Latest News :

மிரட்டும் ‘குற்றம் புதிது’ டீசர்! - கவனம் ஈர்த்த அறிமுக நடிகர் தருண் விஜய்
Saturday August-09 2025

தலைப்பு மற்றும் டீசர் மூலம் கவனம் ஈர்த்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வகையில், தலைப்பின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த ‘குற்றம் புதிது’ திரைப்படத்தின் டீசர் மிரட்டும் வகையில் இருப்பதோடு, படத்தின் ஹீரோ தருண் விஜயின் திரை இருப்பும் பெரும் கவனம் ஈர்த்துள்ளது.

 

அறிமுக இயக்குநர் நோஹா ஆம்ஸ்ட்ராங் இயக்கத்தில், அறிமுக நடிகர் தருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ஜி.கே.ஆர் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. முதல் படத்திலேயேஅழுத்தமான கதாபாத்திரத்தில் தருண் விஜய் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக ’பரமசிவன் பார்வதி’, ‘மார்கன்’ ஆகிய படங்களில் மிரட்டிய சேஷ்விதா கனிமொழி நடித்திருக்கிறார்.  இவர்களுடன் மதுசூதன் ராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரைராஜ், பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

’குற்றம் புதிது’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, டீசரில் நாயகன்  தருண் விஜயின் நடிப்பும், உடல் மொழியும் கவனம் ஈர்த்துள்ளது. குறிப்பாக கொரில்லா குரங்கு போல் அவர் நடந்து வரும் காட்சியை குறிப்பிட்டு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவதால், டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

இந்த நிலையில், ‘குற்றம் புதிது’ படத்தின் நாயகன் தருண் விஜய், இயக்குநர் நோஹா ஆம்ஸ்ட்ராங், நாயகி சேஷ்விதா கனிமொழி கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்து படம் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.

 

‘குற்றம் புதிது’ படத்தின் துவக்கம் மற்றும் தருண் விஜயின் அறிமுகம் குறித்து கூறிய இயக்குநர் நோஹா ஆம்ஸ்ட்ராங், “நான் குறும்படங்கள் இயக்கிவிட்டு திரைப்படம் இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது தருண் விஜய்க்காக கதை கேட்கிறார்கள், என்று நண்பர் மூலம் தெரிந்துக் கொண்டேன். என்னிடம் நான்கு கதைகள் இருந்தது, ஆனால், தருண் விஜயை பார்த்து, அவரிடம் பேசிய உடன், நடிகராக வேண்டும் என்று ஆசையோடு இல்லாமல், அதற்காக நடிப்பு பயிற்சி, நடனம், சண்டை உள்ளிட்ட பல விசயங்களை கற்றுக் கொண்டது பற்றி தெரிந்துக் கொண்டேன், அதனால், ‘குற்றம் புதிது’ கதை அவருக்கு சரியாக இருக்கும் என்று முடிவு செய்து, அவரை நடிக்க வைத்தேன். 

 

குற்றம் புதிது என்றால் இதுவரை யாரும் செய்யாத குற்றம் செய்யப்படுகிறது என்று அர்த்தம் இல்லை, வழக்கமான குற்றம் தான், அதை புதிய கோணத்தில் சொல்லியிருக்கிறேன். கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படம் என்றாலும், இதில் உணர்ச்சிகரமான பல விசயங்கள் இருக்கிறது, அப்பா - மகள் செண்டிமெண்ட், காதல் என அனைத்தும் இருக்கும், அவை பார்வையாளர்களை நிச்சயம் பாதிக்கும் வகையில் இருக்கும். இந்த படத்திற்கு தருண் விஜய் சரியாக இருப்பார், என்று தோன்றினாலும் இந்த கதாபாத்திரத்திற்காக கொஞ்சம் தயாராக வேண்டி இருந்தது, அதற்காக அவர் மூன்று மாதங்கள் பல்வேறு பயிற்சிகளை எடுத்துக் கொண்டார். குறிப்பாக டீசரில் இடம்பெற்றிருக்கும் கொரில்லா போல் நடக்கும் காட்சி சில நொடிகள் வரும். ஆனால், அதற்காக தருண் விஜய், மூன்று மாதங்கள் பயிற்சி எடுத்தார். அதுபோல் நடப்பது சாதாரண விசயம் இல்லை. இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார், நிச்சயம் அவரது நடிப்பு பாரட்டு பெறும்.” என்றார்.

 

நாயகன் தருண் விஜய், தனது திரை அறிமுகம் குறித்து கூறுகையில், “என் அப்பா, அம்மா, அக்கா என அனைவரும் மருத்துவர்கள், நான் மட்டும் அந்த துறையில் செல்லாமல் சினிமா துறையில் நாயகனாக வேண்டும் என்று முடிவு செய்தேன். சிறு வயதில் இருந்து என்னையும் மருத்துவராக வேண்டும் என்று சொல்லி தான் வளர்த்தார்கள், நானும் பள்ளி படிக்கும் போது மருத்துவராக வேண்டும் என்று தான் இருந்தேன். ஆனால், 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் போது எனக்கு சினிமா மீது ஈர்ப்பு ஏற்பட்டது, நடிகராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்காக என்னை தயார்படுத்திக் கொள்வதற்காக கல்லூரி படிக்கும் போதே, நடிப்பு, நடனம், ஆக்‌ஷன் ஆகியவற்றில் பயிற்சி பெற்றேன். காலையில் கல்லூரிக்கு சென்று படித்தால், மாலையில் சினிமாவுக்காக தயார் ஆவதற்கான பயிற்சிகளில் ஈடுபடுவேன். பிறகு என்னுடைய கல்லூரி முடிந்ததும், சினிமாவுக்காக தயாராகி விட்டாய், அடுத்த என்ன செய்யலாம், அதற்கான வேலைகளை பார், என்று என் அப்பா எனக்கு ஊக்கம் அளித்தார்.

 

அப்போது தான் இயக்குநர் நோஹா ஆம்ஸ்ட்ராங் கதை சொன்னார், அவரது கதை நன்றாக இருந்தது. ஆனால், முதல் படத்திலேயே ஒரு நெகட்டிவ் பார்வையுள்ள கதாபாத்திரமாக இருக்கிறதே என்று தோன்றியது. நாங்கள் நினைப்பதை புரிந்துக் கொண்ட இயக்குநர், அவர் கதையை மையமாக கொண்டு ஒரு பைலட் படம் எடுத்தார், அதில் என்னை நடிக்க வைத்தார். அந்த படத்தை பார்த்தவுடன் தான் இது எனக்கு சரியாக இருக்கும், என்று தோன்றியது. அதேபோல் என் அப்பாவுக்கு அந்த பைலட் படம் பிடித்திருந்தது, அதனால் ஈர்க்கப்பட்ட அவர், தானே தயாரிப்பதாகவும் முன் வந்தார்.  இந்த படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறேன் என்று சொல்வதை விட நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன், என்று தான் சொல்ல வேண்டும்.” என்றார்.

 

நாயகி சேஷ்விதா கனிமொழி கூறுகையில், “இந்த படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன், ஆடிஷன் மூலம் தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. முதன் முதலில் ஆடிஷன் மூலம் இந்த படத்தில் தான் தேர்வானேன். அதன் பிறகு தான் பிற படங்களின் வாய்ப்பு கிடைத்தது. ஒரு நடிகை என்றால், அவருக்கு சோசியல் மீடியா பக்கம் இருக்க வேண்டும், அதில் அவர் எந்த அளவுக்கு பிரபலமாக இருக்கிறார், எப்படிப்பட்ட கண்டெண்ட் போடுகிறார், என்பதை எல்லாம் எதிர்பார்ப்பார்கள், ஆனால் இயக்குநர் நோஹா ஆம்ஸ்ட்ராங் சார், அது எதையும் எதிர்பார்க்காமல், என்னுடைய நடிப்பை மட்டுமே பார்த்து என்னை நாயகியாக தேர்வு செய்தார், அவருக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

 

Kutram Pudhithu

 

படம் முழுக்க முழுக்க வன்முறை மற்றும் கொடூரமான காட்சிகள் நிறைந்தவையாக இருக்குமா?  என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் நோஹா ஆம்ஸ்ட்ராங், “படத்தின் மையக்கரு கிரைம் திரில்லர் என்பதால் காட்சிகளும் அதைச் சார்ந்தவையாக தான் இருக்கும். அதற்காக தான் டீசரும் அப்படி இருந்தது. ஆனால், முழுக்க முழுக்க வன்முறை மற்றும் கொடூரமான காட்சிகள் மட்டுமே இருக்காது. அதை தாண்டி படத்தில் எமோஷனலான விசயங்கள் பல இருக்கிறது. குறிப்பாக ஹீரோ தருண் விஜயின் நடிப்பு குறிப்பிட்டு பேசப்படும். முதல் படத்திலேயே இப்படி ஒரு சவாலான கதாபாத்திரத்தை அவர் சிறப்பாக கையாண்டிருக்கிறார்.  அவர் ஐந்து விதமாக படத்தில் நடித்திருக்கிறார், அது ரொம்பவே புதிதாக இருக்கும்.” என்றார்.

 

முதல் படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து நாயகன் தருண் விஜய் கூறுகையில், “இந்த கதையை கேட்கும் போதே அதிகம் உழைக்க வேண்டியது இருக்கும் என்று தோன்றியது. அதன்படி, என் கதாபாத்திரம் மிக வித்தியாசமானதாக வடிவமைக்கப்பட்டிருக்கும். புட் டெலிவரி செய்யும் ஒருவனாக வருகிறேன். என்னுடைய குணாதிசயங்கள் அவ்வபோது மாறிக்கொண்டிருக்கும். ஐந்து விதமான குணாதிசயங்களை வெளிப்படுத்தி நடித்திருக்கிறேன். அனைத்தும் இயக்குநர் சொல்லிக் கொடுத்தது தான். அவர் ஒவ்வொரு காட்சியை நடித்து காட்டி தான் சொல்லிக் கொடுப்பார். அப்படி தான் கொரில்லா குரங்கு போல் நடக்க வேண்டும் என்ற யோசனையும் சொன்னார். அதற்காக சில வீடியோக்களை காட்டினார், பிறகு நான் அந்த வீடியோக்களை பார்த்து பயிற்சி செய்து நடித்திருக்கிறேன். அது மிகவும் கடினமாக இருந்தது, கொரில்லா நடை சாதாரணமாக இருக்காது, அதை கவனித்தால் தெரியும். அதற்காக 3 மாதங்கள் பயிற்சி எடுத்துக் கொண்டேன். டீசரில் அதை குறிப்பிட்டு சொல்லி பாராட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.” என்றார்.

 

ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்படிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கரன் பி.க்ருபா இசையமைத்திருக்கிறார். எஸ்.கமலகண்ணன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ஹசினி பவித்ரா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்ற, ஆனந்தகுமார் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியுள்ளார்.

 

தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகளின் இறுதிக் கட்டத்தில் உள்ள ‘குற்றம் புதிது’ திரைப்படம் இம்மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Related News

10616

“திரையுலகில் என் பெற்றோர் என்றால் அது விஜயகாந்தும் ராவுத்தரும் தான்” - ஆர்.கே.செல்வமணி நெகிழ்ச்சி
Saturday August-09 2025

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...

இசைஞானியிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்
Saturday August-09 2025

பிரபல இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷின் சுயாதீன இசை பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், தற்போது மிகப்பெரிய பொருட்செலவில் இசை ஆல்பம் பாடலை  பிரமாண்டமாக உருவாக்கியுள்ளார்...

’சொட்ட சொட்ட நனையுது’ படம் உங்கள் மனதை மாற்றும் - நடிகர் நிஷாந்த் ரூஷோ நம்பிக்கை
Thursday August-07 2025

அட்லர் எண்டர்டெயின்மெண்ட் (Adler Entertainment) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’சொட்ட சொட்ட நனையுது’...

Recent Gallery