Latest News :

’வேட்டையன்’ மூலம் அடையாளம் பெற முயற்சிக்கும் ‘ஆர்யமாலா’!
Tuesday October-08 2024

’பீச்சாங்கை’ புகழ் நடிகர் ஆர்.எஸ்.கார்த்தி நாயகனாகவும், மனிஷா ஜித் நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘ஆர்யமாலா’. வடலூர் ஜெ.சுதா ராஜலட்சுமி மற்றும் ஜேம்ஸ் யுவன்  தயாரிப்பில், ஜனா ஜாய் மூவிஸ் மற்றும் குழுவினர் மூலம் உருவாகியுள்ள இப்படம் தெருக்கூத்து கலையை மையப்படுத்திய 80-ம் காலக்கட்டத்தில் நடக்கும் கதையாகும். தெருக்கூத்து கலையுடன் ஒரு அழகாக காதல் கதையாகவும் இப்படம் உருவாகியுள்ளது.

 

தமிழ் சினிமாவின் மூத்த ஜாம்பவான் நடிகர்களான பி.யு.சின்னப்பா, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்றோர் நடித்து பிரபலமான ஆர்யமாலா-காத்தவராயன் என்கிற புராண நாடகத்தை பின்னணியாக கொண்டு இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

 

கதாநாயகியை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படத்தில் ஆர்யமாலா என்கிற டைட்டில் கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் மனிஷா ஜித். இவர் சரத்குமார் நடித்த கம்பீரம் படத்தில் அவரது மகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். பின்னர் ’விந்தை’, ’பிழை’ உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து, தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

 

’பீச்சாங்கை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஆர்.எஸ்.கார்த்திக் இந்தப்படத்தில் தெருக்கூத்து கலைஞராக நடித்துள்ளார். மறைந்த பின்னணி பாடகி பவதாரிணி இந்தப்படத்தில் அத்திப்பூவப்போல என்கிற பாடலை பாடியுள்ளார். வரும் அக்டோபர் 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இப்படத்தினை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக பல வித்தியாசமான விளம்பர யுக்திகளை படக்குழு மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

படம் குறித்தும், படத்தின் வெளியீட்டு குறித்தும் நாயகன் ஆர்.எஸ்.கார்த்திக், ““இந்த படத்தில் காதல் என்பது வெறும் பேச்சாக இல்லாமல் கண்கள் பரிமாற்றத்திலேயே நடக்கும். அது தான் இந்த படத்தின் சிறப்பு.  காத்தவராயன் வேஷம் போடும் தெருக்கூத்து கலைஞனாக இதில் நடித்துள்ளேன். ஆச்சரியம் என்னவென்றால் படத்தின் இடைவேளைக்கு பிறகு தான் நான் என்ட்ரி ஆவேன். முதல் பாதி முழுவதும் கதாநாயகியை சுற்றி நிகழும் நிகழ்வுகளும் இடைவேளைக்கு பின் அவரது எண்ணங்களுக்கு உணர்வுகளுக்கு ஆறுதலாக வடிகாலாக எனது கதாபாத்திரமும் உருவாக்கப்பட்டுள்ளது. எனக்கு தெருக்கூத்து கலைஞராக  வேண்டும் என்கிற ஆர்வம் இயல்பிலேயே இருந்தது. அது மட்டுமல்ல சில வீதி நாடகங்கள் மூலமாக தெருக்கூத்தில் நடித்த அனுபவமும் இருந்தது. எனது கதாபாத்திரம் இடைவேளைக்கு பின் தான் வருகிறது என்றாலும் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த கதை வலுவாக இருந்ததாலும் ஒப்புக்கொண்டு நடித்தேன்.

 

படப்பிடிப்பு சமயத்தில் தான் படத்திற்காக பணியாற்ற வந்த தெருக்கூத்து கலைஞர்களிடம் அவர்களுடைய நடை உடை பாவனைகள் குறித்து கொஞ்சம் முழுமையாக பயிற்சி எடுத்துக் கொண்டேன். அதுமட்டுமல்ல இந்த படத்தில் கூத்து கலைஞராக மறைந்த சிவசங்கர் மாஸ்டரும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் நடித்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை. கிராமங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தியபோது குறிப்பாக இந்த ஆர்யமாலா நாடகத்தை நாங்கள் நிஜமாகவே நடத்துகிறோம் என்பதாகவே உணர்ந்து அந்த கிராமத்து மக்கள் அனைவருமே பார்வையாளர்களாக வந்து அமர்ந்து தினசரி எங்களை உற்சாகப்படுத்தியது மகிழ்ச்சியாகவும் ஆச்சரியம் தருவதாகவும் இருந்தது.

 

அக்டோபர் 18 ஆம் தேதி இந்த படம் வெளியாக இருப்பதால் இதன் புரமோஷனின் ஒரு பகுதியாக, அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் பல ஊர்களில் உள்ள திரையரங்குகளுக்கு நான் நடித்துள்ள அதே கூத்துக் கலைஞன் கெட்டப்பிலேயே சென்று இந்த படத்தை பற்றி மக்களுக்கு விளம்பரப்படுத்த முடிவு செய்து இருக்கிறேன். குறிப்பாக அந்த சமயத்தில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் வெளியாகும் என்பதால் அந்த படம் ஓடும் திரையரங்குகள் முன்பாக கூடும் ரசிகர்களிடம் எங்களது ‘ஆர்யமாலா’ படத்தை அறிமுகப்படுத்தும் போது இந்த படம் குறித்து ரசிகர்களுக்கு அழகாக கொண்டு செல்ல முடியும் என நினைக்கிறேன்” என்றார்.

 

ஜெய்சங்கர் ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு செல்வநம்பி இசையமைத்திருக்கிறார். ஹரிஹரன் படத்தொகுப்பு செய்ய, மிரட்டல் செல்வா மற்றும் வீரா சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளனர். தஸ்தா நடனக் காட்சிகளை வடிவமைக்க, சாவிஸ் எஸ்.விஜய்பாபு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார். மக்கள் தொடர்பு பணியை கே.எஸ்.கே.செல்வா கவனிக்கிறார்.

Related News

10097

பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்!
Sunday November-10 2024

தமிழ் சினிமாவில் பிரபல குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்...

ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தொடர்ந்து 3 படங்களில் நடிக்கும் பிரபாஸ்!
Sunday November-10 2024

திரையுலகில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ரிபெல் ஸ்டார் பிரபாஸ் மற்றும் ஹோம்பாலே பிலிம்ஸ் இணைந்து, மூன்று படங்களில் இணைந்து பணியாற்றும் ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளனர்...

KYN தளம் நடத்திய குறும்பட போட்டி! - ரூ.1 லட்சம் பரிசு வென்ற ‘எத்தனை காலம் தான்’
Saturday November-09 2024

செய்திகள், நிகழ்வுகள் மற்றும் பொழுதுபோக்கிற்காக மக்கள் அதிகளவில் டிஜிட்டல் மீடியாக்களை நோக்கி பயணப்பட்டாலும், அவை நம் அருகில் அல்லாத செய்திகளாகவோ, நிகழ்களாகவோ மட்டுமே இருக்கிறது...

Recent Gallery