Latest News :

ஜெயம் ரவி சொல்வது பொய்யா? - மனைவி ஆர்த்தி ரவி வேதனை அறிக்கை
Thursday September-12 2024

நடிகர் ஜெயம் ரவியும், அவரது மனைவி ஆர்த்தியும் விவாகரத்து பெற போவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியான நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இது தொடர்பாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், தானும், தனது மனைவியும் பரஸ்பரமாக பிரிவதென்று முடிவு செய்திருப்பதாகவும், அதன்படி, குடும்பநல நீதிமன்றத்தின் மூலம் விவாகரத்து கோரியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில், ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், தனது கனவுருடன் பேச முயன்றாலும், அவரை தன்னால் சந்திக்க முடியவில்லை, தனது பிள்ளைகளுடன் தான் வேதனையில் இருப்பதாகவும், அதில் தெரிவித்தவர், விவாகரத்து தொடர்பாக நடிகர் ஜெயம் ரவி தெரிவிக்கும் தகவல்கள் பொய்யானவை, என்பது போலவும் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக ஆர்த்தி ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

சமீபத்தில் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கெளரவம், கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாக உணர்கிறேன்.

 

என் கணவரிடம் மனம் விட்டு பேச, என் கணவரை சந்திக்க வேண்டும் என நான் சமீபகாலமாக பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்து கொண்டிருக்கிறோம். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தைச் சார்ந்தது, அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல.

 

ஆழ்ந்த மன வேதனையில் இருக்கின்ற நிலையிலும் நான் பொதுவெளியில் இது குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவே இப்போதும் விரும்புகிறேன். ஆனால், என் மீது குற்றம் சாட்டியும் என் நடத்தையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் பொதுவெளியில் மறைமுகமாக நடத்தப்படும் தாக்குதல்களை மிகுந்த சிரமத்துடன் எதிர்கொள்ள வேண்டி உள்ளது. ஒரு தாயாக எனக்கு எப்பொழுதும் என் குழந்தைகளின் நலனும், எதிர்காலமுமே முதல் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என் குழந்தைகளை காயப்படுத்துவதை என்னால் அனுமதிக்க இயலாது. மறுக்கப்படாத பொய்கள் காலபோக்கில் உண்மையாக நம்பப்படும் என்பதால் இவற்றை மறுப்பதும் என் முதல் கடமையாகிறது. தற்போது இந்த கடினமான காலகட்டத்தில் என் குழந்தைகளுக்கு தேவைப்படும் தைரியத்தையும், மனோதிடத்தையும் அவர்களுடன் ஒருத்தியாக நின்று அவர்களுக்கு வழங்குவதே என் தலையாய கடமை. காலம் நடந்த உண்மைகளை எந்த பாரபட்சமும் இன்றி உணர்த்தும் என்பதை முழுமையாக நம்புகிறேன். இந்த கடின காலத்தை நானும் என் குழந்தைகளும் கடக்கும் வரை எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

இத்தனை காலமாக எங்களுக்கு ஆதரவு மட்டுமின்றி நல்வழி காட்டி வரும் பத்திரிகை ஊடக மற்றும் ரசிகப் பெருமக்களுக்கு என் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும், ஆதரவும் மட்டுமே என்னையும் என் குழந்தைகளையும் இந்த காலகட்டத்தில் தூணாக காத்து நிற்கும். இந்த சோதனையில் இருந்து நாங்கள் மீண்டு வர உங்கள் பிரார்த்தனைகள் துணை நிற்க வேண்டும் என்று உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

10020

துல்கர் சல்மானை நடிப்பு சக்கரவர்த்தியாக மக்கள் கொண்டாடுவார்கள் - நடிகர் ராணா பாராட்டு
Thursday November-06 2025

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

Recent Gallery