Latest News :

”’டெஸ்ட்’ கிரிக்கெட் விளையாட்டு பற்றிய திரைப்படம் அல்ல” - இயக்குநர் எஸ்.சஷிகாந்த்
Sunday March-16 2025

ஒய்நாட் (YNOT) ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் பல தரமான மற்றும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்த், ‘டெஸ்ட்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்திருக்கும் இப்படம் வரும் எப்ரல் மாதம் 4 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. இந்த வருடத்தில் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகும் முதல் நேரடி தமிழ்ப் படம் ‘டெஸ்ட்’ என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்து ‘டெஸ்ட்’ படம் குறித்து பேசிய இயக்குநரும், தயாரிப்பாளருமான எஸ்.சஷிகாந்த், “நான் இயக்குநராக வேண்டும் என்பதற்காக தான் தயாரிப்பாளாரானேன். படம் இயக்க வேண்டும் என்ற எண்ணம் பல வருடங்களாகவே இருந்தது, அதனால் நான் பணியாற்றிய படங்களில் இருந்தே கதை சொல்லல் உள்ளிட்ட விசயங்களை கற்றுக்கொண்டேன். 12 வருடங்களுக்கு முன்பே டெஸ்ட் படத்தின் கதையை எழுத தொடங்கி விட்டேன். ஆனால், ஒவ்வொரு முறையும் இயக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடும் போது, படம் தயாரிப்பில் ஈடுபட்டுவிடுவதால், இயக்க முடியாமல் போய்விடும். கொரோனா நேரத்தில் கிடைத்த நேரத்தில் தான், இந்த முறை நிச்சயம் படம் இயக்க வேண்டும் என்ற முடிவு எடுத்து, மீண்டும் இந்த கதையை எழுத தொடங்கினேன்.

 

‘டெஸ்ட்’ கிரிக்கெட் விளையாட்டு பற்றிய படம் இல்லை. ஒவ்வொரு மனிதர்களுக்கும் அவர்கள் யார்? என்பதை உணரக்கூடிய ஒரு தருணம் வாழ்க்கையில் வரும், அப்படிப்பட்ட தருணத்தை எதிர்கொள்ளும் மூன்று கதாபாத்திரங்களின் கதை தான் இந்த படம். நம்மால் இது முடியுமா? என்ற கேள்வி அனைவரிடமும் இருக்கும், அதை துணிந்து செய்வதில் தயக்கம் காட்டுவோம். ஆனால், நம் வாழ்க்கையில் ஒரு சோதனைக்காலம் வந்துவிட்டால் அதில் இருந்து விடுபடுவதற்காக நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் மூலம் நாம் யார்? என்பதை நமக்கே புரிய வைக்கும். அப்படிப்பட்ட மூன்று கதைகள் பற்றி தான் பேசியிருக்கிறோம். 

 

சித்தார்த், மாதவன், நயன்தாரா மூன்று பேருக்குமே ஒரு சோதனை வருகிறது, அதில் இருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள் என்பது தான் கதை. சித்தார்த் மற்றும் நயன்தாராவிடம் இந்த படம் பற்றிய யோசனையை சொன்ன உடனே நடிக்க சம்மதித்து விட்டார்கள். மாதவன் மட்டுமே பல சந்தேகங்களை எழுப்பினார், அவரது சந்தேகங்களுக்கு ஏற்ப திரைக்கதையை பல முறை மாற்றியமைத்து, இறுதியாக அளித்த திரைக்கதையை படித்துவிட்டு சம்மதம் தெரிவித்தார். சித்தார்த் கிரிக்கெட் வீரராக நடித்திருக்கிறார், அவரது துறையில் அவருக்கு வரும் சோதனையை அவர் எப்படி வெல்கிறார், என்பது போல் மாதவன் மற்றும் நயன்தாரா ஆகியோருக்கும் சில சோதனைகள் வருகிறது. அதில் இருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள், என்பதை தான் படம் பேசும். இந்த மூன்று கதாபாத்திரங்களுக்கும் தொடர்பு இருப்பது போல தான் கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

 

Test Movie

 

ஒடிடி-யில் நேரடியாக படத்தை வெளியிடுவதற்கு காரணம், உலக அளவில் படம் சென்றடைய வேண்டும் என்பதற்கு தான். படம் வெளியான உடன், நெட்பிளிக்ஸ் வைத்திருப்பவர்கள் அனைவரும் பார்ப்பார்கள், இந்தியாவில் மட்டும் இன்றி உலகில் பல்வேறு நாடுகளில் இருப்பவர்களும் பார்ப்பார்கள், அப்போது படத்திற்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைக்கும், என்பதால் தான் ஒடிடியில் வெளியிடுகிறோம்.

 

படத்தில் கிரிக்கெட் விளையாட்டு இருந்தாலும், அதன் மூலம் ஒரு விசயத்தை சொல்லியிருக்கிறோமே தவிர, கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து கதை சொல்லவில்லை. அதே சமயம், கிரிக்கெட் போட்டியை காட்சிப்படுத்தும் போது சினிமாத்தனமாக அல்லாமல், வழக்கமாக கிரிக்கெட் போட்டியை ஒளிப்பதிவு செய்யும் பிராட்கேஸ்டிங் கேமரா மூலம் காட்சிப்படுத்தியிருக்கிறோம். அதனால், அந்த காட்சிகளை பார்க்கும் போது கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்கும் உணர்வு ஏற்படும். அதற்காக பிரத்யேக குழு ஒன்றை வைத்து தான் படமாக்கியிருக்கிறோம்.

 

சித்தார்த்துக்கும் எனக்கும் கிரிக்கெட் ரொம்பவே பிடிக்கும். இந்த படத்திற்காக சித்தார்த் கிரிக்கெட் பயற்சி மேற்கொண்டார். நயன்தாரா இந்த படத்திற்காக முதல் முறையாக சொந்த குரலில் பேசியிருக்கிறார். லைவ் ரெக்கார்டிங் மூலம் வசனங்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருப்பதால், நடிகர்கள் அனைவருமே ஒரு காட்சியில் நடிப்பதற்கு முன்பு அதில் எப்படி செய்ய வேண்டும், எப்படி பேச வேண்டும் என்பதில் முழுமையான தயார் நிலையில் இருப்பார்கள். மூன்று பேருமே இந்த படத்திற்காக அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்கள். அதேபோல், மீரா ஜாஸ்மீன் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த படத்தில் நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரமும் பேசப்படும். அவரது கதாபாத்திரம் விளம்பரத்தில் இடம்பெறாது, ஆனால், படத்தில் மிக முக்கியமான பங்கு உண்டு, அது படம் பார்க்கும் போது தெரிய வரும். 

 

கதை சொல்லல் மற்றும் இயக்குநரை தாண்டி இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களும் அவர் அவர் பணியின் மூலம் படத்திற்கு மெருகேற்றியிருக்கிறார்கள். இசையமைப்பாளர் ஏதோ இசையமைத்தேன் என்று இல்லாமல், தன் இசையின் மூலம் இந்த கதையை ரசிகர்களிடத்தில் எப்படி கொண்டு சேர்க்க முடியும், என்ற ரீதியில் தான் பணியாற்றியிருக்கிறார். அவரைப் போல் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றியிருப்பதால் தொழில்நுட்ப ரீதியாகவும் படம் சிறப்பாக வந்திருக்கிறது.” என்றார்.

Related News

10372

சீமான் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்மயுத்தம்’!
Saturday April-26 2025

’முந்திரிக்காடு’ படத்தை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் நடிகராக ஒரு திரைப்படத்தில் களம் இறங்கியுள்ளார்...

’சச்சின்’ படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய வெற்றியை தந்துள்ளார்கள் - தயாரிப்பாளர் தாணு நெகிழ்ச்சி
Saturday April-26 2025

சமீப ஆண்டுகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப் பட்டு வெற்றியடைந்த தமிழ் படங்களை மறு வெளியீடு செய்வது சமீபத்திய ட்ரென்டாக உள்ளது...

ரசிகர்கள் கொண்டாடுவதற்கான அனைத்து அம்சங்களும் ‘ஹிட் - தி தேர்ட் கேஸ்’ படத்தில் உள்ளது! - நானி உறுதி
Saturday April-26 2025

நானி நடிப்பில் இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஹிட் -தி தேர்ட் கேஸ் ' எனும் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது...

Recent Gallery