எழுத்தாளர் ராஜ் கௌதமனுக்கு அரசு மரியாதையுடன் கூடிய அஞ்சலி! - இயக்குநர் பா.இரஞ்சித் கோரிக்கை
Wednesday November-13 2024

மறைந்த எழுத்தாளர் ராஜ் கெளதமன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ள இயக்குநர் பா.இரஞ்சித், மறைந்த எழுத்தாளர் ராஜ் கெளதமனுக்கு அரசு மரியாதையுடன் கூடிய அஞ்சலி செலுத்த வேண்டும், என்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

 

இது குறித்து இயக்குநர் பா.இரஞ்சித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

தமிழ்ச் சமூகத்தின் ஒப்பற்ற அறிஞர் ராஜ்கௌதமன் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவருடைய ஆய்வு, புனைவு, மொழிபெயர்ப்பு, விமர்சனம் என்று அனைத்திலுமே  நவீன முறையை கையாண்டவர், தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர். தலித் திறனாய்வு முறையியல் உருவான போது அதன் முதன்மை முகமாய் இருந்தவர். கற்றுத்தேர்ந்த கோட்பாடுகளின் மூலம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளாமல், கற்ற அனைத்தையும் அடித்தட்டு மக்களின் வரலாற்றை புரிந்துக்கொள்ளவும் அவர்களின் அரசியலை நிறுவவும் எழுதியவர். 'தலித்' என்கிற சொல்லை பிறப்பின் அடையாளமாக பார்க்காமல் அதை ஒரு குணாம்சமாக கருதினார், வரலாறு முழுக்க வெளிப்பட்ட அதிகாரத்திற்கு எதிரான மனநிலையே அது என்றார். 

 

புனைவும் அரசியலும் வெவ்வேறல்ல என அழுத்தம் திருத்தமாக பதிவு செய்தவர். இந்த முறைமையை கையாண்டு சங்க இலக்கியம் தொட்டு சமகால இலக்கியம் வரை ஆய்வு செய்தவர் என்றாலும், படைப்பு குணாம்சத்தின் நுட்பங்களை கணக்கில் கொண்டே அவற்றை மறுவாசிப்புக்குள்ளாக்கினார். 

 

படைப்பூக்கத் தன்மையும், ஆய்வும், அரசியலும் வெவ்வேறல்ல என நம் ஒவ்வொருவருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்த எழுத்தாளர், ஐயா ராஜ் கௌதமன் தமிழ் அறிவு வரலாற்றில் என்றும் நீடித்திருக்கக் கூடியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 

 

தமிழ் இலக்கியத்திற்கும், ஆய்வு உலகத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாய் தமிழ்நாடு அரசு அவருக்கு அரசு மரியாதையுடன் கூடிய அஞ்சலி செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 

 

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related News

10175

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Actor Sathyaraj Inaugurated the Iswarya Cancer Centre
Monday March-09 2026

Strengthening its commitment to advanced cancer diagnosis and treatment, Iswarya Hospital today inaugurated the Iswarya Cancer Centre at its OMR Taramani facility in Chennai...

Recent Gallery