Latest News :

சினிமாவில் 20 வருடங்களை கடந்த நகுல் முதல் முறையாக காவலர் வேடத்தில் நடிக்கும் ‘தி டார்க் ஹெவன்’!
Tuesday November-05 2024

‘டி2’ பட புகழ் இயக்குநர் பாலாஜி இயக்கத்தில், நகுல் நாயகனாக நடிக்கும் படம் ‘தி டார்க் ஹெவன்’. கோதை எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எம்.எஸ் மீடியா ஃபேக்டரி இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்ச்சி நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், நகுல், இயக்குநர் பாலாஜி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டார்கள்.

 

நடிகராக 20 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நாயகன் நகுல், இப்படத்தின் மூலம் முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்திருப்பது மற்றும் படம் குறித்து நிகழ்ச்சியில் பேசுகையில், “இதில் நான் போலீசாக நடித்திருக்கிறேன். நான் சினிமாவிற்கு வந்து இப்போது தான் முதல் முறையாக இப்படி நடிக்கிறேன். எனவே முதலில் கொஞ்சம் பதற்றமாக இருந்தது. எனக்குச் சின்ன வயதில் இருந்து ராணுவத்தில் சேர வேண்டும் என்று ஆசை. காக்கி யூனிபார்ம் மீது எனக்கு ஒரு காதல் உண்டு. நான் நடிக்க வந்து 20 ஆண்டு ஆகிவிட்டது என்று  இங்கே கூறினார்கள். நன்றி. ஆனால் நான் எதையுமே செய்யாதது போல் இருக்கிறது. இப்போதுதான் ஆரம்பித்தது போல் இருக்கிறது. நான் எந்த ஒரு யோசனையும் இல்லாமல் தான் நடிக்க வந்தேன்.இப்படி நடிக்க வேண்டும் அப்படி நடிக்க வேண்டும் என்றெல்லாம் கனவு அப்போது இல்லை. படிப்படியாக இப்போது 20 ஆண்டு கடந்து விட்டேன்.என்னை வளர்த்து ஆளாக்கி விட்டவர்கள் நீங்கள் தான். என் நன்றிக்குரியவர்கள் முன்னால் நான் இப்போது நிற்கிறேன். மிக்க நன்றி.

 

இப்போதுதான் ஆரம்பித்து இருக்கிறேன். சினிமா எனது வாழ்க்கை ,நான் கடந்த காலத்தை பற்றிக் கவலைப்படுவதில்லை. அதை நினைத்துப் பார்ப்பதில்லை. இன்றைய இந்தத் தருணத்தை மட்டுமே இனிமையாக்க வேண்டும் என்று தான் நினைப்பேன். எதிர்காலத்தைப் பற்றி நான் நினைப்பதில்லை. ஒவ்வொரு நாளும் சிறு சிறு முன்னேற்றத்தைக் காண்கிறேன். ஒவ்வொரு நாளும் கேமரா முன் நிற்கும்போது நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. சிறுவயதில் யூனிபார்ம் மீது எனக்கு ஒரு ஆசை ஒரு கிரேஸ் இருந்தது. ராணுவம் போலீஸ் மூவி செய்ய ஆசை. ஏற்கெனவே கமல் சார், சூர்யா சார் என்று எல்லாம் ஒரு அடையாளமாக உருவாக்கி வைத்திருக்கிறார்கள். சினிமாவில் போலீஸ் என்றால் ராகவன், அன்புச் செல்வன் என்று பாத்திரங்கள் நினைவுக்கு வருகின்றன.  அந்த வரிசையில் இளம் பாரியும் இருக்கும். என் மீது நம்பிக்கை வைத்து பாலாஜி அழைத்த போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் பட்ஜெட்டை விட ஸ்கிரிப்டை முக்கியமாகப் பார்ப்பேன். நல்ல கதைதான் படத்திற்கு முக்கியம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. நான் முடிந்த அளவிற்கு அனைவரையும் கவரும்படி இதில் நடித்துள்ளேன் என்று நம்புகிறேன். நான் இயக்குநர் பாலாஜியிடம் நிறைய கேள்வி கேட்பேன். எனக்குத் தெளிவாகும் வரை,விடமாட்டேன் கேட்டுக் கொண்டே இருப்பேன். ஆனால் பாலாஜி எப்போது கேட்டாலும் பதில் சொல்வதில் தெளிவாக இருந்தார். படப்பிடிப்பின் போது தனக்குத் தேவையானதை வாங்கிக் கொள்வதில் அவர் சமரசம் இல்லாமல் இருந்தார். அப்படியே இப்படத்தை முடித்து இருக்கிறார். திரைக்கதை நடிப்பு எல்லாமும் நன்றாக வந்திருக்கிறது. இது  மாஸ் ஆக்சன் படம் போல் இல்லாவிட்டாலும் பாபநாசம் படத்தைப் பார்த்த அந்த உணர்வு ஏற்படும்.

 

என்னை நினைத்தால்  எனக்கே வேடிக்கையாக இருக்கும். நான் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவன். நான் ஒரு தனிமை விரும்பி ,யாரிடம் அதிகம் பேச மாட்டேன். ஆனால் உடன் பேசுவரின் மனநிலை அறிந்து அதன்படி பழகுவேன்.

நான் முன்பே சொன்னேன் ராணுவத்தின் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டேன் என்று. அப்படிச் சாதாரணமாக நினைத்து விட முடியாது. அதற்கு ஒரு தைரியம் இருக்க வேண்டும், லட்சியம் இருக்க வேண்டும், தேசப்பற்று இருக்க வேண்டும். உடல் தகுதி வேண்டும். இப்படிப்பட்ட பாத்திரத்தில் நடிக்க, யூனிபார்ம் போட்டால் மட்டும் போதாது .ஒரு டிராபிக் கான்ஸ்டபிள் ஆக இருந்தால் கூட அந்த யூனிஃபார்முக்கு ஒரு மரியாதை, சக்தி இருக்கிறது. அதை அணிந்த பிறகு வேறு மாதிரியான கம்பீர உணர்வு நமக்கு வரும்.அதை நடித்த போது உணர்ந்தேன்.நம்மைப் பார்த்து ஒருவர் சல்யூட் அடிக்கும் போது நாம் உணர்வது வேறு வகையிலானது. நான் இந்தப் பாத்திரத்தில் நடிக்கும் போது சிரித்ததே கிடையாது. யூனிஃபார்ம் அணிந்தவர்களின் குறிப்பாக போலீஸ் காவல்துறையின் வாழ்க்கை எப்படி இருக்கும்? அவர்கள் எப்படி வேலையே வாழ்க்கையாக இருக்கிறார்கள். அது சுலபமானதல்ல .அவர்களுக்கு விடுமுறையே கிடையாது எங்கும் எப்போதும் இருப்பார்கள். 100க்குப் போன் செய்தால் ஐந்து நிமிடத்தில் பேட்ரல் வண்டி வந்து விடுகிறது. ஸ்காட்லாந்து யார்டுக்குப் பிறகு தமிழ்நாடு போலீஸ் தான் என்பார்கள். அப்படி நான் இந்த இளம்பாரி கதாபாத்திரத்தில் நடித்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன். நான் அந்தப் பெயரையே நேசிக்கிறேன். காதலுடன் நான் சினிமாவில் இருக்கிறேன் ரசித்து ரசித்து செய்கிறேன். இன்னும் என்னவெல்லாமோ செய்ய வேண்டும் என்று ஆசைகள் உள்ளுக்குள் நிறைய உள்ளன. இந்தப் படத்தில் நடித்த போது ஒரு கிரிக்கெட் டீம் போல இருந்தோம். வெங்கட் பிரபு சாரின் சென்னை 28 குழுவினர் போல் நாங்கள் இருந்தோம். இதில் புதிது புதிதாக நடித்தவர்கள் எல்லாம் ஊரிலிருந்து வந்திருக்கிறோம் சினிமா வெறியோடு வந்திருக்கிறோம் என்றார்கள். அப்படி அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார்கள், பணியாற்றினார்கள்.” என்றார்.

 

The Dark Heaven

 

இயக்குநர் பாலாஜி பேசுகையில், “இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை சசிகுமார் சார் இன்று வெளியிட்டார். எனது  முதல் படத்திற்கும் அவர்தான் வெளியிட்டார்,அவரிடம் நான் உரிமையாகக் கேட்டபோது அவர் வெளியிட்டு உதவியுள்ளார்.அந்த அளவிற்கு நான் அவரிடம் உரிமை எடுத்துக் கொள்வேன். இந்தப் படம் ரொம்ப  நன்றாக வந்திருக்கிறது. நகுலுக்கு இதில் நல்ல பெயர் கிடைக்கும். இதில் நடித்துள்ள இன்னொரு நடிகர் அலெக்ஸ் . அவருக்கும் நல்ல பெயர் கிடைக்கும். மூன்று காலகட்டத்தில் மூன்று தோற்றங்களுக்கு அவர் மாற வேண்டி இருந்தது .அவர் அவ்வளவு உழைத்துள்ளார்.

 

நகுலைப்  பல படங்களில் பார்த்திருக்கிறோம்.இதுவரை பார்த்து வந்த நகுல் வேறு. இதில் வேறு மாதிரியாக நகுலைப் பார்ப்பார்கள். டி3 படம் முடித்த பிறகு எனக்கு தோன்றியது ஒன்றுதான், இது தப்பான படம் இல்லை என்று தோன்றியது. அது கோவிட் கால கட்டத்தில் போராடி எடுத்த படம். ஒரு படம் வரவில்லை,வெற்றி பெறவில்லை என்றால் அதற்குப் பல காரணங்கள் இருக்கும். அதற்கு முக்கியமான காரணம்  படத்தை நல்ல விதமாக மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்.அது மிகவும் முக்கியம்.. ஏனென்றால் கடவுளுக்கே விளம்பரம் தேவைப்படும் காலம் இது. இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய படத்தையும் நல்ல முறையில் மக்களிடம்  கொண்டு சேர்க்க வேண்டும். இதில் நாட்டார் கதையை வைத்து ஒரு திரில்லராக உருவாக்கி இருக்கிறோம். இந்த திரில்லர் வேறு மாதிரியாக இருக்கும்.முதலில் இந்தப் படத்தை எடுக்கலாமா என்று யோசித்தபோது காந்தாரா படத்தின் வெற்றி எனக்குப் பெரிதும் நம்பிக்கை அளித்தது.

 

படத்தில் ஆங்கிலத் தலைப்பை வைத்ததைப் பற்றிக் கேட்கிறார்கள். படத்திற்குப் பொருத்தமாக இருப்பதால் தான் அப்படி வைத்தோம். வேறு வழி இல்லை. மற்றபடி தமிழில் வைக்கக் கூடாது என்று எந்த உள்நோக்கமும் கிடையாது.என்னைப் பொறுத்தவரை ஒரு இயக்குநருக்கு முடியாது என்று எதையும் சொல்லக்கூடாது என்று நினைப்பவன். நகுல் ஒரு கதாநாயகனுக்குரிய நடிகர். ஆனால் அவரிடம் இருந்து அந்த கதாநாயகத்தனத்தை இன்னும் சரியாக வெளியே கொண்டு வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். நகுல் இந்தப் படத்தில் சொன்னபடி எல்லாம்  கேட்டு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அவருக்குக் கதை தெரியுமா என்று கூடத் தெரியவில்லை .அந்த அளவிற்கு அவர் ஒத்துழைப்பு கொடுத்தார். இந்தப் படம் எல்லா காவல் தெய்வங்களையும் நினைவுபடுத்தும். சிறுவயதில் கேட்ட கேள்விப்பட்ட அனுபவங்களை வைத்து தான் இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறேன். . பட்ஜெட் படமாக ஆரம்பித்தது ஆனால் செலவு ஏழரைக் கோடி தாண்டி விட்டது. இந்தப் படம் நிச்சயமாக தப்பு பண்ணாது. அனைவருக்கும் பிடிக்கும். எனவே இந்தப்  படத்தின் மீது அதிக நம்பிக்கையுடன் இருக்கிறோம்.” என்றார்.

 

நிகழ்ச்சியில்  படத்தின் ஒளிப்பதிவாளர் மணிகண்டன், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி ஆகியோருடன் படத்தில் நடித்தவர்களும் சின்னத்திரை, யூடியூப் என்று  தனக்கான தனிப்பாதையில் பயணம் செய்து வளர்ந்து வரும் கலைஞர்களான அலெக்ஸ் , அந்தோணி, கோதை சந்தானம், சரண்,கேசவன், பிரதீப்,சிவா ருத்ரன்  ஆகியோரும்  கலந்து கொண்டு பேசினார்கள்.

 

டி 3 படத்தின் கடனுக்காகத் தனது காரை விற்றிருந்தார் இயக்குநர் பாலாஜி. இந்தப் படத்தில் இலங்கையில் இருந்து வந்து நடித்திருந்த நடிகர் சரண், அந்தக் காரை வாங்கியிருந்தவரிடம் தேடிப் பிடித்து மீட்டு எதிர்பாராத வகையிலான தனது அன்புப் பரிசாக அந்தச் சாவியை இயக்குநர் பாலாஜியிடம் அளித்தார். பாலாஜி நெகிழ்ச்சியால் கண்ணீர் விட்டார். விழாவுக்கு வந்திருந்த அனைவரும் ஒருகணம் ஸ்தம்பித்து நின்றனர்.

Related News

10148

விளம்பரத்துறையில் எண்ட்ரியான இயக்குநர் அட்லி!
Tuesday October-21 2025

’ராஜா ராணி’, ’பிகில்’, ‘மெர்சல்’ என தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் இடம் பிடித்த இயக்குநர் அட்லி, ‘ஜவான்’ மூலம் பாலிவுட் சினிமாவிலும் வெற்றிப் பட இயக்குநராக அறிமுகமானார்...

Actress Krithi Shetty Inaugurated AZORTE New Store at Phoenix Marketcity Chennai
Monday October-20 2025

Reliance Retail’s premium fashion and lifestyle brand AZORTE made waves in the South with the opening of its all-new store at Phoenix Marketcity, Chennai...

Recent Gallery