ ஸ்டுடியோஸின்  வலிமையான சர்வதேச திரைத் தொடர்புகளின் பின்னணியால் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை சென்றடையும் என நம்புகிறேன். விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்திற்காக அவர் மேற்கொண்ட கடின உழைப்பை வெளிப்படுத்தவும், அவருடைய அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சியை போற்றவும், படத்தின் மீதான கவனத்தை அதிகரிக்கவும், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைக்கவும், இந்த காணொளியை வெளியிடுகிறோம். மேலும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை இந்த காணொளி அதிகரிக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.

 

தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த நட்சத்திர நடிகரான விக்ரம் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டவர். ஒவ்வொரு படத்திலும் அவர் ஏற்கும் மாறுபட்ட கதாபாத்திரத்திற்காக கொண்டாடப்படுகிறார். சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதை வென்ற சியான் விக்ரம் - ஏழுமுறை ஃபிலிம்ஃபேர் விருதையும் வென்றிருக்கிறார். அவரது சிறந்த நடிப்பிற்காக தமிழ்நாடு மாநில அரசின் விருதுகளையும் ஐந்து முறை வென்றுள்ளார். அர்ப்பணிப்புடன் கூடிய பங்களிப்பு மற்றும் தொழில் முறையிலான அணுகுமுறைக்காக மிகவும் போற்றப்படும் விக்ரமின் நடிப்பில் 'சேது', 'காசி', 'தில்', 'தூள்', 'ஜெமினி', 'சாமி', 'அந்நியன்', 'பிதாமகன்', 'ஐ', 'ராவணன்:, 'தெய்வத்திருமகள்', 'இரு முகன்', 'கோப்ரா', 'மகான்', 'பொன்னியின் செல்வன் 1& 2' ஆகிய படங்களின் மூலம் சர்வதேச அளவில் பிரபலமானவர். 

 

'தங்கலான்' படத்தில் சியான் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி கிருஷ்ணன், அன்புதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸின் ஜோதி தேஷ் பாண்டே மற்றும் ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் நிறுவனத்தின் கே. ஈ. ஞானவேல் ராஜா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். 

 

1900 களின் முற்பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க கோலார் தங்க வயல்களின் ( கே.ஜி.எஃப்) பின்னணியில் அமைக்கப்பட்ட 'தங்கலான்'- நிஜ வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்து அதன் அழுத்தமான கதையம்சத்துடன் பார்வையாளர்களை கவர தயாராகி உள்ளது. தென்னிந்தியாவில் தங்கத்தை ஆராய்வதில் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அழிக்கப்பட்ட பங்களிப்பை விவரிக்கும் ஒரு வரலாற்று சாகச படைப்பாகும்.  இப்படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை பெற்றிருக்கிறது. மேலும் இந்த ஆண்டில் தென்னிந்திய சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வெளியீடுகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. 

 

'தங்கலான்' திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உலக அளவில் திரையரங்குகளில் பிரம்மாண்டமான முறையில் வெளியாகவிருக்கிறது.



Related News

9686

”’ரசாவதி’ படத்தில் அனைத்தும் இருக்கிறது” - இயக்குநர் சாந்தகுமார்
Thursday May-02 2024

சாந்தகுமார் இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான ‘மெளனகுரு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, அப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சாந்தகுமார், திரைப்பட ஆர்வலர்களைக் கவரும் வகையில் தீவிர உணர்ச்சிகளையும்,  யதார்த்தங்களையும் தன்னுடைய திரைமொழியில் திறமையாகக் கையாள்பவராகவும் அறியப்பட்டார்...

”’குரங்கு பெடல்’ எனக்கு மிக முக்கியமான படம்” - நடிகர் காளி வெங்கட் நெகிழ்ச்சி
Thursday May-02 2024

'மதுபானக்கடை', 'வட்டம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய கமலக்கண்ணன் இயக்கத்தில், காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'குரங்கு பெடல்'...

சமூக செயல்பாட்டுக்காக ராகவா லாரன்ஸுடன் கைகோர்த்த எஸ்.ஜே.சூர்யா!
Wednesday May-01 2024

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று பன்முகத்திறனுடன் பயணிக்கும் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்...