பப்ளிக் ரிவியூ எடுக்க அனுமதிக்க வேண்டாம் - விஷால் கோரிக்கை
Thursday July-17 2025

ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்க, விக்னேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'ரெட் ஃப்ளவர்' (Red flower). ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கியிருக்கிறார். ஆகஸ்ட் 8 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நடிகர் விஷால், இயக்குநர்கள் பி.வாசு, சுராஜ் மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி திரைப் பிரபலங்கள் கலந்து கொள்ள கோலாகலமாக நடைபெற்றது. 

 

நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பேசுகையில், “பி.வாசு சார் அன்றிலிருந்து இப்போது வரை நிற்கிறார் என்றால் அவரின் படங்கள் மற்றும் அவரின் உழைப்பு. இப்போதெல்லாம் நிறைய பேருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறார்கள், ஆனால் சுராஜ் அவர்களுக்கு கண்டிப்பாக டாக்டர் பட்டம் தரணும். அவர் இயக்கிய படங்கள் பல பேருக்கு மெடிஷன். அவர் வடிவேலுவை வைத்து இயக்கிய நகைச்சுவை காட்சிகள் தான் இன்றும் பலருக்கும் மருந்தாக இருக்கிறது.  இந்த அரங்கம் நிறைந்து இருப்பது போல அரங்கம் நிறைந்த காட்சிகளாக இந்த படம் ஓடணும். இங்கு சின்ன படம் பெரிய படம் என்று எதுவும் இல்லை. இந்த படத்தின் விழாவுக்கு வருவது என் கடமை. என் நண்பன் போராளி விக்னேஷூக்காக நான் வந்திருக்கிறேன். அதற்கு காரணம் அவர் கஷ்டம், அவமானங்களை தாண்டி இங்கு வந்திருக்கிறார். அவர் வெற்றி பெற வேண்டும். மாணிக்கம் என்ற ஒரு பொக்கிஷம் உங்களுக்கு தயாரிப்பாளராக கிடைத்திருக்கிறார். 

 

2025-ல் என்ன நடக்கிறது என்பதை படமாக எடுக்கவே இன்று பல இயக்குநர்கள் திண்டாடுகிறார்கள். ஆனால் இயக்குநர் ஆண்ட்ரூ 2047-ல் என்ன நடக்கும் என்பதை திரைக்கதையாக்கி படமாக எடுத்துள்ளார். எனக்குப் பிடித்த இரண்டு சுதந்திர போராட்ட வீரர்கள் பகத் சிங், நேதாஜி. அதில் நேதாஜிக்கு இந்த படத்தில் Tribute செய்தது மகிழ்ச்சி.

 

திரையரங்க உரிமையாளர்களுக்கு ஒரு கோரிக்கை. ஒரு திரைப்படம் வெளியாகும்போது முதல் 3 நாட்களுக்கு மட்டும் திரையரங்க உரிமையாளர்கள் பப்ளிக் ரிவியூ எடுக்க அனுமதிக்க வேண்டாம். வெளியில் அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும். தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒரு முக்கியமான கோரிக்கை. தமிழ் சினிமாவில் ஒரே நாளில் 10 படங்கள் வெளியாகிறது, எந்த படத்துக்கும் சரியான அளவில் தியேட்டர் கிடைப்பதில்லை. அதனால் ரிலீஸை ஒழுங்கு முறைப்படுத்த வேண்டும். விரைவில் நடிகர் சங்க கட்டிடத்தை திறக்க வேலைகள் நடந்து வருகின்றது. ஆகஸ்ட் 29 என் பிறந்த நாள்.  கண்டிப்பாக நல்ல செய்தி காத்திருக்கிறது. திருமண தேதியை விரைவில் அறிவிப்பேன்.” என்றார்.

 

நடிகர் விக்னேஷ் பேசுகையில், “எனக்கு இயக்குநர் பாரதிராஜா மீது மிகப்பெரிய மரியாதை உண்டு. அவருக்கு இணையாக பி.வாசு சாரை பிடிக்கும். புரட்சித் தளபதி விஷால் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர். மனிதாபிமானம் மிக்கவர். நடிகர் சங்கத்தில் யாருக்கு எந்த பிரச்சினை என்றாலும், உதவி தேவைப்பட்டாலும் உடனே இறங்கி வேலை செய்பவர். ஒய்ஜி மகேந்திரன் அவர்களின் ஆர்வம் எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்த படத்தை பற்றி தினமும் கேட்டுக் கொண்டே இருப்பார். ஜான் விஜய், அஜய் ரத்னம், சுரேஷ் மேனன் என அத்தனை நடிகர்களும் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தொழில்நுட்ப கலைஞர்களை பொறுத்தவரை எல்லோருமே இளைஞர்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. இயக்குநர் ஆண்ட்ரூ நல்ல மனிதர், நேர்மையான உழைப்பை தந்துள்ளார். நிறைய பேர் விக்னேஷை வைத்து படம் எடுக்காதீர்கள் என தயாரிப்பாளரை தடுத்தனர். ஆனால் மாணிக்கம் சார் பின்வாங்காமல் படத்தை முடித்திருக்கிறார். அவர் சினிமாவில் சம்பாதிக்க வரவில்லை. சினிமா மீது பற்று வைத்துள்ளார். அவருக்காக மிகப்பெரிய வெற்றி அடையும். இந்த படம் வெற்றி அடைந்தால் அவர் அடுத்தடுத்து பல படங்களை தயாரிப்பார். 

 

30 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் கஷ்டப்பட்டிருக்கிறேன். எவ்வளவோ உழைத்திருக்கிறேன். சினிமா தான் எனக்கு எல்லாமே. சினிமாவை அவ்வளவு பிடிக்கும். அதனால் தான் இவ்வளவு நாள் கழித்தும் மீண்டும் நடிக்க வந்திருக்கிறேன். நான் தோற்கலாம், ஆனால் என் முயற்சி தோற்கக்கூடாது. முன்பெல்லாம் முதல் வாரம் கூட்டமே இல்லாமல் இருந்தால் கூட, ஓரிரு வாரங்கள் கழித்து லேட் பிக்கப் ஆகி வெற்றி பெறும். என்னுடைய சின்னத்தாயி, ராமன் அப்துல்லா போன்ற படங்கள் எல்லாமே லேட் பிக்கப் தான். ஆனால் இப்போது முதல் நாளே நன்றாக ஓடினால் தான் படம் வெற்றி அடையும். அதனால் ஒரு வாரம் கழித்து பார்க்கலாம், அப்புறம் பார்க்கலாம் என நினைக்காதீர்கள். தியேட்டரில் சென்று பாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.

 

ரெட் ஃப்ளவர் படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் பேசுகையில், “ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸின் முதல் மற்றும் மிக பிரமாண்டமான தயாரிப்பு இந்த ரெட் ஃப்ளவர். மேடையில் இருப்பவர்கள் மட்டும் சிறப்பு விருந்தினர்கள் அல்ல, இங்கு வந்திருக்கும் எல்லோருமே என்னுடைய சிறப்பு விருந்தினர்கள் தான். இந்த படம் தொடங்கிய நாளில் இருந்து இந்த நொடி வரை மிகச்சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த பிரபஞ்சத்துக்கு மிகப்பெரிய நன்றி. இரண்டு படங்கள் எடுத்து முடித்தும் இதுவரை ரிலீஸ் செய்யவில்லை. முதல் படமாக இந்த படம் தான் ரிலீஸாக வேண்டும் என்பது தான் என் ஆசை. இது ஒரு காதல் கதையோ, குடும்பக் கதையோ அல்ல. இந்தியாவை உயர்த்தி சொல்லும் ஒரு படம். இந்தியா வல்லரசு என்று சொன்னால் யாராலும் அதை மறுக்க முடியாது. இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் இந்த தலைமுறையின் ஒரு சிறந்த இயக்குனராக வருவார்.” என்றார்.

 

நடிகை காவ்யா பேசுகையில், “2047ல் ஒரு மூன்றாம் உலகப் போர் நடந்தால் எப்படி இருக்கும், போர் நடக்கும் போது என்னவெல்லாம் நடக்கும் என்பதை மிகச்சிறப்பாக திரையில் காட்டியுள்ளார் இயக்குனர். 2047 காலகட்டத்தில் இந்தியா எப்படி இருக்கும் என்பதை சிறப்பாக காட்டியிருக்கிறார். கிரீன் மேட் காட்சிகள் எடுத்தால் நன்றாக இருக்காது என்பதால் முழுக்க முழுக்க ரியல் லொகேஷன்களில் படத்தை எடுத்திருக்கிறார். இப்படம் நிச்சயம் ஒரு புது அனுபவத்தை கொடுக்கும்.” என்றார்.

 

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேசுகையில், “மேடையில் இருக்கும் அனைவருமே ஜாம்பவான்கள். இந்த படம் வெற்றி அடைந்தால் அதற்கு ஒரே காரணம் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன். அவருக்கு பக்கபலமாக தயாரிப்பாளரும், நடிகர் விக்னேஷூம் இருக்கிறார்கள். இது ஒரு Futuristic பாகுபலி. future-ல் நடக்கும் கதை என்பதால்  பாகுபலியை விட இது தான் கஷ்டம். மிஷன் இம்பாஸிபிள், மேட்ரிக்ஸ் படங்களைப் போல இந்த படம் இருக்கும். நான் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு கதாபாத்திரத்தை எனக்கு தந்திருக்கிறார். 2047-ல் இந்தியாவின் பிரதமர் கதாபாத்திரம். நேதாஜி கனவு கண்ட இந்தியா வந்து கொண்டிருக்கிறது. இந்த படம் இளைஞர்களை கவரும், அதே சமயத்தில் நாடு நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த படம் நிச்சயம் பிடிக்கும்.” என்றார்.

 

தலைவாசல் விஜய் பேசுகையில், “இந்த படத்துக்கு தேவையான இசையை தந்திருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ். இந்த படத்தின் வில்லன் நீங்க தான் என சொன்னார் இயக்குனர். என் 32 வருட சினிமா கேரியரில் இந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நான் நடித்தது இல்லை. இந்த வாய்ப்பை தந்த இயக்குனருக்கு நன்றி. அவரின் விஷனை நீங்கள் திரையில் பார்ப்பீர்கள்.” என்றார். 

 

நடிகர் ஜான் விஜய் பேசுகையில், “கல்லூரியில் ஒன்றாக என்னுடன் படித்தவர் விஷால், இந்த மேடையில் ஒன்றாக அவருடன் இருப்பது மகிழ்ச்சி. விஷால் எப்போதுமே எல்லோருக்காகவும் வந்து நிற்பவர். ஆத்தங்கரை மரமே பாடல் கேட்டிருப்போம், அன்று முதல் இன்று ரெட் ஃப்ளவர் வரை அதே இளமையுடன் இருக்கும் ஒரு ஹீரோ விக்னேஷ். மிகச்சிறப்பான ஒரு கதாபாத்திரத்தை எனக்கு தந்திருக்கிறார்கள்.” என்றார்.

 

இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் பேசுகையில், “2047-ல் மால்கம் வரி செலுத்த மறுக்கும் நாடுகளின் மீது போர் தொடுக்கிறது, நேதாஜியால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு தான் ரெட் ஃப்ளவர். அதை இந்தியா எப்படி அணுகுகிறது. இந்தியா எப்படி அதை முறியடிக்கிறது. கேமரா மேன் ஒரு நாளைக்கு 300 முதல் 350 ஷாட்ஸ் எடுப்பார். அவ்வளவு வேகமாக வேலை செய்பவர். எடிட்டரின் பங்கு அபரிமிதமானது.” என்றார்.

 

நடிகர் அஜய் ரத்னம் பேசுகையில், “இயக்குநரின் கனவு திரையில் வந்திருக்கிறது. நம்பிக்கை எப்போதுமே வெற்றியைடையும். ரெட் ஃப்ளவர்னா சிவப்பு மலர், சிகப்பு ரோஜாக்கள் போல இந்த படமும் மிகப்பெரிய வெற்றியடையும்.” என்றார்.

 

இயக்குநர் சுராஜ் பேசுகையில், “நான் ஏற்கனவே விஷாலை வைத்து படம் இயக்கியிருக்கிறேன். எங்கள் படப்பிடிப்பில் பலர் அவரைத் தேடி, அவரின் உதவி நாடி வருவார்கள். அத்தனை பேருக்கும் உதவி செய்வார். அவர் இந்த விழாவுக்கு வந்ததில் மகிழ்ச்சி. நடிகர் விக்னேஷ் உங்கள் கஷ்டத்துக்கும், கடின உழைப்புக்கும், நீங்கள் பட்ட அவமானங்களுக்கும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும். தயாரிப்பாளர் மாணிக்கம் என் உறவினர், என் மாப்பிள்ளை. ஒரு படம் எடுக்க வேண்டும் எனறார், சின்ன பட்ஜெட்டில் எடுப்பார் என நினைத்தால் மிக பிரமாண்டமாக எடுத்து வைத்திருக்கிறார். 9 கோடி பட்ஜெட்டில் 2.5 கோடி சிஜிக்கு மட்டுமே செலவு செய்திருக்கிறார்.

 

இதற்கு முன் இரண்டு படங்களை அவர் தயாரித்துள்ளார், ஆனாலும் அதை ரிலீஸ் செய்யவில்லை. ஏன் என்று கேட்டால் முதல் படம் பெரிய படமாக இருக்க வேண்டும் என்றார். இந்த படம் வெற்றி பெற்றால் அவர் இன்னும் பல படங்களை தயாரிப்பார், அதற்காகவே இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும்.” என்றார்.

 

இயக்குநர் திருமலை பேசுகையில், “மாணிக்கம் ஆர்வத்தில் சினிமாவிக்கு வந்தாரா? ஆரவக்கோளாறில் வந்தாரா? என நினைத்தேன். அவரிடம் பேசும்போது தான் அவரின் சினிமா ஆர்வம் புரிந்தது. இந்த ரெட் பிளவர் படத்தை பெரிய இயக்குனர்களிடம் கொடுத்திருந்தால் 50 கோடி செலவு செய்திருப்பார்கள். ஆனால் ஆண்ட்ரூ பாண்டியன் 9 கோடி பட்ஜெட்டில் எடுத்து முடித்திருக்கிறார். அவர் இன்னொரு படத்தையும் எடுத்து வைத்திருக்கிறார். அதை நான் பார்த்திருக்கிறேன், சிறப்பாக எடுத்திருந்தார். அந்த அளவுக்கு ஒரு சிறப்பான திட்டமிடல். அவர் இந்த படத்தை இயக்கியிருப்பது சிறப்பு. அவருக்கு பக்கபலமாக முழுக்க இளைஞர்கள் இந்த படத்தில் பணிபுரிந்திருக்கிறார்கள். இது இந்திய தேசத்துக்கான படம்.” என்றார்.

 

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் குகன் பேசுகையில், “ரெட் ஃப்ளவர் திரைப்படம் முழுக்க முழுக்க புது தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து உருவாக்கப்பட்ட படம். இவ்வளவு பெரிய பொருட்செலவில் இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள். இந்த படத்தை விநியோகிப்பது எங்களுக்கு மகிழ்ச்சி. சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய ஒரு அமைப்பு தான் ரெட் ஃப்ளவர். 2047-ல் அது மீண்டும் வந்தால் என்னவாகும் என்பது தான் கதை. அட்வான்ஸ் சிஜியை இந்த படத்தில் பயன்படுத்திருக்கிறார்கள். ஹாலிவுட் படங்களுக்கு இணையாக வந்திருக்கிறது. ஆகஸ்ட் 8 ஆம் தேதி படம் வெளியாகிறது, திரையரங்குக்கு வந்து பாருங்கள்.” என்றார்.

 

இயக்குநர் பி. வாசு பேசுகையில், “விக்னேஷ் 2 ஆண்டுகளுக்கு முன்பு  இயக்குனரை அழைத்து வந்து கதையை சொன்னார். அதை எப்படி படமாக்கப் போகிறார்கள் என்ற வியப்பு எனக்கு இருந்தது. அதீதமான தொழில்நுட்ப விஷயங்கள் இந்த படத்தில் இருக்கிறது. சிஜி என்பது சாதாரண விஷயம் இல்லை, பல பேரின் உழைப்பு அடங்கியது. ஒரு சாதாரண விஷயத்தை செய்யவே மிகப்பெரிய உழைப்பு தேவை. இந்த படத்தில் 90 நிமிட சிஜி காட்சிகள் இருக்கிறது என சொன்னார்கள். விக்னேஷ் ரொம்ப துறுதுறுவென இருப்பவர். கடின உழைப்பாளி.  உங்கள் உழைப்பு நிச்சயம் வீண் போகாது. இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். சினிமா இன்று ரொம்பவே போட்டி நிறைந்த ஒரு துறையாக மாறி விட்டது. இளம் இயக்குனர்க்ள் எல்லாம் மிக மிக திறமையானர்வர்கள். ஓடிடி வந்த பிறகு பல மொழி படங்களையும் பார்க்க தொடங்கியபோது அவர்களின் கண்டெண்ட் மிகச்சிறப்பாக இருக்கிறது. அவர்களுக்கு இணையாக, போட்டியாக நாமும் படங்களை கொடுக்க வேண்டியிருக்கிறது. ஒரு நடிகன் பல விதமான கதாபாத்திரங்களை செய்ய வேண்டி இருக்கிறது. அந்த வேலையை இந்த படத்தில் நடித்த நடிகர்கள் மிகச்சிறப்பான செய்திருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.

 

விஷால் வீட்டில் தான் வால்டர் வெற்றிவேல் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அவரின் தந்தை ஜிகே ரெட்டி சினிமாவின் மிகச்சிறந்த ஒரு ரசிகர். அவரின் வாரிசு விஷால் எப்படி சோடை போவார். அவர் அடுத்தவர்களின் வெற்றியை பார்த்து மகிழ்பவர். 

இயக்குநரின் முதல் வேலை தயாரிப்பாளரிடம் கதை சொல்லி சம்மதிக்க வைப்பது. பின் படத்தை எடுத்து முடித்து தயாரிப்பாளரை திருப்திப்படுத்துவது. அதன் பின் விநியோகஸ்தர்களை மகிழ்விப்பது.  ஆண்ட்ரூ அந்த வகையில் இந்த கதையை ரிலீஸ் கட்டம் வரை மிகச்சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார். சந்திரமுகி படத்தில் காத்தாடி பாடலில் சிஜி செய்திருப்போம். அதற்கே ரொம்ப கஷ்டப்பட்டோம். ஆனால் இந்த படத்தில் கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் சிஜி. இயக்குநரின் தெளிவு தான் இந்த படத்தை இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கிறது” என்றார்.

 

ஃபைவ் ஸ்டார் கதிரேசன் பேசுகையில், “விக்னேஷ் எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் இந்த படம் அவருக்கு மிக முக்கியமான படமாக, வெற்றிப்படமாக அமையும். தயாரிப்பாளர் விக்னேஷ் மீது நம்பிக்கை வைத்து படத்தை எடுத்திருக்கிறார். இப்போதெல்லாம் நடிகர்கள், இயக்குனர்கள் தயாரிப்பாளருக்கு நன்றியாக இருப்பதில்லை.  விக்னேஷ் தயாரிப்பாளரை என்றும் மதிக்க வேண்டும். பி வாசு சார், கேஎஸ் ரவிக்குமார் சார் எல்லாம் தயாரிப்பாளர்களின் இயக்குனர்களாக இருந்தார்கள். சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடித்துக் கொடுத்தனர். தற்போது இயக்குனர்கள் சொன்ன பட்ஜெட்டில் படங்களை எடுப்பதில்லை. தெலுங்கு சினிமாவில் ஒரு படத்தின் பட்ஜெட் அதிகமாகும்போது நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்கிறார்கள். நலிந்து போன பல தயாரிப்பாளர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவுங்கள். ஓடிடி நிறுவனங்கள் படத்தை பார்த்து விட்டு தான் வாங்குகிறார்கள். அதனால் ஷூட்டிங்குக்கு முன்பே கொஞ்சம் திட்டமிட்டு படத்தை எடுங்கள்.” என்றார்.

 

ரெட் ஃப்ளவர் திரைப்படத்தில் நடிகர் விக்னேஷூக்கு ஜோடியாக மனிஷா ஜஷ்னானி நடிக்கிறார். படத்தின் மற்ற முக்கிய கதாபாத்திரத்தில் நாசர், ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ் மேனன், ஜான் விஜய், அஜய் ரத்தினம், லீலா சாம்சன், டி.எம்.கார்த்திக், கோபி கண்ணதாசன், தலைவாசல் விஜய், மோகன் ராம், யோக் ஜேபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

படத்திற்கு கே.தேவசூர்யா ஒளிப்பதிவு செய்ய , சந்தோஷ் ராம் இசை அமைக்க , படத்தொகுப்பு அரவிந்தன் ஆறுமுகம் கவனிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன். ஆகஸ்ட் 8ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது ரெட் ஃப்ளவர்.

Related News

10589

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது!
Thursday July-17 2025

தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக,  TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில்  பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...

கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ரேவதி நடிக்கும் புதிய படம் அறிவிப்பு!
Thursday July-17 2025

தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...

நடிகர் விக்ரமின் புதிய படம் அறிவிப்பு!
Thursday July-17 2025

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிட்டெட் நிறுவனம், அடுத்த தயாரிப்பை அறிவிப்பதில்   பெருமை கொள்கிறது...

Recent Gallery