Latest News :

’தேசிங்குராஜா 2’-வின் வெற்றிக்கு விமல் தான் முக்கிய காரணமாக இருக்கப் போகிறார் - இயக்குநர் எழில் உறுதி
Tuesday July-01 2025

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். தொடர்ந்து ஜனரஞ்சகமான, குடும்பப்பாங்கான, அதேசமயம் நகைச்சுவைக்கு உத்தரவாதம் கொடுக்க கூடிய படங்களாக இயக்கி வருகிறார் இயக்குநர் எழில்.  கடந்த 2013ல் விமலை வைத்து இவர் இயக்கிய தேசிங்கு ராஜா படம் வெற்றிப்படமாக அமைந்தது. 12 வருடங்களுக்கு தற்போது இதன் இரண்டாம் பாகமாக விமல் நாயகனாக நடிக்கும் தேசிங்கு ராஜா-2 படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் எழில்.  

 

இன்பினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் P ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு இணையான இன்னொரு முக்கிய கதாபாத்தில் நடிகர் ஜனா அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக பூஜிதா பொன்னாடா, ஜூலி, ஹர்ஷிதா ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் சிங்கம்புலி, ரவிமரியா, சாம்ஸ், ரோபோ சங்கர், சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், மதுரை முத்து, விஜய் டிவி புகழ், விஜய் டிவி கோதண்டம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளனர். 

 

மெலடி கிங் வித்யாசாகர் ‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தை தொடர்ந்து 23 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இயக்குநர் எழிலுடன் இணைந்து இந்த படத்தில் பணியாற்றியுள்ளார். படத்தின் ஒளிப்பதிவை செல்வா கவனித்துள்ளார்.

 

வரும் ஜூலை 11ஆம் தேதி இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதை முன்னிட்டு இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை வடபழனி கமலா தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் (FEFSI) தலைவர் இயக்குநர் ஆர்,கே. செல்வமணி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் இயக்குநர் ஆர்,வி. உதயகுமார் மற்றும் செயலாளர் இயக்குநர் பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

 

இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் வித்யாசாகர் பேசுகையில், “இயக்குநர் எழிலுக்கு என்னுடன் முதல் படம் ‘பூவெல்லாம் உன் வாசம்’. அதற்கு அடுத்த படத்தில் இணைவதற்கு 25 வருடங்கள் பிடித்திருக்கிறது. அந்த படத்தின் பாடல்கள் அவரை அவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என நினைக்கிறேன். அதிலிருந்து மீண்டு வந்து இந்த படத்தை கொடுத்திருக்கிறார். எழிலின் படங்கள் எப்பொழுதும் குடும்பத்தோடு பார்க்கும் படங்கள். ஆனால் இந்த படத்தை பார்க்கும்போது அதிரடியாக இருந்தது. இரண்டு படங்களிலும் பார்த்த  எழிலுக்கு ரொம்பவே வித்தியாசம் இருக்கிறது.

 

முதல் பிரேமிலிருந்து கடைசி பிரேம் வரை எனக்கு எங்கே பின்னணி இசை வாசிப்பது என்பதில் சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. அந்த அளவிற்கு அனைவரும் பேசிக்கொண்டே, காமெடி பண்ணிக் கொண்டே இருக்கிறார்கள். ஜன்னல் ஓரம் படத்திற்குப் பிறகு மீண்டும் இசையமைக்கும் விமல் படமும் இதுதான். இந்த படத்தில் அறிமுகமாகி இருக்கும் ஜனா உள்ளிட்ட கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். டிஜிட்டலுக்கு மாறிய பிறகு இசைக்கருவிகளை கையாளுவது எளிதாக இருக்கலாம். ஆனால் இசையை உருவாக்க கற்பனை தேவை” என்றார்.

 

நடிகர் சாம்ஸ் பேசுகையில், “இந்த படத்தின் தயாரிப்பாளர் காட்சிகள் நன்றாக வரவேண்டும் என்பதற்காக செலவு பற்றி கவலைப்படாத ஒருவர். அவரது மகன் ஜனா இந்த படத்தில் நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். அவருக்கு இது வெற்றி படமாக அமையும். எழில் சார் படங்களில் நடிக்கும் போது நிறைய காமெடி நடிகர்களும் உடன் நடிப்பதால் அவர்களைப் பார்த்து நான் இன்னும் அப்டேட் செய்து கொள்ள முடிகிறது. கமல், ரஜினி காலத்தில் கார்த்திக் ஒரு வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்துவார். இப்போதைய காலகட்டத்தில் விமலின் நடிப்பு அப்படித்தான் இருக்கிறது. வழக்கமாக ஹீரோ, ஹீரோயின் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும் என்பார்கள். இந்த படத்தில் எனக்கும் நடிகர் புகழுக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இந்தப் படத்தின் நான்காவது ஹீரோயின் புகழ் என்று சொல்லலாம்” என்றார்.

 

ஒளிப்பதிவாளர் செல்வா பேசுகையில், “எழில் சாரின் முதல் படமான துள்ளாத மனம் துள்ளும் படத்தில் ஆரம்பித்து அவருடன் இந்த படம் வரை 25 வருடங்களாக உடன் பயணித்து வருகிறேன். இந்த படத்தில் நடிப்பதற்காக எழிலிடம் யார் வாய்ப்பு தேடி வந்தாலும் அவர்களை இல்லை என திருப்பி அனுப்பாமல் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க வைத்திருக்கிறார். விஜய் சார் முதல் இப்போதைய விமல் வரை இன்றைய தலைமுறை நடிகர்கள் வரை  பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. விமல் நடித்த களவாணி படத்தின் கன்னட ரீமேக் கிராதா படத்தில் நடிகர் யஷ்ஷை வைத்து ஒளிப்பதிவு செய்தது நான் தான். 

 

இந்த படத்தில் கிட்டத்தட்ட 35 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடந்தது. போன வேகமே தெரியவில்லை. சீக்கிரமே முடிந்தது போன்று உணர்வு ஏற்பட்டது. என்னை பொருத்தவரை  தயாரிப்பாளர்களுக்கு ஏற்ற மாதிரியான ஒரு நபர் நான் நான். நிலாவே வா படத்தில் வித்யாசாகர் உடன் இணைந்து பணியாற்றினேன். அந்த படத்தில் ‘நீ காற்று நான் மழை’ பாடலுக்கு ஒளிப்பதிவு செய்தேன். இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள நிலா பாடலுக்கு என்னால் முடிந்த அளவிற்கு காட்சிப்படுத்தி உள்ளேன்’ என்றார்.

 

நடிகர் ரோபோ சங்கர் பேசுகையில், “இன்றுவரை குழந்தைகள் மத்தியில் கூட நான் தெரிவதற்கு காரணம் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் காமெடிதான். அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காமெடிக்கான லீட் இருந்தது. இந்த படத்தில் அதற்கான வாய்ப்பை எனக்கு கொடுத்த எழில் சாருக்கு நன்றி. விரைவில் அவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கணும். ஒரு காமெடி போராட்டம் நடத்தியே ஆகணும்” என்றார்.

 

நடிகர் ரவி மரியா பேசுகையில், “இந்த படத்திற்கும் தேசிங்குராஜா முதல் பாகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதில் நடித்த விமல், நான், சிங்கம் புலி உள்ளிட்ட சில நடிகர்கள்  இதில் நடித்திருக்கிறோம் என்பதை தவிர. இந்த கதைக்கு என்ன டைட்டில் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம் தயாரிப்பாளர் விரும்பியதால் தேசிங்குராஜா 2 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தேசிங்கு ராஜா ஒரு காமெடி கலாட்டா என்றால் இந்த இரண்டாம் பாகம் ஒரு காமெடி களேபரம் என்று சொல்லலாம். வசந்தபாலன் என்னை வில்லனாக அறிமுகப்படுத்தினார். உங்களை யார் வில்லனாக நடிக்க வைத்தது உங்களுக்குள் காமெடி இருக்கிறது என்று கூறி என்னை மனம் கொத்தி பறவை மூலம் நகைச்சுவை  பாதைக்கு திருப்பியவர் இயக்குனர் எழில் தான். 

 

வில்லனாக இருந்துகொண்டே நகைச்சுவை செய்வது என்பது இரண்டு பொண்டாட்டிக்காரன் கதை போலத்தான். அவர் என் மீது வைத்த நம்பிக்கை காரணமாக காமெடி படங்களை பார்த்து பார்த்து ஹோம் ஒர்க் பண்ண ஆரம்பித்து விட்டேன். வெறும் வில்லனாக மட்டும் நடித்திருந்தால் என்னுடைய பயணம் இந்த அளவுக்கு நீண்டு இருக்காது. இப்போது வரை தொடர்ந்து நடிப்பதற்கு இயக்குனர் எழில் சார் தான் காரணம். இந்த படத்தில் அறிமுகம் ஆகி இருக்கும் தயாரிப்பாளரின் மகன் ஜனா ஒரு ஆக்சன் ஹீரோவுக்கான எல்லா இலக்கணமும் அவரிடம் இருக்கிறது. நல்ல ஹீரோவாக அவர் நிச்சயமாக உருவாகி இருக்கிறார். அதற்கு நிறைய இடம் கொடுத்த விமலுக்கு இந்த இடத்தில் நன்றி சொல்ல வேண்டும்” என்றார்.

 

நடிகை ஜூலி பேசுகையில், “நான் மலையாளத்தை சேர்ந்தவள். படத்தில் ஜனாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். படத்தில் நடிக்க ஆரம்பிக்கும்போது எனக்கு அவ்வளவாக தமிழ் தெரியாது. அவர்தான் நிறைய சொல்லிக் கொடுத்தார். அவருக்கு நான் மலையாளம் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். இதில் நடித்த மற்ற நடிகர்களுக்கு காமெடி காட்சிகள் நிறைய இருந்தாலும் எனக்கு சென்டிமென்ட் காட்சிகள் தான் இருந்தன” என்றார்.

 

நடிகை ஹர்ஷிதா பேசுகையில், “இது என்னுடைய முதல் படம் என்பதால் அந்த அனுபவமே புதிதாக இருந்தது. நான் தெலுங்கை சேர்ந்தவள். அங்கே சந்திரமுகி படம் வெளியாகியதிலிருந்து வித்யாசாகரின் மிகப்பெரிய ரசிகை நான். அவருடைய இசையில் இந்த படத்தில் நடித்ததுடன் ஒரு அருமையான மெலடி பாடல் கிடைத்திருப்பது அதிர்ஷ்டம். நானும் இந்த படத்தில் ஜனாவுக்கு ஜோடியாக நடித்திருப்பதால் விமலுடன் குறைவான காட்சிகளிலேயே நடித்திருக்கிறேன். ஆனாலும் விமல் பழகுவதற்கு இனிமையான மனிதர்” என்றார்.

 

நடிகர் ஜனா பேசுகையில், “மக்களை சிரிக்க வைக்கின்ற ஒரு கலகலப்பான படத்தின் நடிக்கலாமே என்கிற எண்ணம் இருந்தபோதுதான் எழில் சாரின் இந்த படத்தில நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னை சுற்றி இருக்கும் நடிகர்கள் நடிப்பது, காமெடியை இம்ப்ரூவ் செய்து பேசுவது என ஒரே கலாட்டாவாக இருக்கும். அவர்களை பார்த்து நானும் ஏதாவது இம்ப்ரூவ் பண்ணலாமா என உதவி இயக்குனர்களிடம் கேட்டால், நீங்கள் உங்களுடைய மீட்டருக்கு மேலே நடிக்க கூடாது. நீங்கள் காமெடி பண்ணக்கூடாது, உங்களை சுற்றி தான் காமெடியே நடக்கும் என்று சொல்லிவிட்டார்கள். விமல் சார் மற்றவர்கள் நடிப்பதற்கு நிறைய இடம் கொடுப்பார்” என்றார்.

 

விஜய் டிவி நடிகர் புகழ் பேசுகையில், “சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறேன். ஆனாலும் உங்களை குக்கு வித் கோமாளியில் பார்த்தது போல சினிமாவில் பார்க்க முடியவில்லை என்று பலரும் கேட்பார்கள். அந்த குறையை இந்த படத்தின் மூலம் எழில் சார் தீர்த்து வைத்துள்ளார். எனக்கு பெண் வேடம் மூலமாகத்தான் பெரிய அளவு பிரபலம் கிடைத்தது. இந்த படத்திலும் அப்படி ஒரு கதாபாத்திரத்திலே நடித்தது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. சினிமாவில் எப்போது காமெடி பண்ண போகிறீர்கள் என எல்லோரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு பதில் சொல்லும் படமாக இந்த தேசிங்குராஜா 2 இருக்கும்” என்றார்.

 

பெப்சி தலைவர் இயக்குநர் ஆர்.கே செல்வமணி பேசுகையில், “காமெடி படங்கள் எடுப்பது ரொம்பவே கஷ்டம். அதனால்தான் என்னுடைய படங்களில் பெரும்பாலும் காமெடியே இருக்காது. இசையமைப்பாளர் வித்யாசாகரை பொறுத்தவரை அவர் ஒரு இலக்கிய கவிஞர் என்று சொல்லலாம். பாடல்களில் வேற்றுமொழி வார்த்தைகளை கூட அனுமதிக்க மாட்டார். அவர் எப்படி இப்படி ஒரு பாடலை இந்த படத்தில் போட்டார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த 25 வருடத்தில் அவர் நிறைய மாறிவிட்டார். இளையராஜாவிற்கு பிறகு இசையை அதிகமாக நேசிப்பவர் வித்யாசாகர் தான். 

 

இயக்குனர் எழில் இந்த படத்தில் பத்து இயக்குனர்களை நடிக்க வைத்தது போல அடுத்த படத்தில் அவர் பத்து தயாரிப்பாளர்களை கட்டாயம் நடிக்க வைக்க வேண்டும். தயாரிப்பாளர் சங்கம், பெப்சி பிரச்சினைகளை பேசிவிட்டு வீட்டுக்கு டென்ஷனுடன் வருவதெல்லாம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தின் அந்த ஆறு மணி காமெடியை தான் பார்த்து ரிலாக்ஸ் ஆவேன். மக்களுக்கு என்ன தேவையோ அதை கொடுக்க வேண்டும் என்பதற்காக தன்னை மாற்றிக்கொண்டு படங்களை கொடுக்கக்கூடியவர் இயக்குநர் எழில். 

 

விமல் இந்த படத்தில் அழகாக இருக்கிறார். பிரபுதேவா போல டான்ஸ் ஆடி இருக்கிறார். எப்படி நம்மை படம் எடுக்க வேண்டாம் என்று சொன்னால் கோபப்படுவோமோ அதேபோலத்தான் யூடியூப்பில் விமர்சனம் பண்ணுபவர்களை பண்ண வேண்டாம் என்று சொன்னால் அவர்களுக்கு கோபம் வரும். அது மட்டுமல்ல ஒரு படத்தை பற்றி நல்லபடியாக விமர்சனம் பண்ணினால் அதை பார்ப்பதற்கு இங்கே ஆள் இல்லை. விமர்சனம் பண்ணுவதை தடுக்க முடியாது. ஆனால் படம் வெளியாகி ஒரு நாள் கழித்தாவது விமர்சனம் செய்யலாமே” என்றார்.

 

Desinguraja 2

 

இயக்குநர்கள்  சங்க தலைவர் ஆர்.வி உதயகுமார் பேசுகையில், “இயக்குநர் எழில் இந்த டீசரில் என் கதாபாத்திரத்தை காட்டவில்லை. நான் என்ன கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன் என்பதை சஸ்பென்சாக வைத்திருக்கிறார் போல. அப்படி ஒரு முதன்மையான மற்றும் முக்கியமான கதாபாத்திரம் அது. படத்தில் நான் இட்ட வேலையை செய்வதற்காகத்தான் அனைவரும் ஓடிக்கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு கதாபாத்திரம். இயக்குநர் எழிலுக்கு திரையுலகில் இது பொன்விழா ஆண்டு என்பதால் இந்த படம் நிச்சயம் வெற்றி படமாக அமையும். இந்த படத்தில் நடிகராக அறிமுகம் ஆகி உள்ள ஜனாவை பார்க்கும் போது நடிகர் ராணாவை பார்த்த உணர்வு ஏற்படுகிறது. நடிகர் (விஜய் டிவி)புகழ் பெண்ணாக பிறந்திருக்கலாம். அந்த அளவுக்கு கலக்கி இருக்கிறார். நானும் செல்வமணியும் படம் இயக்கிய காலங்களில் இருந்த ஹீரோக்களில் வெள்ளந்தியாக பேசக்கூடியவரான் நடிகர் விஜயகாந்துக்கு அடுத்ததாக நான் இப்போது பார்க்க கூடியவர் நடிகர் விமல் தான். எல்லாவற்றையும் அரவணைத்து போகக்கூடிய மனப்பான்மை கொண்ட விமலுக்கு தோல்வி என்பது கிடையாது. இந்த படம் வெற்றி படமாக அமையும்” என்றார்.

 

நாயகன் விமல் பேசுகையில், “இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையில் இரண்டு படங்கள் அல்ல.. இரண்டேகால் படங்கள் பண்ணியிருக்கிறேன். கில்லி படத்தில் கொக்கர கொக்கரக்கோ பாடலில் நான் ஆடியிருக்கிறேன். இயக்குநர் எழிலுடன் இது எனக்கு இரண்டாவது படம். கிட்டத்தட்ட 13 வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் எழிலுடன் இணைந்துள்ளேன். இதற்கு முன்பு நான் நடித்த விலங்கு என்கிற வெப்சீரிஸ், போகும் இடம் வெகு தூரம் இல்லை படம் எல்லாம் சீரியஸாக இருந்தன. அந்த சமயத்தில் தான் இயக்குனர் எழில் தேசிங்குராஜா 2 படத்திற்கு என்னை அழைத்தார். அப்படி சீரியஸாக நடித்துவிட்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபோதே அவ்வளவு ரிலாக்ஸாக, ஜாலியாக இருந்தது.

 

இது எழில் சாரின் 25வது வருடம். அவர் இன்னும் பொன்விழா ஆண்டு காண வேண்டும். நிறைய நகைச்சுவை நடிகர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும். இந்த படத்தில் நடித்துள்ள ஜனாவை பொருத்தவரை எப்போதுமே ஒரு தயாரிப்பாளரின் பையன் என்பதை காட்டிக் கொண்டதே இல்லை. படம் முடிவடையும் சமயத்தில் தான் நிறைய பேருக்கு அவர் தயாரிப்பாளர் மகன் என்றே தெரிய வந்திருக்கும். அவர் இன்னும் நிறைய உயரங்களை தொட வேண்டும்” என்றார்.

 

இயக்குநர் பேரரசு பேசுகயில், “எழில் சாருக்கு இது 25வது வருடம். விமலை இப்படி வேட்டி சட்டையில் பார்க்கும்போது அவரது இயல்பிலும் சரி உடையிலும் சரி 100% விஜயகாந்த் மாதிரி தான் இருக்கிறார். இசையமைப்பாளர் வித்யாசாகர் மெலடியில் மட்டுமல்ல, எல்லாவற்றிலும் கிங். என்னை கெடுத்ததே அவர்தான். திருப்பாச்சி படத்தில் விஜய் சாருக்கு அருமையான மெலடி பாடல் ஒன்றை உருவாக்கி அதை சொல்வதற்காக அவர் கில்லி படப்பிடிப்பில் இருந்தபோது பார்க்க சென்றிருந்தேன். அங்கே வித்யாசாகர் இசையில் அப்படி போடு போடு என்கிற பாடல் காட்சி படமாகி கொண்டிருந்தது. அதை பார்த்ததும் நம் ரூட்டை மாற்ற வேண்டும் என நினைத்து தான், மீண்டும் அந்தப் பாடலை ‘அத்த பெத்த வெத்தலை’ என்கிற குத்துபாட்டாக மாற்றினேன். என்னை குத்துப்பாட்டு இயக்குனராக மாற்றியது வித்யாசாகர் தான்.  அவருடைய எதிரும் புதிரும் படத்தில் இடம்பெற்ற தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலில் கூட முதலில் சிம்ரன் நெப்போலியனும் ஆடுவதாக தான் இருந்தது அதன் பிறகு தான் ராஜூசுந்திரம் மாஸ்டர் நடித்தார். இன்றைக்கும் அந்த பாடல் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. ஒரு வகையில் நானும் எழில் சாரும் எதிரும் புதிருமாகத்தான் இருக்கிறோம். நான் ஸ்கிரிப்ட் தாண்டி யாரையும் பேச விட மாட்டேன். இவர் அப்படி பேசுவதற்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார் என்று எல்லோரும் பேசுவதில் இருந்து தெரிந்து கொண்டேன். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள்” என்றார்.

 

இயக்குநர் எழில் பேசுகையில், “ஒரு படத்தில் நடிக்கும் போது அனைவரும் ஒத்துழைப்பு கொடுப்பது பெரிய விஷயம் கிடையாது. படம் முடிந்த பிறகு இது போன்ற விழாக்களுக்கு அனைவரும் வந்து கலந்து கொள்வது என்பது தான் இந்த விழாவின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம். இந்த படத்தின் வேலைகளை முடித்துவிட்டு நான் இன்னொரு பட வேலைகளை கவனிக்க சென்று விட்டேன். ஆனால் தயாரிப்பாளர் ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் செலுத்தி அழகாக இதை முடித்துள்ளார். அந்த வகையில் சினிமாவை நேசிக்கக்கூடிய ஒரு தயாரிப்பாளர் நமக்கு கிடைத்துள்ளார். தேசிங்குராஜா படத்தில் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது விமல். இந்த இரண்டாம் பாகத்தின் வெற்றிக்கும் அவர்தான் முக்கிய காரணமாக இருக்கப் போகிறார். இத்தனை நடிகர்களை வைத்து நான் படம் பண்ணியது கிடையாது. இந்த படத்தில் ஸ்கிரிப்ட் வடிவமைப்பு வேற மாதிரி இருக்கும். மின்னல் மாதிரி போகும். வித்யாசாகர் சொன்னது போல ஒரு காமெடி சிரித்து முடிந்து உடனடியாக அடுத்த காமெடி வந்துவிடும். அவ்வளவு ஸ்பீடாக இருக்கும். இந்த படத்தில் காமெடி நன்றாகவே ஒர்க்அவுட் ஆகி இருக்கிறது. என்னுடைய மூன்றாவது படத்திலேயே வித்யாசாகர் இசையமைத்தார். அப்போது நல்ல பாடல்களாக கொடுத்து விட்டார். ஆனால் அவருடைய திறமை என்ன என்பது எனக்கு அப்போது தெரியவில்லை இப்போது மீண்டும் அவருடன் பணியாற்றும்போது தான் பிரமிப்பாக இருக்கிறது” என்றார்.


Related News

10542

பெரிய டங்களில் சட்ட விரோத செயல்கள் தான் பெரிதாகக் காட்டப்படுகின்றன - ’மகேஸ்வரன் மகிமை’ பட விழாவில் கே.ராஜன் பேச்சு
Tuesday July-01 2025

எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...

ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை மாற்றிய இயக்குநர் ஜோதி கிருஷ்ணா!
Tuesday July-01 2025

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...

Recent Gallery