Latest News :

நடிப்பதோடு மற்ற படங்களுக்கு இசையமைக்கப் போகிறேன் - ’மார்கன்’ பட விழாவில் விஜய் ஆண்டனி அறிவிப்பு
Tuesday May-27 2025

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள படம் ‘மார்கன்’. இதில்  விஜய் ஆண்டனி கதாநாயகனாக  நடித்துள்ளார். பல படங்களுக்கு எடிட்டிங் செய்துள்ள முன்னணி எடிட்டர் லியோ ஜான் பால் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதில் விஜய் ஆண்டனியின் சகோதரர் அஜய் திஷான்  முக்கிய வில்லனாக அறிமுகமாகிறார். மேலும் சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரித்திகா, வினோத் சாகர், பிரிகிதா, அர்ச்சனா, கனிமொழி உட்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் இசையையும் விஜய் ஆண்டனியே மேற்கொண்டுள்ளார். 

 

சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூன் மாதம் 27 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் சசி, நலன் குமாரசாமி, ரவிக்குமார், மிலிந்த் ராவ், சி .வி. குமார், ரோகினி வெங்கடேசன், அருண் பிரபு, ஜோஸ்வா சேதுராமன், பெப்பின் ஜார்ஜ் மற்றும் தயாரிப்பாளர்கள் தனஞ்ஜயன், டி சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இந்த விழாவில் விஜய் ஆண்டனி பேசுகையில், ”அனைவருக்கும் வணக்கம், முதலில் இங்கு வந்துள்ள அத்தனை இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எனது நன்றி. குறிப்பாக இயக்குனர் சசி சாருக்கு நன்றி. நான் வாழ்க்கையில் எத்தனை படங்கள் நடித்தாலும் பிச்சைக்காரன் படம் போல் ஒரு படம் இனி அமையாது. அந்த அளவுக்கு ஒரு அற்புதமான படத்தை எனக்கு கொடுத்துள்ளார்.

 

இந்த படத்தின் கதையை எடிட்டர் லியோ ஜான் பால் சொன்னவுடன் நடிக்க முடிவு செய்தேன். பொதுவாக இயக்குனர்கள் கதை சொல்லும்போது ஏதாவது ஒரு விஷயம் புதிதாக இருந்தால் உடனே ஓகே சொல்லி விடுவேன். அப்படித்தான் இந்த ‘மார்கன்’ படத்திலும் நடித்துள்ளேன். லியோ மிகச்சிறந்த எடிட்டர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தப் படத்துக்கு பிறகு சிறந்த இயக்குனராகவும் அறியப்படுவார். அந்த அளவுக்கு மிக நேர்த்தியாக, அதே நேரம் தேவைப்படும் காட்சிகளை மட்டும் எடுத்தார். எப்போதும் இயக்குநர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க கூடாது. ஒரு குழந்தைக்கு அம்மா எப்படியோ, அப்படித்தான் ஒரு கதைக்கு இயக்குநர் என்பவர். அவருக்கு தான் தெரியும் அந்த குழந்தைக்கு என்ன வேண்டும் என்று, எனவே இயக்குநர்கள்  தான் அந்த கதையை சுமந்து வந்து ஒரு குழந்தையை போல் நமக்கு உருவாக்கித் தருகிறார்கள். 

 

Maargan Audio Launch

 

நான் வரிசையாக படங்களில் நடிப்பதும், படத்தை தயாரிப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பணம் அதிகமாக வைத்துக் கொண்டு படத்தை எடுக்கவில்லை. கடன் வாங்கி படத்தை எடுத்து வருகிறோம். ஒழுங்காக வட்டி கட்டுவதால் எப்பொழுது கேட்டாலும் பணம் கொடுக்கிறார்கள். என்னுடைய படங்கள் பெரிய லாபம் சம்பாதிக்காவிட்டாலும், நஷ்டம் ஏற்படுவதில்லை. அதற்கு காரணம் நானே நடிப்பதால் ஹீரோ சம்பளம் கிடையாது. இசையமைப்பாளர் வேலையையும் நானே செய்கிறேன். அதோடு ஒரு சில படங்களுக்கு எடிட்டிங் பணியையும் மேற்கொள்கிறேன். அதனால் எங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுவதில்லை. இவ்வளவு காலமாக எங்கள் தயாரிப்பில் நான் மட்டும் தான் ஹீரோவாக நடித்து வருகிறேன். இனி வரும் காலங்களில் மற்ற ஹீரோக்களை வைத்து படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளோம். 

 

இந்த படத்தில் கொடூர வில்லனாக அறிமுகமாகியுள்ள எனது சகோதரர் அஜய் திஷான் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். அவரிடம் அந்த திறமை இருந்ததால் அவரை நடிக்க வைத்தேன். அதை அவரும் சரியாக பயன்படுத்தி இன்று அடுத்த படத்திலும் கமிட் ஆகியுள்ளார். என்னுடைய படங்களுக்கு நெகட்டிவ் டைட்டில் வைப்பது பற்றி பலர் என்னிடம் கேட்டுள்ளனர். எனக்கு நெகட்டிவ் என்பதே கிடையாது. நான் நடித்த பிச்சைக்காரன், சைத்தான், கொலைகாரன் என பல படங்களுக்கு நெகட்டிவ்வாக தலைப்பு வைத்துள்ளதாக சொன்னார்கள். ஆனால் அந்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் படத்தில் ஆமை மற்றும் ஆந்தை முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது. பொதுவாக ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது என ஊரில் பழமொழி சொல்வார்கள். ஆனால் என்னை பொருத்தவரை ஆமையும் ஒரு உயிர் தான். அதேபோல் அமீனாவும் ஒரு மனிதர் தான் எனவே நெகட்டிவ்வாக பார்க்காமல், பாசிட்டிவாக பார்த்தால் எல்லாம் நன்மையாக முடியும். 

 

தொடர்ந்து படங்களில் நடிப்பது, தயாரிப்பது என பிஸியாக இருந்ததால் இசையில் கவனம் செலுத்த முடியவில்லை. இனிவரும் காலங்களில் நிறைய படங்களுக்கு இசையமைக்க முடிவு செய்துள்ளேன். என்னுடைய படங்களை தவிர்த்து பிற நடிகர்களின் படங்களுக்கும் இசையமைக்க உள்ளேன். இந்த ஆண்டு மட்டும் எனது இசையில் நான்கு படங்கள் ரிலீஸ் ஆகும். ஒவ்வொரு படங்களின் புரோமோஷனுக்கு வரும்போது அந்த படத்தில் நான் எந்த கேரக்டரில் நடிக்கிறேனோ அந்த கெட்டப்பில் வருகிறேன். இதற்கு காரணம் அந்த படம் குறித்த ஆர்வம் மக்களிடம் ஏற்படும் என்பதற்காக தான். இந்த படத்தில் தீக்காயங்கள் ஏற்பட்ட முகத்துடன் நடித்திருக்கிறேன் அதனால் அந்த தோற்றத்தில் வந்துள்ளேன். வரும் ஜூன் 27ஆம் தேதி படம் வெளியாகிறது. ரசிகர்களுக்கு  நல்ல சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இது நிச்சயமாக அமையும்.” என்றார்.

Related News

10492

‘டியர் ரதி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Sunday December-14 2025

'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த  இன்சாம்னியாக்ஸ் ட்ரீம்  கிரியேஷன்ஸ் எல்...

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...

தி.மு.க வில் இணைந்தார் ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்!
Thursday December-11 2025

திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...

Recent Gallery