Latest News :

நா. முத்துக்குமாருக்காக 8 இசையமைப்பாளர்கள் ஒன்றிணையும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி!
Sunday June-15 2025

தமிழ்த் திரையுலகில் தனது பாடல்கள் மூலம் தனி முத்திரை பதித்ததோடு கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் நீங்காமல் நிறைந்து இருப்பவர் மறைந்த பாடலாசிரியர் நா முத்துக்குமார். அவரது 5௦வது பிறந்தநாளை பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியாக கொண்டாட திரையுலகினர் முடிவு செய்துள்ளனர், இதற்கான முயற்சிகளை திரைத்துறையினர் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ளனர். 

 

இதன் அறிவிப்பு நிகழ்வில் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சம்மேளனத்தின் தலைவர்  - இயக்குநர் ஆர்.கே செல்வமணி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் - இயக்குநர்  ஆர் வி உதயகுமார், இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் ராம், தயாரிப்பாளர் தனஞ்செயன்,  இயக்குநர் விஜய் , எழுத்தாளர்கள் பவா செல்லத்துரை, அஜயன் பாலா ஆகியோர் கலந்துகொண்ட 'ஆனந்த யாழை' விழா சென்னையில் நடைபெற்றது.  

 

இதுபோன்ற நிகழ்ச்சிகளைத்  திறம்பட நடத்தி வரும் ஏசிடிசி நிறுவனத்துடன் கைகோர்த்து ஆனந்த யாழை விழாவை நடத்த இருக்கின்றனர். வரும் ஜூலை 19 ஆம்  தேதி இந்த விழா நேரு உள்ளரங்கம்- சென்னையில்  நடைபெற இருக்கிறது. 

 

இந்த இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ் குமார், ஹாரிஸ் ஜெயராஜ், எஸ் தமன், சந்தோஷ் நாராயணன், விஜய் ஆண்டனி, கார்த்திக் ராஜா மற்றும் நிவாஸ் கே பிரசன்னா ஒரு சேர ஒரு நிகழ்வில் இசைப் பந்தி வைப்பது இதுவே முதல் முறை. குரல் வளம் மிக்க கலைஞர்களான சித்தார்த், ஆண்ட்ரியா, திப்பு உத்தரா உன்னிகிருஷ்ணன், சைந்தவி, ஹரிணி ஆகியோர் தங்களது பங்களிப்பைத்  தர இருக்கிறார்கள்.

 

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, ரவி மோகன் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள இசைந்துள்ளனர்.  .

 

இந்த இசை நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை நேற்று நடைபெற்ற அறிவிப்பு விழாவில் கலந்துகொண்ட, நா முத்துக்குமாருடன் இணைந்து பயணித்த பிரபல திரைக்கலைஞர்களுடன்,  ஏசிடிசி நிறுவனத்தின் சார்பாக அதன் இயக்குநர் (Managing Director)  ஹேமந்த் மற்றும் இணை இயக்குநர் ( Joint Director) சரண் இணைந்து   வெளியிட்டனர். 

 

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், “இது இயக்குநர் விஜய்யின் கனவு. அந்தக் கனவை நினைவாக்க ஒரு பெரிய டீம் தேவைப்படுகிறது. அந்த நிறுவனம்தான் ஏ சி டி சி. 8000 பேரை அழைத்து நேரு ஸ்டேடியத்தில் விழா நடத்த முடிவெடுத்து இருப்பது பாராட்டுக்குரியது. நா.முத்துக்குமார் நம்மோடு இல்லாவிட்டாலும் நம் மனதில் எப்போதும் இருப்பார். 2009ல் கண்டேன் காதலை படத்தில் ஆரம்பித்து, தெய்வத்திருமகள், தாண்டவம் என பல படங்களில் மறக்க முடியாத பல அற்புதமான பாடல்களைக்  கொடுத்துள்ளார். ஒரு இந்திப் படத்தின் தமிழ் டப்பிங்கிற்காக 7 பாடல்களை இரண்டு நாட்களில் எழுதிக் கொடுத்தார், வேலை கொடுத்த உடனே அவ்வளவு வேகமாக பாடல்களை உருவாக்கினார். அவரது ஆர்வமும் ஈடுபாடும் வியக்க வைக்கும். ஒவ்வொரு வருடம் நிறைவு பெறும்போதும் இந்த வருடத்தில் எந்தெந்த பாடல்கள் எழுதியிருக்கிறேன் என எனக்கு ஒரு பட்டியல் அனுப்பி வைப்பார். ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதி, புத்தகங்களை, கவிதைத்  தொகுப்புகளை எழுதி பலரது மனங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற நா.முத்துக்குமாரின் திடீர் மறைவு எல்லோருக்கும் அதிர்ச்சி அளித்த ஒன்று.

 

அவர் மறைந்த அந்த சமயத்தில் நானும் இயக்குநர் விஜய்யும் அவருக்கு ஒரு நினைவேந்தல் நடத்த வேண்டும் எனப்  பேசினோம். ஆனால் ஒரு முறை அப்படி திட்டமிட்டும் அது கைகூடி வரவில்லை. ஆனால் இந்த 2025 ஆம் வருடத்தில் நா.முத்துக்குமாரின் 50 ஆவது வருடத்தை கொண்டாடுவதற்கான வாய்ப்பு அருமையாக உருவாகி உள்ளது. நா.முத்துக்குமாரை நினைத்தாலே ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்கிற பாடல் தான் நினைவுக்கு வரும். அதையே இந்த நிகழ்ச்சிக்கு டைட்டில் ஆக வைத்திருப்பது மிகமிகப் பொருத்தம்” என்றார்.

 

இயக்குநர் ராம் பேசுகையில், “நா முத்துக்குமார் என் வாழ்க்கையில் மட்டுமல்ல, தமிழ்த் திரை உலகத்திற்கு மட்டுமல்ல.. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தமிழ்த் திரை இசைப் பாடல்களைக் கேட்கக்கூடிய எல்லோருடைய வீடுகளிலும் ஆனந்த யாழை மீட்டிக் கொண்டிருக்கிறார். மீட்டப் போகிறார். நா.முத்துக்குமார் யாருடைய சுதந்திரத்திலும் தலையிடவும் இல்லை. முத்துக்குமார் எப்போதும் இமயமலை  என்றாலும் தன்னை பனித்துளி அளவே காட்டிக் கொள்வார். நான் முதல் படம் எடுக்கக் காரணமாக இருந்தவரே முத்துக்குமார் தான். திரையுலகில் உள்ள நண்பர்கள் யாரைப் பார்த்தாலும் முதலில் பேசுவது முத்துக்குமாரைப் பற்றித் தான் இருக்கும். இது நா.முத்துக்குமாரை தமிழகம் முழுக்க கொண்டாடப் போகிற ஒரு விழா. முத்துக்குமாரின் சாதனைகளை, முத்துக்குமாரின் வரிகளை என்றென்றும் தமிழகத்தில் நிலைத்திருக்குமாறு செய்யக்கூடிய விழா. தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு நடந்திராத ஒரு விழா என்று கூட சொல்லலாம்” என்றார்.

 

எழுத்தாளர் பவா செல்லத்துரை பேசுகையில், “சில நாட்களுக்கு முன்பு இறந்து போனவர்களைக் கூட உடனடியாக மறந்து விடும் இன்றைய சூழலில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு முத்துக்குமார் நம்மை விட்டுப் பிரிந்து போனாலும் கூட இன்று எவ்வளவு பேர் நினைவுகளில் ஒரு மனிதன் இருக்கிறார் என்பது மட்டும்தான் வரலாறு. தான் ஒரு கவிஞனா அல்லது ஒரு பாடல் ஆசிரியரா என்கிற போராட்டம் கடைசி வரை முத்துக்குமாருக்குள்ளே இருந்து கொண்டே இருந்தது. ஆனாலும் கவிதை, பாடல் என இரண்டு குதிரைகளிலும் வெற்றிகரமாக சவாரி செய்த ஒரு மனிதர் அவர். கடைசி வரை புத்தகங்களை வாசித்துக் கொண்டே இருந்தவர். சினிமாவிலும், சினிமாவிற்கு வெளியே இலக்கியத்திலும் நிறைய பேரை இணைக்கும் ஒரு தொடர்பு பாலமாக நா.முத்துக்குமார் இருந்தார்” என்றார்.

 

எழுத்தாளர் அஜயன் பாலா பேசுகையில், “தமிழகம் எத்தனையோ முத்துக்களை உருவாக்கித் தந்திருக்கிறது. இந்த முத்துக்களும் பல முத்துக்கள் உருவாகக்  காரணமாக இருந்திருக்கிறது. அந்த முத்துக்களில் எல்லாம் அரிய முத்தாக உருவானவர் நா.முத்துக்குமார்.  அவர் இறந்து இத்தனை வருடம் கழித்து ஐம்பதாவது வருடத்தில் இப்படி ஒரு பாராட்டு விழாவை சிறப்பான ஒரு நிகழ்வாகக்  கொண்டாடுவது என்பது தான் அவன் எப்படி வாழ்ந்தான், அவன் எப்படிப்பட்ட கவிஞன் என்பதற்கான அடையாளமாக இருக்கும். என் வாழ்க்கையில் நான் ஒரு இருண்ட அறைக்குள் இருந்தேன். எனக்குள் பல வெளிச்சங்களை உருவாக்கி பல உறவுகளை உருவாக்கிக் கொடுத்தவன் நா முத்துக்குமார். நட்பு என்ற வார்த்தைக்கு சரியான உதாரணமாக இருந்தவன் நா முத்துக்குமார். அவன் பாட்டு எழுதக்  கிளம்புகிறான் என்றால் அவரை நம்பி கோடம்பாக்கத்தில் ஐந்து அறைகளில் இருப்பவர்கள் சாப்பாட்டுக்காக காத்திருப்பார்கள். அவனது திருமண வாழ்க்கைக்கு முன்பாக தினசரி இதுபோன்ற பல நண்பர்களுக்கு வயிறார உணவு அளித்துக் கொண்டிருந்தான். கவிஞர், எழுத்தாளர் மட்டுமல்ல.. நா முத்துக்குமார் ஒரு சிறந்த மனிதன். வேறு எந்தத் திரையுலகிலும் ஒரு நண்பனுக்காக, கவிஞனுக்காக இப்படி ஒரு விழா நடந்தது இல்லை. இங்கே இப்படி ஒரு விழா நடப்பது ஒரு முத்திரை” என்றார்.

 

இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசுகையில், “நா.முத்துக்குமார் ஒரு அருமையான எழுத்தாளன். அற்புதமான படைப்பாளி. மிகச்சிறந்த கவிஞன். அவரது நினைவைக்  கொண்டாடுவதற்காக அவரது ஐம்பதாவது விழா ஆண்டிலே அவரது படைப்பாற்றலை போற்றும் விதமாக இந்த விழா எடுக்கப்படுகிறது. இதற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும். எத்தனை படைப்பாளர்களுக்கு இது போன்று விழா எடுக்க வேண்டும் என மற்றவர்கள் நினைக்கிறார்களோ தெரியாது. அந்த அளவிற்கு அவர் ஒரு கவிஞராக மட்டுமல்ல.. ஒரு சிறந்த மனிதராக வாழ்ந்திருக்கிறார். மற்றவர்களை மகிழ்வித்து மகிழக்கூடிய ஒரு கவிஞராக இருந்திருக்கிறார். கதையோட்டத்துடன் பாடல்களை எழுதக்கூடிய கவிஞர்கள் இப்போது இல்லை. ஆனால் ரத்தத்தோடும் உணர்வோடும் இன்று வரை ஒவ்வொரு எழுத்தும் வாழ்க்கையில்  எண்ணிப் பார்க்கக் கூடிய வரிகளைத் தந்து சென்றவர்தான் நா முத்துக்குமார்” என்றார்.

 

இயக்குநர் லிங்குசாமி பேசுகையில், “’தேரடி வீதியில் தேவதை வந்தால்’ என்கிற பாடல் தான் நா முத்துக்குமார் எனக்காக முதன் முதலில் எழுதிய பாடல். ஒரு படத்தில் பறவை பறந்த பிறகும் கிளையின் நடனம் முடியவில்லை என அவர்  எழுதிய வரிகள் போல தான், அவர் மறைந்தும் இன்னும் அவர் நினைவுகள் மறையாமல் இருக்கின்றன. ஒரு கட்டத்திற்கு மேல் எழுதுவதற்கு நேரம் இல்லாமல் சொல்லச் சொல்ல எழுதிக்கொள்ளும் அளவிற்கு பிஸியான பாடல் ஆசிரியராக மாறினார். எல்லா இசை அமைப்பாளர்களோடும் இணக்கமாக இருந்த ஒரு பாடல் ஆசிரியர். தொடர்ந்து வருடம் தோறும் அதிக பாடல்களை எழுதும் பாடல் ஆசிரியராக இருந்தார். தனது பாடல் வரிகளால் சில நேரம் ட்யூனையே கூட மாற்றி விடுவார். அவருக்கான விழாவை அவர் இறந்த அந்த காலகட்டத்திலேயே நடத்துவதற்கு சில முயற்சிகள் எடுத்தோம். ஆனால் இப்போதுதான் அதற்கான நேரம் வந்துள்ளது. அந்த பொறுப்பும் சரியாக இயக்குநர் விஜய்யிடம் வந்திருக்கிறது. வீடு மாறிப் போன ஒரு விருந்தாளி போல தான் அவரது மறைவை நான் பார்க்கிறேன்” என்றார்.

 

இயக்குநர் விஜய் பேசுகையில், “இந்த விழா நடப்பதற்கு மிக முக்கிய காரணமான ஏ சி டி சி குழுவுக்கு நன்றி. 2016ல் நா முத்துக்குமார் மறைந்த சில நாட்கள் கழித்து இயக்குநர் செல்வமணி என்னை அழைத்து முத்துக்குமாருக்கு ஒரு நினைவு விழா எடுக்க வேண்டும் என்று கூறினார். இதை முதலில் ஆரம்பித்தது அவர்தான். இந்த நிகழ்வு பற்றி சொன்னதும் விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ் எனப் பலரும் தாங்கள் இந்த நிகழ்ச்சியில் கான்சர்ட் செய்வதாக முன்வந்தார்கள். இது ஒரு பிரம்மாண்ட விழாவாக அமையப் போகிறது. அதைக் கொண்டாடும் தருணம் இது” என்றார்

 

பெப்சி தலைவர் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி பேசுகையில், “எனக்குள் சினிமாவுக்கு செல்லும் ஆர்வத்தைத்  தூண்டி வைத்து என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தது என்னுடைய அண்ணன் தான், நான் இயக்குநராக வளர்ந்து தயாரிப்பாளராக மாறிய பின்னர் ஒரு நாள் காஞ்சிபுரத்திலிருந்து நா முத்துக்குமாரையும் என்னிடம் அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார். அப்போது ஒரு கவிதைப்  புத்தகம் வெளியிடும் முயற்சியில் அவர் இருந்தார். நா முத்துக்குமாரைப்  பொருத்தவரை அவர் ஒரு ஞானக்கிறுக்கன். ஒரு கட்டத்தில் அவர் பேசுவதே பாடல் வரியாகவோ இலக்கியமாகவோ மாறியது. அம்மாவின் பாசத்தைப் பற்றி பலர் பாடல் எழுதிய நிலையில் அவர் பாடல் எழுதிய பின்பு தான் அப்பாவின் பாசத்தை பலரும் கொண்டாட ஆரம்பித்தார்கள்.

 

முத்துக்குமாரைப் பொருத்தவரை தன்னை யாராவது புகழ்ந்தாலும் கூச்சப்படுவார்.. தனக்கு யாராவது சம்பளம் பாக்கி வைத்தால் அதைக் கேட்பதற்கும்  கூச்சப்படுவார். அவர் மறைந்த  அந்த சமயத்திலேயே அவருக்கு நினைவு விழா நடத்துவதற்கு முயற்சி எடுத்தோம். ஆனால் சில காரணங்களால் அது அப்படியே தடைபட்டு நின்று விட்டது. இத்தனை வருடங்கள் கழித்தும் கூட அத்தனை இயக்குநர்களும் இந்த விழாவை நடத்துவதற்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம் என்று சொல்கிறார்களே அது தான் நா முத்துக்குமாரின் வெற்றி. இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடப்பதற்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத்தின் சார்பாக அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம். அதை உதவியாக இல்லாமல் எங்கள் கடமையாக நினைத்து செய்து தருகிறோம்” என்றார்.

 

ஏ சி டி சி இணைச்செயலாளர் சரண் பேசுகையில், “இப்படி ஒரு விழா எடுக்க இருக்கிறோம் என்று நாங்கள் முடிவு செய்து மொத்தம் எட்டு இசை அமைப்பாளர்கள், அந்த நல்ல மனிதருக்காக நாங்கள் வந்து இசையமைக்கிறோம் பாடுகிறோம் என்று சொன்னதற்காக அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம். இந்தியாவிலேயே எட்டு இசை அமைப்பாளர்கள் சேர்ந்து பண்ணும் கான்சர்ட் இதுதான் முதல் முறை. நா முத்துக்குமாருக்கு ஒரு காணிக்கையாக இதை நடத்த இருக்கிறோம். இசை மற்றும் அனைத்து வகையான நிகழ்ச்சிகளை நடத்துவதில் முன்னோடியாக இருப்பது தான் ஏ சி டி சி நிறுவனம். நூற்றுக்கணக்கான புகழ்பெற்ற இசைக்கலைஞர்களை வைத்து மிகப் பெரிய நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளது. எந்த ஒரு சிறப்பு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்யும் திறன் கொண்ட  நிறுவனம். அந்த வகையில் பாடல்களால் மக்கள் மனதில் நிறைந்த நா முத்துக்குமார் அவர்களின் 50 வது ஆண்டு விழாவை எடுப்பதில் பெருமை அடைகிறது ஏ சி டி சி நிறுவனம்.” என்றார்.

 

நிறைவாக தயாரிப்பாளர் தனஞ்செயன் எங்களுடன் இணைந்து பணியாற்றும் பத்திரிகை தொடர்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. இத்தனை பத்திரிகை தொடர்பாளர்களை ஒன்று சேரப் பார்ப்பதே மகிழ்வாக இருக்கிறது. இவ்விழா வெற்றிகரமாக நிகழும் எனக் கூறினார்.

Related News

10518

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே...

நடிகைகளை உருட்டும் இயக்குநர் நான் அல்ல! - ’உருட்டு உருட்டு’ பட விழாவில் விக்ரமன் பேச்சு
Saturday July-12 2025

ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ்  என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு  ஜெய்சங்கர் தயாரிப்பில்,   பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில்,  சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

Recent Gallery