சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் டி. ஜி. தியாகராஜன், தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மேனன், இயக்குநர் பாண்டிராஜ், நடிகர் ரோஹன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் செந்தில் தியாகராஜன் பேசுகையில், ''மூன்றாவது தலைமுறையாக திரைப்படங்களை தயாரித்து தயாரிப்பாளராக பணியாற்றி வருகிறோம். தொடர்ந்து ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 'தலைவன் தலைவி' அற்புதமான குடும்பத் திரைப்படம். இயக்குநர் பாண்டிராஜ் ஒரு சுயம்பு. அவருடைய தனிப்பட்ட முயற்சியில் மிகப் பெரும் இயக்குநராக உருவாகி இருக்கிறார். அவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் தான். அவர் கதை சொன்னபோது அப்பாவுக்கு பிடித்திருந்தது. எங்களுக்கும் பிடித்திருந்தது.
விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. அவருடைய புகழ் இன்று சீனா வரை பரவி இருக்கிறது. அவர் நடிப்பில் வெளியான 'மகாராஜா' திரைப்படம் அங்கு இந்திய மதிப்பில் எண்பது கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. ஹாங்காங்கில் அவர் ஹாலிவுட் நடிகர் டென்செல் வாஷிங்டனுக்கு இணையாக புகழ் பெற்றிருக்கிறார். அந்த அளவிற்கு அவர் ரசிகர்களிடம் சென்றடைந்திருக்கிறார். கொல்கத்தாவிலும் அவரைப் பற்றி பேசுகிறார்கள். அவர்கள் 'தமிழ் சினிமா என்றால் விஜய் சேதுபதி தான்' என சொல்கிறார்கள். அவருடைய புகழ் எங்களுக்கு மிகவும் பொக்கிஷமாக இருந்ததுடன், அவருடன் இணைந்து பணியாற்றுவதும் பெருமிதமாக இருக்கிறது.
நித்யா மேனனை பற்றி குறிப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. அவர் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும், அவருடன் மிகப்பெரிய நட்சத்திர நடிகர் நடித்தாலும், அவருடைய தனி திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடிப்பவர். அவருடன் இணைந்து பணியாற்றுவதும் எங்களுக்கு கிடைத்த பாக்கியமாகவே கருதுகிறோம்.
இந்தப் படத்தில் பாடல்களை அனைத்தும் அற்புதமாக வழங்கியிருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். புதிய புதிய ஓசைகளையும் கொடுத்திருக்கிறார். ஆதி கால தமிழர்களின் இசையை உலகத் தரத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறார். 'தலைவன் தலைவி' மிகப்பெரிய கேளிக்கை படமாக அமையும். ரசிகர்களும், ஊடகங்களும் இந்த படத்திற்கு பேராதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
நாயகன் விஜய் சேதுபதி பேசுகையில், ''எங்கிருந்து தொடங்குவது என தெரியவில்லை. இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் போது ஏராளமான சண்டை, சச்சரவுகள் இருந்தன. அதற்கு இடையில் தான் இப்படத்தின் பணி தொடங்கியது. படத்தின் இயக்குநரும், நாயகனும் ஒன்று சேர்ந்த தருணம் இருக்கிறதே, அதை நாங்களே எதிர்பார்க்கவில்லை. இவருடன் இணைந்து பணியாற்றக்கூடாது என்று அவரும், இவரது இயக்கத்தில் பணியாற்றக் கூடாது என்று நானும் இருந்த காலகட்டம் அது. இரண்டு பேருக்கும் இடையில் தனிப்பட்ட முறையில் எந்த கோபமும் இல்லை. அதனால் அழகான தருணத்தில் ஒரு சிறிய பூ எப்படி இயல்பாக மலருமோ, அதேபோல் எங்களுக்கு இடையேயான கோபம் மறைந்து, அன்பு மலர்ந்தது. அதன் பிறகு எல்லா விஷயங்களும் படபடவென நடந்தன.
கிட்டத்தட்ட இயக்குநரை எனக்கு 2009 ஆம் ஆண்டிலிருந்து தெரியும். 'தென்மேற்கு பருவக்காற்று' படத்திற்காக தேசிய விருதினை வென்ற போது நாங்கள் இருவரும் சந்தித்து உரையாடி இருக்கின்றோம். இப்போது இணைந்திருப்பது எப்படி இருக்கிறது என்றால். ஒரு மிகப்பெரிய வட்டம் நிறைவடைந்தது போல் இருந்தது. இந்த படத்தின் பணிகள் தொடங்கியது ஒரு அற்புதமான அனுபவம்.
சத்யஜோதி நிறுவனத்தை பற்றி தெரியும். 'மூன்றாம் பிறை' படத்தின் மூலம் தான் இவர்கள் தங்களுடைய தயாரிப்பை தொடங்கி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டபோது ஆச்சரியமாக இருந்தது. இவர்களின் தயாரிப்பு நிறுவனத்தில் நான் நடித்ததும், இணைந்து பணியாற்றியதும் எனக்கு மிகவும் சந்தோஷம் . இந்த நிறுவனத்துடன் முதன் முதலாக நான் இணைந்து பணியாற்றியதை பெருமிதமாக கருதுகிறேன்.
நித்யா மேனனுடன் 2020ம் ஆண்டில் '19 (1) (ஏ) ' என்ற மலையாள படத்தில் இணைந்து நடித்திருக்கிறேன். அது கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படம். இயக்குநர் இந்துவின் வேண்டுகோளை ஏற்று, அவர் சொன்ன கதை எனக்கு பிடித்திருந்ததால் அந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தேன். அப்போது நித்யா மேனன் தான் கதாநாயகி என எனக்கு தெரியாது. படப்பிடிப்பு தளத்தில் இணைந்து பணியாற்றிய போது.'வாய்ப்பு கிடைத்தால் நாம் இருவரும் இணைந்து பணியாற்றுவோம்' என பேசிக்கொண்டோம். ஆனால் அந்த வாய்ப்பு 'தலைவன் தலைவி' படத்தில் இப்படி அமையும் என்று எதிர்பார்க்கவில்லை. நித்யாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால் இப்படி ஒரு வேடத்தில் அவர்களுடன் இணைந்து நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. இது படம் பார்த்த பிறகு உங்கள் அனைவருக்கும் புரியும். அவருடனும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அந்த கதாபாத்திரத்தில் நித்யாவை தவிர வேறு யாரையும் நினைத்து கூட பார்க்க இயலாது. கிட்டத்தட்ட அவர் நடித்த எல்லா கதாபாத்திரமும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். நித்யா ஒரு படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கிறார் என்றால் அந்த கேரக்டரில் வேறு யாரையும் நினைத்து கூட பார்க்க முடியாது. அப்படியொரு அற்புதமான நடிப்பை வழங்குபவர்.
படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்தோம், இதுதான் காட்சி, இதுதான் வசனம், இதுதான் நடிப்பு, இதுதான் நடனம் என்று இயல்பாக கடந்து செல்ல மாட்டார். அதை முழுமையாக உணர்ந்து அந்த கதாபாத்திரத்திற்காக என்ன செய்யலாமோ அல்லது அதனை எப்படி எல்லாம் திரையில் காண்பிக்கலாமோ அல்லது இயக்குநர் என்ன எதிர்பார்க்கிறாரோ இவை அனைத்தையும் சரியாக புரிந்து கொண்டு அதை சரியாக வழங்கிட வேண்டும் என்று மெனக்கெடும் அற்புதமான நடிகை தான் நித்யா. அவருடன் இணைந்து பணியாற்றியதற்காக அவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
பாண்டிராஜ் பற்றி சொன்னேன். நிறைய இயக்குநர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். இதை ஒரு பயணத்துடன் ஒப்பிடுகிறேன். பிரயாணம் செய்து கொண்டிருப்போம். தோராயமாக 500 கிலோமீட்டர் தூரத்திற்கு பயணம் செய்கிறோம் என்றால், அதில் ஒவ்வொரு கிலோ மீட்டரும் மனதில் தங்காது. ஏதோ ஐந்தாறு இடங்கள் நினைவில் பசுமையாய் தங்கிவிடும். எங்காவது இளைப்பாறியிருப்போம், எங்காவது உட்கார்ந்து இயற்கையை ரசித்திருப்போம், எங்காவது சாப்பிட்டிருப்போம், எதுவும் செய்யாமல் நின்று இருப்போம், மேகங்களை ரசித்திருப்போம், புகைப்படம் எடுத்திருப்போம். அந்த நினைவுகள் மட்டும் தான் அந்த பயணத்தில் கிடைத்திருக்கும். அந்த நினைவுகளை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்தி பார்க்கும்போது மீண்டும் மற்றொரு முறை பயணம் செய்யலாமா எனத் தோன்றும். அதைப் போன்று தான் அவருடன் நான் இணைந்து பணியாற்றியது. மிக அற்புதமான பயணத்தில் கிடைக்கக்கூடிய நினைவுகளை போன்றது தான் அது. உண்மையை சொல்லப்போனால் சற்று கடினமாக இருந்தாலும், அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
படப்பிடிப்பு தளத்தில் கடைசி நாளன்று படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்துவிட்டு ஓய்வாக 45 நிமிடங்களுக்கு மேலாக அனைவரும் ஒன்றாக பேசிக்கொண்டிருந்தோம். அப்போது படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதே, இன்னும் ஒரு வார காலம் நீடித்திருக்கலாமே என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த அளவிற்கு படப்பிடிப்பு முழுவதும் இனிமையான அனுபவங்கள். படப்பிடிப்பு தளத்தில் மிகப்பெரிய குடும்பமாக ஒன்றிணைந்து பணியாற்றினோம். இந்தத் திரைப்படத்தில் மகிழினி என்ற பெண் குழந்தை நடித்திருக்கிறார். திரைக்கதையில் ஆண் குழந்தை தான் இருந்தது. ஆனால் இயக்குநர் மகிழினியை பார்த்தவுடன் இவர் தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என தேர்வு செய்தார். இந்தப் படத்தில் எங்களை ஆசீர்வதிக்க வந்த தெய்வ குழந்தை தான் மகிழினி என்று நான் நினைக்கிறேன்.
திரைக்கதையில் இயக்குநர் எழுதியதை குழந்தையான மகிழினி நடிக்குமா என்ற எதிர்பார்ப்பும், ஆச்சரியமும் இருந்தது. இயக்குநரிடம் நீங்கள் எழுதியதெல்லாம் திரையில் வருமா என்று கேட்டேன். அவர் வரும், நடக்கும் என்றார். அவர் இயக்கத்தில் வெளியான 'பசங்க 'படத்தில் ஒரு காட்சியில் குழந்தை ஒன்று அங்கு எங்கும் ஓடி அந்த காட்சியை உயிர்ப்புள்ளதாக மாற்றி இருக்கும். அந்தக் காட்சியை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். அதேபோல் இந்தப் படத்திலும் மகிழினி மற்றும் முத்துமணி ஆகிய இரு குழந்தைகளும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்தக் கதையில் இயக்குநர் என்ன என்ன நினைத்தாரோ அதை எல்லாம் அந்த குழந்தை மகிழினி அற்புதமாக வழங்கினார். இந்தப் படத்தில் அவர் திரையில் தோன்றும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவரும். அந்தக் காட்சிகள் அனைத்தும் உயிரோட்டமாக இருக்கும் என நம்புகிறேன்.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் தங்களுடைய பங்களிப்பை நன்றாக வழங்கி இருக்கிறார்கள். இந்த படம் ஜூலை 25ம் தேதி அன்று வெளியாகிறது. இது ஒரு ஃபுல் பேக்கேஜ் ஃபேமிலி என்டர்டெய்னர். படத்தை பார்க்கும் போது அனைவரும் ரசிப்பார்கள். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இப்படத்தை பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
நடிகை நித்யா மேனன் பேசுகையில், ''படத்தைப் பற்றி விஜய் சேதுபதி ஏராளமான விசயங்கள் பகிர்ந்து கொண்டார். படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் கிட்டத்தட்ட ஒரே எண்ணம் தான் இருந்தது. இந்தப் படத்தில் பணியாற்றியது என்னுடைய வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய சந்தோசமான அனுபவம். ஒரு படத்தில் நடிக்கும் போது நிறைய பேர் இருப்பார்கள். குறிப்பாக இந்த திரைப்படத்தில் ஏராளமான நடிகர்கள் நடிகைகள் இருந்தனர். தொழில்நுட்ப கலைஞர்களும் இருந்தனர். இந்தப் படத்தில் அனைவரும் எந்த ஈகோவும் இல்லாமல் ஒரே அலைவரிசையில் இணைந்து உற்சாகமாக பணியாற்றினோம். அனைவரும் எளிமையாகவும் இருந்தனர். யாராவது எங்கேனும் ஒரு சிறிய பிரச்சனையை எழுப்பி இருந்தாலும்.. அது பொருத்தமாக இருந்திருக்காது. அதாவது அந்த அனுபவம் நேர்த்தியாக இருந்திருக்காது. அந்த வகையில் இந்த படத்தில் இணைந்து பணியாற்றிய அனுபவம் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. அதே தருணத்தில் இந்த படத்தைப் பற்றி எனக்கு அதிக நம்பிக்கையும் இருக்கிறது. இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது,'' என்றார்.
இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில், ''ஏறத்தாழ மூன்றரை வருடங்களுக்கு பிறகு பத்திரிகையாளர்களாகிய உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 'தலைவன் தலைவி' என்ற இந்தப் படத்தின் தலைப்பு தோன்றிய தருணங்களும் அற்புதமானது. இந்த படத்திற்கான கதை தோன்றிய சம்பவங்களும் அழகானது. ஒரு உண்மை சம்பவத்திலிருந்து இந்த கதையை எழுதி இருக்கிறேன். என் மகனுடைய பிறந்தநாள் விழாவிற்காக குலதெய்வ ஆலயத்திற்கு சென்ற போது நான் சந்தித்த இரண்டு கதாபாத்திரங்கள் தான் ஆகாச வீரன் - பேரரசி.
நேரில் பார்த்ததை படமாக எடுக்க முடியாது. ஆனால் இப்படி இருந்தால். எப்படி இருக்கும்? என்ற ஒரு கேள்விதான் இந்த கதாபாத்திரம். அதன் பிறகு இதை எழுதத் தொடங்கினேன். எழுத எழுத அது வேறு ஒன்றாக மாற்றம் பெற்றது. அதை எழுதும் போது தான் ஆகாச வீரன் எனும் கதாபாத்திரத்தின் மதிப்பு உயர்ந்தது. ஏனென்றால் ஆகாச வீரன் சிரிக்க வைப்பான், அழ வைப்பான், டார்ச்சர் செய்வான், இவன் எந்த மாதிரியான கேரக்டர் என்று வரையறுக்க முடியாது. பொதுவாக ஹீரோ கேரக்டர் என்றால்.. அதற்கென்று ஒரு வரையறை இருக்கும். இதில் எந்த வரையறையும் இல்லாத ஒரு கதாபாத்திரம் தான் ஆகாச வீரன். இந்த கேரக்டரை எல்லா ஹீரோக்களாலும் செய்திட இயலாது. இந்த கேரக்டரை விஜய் சேதுபதியால் மட்டுமே செய்திட இயலும். இதை அவரை சந்தோசப்படுத்துவதற்காக குறிப்பிடவில்லை. நீங்கள் பார்க்கும் போது இதை உணர்வீர்கள். பாராட்டுவீர்கள். இந்த கதாபாத்திரத்தை இவர் நடித்தால் தான் நன்றாக இருக்கும் என்று நான் நம்பினேன்.
சீரியஸ் ஆகவும் மாஸாகவும் சென்று கொண்டிருக்கும் டக்கென்று அது காமெடியில் முடியும். காமெடியில் சென்று கொண்டிருக்கும் போது அது எமோஷனலாக மாறும். வண்டி ஓட்ட தெரியாமல் வண்டி ஓட்டுவார்களே..! அதைப் போன்றது தான் இந்த கதாபாத்திரம். ஆனால் ரசிக்கக்கூடிய கேரக்டராக இருக்கும். லவ் பண்ண கூடிய கேரக்டராகவும் இருக்கும். அந்த கேரக்டர் மீது வெறுப்பு வராது. இதனால் தான் இந்த கேரக்டரை விஜய் சேதுபதி ரசித்து ரசித்து செய்திருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் அவர் செய்த ஒவ்வொரு விசயத்தையும் அனைவரும் ரசித்தோம்.
பேரரசியின் கதாபாத்திரமும் ஆகாச வீரனை போன்றது தான். பேரரசியின் கதாபாத்திரத்திற்கும் எந்த வரையறையும் இருக்காது. அந்தக் கதாபாத்திரமும் அப்படித்தான் அழகானவள்.. அன்பானவள்... அன்பான அம்மா -அழகான மருமகள்- நல்ல மனைவி - என்று இருந்தாலும் எப்போது எப்படி மாறுவார் என்று தெரியாது. இதுபோன்ற கதாபாத்திரத்தை கையாள்வது கடினம். ஆனால் பேரரசி ஆகாச வீரனை அதிகமாக காதலிப்பார். இதுபோன்ற கதாபாத்திரத்தை நித்யா மேனனை தவிர வேறு யாராலும் ஏற்று நடித்திருக்க முடியாது.
நான் இதுவரை 11 படங்களை இயக்கி இருக்கிறேன். பத்து படங்களுக்கு நான் நினைத்த ஹீரோயின் கிடைத்ததில்லை. முதல் முறையாக நான் திரைக்கதையில் என்ன எழுதினேனோ..! நித்யா மேனன் தான் வேண்டுமென்று கேட்டேன். அவர் தான் இந்த படத்தில் நடித்திருக்கிறார். இதற்காக தயாரிப்பாளர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கணவன்- மனைவி சண்டையை டாம் அண்ட் ஜெர்ரி லவ் ஸ்டோரி என்று சொல்லலாம். கணவன் மனைவி சண்டை ..படம் பார்க்கும் ரசிகர்களுடன் எளிதாக தொடர்பு கொள்ளும் வகையில் விஜய் சேதுபதியும், நித்யா மேனனும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் அவர்களுக்கு டார்ச்சர் கொடுத்தேன். உண்மை தான். படப்பிடிப்பு நடைபெற்ற 70 நாள்களும் இப்படித்தான் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தோம். அந்தத் தருணத்தில் யாரேனும் சிறிய இடையூறை ஏற்படுத்தினாலும் கோபப்படுவேன். அதற்காக இந்த தருணத்தில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை பொருத்தவரை சொன்ன தேதியில்.. சொன்ன பட்ஜெட்டில்.. படத்தை நிறைவு செய்து தர வேண்டும் என்ற ஒரே ஒரு நோக்கம் தான் இருந்தது.
அந்த வகையில் இந்த படத்தின் படப்பிடிப்பை 75 நாட்களில் நிறைவு செய்து விட வேண்டும் என்று திட்டமிட்டு பணியாற்ற தொடங்கினோம். 72 நாட்களில் நிறைவு செய்தோம். படத்தில் பணியாற்றிய அனைவரும் படப்பிடிப்பு அதற்குள் நிறைவடைந்து விட்டதே.. ! இன்னும் சில நாட்கள் நீடிக்காதா..? என வருத்தமடைந்தனர். இதே போன்றதொரு அனுபவம் எனக்கு 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் போதும் ஏற்பட்டது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் போது அந்தப் படத்தை விட அதிகமாக அதே போன்றதொரு அனுபவம் கிடைத்தது. படப்பிடிப்பின் போது விஜய் சேதுபதி பரோட்டாவை தயாரிப்பார். சாக்லேட் பரோட்டா... வாட்டர்மெலன் பரோட்டா.. என வகை வகையாக கண்டுபிடித்து தயாரிப்பார். அதுவும் சுவையாக தான் இருக்கும்.
படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் குடும்பமாக ஒன்றிணைந்து பணியாற்றினோம். முதல்முறையாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது. 'பசங்க 2' படத்தில் இணைந்து பணியாற்றுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அப்போது சாத்தியமாகவில்லை. இந்தப் படத்தில் அவர் ஐந்து பாடல்களை வழங்கியிருக்கிறார். சிறந்த ஆல்பமாக இந்தப் படத்தின் பாடல்கள் இருக்கும். அதிலும் குறிப்பாக பாடலாசிரியர் கார்த்திக் நேதா எழுதிய பாடல் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் பாடலாசிரியர் நா முத்துக்குமார் எழுதி இடம்பெற்ற 'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்..' என்ற அப்பா பற்றிய பாடல் எப்படி பெரிய வெற்றியை பெற்று இன்றும் அனைவரது நினைவில் நீங்காமல் இருக்கிறதோ... அதே போன்று இந்தப் படத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரிவை பற்றிய பாடலும் ஹிட்டாகும். இந்தப் பாடலுக்காக சந்தோஷ் நாராயணன் மெட்டு அமைக்கும் போது எனக்கு பிடித்திருந்தது. அதனை கார்த்திக் நேதா பாடலாக எழுதும் போதும் எனக்கு பிடித்திருந்தது. அந்தப் பாடலை கேட்டபோது என் கண்களில் கண்ணீர் வந்தது. இந்தப் பாடலை தொகுப்பதற்காக எடிட்டருக்கு அனுப்பினேன். அவரும் இந்த பாடலை கேட்டு அழுதார். இந்தப் பாடலை காட்சி மொழியாக நீங்கள் பார்க்கும் போது.. உண்மையில் நீங்கள் பிரிவை பற்றி உணர்வீர்கள்.
இந்த திரைப்படத்தில் விவாகரத்தை பற்றி பேசி இருக்கிறோம். இன்றைய காலகட்டத்தில் விவாகரத்துகள் அதிகமாகி கொண்டே செல்கிறது. ஏன்? என்ற ஒரு கேள்விதான் இப்படத்தின் கதை. இந்தப் படம் வெளியான பிறகு விவாகரத்திற்காக நீதிமன்றத்தை நாடியிருக்கும் பலரும் யோசிப்பார்கள்.
'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை' ஆகிய படங்களை பார்த்த பிறகு நிறைய அண்ணன்- தங்கைகளும் தங்களிடமிருந்த விரோதத்தை மறந்து ஒன்றிணைந்தாக என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல் இந்தப் படம் வெளியான பிறகு கணவன் மனைவி விவாகரத்து குறித்து ஏதேனும் முடிவு செய்திருந்தால்.. அதற்கு செல்ல வேண்டுமா? என யோசிப்பார்கள். அந்த யோசனையை இந்த படம் வழங்கும் என்று நான் நம்புகிறேன்,'' என்றார்.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...