Latest News :

பாக்யராஜ் சார் படத்திற்கும், என் படத்திற்கு ஒரு சதவீதம் கூட சம்மந்தம் இல்லை - ‘அந்த 7 நாட்கள்’ பட இயக்குநர் எம்.சுந்தர்
Tuesday August-26 2025

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான திரைப்படங்களில் ‘அந்த 7 நாட்கள்’ ஒன்று. தற்போது அதே தலைப்பில் புதிய திரைப்படம் ஒன்று உருவாகியிருப்பதோடு, இந்த படத்தில் கே.பாக்யராஜும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதனால், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் புதிய ‘அந்த 7 நாட்கள்’ படத்திற்கும், பாக்யராஜின் படத்திற்கும் எதாவது தொடர்பு இருக்குமா ? அல்லது அதன் ரீமேக்கா ? என்றெல்லாம் கேள்விகள் எழுந்திருக்கும் நிலையில், பழைய படத்திற்கும் தங்களது ‘அந்த 7 நாட்கள்’ படத்திற்கும் ஒரு சதவீதம் கூட சம்மந்தம் இல்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது.

 

இயக்குநர் எம்.சுந்தர், தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ், பெஸ்ட்காஸ்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டி.செல்வகுமார் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள். இதில், இயக்குநர் சுந்தர் தனது அறிமுகம் மற்றும் படத்தின் கதைப் பற்றி கூறுகையில், “நான் கே.பாக்யராஜ் சாரிடம் ‘சொக்கத்தங்கம்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன், பிறகு அவருடைய டிவி சீரியல்களுக்கான கதை விவாதங்களில் பங்கேற்றேன். இந்த படத்தின் கதையை படமாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன், அப்போது தான் சார் கதை கேட்கும் தகவல் கிடைத்தது, அவரிடம் கதை சொன்னேன், அவருக்கு பிடித்திருந்ததால் இந்த படம் உருவானது.

 

நான் இந்த கதையை எழுதி முடித்ததுமே, பாக்யராஜ் சாரிடம் பணியாற்றியதால், அவரது பட தலைப்புகளை பயன்படுத்த வேண்டும், என்று முடிவு செய்தேன். அதன்படி, ’டார்லிங் டார்லிங் டார்லிங்’ மற்றும் ‘அந்த 7 நாட்கள்’ தலைப்புகளை தேர்வு செய்தேன், பாக்யராஜ் சாரிடம் கதை சொல்லிவிட்டு, இந்த இரண்டு தலைப்புகளில் எதை கொடுத்தாலும் எனக்கு சம்மதம் என்றேன், அவர் ‘அந்த 7 நாட்கள்’ தலைப்பு சரியாக இருக்கும் என்றார். அதேபோல் தயாரிப்பாளரும் இந்த தலைப்பு கதைக்கு சரியாக இருக்கும் என்றதால், இதை தேர்வு செய்தேன்.

 

பாக்யராஜ் சார் படத்திற்கும், எனது ‘அந்த 7 நாட்கள்’ படத்திற்கும் கதை உள்ளிட்ட எந்த விசயத்திலும் ஒரு சதவீதம் கூட சம்மந்தம் இருக்காது. ஆனால், இந்த தலைப்பு என் கதைக்கு மிக பொருத்தமான தலைப்பு. காரணம், படத்தில் 7 நாட்களுக்குள் ஒரு விசயத்தை செய்து முடிக்க கூடிய கெடு ஹீரோவுக்கு இருக்கும், அது என்ன என்பது சஸ்பென்ஸ். அதே சமயம், இது திரில்லர் படம் இல்லை, முழுக்க முழுக்க காதல் கதை தான், அதில் திரில்லரை லேசாக சொல்லியிருப்பேன்.

 

படத்தின் நாயகனுக்காக சுமார் 15 நபர்களை பார்த்தோம், ஆனால் யாரும் அமையவில்லை. பிறகு இன்ஸ்டா மூலம் அஜித்தேஜ் என்ற நபரை பார்த்த போது அவர் சரியாக இருப்பார் என்று தோன்றியது, அவரை அழைத்து பேசி, ஆடிஷன் செய்த போது, அவர் கதைக்கான ஹீரோவாக சரியாக இருந்தார். அவர் தெலுங்கு மொழி பேசுபவர், அவருக்கு தமிழ் சுத்தமாக தெரியாது. அவரிடம் ஏழு மணி நேரம் ஆங்கிலத்தில் கதை சொன்னேன். அவரும் கதையை நன்றாக உள்வாங்கி சிறப்பாக நடித்திருக்கிறார். கதாநாயகியையும் இன்ஸ்டா மூலமாகத்தான் தேர்வு செய்தோம், அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார். நான் உட்பட படத்தில் பணியாற்றியிருக்கும் முக்கியமான தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் புதியவர்கள் தான். புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதில் தயாரிப்பாளர் மிக தெளிவாக இருந்தார். இசையமைப்பாளர் சச்சின் சுந்தர் என் மகன் தான். என் மகன் என்பதற்காக அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, அவருடைய திறமைக்காக தான் தயாரிப்பாளர் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். படத்தை தயாரித்தோம், பணம் கொடுத்தோம் என்று இல்லாமல் கதை மற்றும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு என அனைத்திலும் தயாரிப்பாளர் இணைந்து செயல்பட்டார். முக்கியமாக புதியவர்களாக இருக்க வேண்டும், திறமையானவர்களாக இருக்க வேண்டும், என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு தயாரிப்பாளர் அனைவரையும் தேர்வு செய்தார், அதில் நானும் ஒருவன் என்பது எனக்கு பெருமை.” என்றார்.

 

தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ் படம் பற்றி கூறுகையில், “படம் தயாரிக்கும் எண்ணம் எனக்கு இல்லை, நான் ஸ்டுடியோ வைத்திருப்பதால், சுந்தர் மற்றும் சச்சின் சுந்தரை தெரியும். அவர்களுக்கு வாய்ப்பு பெற்றுத்தர சில முயற்சிகளை மேற்கொண்டேன், அது நடக்கவில்லை, சரி நாமே ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுக்கலாம் என்று நினைத்து தான் இந்த படத்தை தயாரிக்க முன்வந்தேன். பிறகு இதுபோன்ற திறமையானவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் என்று தோன்றியது. அதன்படி தற்போது மேலும் இரண்டு படங்கள் தயாரிக்கிறேன். அதில் ஒரு படம் 60 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது, மற்றொரு படம் விரைவில் தொடங்க இருக்கிறது.

 

மிகப்பெரிய பட்ஜெட், பெரிய நடிகர்கள் படங்கள் தயாரிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை, குறைந்த முதலீட்டில், திறமையான புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பது தான் எங்கள் நிறுவனத்தின் நோக்கம். எங்கள் இரண்டாவது படத்தில் வளர்ந்து வரும் ஒரு முக்கியமான நடிகர் நாயகனாக நடிக்கிறார். அது கதைக்கு தேவைப்பட்டதால் அவரை தேர்வு செய்தோம், அப்படி தான் இனி நாங்கள் தயாரிக்கும் அனைத்து படங்களையும் கையாள்வோம். இந்த படத்தின் கதை சிறப்பாக இருக்கும், நிச்சயம் ஒரு வித்தியாசமான காதல் கதையாக இருக்கும். கதையை தாண்டி இந்த படத்தை தயாரிக்க இயக்குநர் சுந்தர் தான் காரணம், அவருடைய பன்பு மற்றும் நல்ல குணத்திற்காக தான் இந்த படத்தை தயாரிக்கிறேன்.” என்றார்.

 

Antha 7 Natgal

 

7 நாட்களுக்குள் எதையோ செய்ய வேண்டும் என்பது தெரிகிறது, அது என்ன என்று சொல்ல முடியுமா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர் எம்.சுந்தர், “7 நாட்களுக்குள் ஒரு கெட்ட விசயம் நடக்க இருக்கும், அதை நல்ல விசயமாக ஹீரோ மாற்ற முயற்சிக்கிறார், அது என்ன என்பது தான் கதை. படத்திற்கும் சூரியகிரகணத்திற்கும் மிக முக்கியமான தொடர்பு இருக்கிறது. கடந்த ஜூன் அல்லது ஜூலையில் ஒரு சூரியகிரகணம் நிகழ்ந்தது, அதற்கு முன்பாக 300 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சூரியகிரகணத்திற்கும் கதைக்கும் கூட தொடர்பு இருக்கிறது. வானவியல் அறிவியலை சார்ந்த அம்சங்களோடு, வித்தியாசமான காதல் கதையாக இருக்கும்.” என்றார்.

 

சென்னை மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் 45 நாட்கள் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் பின்னணி வேலைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படம் தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

கே.பாக்யராஜ், நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய், ஏ.பி.ஜனகன், வாசு சீனிவாசன், ராகவன், சாய் கோபி, விதுஷ்ணவி, ஆதித்யா, கவிப்ரியா, ராம்ஜி, மோகனா, செம்புலி ஜெகன், பாரதிராஜா, அற்புதன் விஜயன், பேபி வைணுவ ஸ்ரீ, பரோட்டா முருகேசன், சாந்தகுமார், கார்த்தி, பிரதீப், ஜனா, ராம்குமார், தனசேகரன், மூர்த்தி, அப்பல்லோ ஹரி, விஜயராஜ், இளங்கோவன், ஜெய்மன், யூசுப், ஆர்.ரூபகரன், சோபியா, ரவி மற்றும் பங்கஜ் எஸ்.பாலாஜி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். 

 

பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் சார்பில் முரளி கபீர்தாஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு கோபிநாத் துரை ஒளிப்பதிவு செய்துள்ளார். சச்சின் சுந்தர் இசையமைக்க, முத்தமிழன் ராமு படத்தொகுப்பு மற்றும் வி.எஃப்.எக்ஸ் பணிகளை கவனிக்கிறார். டி.கே.தினேஷ்குமார் கலை இயக்குநராக பணியாற்ற, மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளார்.

Related News

10634

தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும் தான் ‘பராசக்தி' - சிவகார்த்திகேயன்!
Friday January-09 2026

தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...

’ஜன நாயகன்’ பட வழக்கின் தீர்ப்பு நாளை காலை வழங்கப்படுகிறது!
Thursday January-08 2026

விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...

50 வது வருடத்தில் மீண்டும் படம் இயக்கும் கே.பாக்யராஜ்!
Wednesday January-07 2026

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...

Recent Gallery