Latest News :

’இட்லி கடை’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவின் தொகுப்பு!
Monday September-15 2025

டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

 

Wunderbar Films சார்பில் ஷ்ரேயாஸ் பேசுகையில், “தனுஷ் சார் ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். நானும் ஆகாஷும் சேர்ந்து படம் செய்யலாம் எனப் பேசிக்கொண்டு இருந்தோம். தனுஷ் சார் ’இட்லி கடை’ கதை செய்யலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஆகாஷிடம் சொன்ன போதே, “சார் இயக்குகிறார் என்றால் உடனே ஷூட் போகலாம்” என்றார். முழுமையாக எங்களுக்கான சுதந்திரம் தந்தார். தனுஷ் சாருக்கு இது மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். இப்படத்தில் உழைத்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பிரசன்னா, ஜாக்கி உட்பட அனைவருக்கும் நன்றி. இன்றைய விழா நாயகன் ஜீவி பிரகாஷ் குமார். அவரை 2008 முதல் எனக்குத் தெரியும். அவர் தேசிய விருது வரை எல்லாமே சாதித்துவிட்டார், ஆனால் இன்னும் அப்படியே இருக்கிறார். அவர் தந்த அற்புதமான பின்னணி இசைக்கு நன்றி. இப்படத்தின் ஹீரோ டைரக்டர் தனுஷ் சார், என்னுடைய வாழ்க்கையில் என் ஹீரோ டைரக்டர் அவர்தான். அவரைப்பற்றி என்ன சொன்னாலும் குறைவாகத்தான் இருக்கும். சூப்பர் ஸ்டார் சொன்ன மாதிரி, "நல்லவனா இரு... ரொம்ப நல்லவனா இருக்காதே!" என்பதை அவரிடம் சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் ஹாலிவுட் வரை எவ்வளவோ நடித்து விட்டீர்கள், ஆனால் நடிப்பு மட்டும் போதாது, அதைத்தாண்டி சில விஷயங்கள் வேண்டும். "ஒருத்தனை 10 பேர் எதிர்த்தால், அவன் தலைவன்!" நீங்கள் தலைவன். உங்களை வைத்து வளர்ந்தவர்கள், உங்களால் வாழ்ந்தவர்கள் உங்களைப் பற்றிப் பேசுவது அவர்களுக்குத்தான் இழுக்கு. இந்த “இட்லி கடை” ரசிகர்களுக்கும், அனைத்து குடும்பங்களுக்கும் பிடித்த படமாக இருக்கும்.” என்றார்.

 

கலை இயக்குநர் ஜாக்கி பேசுகையில், “என் இயக்குநருடன் இது மூன்றாவது படம். இட்லி கடை ஆரம்பித்த போது, “செட் ஒன்றை போடலாம்” என்று அவர் சொன்னார். அத்தனை டீட்டெயிலாக கூறினார். அவர் கூறியதை மனதில் நன்கு வைத்து பார்த்து தான் செட்டுக்கு வருகிறார். அதனால் அவருடன் வேலை செய்யும் போது மிக எளிதாக இருக்கும். அவருடன் மீண்டும் மீண்டும் வேலை செய்ய ஆசைப்படுகிறேன், அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் பேசுகையில், “தனுஷ் பிரதர் இந்த படத்தில் மிக அதிகமான உழைப்பை அளித்துள்ளார். அவருடன் நிறைய முறை வேலை பார்க்க ஆசைப்பட்டேன், இது தான் அந்த வாய்ப்பு கிடைத்த படம். எனக்காக வெயிட் செய்து முழு ஆதரவும் அளித்ததற்கு நன்றி. படம் கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும், நன்றி.” என்றார்.

 

ஒளிப்பதிவாளர் கிரண் பேசுகையில், “மயக்கம் என்ன படத்திலிருந்து அவருடன் வேலை செய்ய ஆசை பட்டேன், அது இந்த படத்தில் நனவானது. சத்யராஜ் மற்றும் ராஜ்கிரண் சார்களுடன் வேலை செய்ததில் மகிழ்ச்சி. தனுஷ் சார் உங்களுடன் வேலை செய்ய நான் நிறைய ஆசைப்பட்டேன். எனக்கு இந்த வாய்ப்பு வழங்கியதற்கு மகிழ்ச்சி.” என்றார்.

 

எடிட்டர் பிரசன்னா GK பேசுகையில், “நான் பல படங்களில் வேலை செய்துள்ளேன், ஆனால் எடிட்டிங் டேபிளில் உட்காராமல் முழுமையாக அங்கு பணியாற்றிய படம் இதுதான். தனுஷ் சார் ஷூட்டிங் நடக்கும் போது அங்கே கூப்பிட்டு எடிட் செய்ய சொன்னார். அங்கேயே மொத்த வேலை முடிந்தது. படம் மிகச்சிறப்பாக உருவாகியுள்ளது. தனுஷ் சாருடன் வேலை செய்தது அற்புதமான அனுபவம். தொடர்ந்து எனக்கு வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி.” என்றார்.

 

உடை வடிவமைப்பாளர் காவ்யா ஸ்ரீராம் பேசுகையில், “இந்த படத்தில் வாய்ப்பு வழங்கியதற்கு மகிழ்ச்சி. தனுஷ் சாருடன் வேலை செய்தது மிகப்பெரிய அனுபவம், அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். அனைத்து நடிகர்களுடனும் வேலை செய்யும் சந்தோஷம் கிடைத்தது. அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. படம் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன், நன்றி.” என்றார்.

 

நடிகை ஷாலினி பாண்டே பேசுகையில், “எல்லோருக்கும் நன்றி. சென்னைக்கு வந்து பல காலம் ஆகிவிட்டது. மீண்டும் வீட்டுக்கு வந்தது போல் உணர்ச்சி. இப்பட வாய்ப்பு வழங்கிய ஷ்ரேயாஸ் அவருக்கும், தனுஷ் சாருக்கும் மனமார்ந்த நன்றி. அவருடன் நடித்தது என் கனவு நனவாகியது. அருண் விஜய் சார், சத்யராஜ் சார் உட்பட அனைவருடனும் நடித்ததில் மகிழ்ச்சி. நித்யா மேனனுடன் நடித்திராத போதும், அவரது நடிப்பு எனக்கு மிக பிடிக்கும். நான் நடித்த முதல் தமிழ் படம் ஜீவி உடன் தான், அவருடன் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி. இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.” என்றார்.

 

இயக்குநர், நடிகர்  ஆர்.பார்த்திபன் பேசுகையில், “என் இனிய நண்பர் இயக்குநர்-நடிகர் தனுஷ் அவருக்கும், இந்த அரங்கத்தை கோலாகலமாக வைத்திருக்கும் தனுஷ் ரசிகர்களுக்கும் வணக்கம். ஒரு ஊரில் ஒரு ராஜா. அவருக்கு இரண்டு இளவரசர்கள்—ஒருவர் ஆயிரத்தில் ஒருவன், மற்றவர் பத்தாயிரத்தில் ஒருவன். எந்த வாய்ப்பும் கிடைத்தால் அதில் வித்தகனாக இருப்பவர் இந்த இளையவர் தனுஷ் தான். யாத்ரா, லிங்கா படங்களில் இருவருக்கும் எனக்கு பொறாமை. டப்பிங்கில் தனுஷ் சாருடன் பேசும்போது, அவர் வைத்திருந்த போனை பார்த்து “போன் நம்பர் தர முடியுமா?” என்றேன். அவர் சொன்னார், “இது என் பசங்களிடம் மட்டுமே பேசுவதற்கானது.” படங்களைப் பற்றி பேச வேறு போன் இருக்கும் போலே! தமிழ் திரையுலகில் கமல் சார் திறமை நிறைந்தவர்; அதற்கு இணையான திறமை கொண்டவர் தனுஷ். அவருக்கு என் வாழ்த்துக்கள். ஜீவி திறமைக்கான படம் இது அல்ல; 10 வருடங்களுக்கு முன்பே ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தை செய்துவிட்டார். அவரது திறமை இன்னும் 50 வருடங்கள் கொண்டாடப்படும். பவர் பாண்டி பார்த்து ராஜ்கிரண் சார் மீது பொறாமை வந்தது! நடிப்பு ராட்சசி நித்யா மேனன் ஏற்கனவே தனுஷ் சாருடன் நடித்தார், தேசிய விருது பெற்றவர். இதிலும் வெற்றி பெறுவார். அருண் விஜய் கடுமையாக உழைத்து இந்த நிலை அடைந்தார்; பிரமாதமான ரோல் செய்துள்ளார். இத்தனை நட்சத்திரங்களுடன் நானும் ஒரு சிறிய ரோல் செய்துள்ளேன். ஷ்ரேயாஸ் தான் என்னை அழைத்து நடிக்க வைத்தவர்; நடிகர்களை பொறுப்புடன் பார்த்துக்கொள்கிறார். அவருக்கும், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கும் நன்றி. உங்களைப் போன்ற ரசிகர்களின் ஆதரவோடு இந்த படத்தை பார்த்திட ஆவலோடு காத்திருக்கிறேன், நன்றி.” என்றார்.

 

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பேசுகையில், “நான் தனுஷ் சாரின் தீவிர ரசிகன். என்னை அழைத்ததற்கு நன்றி. கட்சி சேர பாடலை உருவாக்கும் போது, அவரிடம் கருத்துக்களை கேட்க சென்ற போது, பொறுமையாக பேசினார், நிறைய ஆலோசனைகள் தந்தார். அவருக்கு நான் தீவிர ரசிகன்; அவருடன் வேலை செய்ய ஆவலாக உள்ளேன். இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள், நன்றி.” என்றார்.

 

நடிகர் ராஜ்கிரண் பேசுகையில், “தனுஷ் ரசிகர்களுக்கும் திரைப்பிரபலங்களுக்கும் என் நன்றிகள். இப்படத்தை உருவாக்கிய நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவருக்கும் நன்றி. என் அன்பு தனுஷ், நடிப்பில் வித்தைகள் காட்டும் நித்யா மேனன், சகோதரர் சத்யராஜ், பார்த்திபன் ஆகிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். இத்தனை பேருடன் நடித்ததில் மகிழ்ச்சி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள், நன்றி.” என்றார்.

 

நடிகர் சத்யராஜ் பேசுகையில், “ஒரு நல்ல தயாரிப்பாளரோடு நடிகனாக நான் சௌக்கியமாக இருக்கிறேன். தனுஷ் அவ்வளவு நன்றாகப் பார்த்துக்கொண்டார். நடிப்பு, எழுத்து, இயக்கம் என சகலகலா வல்லவனாக கலக்குகிறார். பவர் பாண்டி படம் பார்த்து ரொம்ப பொறாமைபட்டேன். எனக்கு இந்த படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. தனுஷ் சார் நடித்த ‘அசுரன்’, ‘கர்ணன்’ படங்கள் பார்த்து அசந்துவிட்டேன். இவ்வளவு பெரிய ஹீரோ படத்தில் அம்பேத்கர், பெரியார் கருத்துக்கள் பேசிய வெற்றிமாறன், மாரி செல்வராஜுக்கு நன்றிகள். இந்த படம் கதை சொன்ன போது, முதலில் பார்த்திபன் சார் ரோல் தான் நான் நடிக்க வேண்டும் என்று சொன்னேன். ஆனால், அவர் இதுதான் உங்களுக்கு சரியாக வரும் என்று எனக்கு பாடல் எல்லாம் தந்துள்ளார். உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். அருண் விஜய் ஹீரோவாக இருந்தாலும் அடுத்த ஹீரோ படத்தில் நடிப்பதில் தயக்கம் இருக்கும். ஆனால், இதையெல்லாம் விட்டு இந்த கதையை புரிந்து அற்புதமாக நடித்துள்ளார். நான் என் வயது மூத்தவர்களிடமும், தனுஷ் மாதிரி சின்னவர்களிடமும் நல்ல விசயங்கள் இருந்தால் கற்றுக் கொள்வேன். நடிப்பைப் பற்றி அவரிடம் சொல்லிக் கற்றுக் கொண்டேன். அவருடைய இயக்கத்தை பார்த்து அசந்தேன். இந்த படத்தில் எல்லாம் அம்சமாக அமைந்துள்ளது. ஜீவி இசை அற்புதம். எல்லா தொழில்நுட்ப கலைஞர்களும் அருமையாக உழைத்துள்ளனர். இதற்கெல்லாம் காரணமாக இருந்த தனுஷ் சார் நன்றி. அவர் மாதிரி ஹாலிவுட் படத்தில் நான் நடித்திருந்தால் என் நடையே மாறியிருக்கும். ஆனால் அவரின் அடக்கம் என்னை வியக்க வைக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள். அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

நடிகை நித்யா மேனன் பேசுகையில், “தனுஷ் சார் முதலில் இந்த படத்திற்காக கேட்டபோது எனக்கு டேட் இல்லை. பிறகு வேறு நடிகை வந்தார், ஆனால் மாறிவிட்டார். மீண்டும் ஷீட்டுக்கு முன்னர் ‘நீ தான் நடிக்க வேண்டும்’ என்று சொன்னார். இந்த படத்தில் தான் நடிக்க வேண்டும் என்று உணர்ந்தேன். ‘திருச்சிற்றம்பலம்’ போல நான் இதற்கே செட் ஆகிறேனா? என்று கேட்டேன். அவர் ‘நீ தான் கச்சிதமாக இருப்பாய்’ என்று சொன்னார். எனக்கு இளவரசு, சமுத்திரகனி, தனுஷ் சாருடன் அதிக காட்சிகள் உள்ளன. இங்கு சத்யராஜ் சார், பார்த்திபன் சார் எல்லோரையும் பார்த்ததில் சந்தோசம். இந்த குழு என் குடும்பம் போல. இப்படத்தில் நடித்தது மகிழ்ச்சி. தனுஷ் சார், நடிகரைத் தாண்டி இயக்குநராக எனக்கு மிகவும் பிடித்திருக்கிறார். இப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.” என்றார்.

 

நடிகர் இளவரசு பேசுகையில், “தனுஷ் சார் ஒரு விழாவில் தந்தை கஸ்தூரி ராஜா பட்ட கஷ்டத்தைப் பற்றிப் பேசியது என்னை மிகவும் ஈர்த்தது. அப்படி ஒரு மகன் தன் தந்தை கஷ்டத்தை உணராமல் இருந்தால் எப்படி இருக்கும் என்பது தான் இந்த ‘இட்லி கடை’ படம். ஷூட்டிங் போது, அங்கே ஒரு இடத்தில் ‘இது தான் எங்கள் மாமா வீடு’ என்று கூறினார். மிகச் சின்ன வீடு. இத்தனை உயரத்தில் இருப்பவர் அங்கு நடந்து கொண்ட விதம் என்னை ஆச்சரியப்படுத்தியது. அது தான் தனுஷ். இந்த படத்தில் ஒரு சின்ன பாத்திரத்தில் என்னையும் நடிக்க வைத்ததற்கு நன்றி. படம் அனைவருக்கும் பிடிக்கும். என்னுடன் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். கஸ்தூரி ராஜா சார் எனக்கு நண்பர். ‘துள்ளுவதோ இளமை’ படப்பிடிப்பு வேல்ஸ் கல்லூரியில் நடந்தது. அப்போதிலிருந்து 23 வருடமாக தனுஷைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என இதுவரை தமிழ் சினிமாவில் ரஜினி சார் தவிர யாரும் நடித்தது இல்லை; அதை சாதித்தது தனுஷ் சார் தான். தற்போது வேல்ஸ் பிலிம்ஸில் ஒரு படம் நடித்து வருகிறார். காலை ஷூட் முடித்துவிட்டு இரவில் ‘இட்லி கடை’ படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் ஒர்க் செய்கிறார். அவர் மாதிரி உழைப்பாளியைப் பார்த்ததே இல்லை. அவரின் இந்த படம் நிச்சயம் பெரிய வெற்றி பெறும். பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளார்கள். பெரிய பெரிய கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். எல்லாமும் சேர்ந்து படம் மிகப்பெரிய வெற்றி பெறும். அனைவருக்கும் வாழ்த்துக்கள். வெற்றிமாறன் இயக்கத்தில் விரைவில் ‘வடசென்னை 2’ படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பில் துவங்கவுள்ளோம், நன்றி.” என்றார்.

 

நடிகர் விஜயகுமார் பேசுகையில், “இப்படத்தில் பங்குபெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்கள். சினிமாவில் நான் 65 வருடமாக இருக்கிறேன். பல நடிகர்களுடனும், இயக்குநர்களுடனும் பணியாற்றியுள்ளேன். அதில் அருமை நண்பன் கஸ்தூரி ராஜாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் பையனை வைத்துப் படமெடுக்கிறேன் என்று சொன்னார், இன்னொரு பையன் இயக்குகிறார், ‘நீங்கள் நடிக்க வேண்டும்’ என்றார். சம்பளமே வேண்டாம், உங்கள் வீட்டிலிருந்து சாப்பாடு வர வேண்டும் என்று சொல்லி நடித்தேன். இப்போது அந்த இளைஞர்கள் பெரிய அளவில் வளர்ந்துள்ளனர். என் மகன் அருண் விஜய் அஜித்தோடு இணைந்து புகழ்பெற்றார். இப்போது தனுஷுடன் இப்படத்தில் நடித்துள்ளார். படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து பேசுகையில், “தனுஷ் சார் ரசிகர்களுக்கு வணக்கம். இந்த விழாவிற்கு அழைத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. என் அடுத்த படத்திற்கு ஆடியோ லாஞ்ச் நடைபெறுகிறது, அதில் தனுஷ் மாதிரி நடிகர் இருக்கலாம். Dawn Pictures தயாரிப்பாளர் இருக்கலாம். அதனால் நான் லொகேஷன் பார்க்க வந்துள்ளேன். எங்களைப் போன்ற சுமரான பசங்களுக்கு கான்ஃபிடென்ஸ் தந்தவர் தனுஷ் சார். சமீபத்தில் சந்தித்த போது அவரது உழைப்பை பார்த்து மிரண்டேன். இத்தனை உயரத்திற்கு வர இவ்வளவு உழைக்க வேண்டுமா எனப் பிரமித்தேன். அவருடன் நானும் இணையக் காத்திருக்கிறேன். நன்றி.” என்றார்.

 

இயக்குநர் கஸ்தூரி ராஜா பேசுகையில், “விஜயகுமார் சார் என்னுடன் மூன்று படம் செய்துள்ளார். ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் நடித்ததற்கு அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். 2002ல் அந்த படம் இரண்டு இளைஞர்களை நம்பி எடுத்தது. இதில் இவர் நடித்தது மிகப்பெரிய மதிப்பைத் தந்தது, நன்றி. நான் இவ்வளவு தூரம் வளர்ந்ததற்கும், என் பிள்ளைகள் வளர்ந்ததற்கும் காரணம் ராஜ்கிரண் சார் தான். அவருக்கு என் நன்றி. என் பையனை இவ்வளவு பெரிய ஆளாக வளர்த்த ரசிகர்களுக்கு நன்றிகள்.” என்றார்.

 

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசுகையில், “இந்த விழா ஒரு குடும்ப விழா மாதிரி. அனைவரும் தனுஷ் சாரை நேசிப்பதைப் பார்க்க மகிழ்ச்சி. ‘துள்ளுவதோ இளமை’ தான் நான் தனியாகப் போய் பார்த்த முதல் படம். அதிலேயே அவர் யாரிவர் என ஆச்சரியப்பட வைத்தார். அடுத்த வருடம் ‘காதல் கொண்டேன்’ வந்தது, தமிழ் சினிமாவிற்கு ஒரு கலைஞன் வந்துவிட்டார் என அறிவித்தது. நாயகனுக்குப் பிறகு ஒரு ஜெனரேஷனை இம்பிரஸ் செய்த படம் ‘புதுப்பேட்டை’. அப்போது அவருக்கு வெறும் 23 வயது. இப்போது தயாரிப்பாளராக, இயக்குநராக அவர் ஆச்சரியம் தருகிறார். அவர் தேர்ந்தெடுக்கும் படங்களும், இயக்கும் படங்களும் ஆச்சரியம் தான். ‘திருச்சிற்றம்பலம்’ படம் பார்த்தேன், அதில் நித்யா மேனன் மேடம் நடிப்பு உணர்வுப்பூர்வமாக இருந்தது. அதே கூட்டணி ‘இட்லி கடை’ படத்தில் பார்க்கப்போகிறோம் என்பது மகிழ்ச்சி. ‘இட்லி கடை’ மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் பேசுகையில், “’பொல்லாதவன்’ எனக்கு மூன்றாவது படம். அப்போது நான் சின்ன பையன், தனுஷ் என் கைபிடித்து இசை விழாவிற்கு அழைத்துச் சென்றார். அப்போதிருந்து இந்த நட்பு தொடர்கிறது. என் சகோதரர் மாதிரி, அவர் ஒருத்தரை நேசித்தால், அவரிடமிருந்து ‘நோ’ என்ற சொல்லே வராது. இட்லி கடை நம் மண் சார்ந்த கதையில் ஒரு அருமையான படமாக உருவாகியுள்ளது. உங்கள் தந்தையை இந்த படம் பார்க்கும்போது நினைத்துப் பார்ப்பீர்கள். இந்த படமும் எங்கள் கூட்டணியில் வெற்றிப்படமாக இருக்கும். அருண் விஜய் சார், சத்யராஜ் சார், பார்த்திபன் சார் என அனைவரும் அருமையாக நடித்துள்ளனர். ஷாலினியும் நன்றாக நடித்துள்ளார். நித்யா மேனன் கலக்கியுள்ளார். Dawn Pictures க்கு நன்றி. தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி என்றார்.” என்றார்.

 

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் பேசுகையில்,  “தனுஷ் சாருக்கு நன்றி. Dawn Pictures முதல் படம் இது. அவரே இயக்கி நடிக்கிறார். இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்றால் அதற்கான காரணம் அவர் தான். ராயன் படம் ரிலீஸ் ஆனபோது தான் இந்த படம் ஆரம்பித்தோம். “இட்லி கடை” என்ற தலைப்பு ரொம்ப சாஃப்ட்டாக இருக்கிறது என்று நினைத்தோம், ஆனால் அது தான் இப்போது பெரிய வைரலாகி வருகிறது. இந்த படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இந்த நிறுவனத்திற்கு ஆதரவாக இருந்த உதய் அண்ணா, செண்பகமூர்த்தி அண்ணா ஆகியோருக்கும் நன்றி. இந்த படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள், நன்றி.” என்றார்.

 

நடிகர் அருண் விஜய் பேசுகையில், “இட்லி கடை படக்குழு, பத்திரிக்கை நண்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. நான் மற்ற ஹீரோ காம்பினேஷனில் 2-3 படங்கள் பண்ணியிருக்கிறேன். “டக்குனு ஓகே” சொன்ன படம் ஒன்று “என்னை அறிந்தால்”, இன்னொன்று “இட்லி கடை”. தனுஷ் எனும் இயக்குநர் மீது வைத்த நம்பிக்கை தான் காரணம். இட்லி கடை படத்தின் கருவை அத்தனை அட்டகாசமாகச் சொல்லியுள்ளார். உங்கள் மீதான நம்பிக்கையில் வருகிறேன் என்றேன், என்னை அப்படிப் பார்த்துக்கொண்டார். அவரை இயக்குநராகப் பார்த்து வியந்தேன். அதிலும் நடித்து இயக்குவது எளிதல்ல. அவர் எப்போதும் உழைத்துக்கொண்டே இருப்பார். “என்னடா இந்த மனுஷன் இத்தனை விருது வாங்கி, ஹாலிவுட் வரை போய்வந்துவிட்டு இன்னும் ஓடிக்கொண்டே இருக்கிறாரே” என வியந்து பார்ப்பேன். தான் செய்கிற வேலையை தெளிவாகச் செய்ய அந்த காதலும் உழைப்பும் இல்லையென்றால் எதுவும் முடியாது. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், அவர் உழைத்துக் கொண்டே இருக்கிறார். அவருடன் நடித்தது மிகப்பெரிய சந்தோசம். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். இப்படத்தில் சத்யராஜ் அண்ணனுடன் நடித்தது மகிழ்ச்சி. பார்த்திபன் சார், ராஜ்கிரண் சார் எல்லோருடனும் நடித்தது மகிழ்ச்சி. ஷாலினி துருதுருவென இருப்பார், அவர் தான் எங்கள் எண்டர்டெயினர். நித்யா மேனன் தனுஷ் சாருடன் வேறு மாதிரி நடிப்பைத் தந்துள்ளார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் உடன் பணியாற்றியது மகிழ்ச்சி. ஜீவி பிரதர், இவர்கள் எப்படித்தான் இப்படி ஒரு ஹிட் தருகிறார்கள் என்றே தெரியவில்லை. அவர்களுக்குள் நல்ல கெமிஸ்ட்ரி உள்ளது. பின்னணி இசையைக் கேட்க ஆசை. எங்கள் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், அவரை இங்கு தான் முதன்முதலில் பார்க்கிறேன். இந்த டீமை முழுமையாக நம்பி படம் தந்துள்ளார். நன்றி. இட்லி கடை, குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பிடித்த படமாக இருக்கும். நன்றி.” என்றார்.

 

இப்படத்தில் தனுஷ் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, நித்யா மேனன், சத்யராஜ், ஷாலினி பாண்டே, ராஜ்கிரண், சமுத்திரகனி, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நட்சத்திர நடிகர் அருண் விஜய் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

 

முன்னணி நடிகர்களின் நடிப்பில், பெரிய பட்ஜெட்டில், பல புதிய திரைப்படங்களைத் தயாரித்து வரும் Dawn Pictures நிறுவனத்துடன் Wunderbar Films இணைந்து, இப்படத்தினை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளது. Red Giant Movies நிறுவனம் சார்பாக இன்பன் உதயநிதி இப்படத்தினை தமிழகமெங்கும் வெளியிடுகிறார்.

 

இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்ய, GK பிரசன்னா எடிட்டிங் செய்கிறார். நடனத்தைப் பாபா பாஸ்கர் அமைத்துள்ளார். உடை வடிவமைப்பை காவ்யா ஶ்ரீராம் செய்துள்ளார். PC STUNTS சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.

Related News

10662

வந்த வழியையும், வாழ்ந்த வாழ்க்கையையும் என்றைக்கும் மறக்கக் கூடாது - நடிகர் தனுஷ்
Monday September-15 2025

டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...

Kollywood Stars in A Rhapsody 2025
Monday September-15 2025

The S.A.College of Arts & Science campus came alive with colors, music, and excitement as SA Rhapsody 2025 unfolded in all its glory on September 13, 2025...

இளமை துள்ளும் காதல் படைப்பாக உருவாகியுள்ள ‘சரீரம்’!
Monday September-15 2025

ஜி.வி.பி பிக்சர்ஸ் வழங்கும், இயக்குநர் ஜி...

Recent Gallery