Latest News :

”இந்திய சினிமாவில் இதுவரை இந்த கதாபாத்திரம் வந்ததில்லை” - நடிகர் ஆதி பெருமிதம்
Friday February-28 2025

தொடர்ந்து வெற்றி படங்கள் கொடுத்தாலும் கதை தேர்வில் கவனம் செலுத்தி வரும் ஆதி, வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், அவரது நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘சப்தம்’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.

 

‘ஈரம்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் அறிவழகன் - நடிகர் ஆதி இணைந்திருப்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவுக்கு சிறப்பாக இருப்பதாக பத்திரிகையாளர்கள் பாராட்டி வருகிறார்கள்.

 

இந்த நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் ஆதி, தனது கதாபாத்திரம் மற்றும் ‘சப்தம்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்ந்துக் கொள்கையில், ““’ஈரம்’ படத்தை தொடர்ந்து இயக்குநர் அறிவழகன் உடன் இணைந்துள்ள படம் இது. எனது இரண்டாவது படமே அறிவழகன் சாருடன் தான். அந்த படம் உருவான சமயத்தில் அவரது எண்ண ஓட்டங்களே  வித்தியாசமாக இருந்தது. அதனால் இந்த முறை சேர்ந்து பணியாற்றும் போது இருவருக்கும் ஒரு புரிதல் இருந்தது. அவர் காட்சிகளை உருவாக்கும் விதம், சின்ன சின்ன நுணுக்கங்களை மேற்கொள்வது எல்லாவற்றையும் அழகாக செய்வார். ஈரம் முடிந்த பிறகு நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். அடிக்கடி சில கதைகள் பேசுவோம். ஆனால் அதற்கான ஒரு சரியான டீம் அமையவில்லை. இந்த படத்திற்கு அது சரியாக அமைந்தது. இந்த படத்திற்குப் பிறகு நிறைய படங்கள் கொஞ்சம் விரைவாக பண்ண வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு தோன்றியிருக்கிறது. குறிப்பாக அறிவழகன் உடன் இணைந்து அடுத்தடுத்து பணியாற்ற விரும்புகிறேன்.

 

லட்சுமி மேனனும் நானும் இந்த படத்தில் நெருக்கமாக நடித்திருந்தாலும் அது மனதளவில் தானே தவிர உடல் ரீதியாக அல்ல.. ஏனென்றால் அப்படி ஒரு காட்சி இந்த படத்திற்கு தேவைப்படவில்லை.. இந்த படம் காதல் படம் அல்ல, ஆனால் காதலும் இருக்கும், லட்சுமி மேனன் மட்டுமல்ல.. சிம்ரன், லைலா, ராஜீவ் மேனன் எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட ஒவ்வொருவரின் பங்களிப்புமே இந்த படத்தில் முக்கியமானது. 

 

இந்த படத்தில் அமானுஷ்யங்களை ஆராய்ச்சி செய்யும் பாராநார்மல் இன்வெஸ்டிகேட்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்திய சினிமாவில் இதுவரை இந்த கதாபாத்திரம் வந்ததில்லை. அப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் உண்மையிலேயே இருக்கிறார்கள். அப்படி யாருமே இதுவரை பண்ணாத ஒரு கதாபாத்திரம் செய்யும்போது அது ரொம்பவே சுவாரசியமாக இருக்கும். இதுகுறித்த விஷயங்களை அறிவழகன் ஆய்வு செய்து என்னிடம் விளக்கி சொன்னபோது ரொம்பவே சுவாரசியமாக இருந்தது. கௌரவ் திவாரி என்கிற பாராநார்மல் இன்வெஸ்டிகேட்டர் இருந்தார். அவர் இப்போது இல்லை. அவரது மரணம் கூட இதுவரை மர்மமாகவே இருக்கிறது. அவரைப் பற்றி நிறைய படித்தேன். நிறைய வீடியோக்கள் பார்த்தேன். ரொம்பவே சுவாரசியமாக இருந்தது. ஒரு இடத்தில் அவருடைய வாழ்க்கையும் என்னுடைய வாழ்க்கையும் கூட பொருந்தி போனது. அவரைப் போலவே நானும் பைலட் பயிற்சி எடுக்க விரும்பினேன். ஆனால் சினிமாவுக்கு வந்துவிட்டேன்.. அவர் அப்படி பைலட் பயிற்சி எடுக்க சென்ற இடத்தில் தான் பாராநார்மல்  நடவடிக்கைகளை உணர்ந்திருக்கிறார். அதற்கு பிறகு தான் அது பற்றி படிக்க வேண்டும் என நினைத்து அதில் முழுமூச்சுடன் இறங்கி மும்பையில் அலுவலகம் அமைத்து நிறைய விசாரணைகளை அவர் செய்திருக்கிறார்.

 

இந்தப்படத்தின் படப்பிடிப்பு சமயங்களில் கூட சில அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்தோம். அது எங்களுக்கு நன்றாகவே தெரிந்தது. உடனே மற்றவர்களையும் உஷார்படுத்தி சீக்கிரமாக படப்பிடிப்பை நடத்தி விட்டு கிளம்புவோம். நேற்று ஒரு டீம் இன்டர்வியூ நடைபெற்றபோது கூட அங்கு அந்த அமானுஷ்யத்தை உணர முடிந்தது. சில நாட்களிலேயே இது கொஞ்சம் பழகிவிட்டது என்று சொல்லலாம். ஈரம் படத்தில் பணியாற்றும்போது எனக்கு பேய்கள் மீது நம்பிக்கை இல்லை. இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்காக சில ஆராய்ச்சிகளை நான் படிக்கும்போது, வீடியோக்களை பார்க்கும்போது அமானுஷ்ய விஷயங்கள் இருக்கலாம் என ஒரளவுக்கு நம்பத்தான் தோன்றுகிறது.

 

தமிழ், தெலுங்கு என மொழிகள் பிரித்துப் பார்த்து படம் பண்ணுவதில்லை. ஒருவர் கதை சொல்ல வரும்போது அது எந்த மொழி என்பதை விட, அது நமக்கு பிடிக்கிறதா, ஒத்து வருமா என்று தான் பார்க்கிறேன். தெலுங்கில் அதிகம் நடிப்பது போன்று தோற்றம் இருக்கலாம். ஆனால் இந்த வருடம் தமிழில் சப்தம், மரகத நாணயம்-2 என அடுத்தடுத்து படங்கள் வர இருக்கின்றன.  மரகத நாணயம்-2 படப்பிடிப்பு அடுத்த மாதம் அதே குழுவினருடன் துவங்க இருக்கிறது.

 

தெலுங்கில் இப்போது பாலகிருஷ்ணா உடன் இணைந்து அகாண்டா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறேன். சப்தம் படத்தின் டிரைலரை அவரும் பார்த்து விட்டு பாராட்டினார்.

 

ஹீரோவா, வில்லனா எது அதிக விருப்பம் என்று கேட்டால் ஹீரோவை விட வில்லனாக நடிப்பதற்கு தான் விருப்பம். அந்த கதாபாத்திரத்துக்கு என பெரிதாக எல்லைகள் எதுவும் இருக்காது என்பதால் வில்லனாக நடிப்பது ஒரு சுவாரஸ்யம் தான். அஜித் விஜய் போன்றவர்களுக்கு வில்லனாக நடிக்க ஆசை.. இருந்தாலும் கதை தானே அதை தீர்மானிக்க வேண்டும். ஆனால் ஹீரோவே சில படங்களில் வில்லன் போல தான் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். அப்படி இருந்தால் தானே பிடிக்கிறது. ரசிகர்களுக்கு எது பிடிக்கிறதோ அதைத்தானே கொடுக்க வேண்டும். 

 

வெற்றி அடைந்த படத்துக்கு இரண்டாம் பாகம் எடுப்பது தவறில்லை. ஆனால் நல்ல கதை இருந்தால் மட்டுமே எடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் முதல் பாகத்தின் பெருமையை குறைத்தது போல் ஆகிவிடும். மிருகம் இரண்டாம் பாகத்திற்காக என்னிடம் வந்தார்கள். அவர்கள் சொன்ன கதையில் எனக்கு ஈர்ப்பு ஏற்படவில்லை. அதனால் மறுத்து விட்டேன் வேறு யாரையாவது வைத்து எடுத்துக் கொள்ளலாமா என்றார்கள். உங்கள் விருப்பம் என சொல்லி விட்டேன்.

 

ஒரு தயாரிப்பாளராக நான் இருந்தால் கமர்சியல் படம் எடுக்கத்தான் விரும்புவேன். ஆனால் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் புதிய துணிச்சலான விஷயத்தை படமாக்க முன்வரும் தயாரிப்பாளர்கள் குறைவுதான். அதை நான் ஒப்புக் கொண்டாலும் கூட அதற்கு ஒரு டீம் அமைவது ரொம்பவே முக்கியம். அது சிரமமும் கூட. நான் படங்களை மெதுவாக பண்ணுவதற்கு அதுவும் ஒரு காரணம்.

 

டைரக்ஷனில் ஆர்வம் இருக்கிறது. ஆனால் ஒரு படத்தை டைரக்ஷன் பண்ணும் அளவிற்கு பொறுமை இல்லை. அது ரொம்பவே மன அழுத்தம் தரக்கூடியது. அதனால் நடிப்பு மட்டுமே இப்போதைக்கு போகும்.

 

திருமணம் ஆகிவிட்டதால் மனைவியுடன் இணைந்து தான் கதை கேட்பேன் என்பதெல்லாம் இல்லை. ஆனால் ஒரு கதை கேட்ட பின்பு நண்பர்களிடம் சொல்வது போல அவரிடம் சொல்லி அது குறித்து பேசி கொள்வேன். அவருக்கும் எனக்கு எந்த மாதிரி கதை பிடிக்கும் என்று தெரிவதால் என் பாயிண்ட் ஆப் வியூவில் இருந்துதான் யோசிப்பார். ஆனாலும் இறுதி முடிவை நான் தான் எடுக்கிறேன்.

 

இப்போது கதாநாயகிகளுடன் இணைந்து நெருக்கமான நடிக்க வேண்டி இருந்தால் முன்கூட்டியே மனைவி நிக்கி கல்ராணியி’டம் அது பற்றி சொல்லி விடுவேன். அவரும் சினிமா துறையில் இருந்தவர் என்பதால் கதைக்கு தேவைப்படுகிறதா இல்லையா என்பதை புரிந்து கொள்வார். கதைக்கு தேவை இல்லை என்றால் நிச்சயம் ஒத்துக்கொள்ள மாட்டார். 

 

யாவரும் நா காக்க படத்திற்கு பிறகு எனது சகோதரர் இன்னொரு கதை சொல்லியிருக்கிறார். ரொம்பவே சுவாரசியமாக இருக்கிறது. சரியான நேரம் வரும்போது அதில் நடிப்பேன்” என்று தெரிவித்தார்.

Related News

10347

இணையத் தொடர் இயக்க முதலில் தயங்கினேன்! - ‘குட் வொய்ஃப்’ தொடர் பற்றி நடிகை ரேவதி
Friday July-04 2025

ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...

ரசிகர்களின் அன்பு வியக்க வைத்து விட்டது! - ‘லவ் மேரேஜ்’ வெற்றி விழாவில் நடிகர் விக்ரம் பிரபு உற்சாகம்
Friday July-04 2025

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம்  - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

Recent Gallery