Latest News :

ஒய்.ஜி.மகேந்திரன் முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘டார்க் ஃபேஸ்’ (Dark Face) முதல் பார்வை போஸ்டர் வெளியானது!
Friday April-25 2025

ஓடிடி தளங்களில் வெளியாகும் இணையத் தொடர்களில் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் தொடர்கள் மொழிகளை கடந்து உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், ஒய்.ஜி.மகேந்திரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘டார்க் ஃபேஸ்’ (Dark Face) என்ற கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் இணையத் தொடர் திகைக்க வைக்கும் திருப்பங்களுடனும், யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் காட்சிகளுடனும் உருவாகியுள்ளது.

 

The Chosen One நிறுவனம் சார்பில் அபு கரீம் இஸ்மாயில் தயாரித்துள்ள ‘டார்க் ஃபேஸ்’ (Dark Face) இணையத் தொடரை அறிமுக இயக்குநர் சரண்பிரகாஷ் இயக்கியுள்ளார். சுமார் 10-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள சரண்பிரகாஷ், 15-க்கும் மேற்பட்ட வீடியோ இசை ஆல்பங்களுக்கு இசையமைத்து இயக்கவும் செய்திருக்கிறார். இத்தொடர் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் சரண்பிரகாஷ், இயக்கி, இசையமைத்திருக்கிறார். பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

மூத்த வழக்கறிஞராக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன், இதுவரை நடித்திராத பாணியில் நடித்திருக்கிறார். அவரது மகள் ஒய்.ஜி.மதுவந்தி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் பெண்கள் விடுதியின் காப்பாளராக நடித்திருக்கிறார். இவர்களுடன் விஜய் டிவி KPY ராஜவேல், செளமியா, தயாரிப்பாளர் அபு கரீம் இஸ்மாயில், யெஸ்வந்த், சக்தி, சுனில் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

இந்த நிலையில், The Chosen One தயாரிப்பு நிறுவனம் மற்றும் ‘டார்க் ஃபேஸ்’ (Dark Face) இணையத் தொடரின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் அறிமுக விழா ஏப்ரல் 24 ஆம் தேதி, சென்னை வாணி மஹாலில் நடைபெற்றது. இதில், இணைத் தொடர் குழுவினருடன் பிரபல இயக்குநர் லிங்குசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

 

‘டார்க் ஃபேஸ்’ இணையத் தொடர் குறித்து இயக்குநர் சரண்பிரகாஷ் பேசுகையில், “கற்பழிப்பு வழக்கில் ஒருவர் கைது செய்யப்படுகிறார். அவர் கற்பழித்ததாக சொல்லப்படும் பெண் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொள்ள, பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் இருந்து வாதாடும் மூத்த வழக்கறிஞர் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கிறார். இதனால், அவர் கொண்டாடப்படுகிறார். அவருக்கு பல விருதுகளும் வழங்கப்படுகிறது.

 

இதற்கிடையே, தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு சில தினங்கள் முன்பு தனக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த வழக்கறிஞரை சந்திக்க வேண்டும், என்ற தனது கடைசி ஆசையை கைதி தெரிவிக்க, அவரது ஆசைப்படி மூத்த வழக்கறிஞர் அவரை சந்திக்கிறார். அப்போது கைதி கூறும் சில விசயங்களால், குற்றமற்ற ஒருவருக்கு தான் தண்டனை வாங்கிக் கொடுத்ததை உணரும் வழக்கறிஞர், காவல்துறை மற்றும் பாதிக்கப்பட்ட பெண் தரப்பை தவிர்த்துவிட்டு, கைதியின் கண்ணோட்டத்தில் வழக்கை பார்க்கும் போது, கற்பழிப்பு வழக்கு மற்றும் தற்கொலைக்கு பின்னாள் மிகப்பெரிய சதித்திட்டமும், மர்மமும் நிறைந்திருப்பதை உணர்கிறார். அது என்ன? அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? அவர்களை வழக்கறிஞர் எப்படி கண்டுபிடிக்கிறார்? என்பதை பரபரப்பாக சொல்வது தான் ‘டார்க் ஃபேஸ்’

 

7 எப்பிசோட்களும் யூகிக்க முடியாத திருப்பங்கள் நிறைந்தவையாக இருக்கும். நான் சொன்ன விசயங்கள் தொடரின் கதைச்சுருக்கம் தான், ஆனால் திரைக்கதையில் யோசித்துப் பார்க்க முடியாத திருப்பங்களும், சஸ்பென்ஸும் இருக்கும்.” என்றார்.

 

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேசுகையில், “டார்க் ஃபேஸ் போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் லிங்குசாமி மற்றும் பத்திரிகையாளர்களுக்கு நன்றி. வெப் சீரிஸ் என்பது ஐபில் கிரிக்கெட் மாதிரி. இந்திய அணியில் விளையாடுவோம் என்று நினைத்து கூட பார்க்காதவர்களுக்கு அத்தகைய வாய்ப்பை உருவாக்கி கொடுத்தது ஐபிஎல் கிரிக்கெட் தான். அதுபோல், வெப் சீரிஸ் மூலம் பல இளைஞர்கள் தங்களது திறமையை நிரூபித்து வருகிறார்கள். அந்த வகையில், இயக்குநர் சரண்பிரகாஷும் ஒரு சிறப்பான வெப் சீரிஸ் எடுத்திருக்கிறார். நான் நடித்திருப்பதால் சொல்லவில்லை. இதில் நான் நடிக்க வேண்டும் என்பதற்காக அவர் என்னை அனுகியபோது, இது மிகவும் சிறிய பட்ஜெட் என்று சொன்னார். சரி அவர் சொல்லும் கதையை கேட்போம், என்று கதை கேட்டதும் பிரமித்து விட்டேன். அவர் சொன்ன பட்ஜெட் தான் சிறியது, ஆனால் அவர் சொன்ன கதை மிக பிரமாண்டமானதாக இருந்தது. 200 கோடி ரூபாய், 400 கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கும் படங்களை பிரமாண்ட படங்கள் என்று சொன்னால் நான் நம்ப மாட்டேன். சப்ஜெக் தான் பிரமாண்டமாக இருக்க வேண்டும், மக்கள் மனதில் எந்த அளவுக்கு நிற்கிறதோ அது அது தான் பிரமாண்டாம். அந்த வகையில், இந்த கதை சோதனை முயற்சியான கதையாக இருந்தது. 

 

நீதிமன்றத்தால் குற்றவாளியாக தீர்ப்பு பெற்று தூக்கு தண்டனை பெற்ற ஒருவர், கடைசி நேரத்தில் தன்னை நிரபராதி என்று நிரூபிக்கிறார் என்பது தான் கதை. இந்த கதை காலம் காலமாக ஜெயிக்க கூடிய கதை. அப்படிப்பட்ட கதையில் எனக்கு மிக முக்கியமான வேடம் கொடுத்திருக்கிறார். மூத்த வழக்கறிஞர் வேடம். நான் தான் அந்த இளைஞருக்கு தூக்கு தண்டனை பெற்று கொடுக்கிறேன். பிறகு அவர் மீது இருக்கும் நியாயத்தை உணர்ந்து அவனை காப்பாற்றுவதற்காக போராடுவதும் நான் தான். இந்த வேடம் ரொம்ப இண்ட்ரஸ்டிங்காக இருந்தது. அதனால் நடிக்க சம்மதித்தேன். படப்பிடிப்பு தொடங்கியதும் எனக்கு 80 மற்றும் 90-களில் நான் நடித்த காலக்கட்டங்கள் தான் நினைவுக்கு வந்தது. அந்த அளவுக்கு மிக நேர்த்தியாக, குறைந்த நாட்களில் படப்பிடிப்பை முடித்தார். தேவையில்லாத விசயங்களை எடுக்காமல், எது தேவையா அதை மிக தெளிவாக எடுத்திருக்கிறார். இதற்கு ஸ்பேஷல் நன்றி நம்ம கேமராமேனுக்கு சொல்ல வேண்டும். இந்த படத்திற்கு தேவையான டார்க் ஃபேஸை அவர் ரொம்ப அழகாக கொடுத்திருக்கிறார். அதேபோல் இயக்குநர் சரண்பிரகாஷ் மிக தெளிவாக இருந்தார். இது தான் எடுக்க வேண்டும், இதன் பிறகு இது தான் என்பதில் மிக தெளிவாக இருந்தார், அவருக்கு உறுதுணையாக இருந்த இணை இயக்குநர் குணாவின் பணியும் பாராட்டும்படி இருந்தது. உடன் நடித்த ராஜவேல், யெஷ்வந்த் என அனைவரும் ஒரு குழுவாக சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். தயாரிப்பாளர் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறார். அந்த வகையில் அவர் நடிகராகவும் தனது பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

 

நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவன் எப்படி காப்பாற்றப்படுகிறான், என்பதை 7 எப்பிசோட்களாக, மிக சுவாரஸ்யமாக சரண்பிரகாஷ் சொல்லியிருக்கிறார். இன்று நாட்டில் பல சம்பவங்கள் இதுபோல் நடப்பதால், நிச்சயம் இது ரசிகர்களை கவரும். முன்னணி ஓடிடி-யில் விரைவில் வெளியாக இருக்கிறது. இதற்கு பத்திரிகையாளர்கள் ஆதரவளிக்க வேண்டும், என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.

 

இயக்குநர் லிங்குசாமி பேசுகையில், “அபு எனக்கு போன் செய்து இப்படி ஒரு நிகழ்ச்சி இருக்கிறது என்று சொன்னார், படமா, வெப் சீரிஸா என்று எதுவும் தெரியாது.  பிறகு அவர் ஒரு போஸ்டர் அனுப்பினார், டார்க் ஃபேஸ் என்ற அந்த போஸ்டரில் ஒய்.ஜி.மகேந்திரன் சார் இருந்தார், உடனே ஒகே சொல்லி வந்து விட்டேன். இங்கு வந்த பிறகு தான் ‘பையா’ மற்றும் ‘வாரியர்’ படங்களில் என்னுடன் பணியாற்றியவர்கள் இந்த வெப் சீரிஸில் பணியாற்றியிருப்பது தெரிந்தது, மகிழ்ச்சியாக இருக்கிறது.

 

அபு நட்புக்காக உயிரையும் கொடுக்க கூடியவர். நான் சிங்கப்பூரில் இறங்கினேன் என்றால், திரும்ப சென்னைக்கு வரும் வரை எனக்கு எல்லாமுமாக அவர் உடன் இருப்பார். அந்த அளவுக்கு சிறந்த நண்பர். அவரை சண்டைக்கோழி படத்தில் நடிக்க வைத்தேன். அவர் தலையில் தேங்காய் உடைப்பது போல காட்சி எடுத்தோம். இன்று அவர்  நான்கு பூஜைகளுக்கு தேங்காய் உடைத்து விட்டார். மகிழ்ச்சியாக இருக்கிறது, அபுவின் இந்த பயணம் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்த முதல் நிகழ்ச்சியை மிக சிறப்பாக செய்துவிட்டார், தக் லைப் படத்தைப் போல் மிக பிரமாண்டமாக செய்து விட்டார். இதில் நடித்திருக்கும் ராஜவேல், செளமியாவுக்கு வாழ்த்துகள். இயக்குநர் அருண்பிரகாஷ் வீடியோ ஆல்பங்கள் இயக்கியிருக்கிறார். இது தான் அவருக்கு முதல் வெப் சீரிஸ், இதில் அவர் வெற்றி பெற்று விரைவில் திரைப்படங்களும் இயக்க வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.

 

ஒய்.ஜி.மகேந்திரன் சாருடன் இணைந்து பணியாற்றவில்லை என்றாலும், அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். இதே வாணி மஹாலில் அவரது பல நாடகங்களை பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். ரஜினி சார், கமல் சார், சிவாஜி சார் என ஜாம்பவான்களுடன் நடித்தாலும், பெரிய குடும்பத்தில் இருந்து வந்தாலும், கலை என்று வந்துவிட்டால் அவரிடம் இருக்கும் அந்த ஃபேஷன் வியக்க வைக்கிறது. இப்போதும் ‘மாநாடு’ உள்ளிட்ட பல படங்களில் அவர் சிறப்பாக நடித்து வியக்க வைக்கிறார். மிஷ்கின் உள்ளிட்ட தற்போதைய காலக்கட்ட முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து வருகிறார். நான் தான் அவரை மிஸ் பண்ணியிருக்கேன், நிச்சயம் விரைவில் அவர் என் படத்தில் நடிப்பார். இந்த வெப் சீரிஸ் சாரின் நடிப்பால் நிச்சயம் ரசிகர்களின் கனவத்தை ஈர்க்கும். தயாரிப்பாளர் அபுவை மீண்டும் வாழ்த்துகிறேன். அவரது அடுத்தடுத்த முயற்சிகளுக்கு ஊடகங்கள் துணை நிற்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துகள், நன்றி.” என்றார்.

 

கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் தொடர்களுக்கு என்று வழக்கமாக இருக்கும் பாணியை தவிர்த்துவிட்டு திரைக்கதையில் பல புதிய யுக்திகளை கையாண்டிருந்தாலும், அனைத்து தரப்பினருக்கும் எளிதில் புரியும்படி தொடரை இயக்கியிருக்கும் இயக்குநர் சரண்பிரகாஷ், இத்தொடர் வெளியீட்டுக்குப் பிறகு திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார். அதற்கான அறிவிப்பை ‘டார்க் ஃபேஸ்’ வெளியீட்டுக்குப் பிறகு வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

7 எப்பிசோட்கள் கொண்ட ’டார்க் ஃபேஸ்’ (Dark Face) இணையத் தொடரின் முதல் பார்வை போஸ்டர் வெளியீட்டை தொடர்ந்து விரைவில் டீசர் மற்றும் டிரைலர் வெளியாக உள்ள நிலையில், அதன் பிறகு வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட உள்ளது.

Related News

10451

நடிகர் ரோபோ சங்கர் மறைவு! - திரையுலகம் அதிர்ச்சி
Thursday September-18 2025

பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

’கிஸ்’ படத்தை நிச்சயம் குடும்பத்துடன் பார்த்து மகிழலாம் - கவின் உறுதி
Wednesday September-17 2025

நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...

Recent Gallery