Latest News :

”’வீரதீர சூரன்’ சினிமா இலக்கணத்தை மீறி இருக்கும்” - நடிகர் விக்ரம்
Tuesday March-25 2025

இயக்குநர் எஸ்.யூ.அருண் குமார் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில், எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபுவின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘வீரதீர சூரன் - பாகம் 2’ திரைப்படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

படத்தின் விளம்பர பணிகளில் ஈடுபட்டுள்ள படக்குழு இந்தியாவின் பல பகுதிகளுக்கு சென்று பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்களை சந்தித்து வரும் நிலையில், நேற்று பெங்களூர் மந்திரி ஸ்கொயர் மாலில் பட வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம், நடிகை துஷாரா விஜயன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை ரசிகர்களிடமும், பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பேசுகையில், “’வீர தீர சூரன்’ படத்தை இங்கு வெளியிடும் எஸ். எஸ். கஃபே நிறுவனத்திற்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌ இயக்குநர் எஸ். யூ. அருண்குமார், துஷாரா விஜயன், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் மற்றும் படக்குழுவினரின் சார்பில் அவர்களுடைய அன்பை என் மூலமாக உங்களிடம் தெரிவிக்க சொன்னார்கள்.   இயக்குநர் திரைப்படத்தின் வெளியீட்டிற்கான இறுதி கட்டப் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.

 

இது எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். 'தில்', 'தூள்', 'சாமி' போன்ற படங்களைப் போல் நடிக்க வேண்டும். அதே சமயத்தில் 'பிதாமகன்' போலும் இருக்க வேண்டும் என நினைத்து, அதாவது உணர்ச்சி பூர்வமான படத்தை கமர்சியலாக கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அப்படி ஒரு கதைக்காக காத்திருந்தேன். அந்த கதை தான் இந்த 'வீர தீர சூரன்' படத்தின் கதை.

 

எஸ். யூ. அருண் குமாரின் 'சித்தா' படத்தை பார்த்திருப்பீர்கள். அவருக்கு அது போன்றதொரு உணர்வுபூர்வமான படத்தையும் இயக்கத் தெரியும். அதே போல் 'சேதுபதி' போன்ற படத்தையும்  இயக்கத் தெரியும்.  அவர் இந்த படத்தில் இந்த இரண்டையும் கொண்டு வந்திருக்கிறார். இந்த திரைப்படம் ரொம்ப ராவ் அண்ட் ரஸ்டிக், ஒரு மாஸான ஃபிலிம். ஆனால் இது வேற மாதிரியாக இருக்கும். அதாவது மாஸாகவும் இருக்கும், ரியலாகவும் இருக்கும்.

 

இதைப் பற்றி பில்டப் செய்து சொல்ல விரும்பவில்லை. இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.‌ இது போன்ற கதையை ரியலாக செய்வதற்கு எங்களுக்கு நிறைய பெர்ஃபாமர்ஸ் தேவைப்பட்டார்கள். இதனால் எஸ்.ஜே. சூர்யாவை தேர்வு செய்தோம். அவரைத் தொடர்ந்து துஷாரா விஜயனையும், சுராஜையும் தேர்வு செய்தோம். பிருத்வி இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். அனைவரும் ஒவ்வொரு காட்சியிலும் உணர்வுபூர்வமாக நடித்திருக்கிறார்கள். நீங்கள் படம் பார்க்கும்போது இதை தெரிந்து கொள்வீர்கள். இந்தப் படம்  உங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என நினைக்கிறேன்.

 

இந்த படத்தில் பாடலாக இருந்தாலும், சண்டை காட்சியாக இருந்தாலும், அதனை ராவாக  உருவாக்கியிருக்கிறோம். சின்னதாக ஒரு முயற்சியை செய்திருக்கிறோம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். அனைவருக்கும் நன்றி. இங்கு வருகை தந்திருக்கும் என்னுடைய ரசிகர்களுக்கும் நன்றி. இந்நிகழ்வில் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி.” என்றார்.

 

இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த விக்ரம், “இந்த திரைப்படம் சினிமா இலக்கணத்தை மீறி இருக்கும். படத்தில் என்னுடைய ஓப்பனிங் வித்தியாசமாக இருக்கும். படத்தின் ஓப்பனிங் வித்தியாசமாக இருக்கும். இன்ட்ரவல் பிளாக் வேற மாதிரி இருக்கும். வழக்கமான ஃபார்முலாவை உடைப்பதற்கு முயற்சி செய்திருக்கிறோம். புது முயற்சிக்கு உங்களது ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம். இந்தப் படத்தில் கேரக்டர்களின் பெர்ஃபாமன்ஸ் , ஃபைட் சீக்குவன்ஸ், பாடல் எல்லாம் வித்தியாசமாக ரசிக்கும்படி இருக்கும்” என்றார்.

 

மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கையில், ”இந்தப் படத்தின் டைட்டிலை 'காளி' என்று வைக்க நினைத்தோம். சமீபத்தில் தான் விஜய் ஆண்டனி நடிப்பில் 'காளி' என்ற பெயரில் ஒரு படம் வெளியானது. மீண்டும் 'காளி' என பெயர் வைத்தால் குழப்பம் ஏற்படும் என்பதற்காக.. 'வீர தீர சூரன்' என பெயர் வைத்தோம். காளி எனும் கதாபாத்திரத்திற்கு இந்த டைட்டில் பொருத்தமாக இருக்கும்.”  என்றார்.

 

இந்நிகழ்வில் அந்த வளாகத்திற்குள் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கேட்ட கேள்விக்கும் சீயான் விக்ரம் உற்சாகம் குறையாமல் பதிலளித்தார். அத்துடன் இப்படத்தில் இடம்பெற்ற ”கல்லூரும் காத்து எம்மேல..”என்ற பாடலையும் பாடி பார்வையாளர்களை அசத்தினார்.  அதன் பிறகு மேடையில் நடனமும் ஆடி ரசிகர்களை மகிழ்வித்தார்.

Related News

10386

’பாம்’ படம் மூலம் காமெடியில் கலக்க வரும் அர்ஜுன் தாஸ்!
Monday September-08 2025

’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...

ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியான ‘உஃப் யே சியாபா’!
Friday September-05 2025

லவ் பிலிம்ஸ் வழங்கும் லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில்  பிரபல இயக்குநர்  ஜி...

Recent Gallery