தமிழ் ஈழத்தில் நடந்த இறுதி யுத்தமும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற மிகப்பெரிய இனப்படுகொலைப் பற்றியும் செய்திகள் வெளியான வேகத்தில் மறைந்து போனது. அந்த பெருங்குற்றம் செய்தவர்களுக்கு எந்தவித தண்டனையோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித நியாயமோ கிடைக்காத நிலையில், ஈழ இனப்படுகொலையின் வலியை உலக மக்களுக்கு நினைவூட்டும் விதமாக உருவாகியிருக்கும் சுயாதீன திரைப்படம் ‘ஒரு கடல் இரு கரை’. (A Sea and Two Shores)
ஜான் ரோமியோ, மார்டின், மெலோடி டோர்கஸ் ஆகியோர் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஜான் ரோமியோ இயக்கியிருக்கிறார். ஐ நிலம் மீடியா ஐஎன்சி மற்றும் ஜோரோ மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் ஜான் ரோமியோ தயாரிக்க, சத்யமூர்த்தி, ஜோன்ஸ், பிரியதர்ஷினி ஆகியோர் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.
படம் முழுவதும் முடிவடைந்து பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டு பெற்று வரும் நிலையில், கனடா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த அறிமுகப் பட இயக்குநருக்கான விருதை ‘ஒரு கடல் இரு கரை’ (A Sea and Two Shores)
திரைப்படம் வென்றுள்ளது. மேலும், வரும் டிசம்பர் மாதம் பாரீஸில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழா மற்றும் 2026 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற உள்ள தமிழ் சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட இப்படம் தேர்வாகியுள்ளது.
இப்படத்தின் சரண்யா ரவிச்சந்திரன், விக்னேஷ் ரவி, பழனி, சித்ரா, மெலோடி டோர்கஸ், தரணிதரன், சூர்யா, டாரன் மற்றும் மீனவ பழங்குடியின மக்கள் என்று பலர் நடித்திருக்கிறார்கள்.
கவின் அஸ்கர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சிபி என்.எல்.ஜி இசையமைத்திருக்கிறார். ஜான் ரோமியோ படத்தொகுப்பு செய்திருக்கிறார். ஜீவா இணை இயக்குநர்களாக பணியாற்ற, அனிஷ் மாசிலாமணி நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றியிருக்கிறார். வி.எஃப்.எக்ஸ் மற்றும் 2டி அனிமேஷன் பணிகளை கனா கிரியேட்டிவ்ஸ் கையாண்டுள்ளது.
கனடா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றது குறித்து படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜான் ரோமியோ கூறுகையில், “கனடா தமிழ் திரைப்பட சர்வதேச விழா என்பது, சர்வதேச தமிழ் திரைப்பட விழாக்களில் மிகவும் முக்கியமானது. ‘கடைசி விவசாயி’, ‘சித்தா’ ‘யாத்திசை’ போன்ற படங்கள் கடந்த வருடங்களில் விருது வென்றுள்ள நிலையில், இந்த வருடம் எங்கள் திரைப்படம் கனடா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்றது பெருமையாக இருக்கிறது. நான் ஒரு சுயாதீன இயக்குநர், இந்த படமும் சுயாதீன படம், என்ற நிலையில் இந்த விருது எங்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது.
இயக்குநர் வெற்றிமாறன் நடத்தும் திரைக்கலை கல்லூரியில் நான் கடந்த 4 வருடங்களாக பேராசிரியராக பணியாற்றி வருகிறேன். எனது சொந்த செலவில் இந்த படத்தை தயாரித்திருக்கிறேன். வாரம் முழுவதும் பேராசிரியராக பணியாற்றிவிட்டு, வார இறுதி நாட்களில், இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்துவேன். இப்படி தான் தொடர்ந்து இரண்டு வருடங்களாக இந்த படத்தை உருவாக்கினேன்.
2008 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரை, ஈழத்தில் நடந்த போரின் போது அங்கிருந்த ஈழத்தமிழ மக்கள் தப்பித்து, தமிழ் கடற்கரைக்கு வரும் போது என்ன நடந்தது ?, தமிழக மீனவர்கள் அப்போது என்ன செய்தார்கள் ? என்பது தான் இந்த படத்தின் மையக்கரு.
தமிழக கடற்கரையில் இருக்கும் மீனவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹீரோவுக்கு திலீபன் என்று பெயர் வைத்திருக்கிறேன். ஈழ போராளி திலீபனை போற்றும் வகையில் தான் ஹீரோவுக்கு அந்த பெயர் வைத்தோம். போராளி திலீபனின் நினைவுனாளில் கனடா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் எங்கள் படத்திற்கு விருது கிடைத்த மற்றொரு சிறப்பு.
போரினால் பாதிக்கப்பட்டு ஈழ கடற்கரையில் இருந்து தமிழ் கடற்கரைக்கு வரும் மக்களுக்கு என்ன நடக்கிறது, அவர்களை காப்பாற்ற மீனவர் திலீபன் முயற்சிக்கும் போது என்ன நடக்கிறது, என்பது தான் கதை. அந்த மக்கள் இங்கு வந்த பிறகு என்ன நடக்கிறது, இங்கு வந்தவர்கள் மீண்டும் இங்கிருந்து வெளியேற நினைப்பது ஏன்? என்பதை அரசியல் ரீதியாகவும் பேசியிருக்கிறோம்.
சரண்யா, விக்னேஷ் போன்றவர்கள் மட்டும் தான் ஏற்கனவே நடித்திருப்பவர்கள். மற்றவர்கள் அனைவரும் புதியவர்கள் தான். குறிப்பாக, இந்த படத்திற்காக சுமார் 300 மீனவ கிராமங்களுக்கு நாங்கள் பயணித்தோம். சென்னையில் தொடங்கி பாண்டிச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, குளைச்சல், முட்டம் என கேரளா எல்லை வரை சென்று இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பு நடத்தினோம். அப்போது அந்த கிராமங்களில் இருக்கும் மீனவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களையே நடிக்க வைத்தோம். இதுபோல் படத்தில் நடித்திருக்கும் சுமார் 700 பேர் புதியவர்களாகவும், மீனவ பழங்குடியின மக்களாகவும் இருப்பார்கள். அதேபோல், இயக்குநர் வெற்றிமாறன் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மாணவர்களும் இந்த படத்தில் பணியாற்றியிருக்கிறார்கள்.
இந்த படத்தின் முக்கிய அம்சமே கதை தான்.இப்படிப்பட்ட கதையை படமாக எடுப்பதற்கு காரணம் வலி தான். 2009 ஆம் ஆண்டு நடந்த ஈழ இனப்படுகொலையால் என்னுள் ஏற்பட்ட வலி என்னைவிட்டு விலகவே இல்லை. இந்த இனப்படுகொலை பற்றி திரும்ப திரும்ப மக்களுக்கு நினைவூட்ட வேன்டியது என் கடமை என்று நான் நினைக்கிறேன்.
நான் ஒரு சுயாதீன படைப்பாளி, எங்கள் படைப்பும் சுயாதீன படைப்பு என்பதால் எங்களுக்கு எந்தவித மூலதனமும் கிடைக்கவில்லை, சொந்த பணத்தில் தான் இந்த படத்தை தயாரித்திருக்கிறோம். இந்த படத்தால் எங்களுக்கு எந்தவித லாபமும் வரப்போவதில்லை என்றாலும், இத்தகைய முயற்சியில் தொடர்ந்து ஈடுபட இதுபோன்ற விருதுகள் மூலம் கிடைக்கும் அங்கீகாரம் பெரும் உத்வேகம் அளிக்கிறது.
இந்த மகிழ்ச்சியான தருணத்தில், இந்த படத்தை எடுக்க உதவிய மீனவ பூர்வக்குடி மக்கள், இயக்குநர் வெற்றி மாறன், Fr. ராஜநாயகம் மற்றும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’...
ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் நடிகர்கள் ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் த்ரில்லர் கதை 'தி கேம்: யூ நெவர் பிளே அலோன்'...
இந்தியா தபால்துறை, கர்நாடக அஞ்சல் வட்டாரம், ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து, கர்நாடகாவின் செழுமையான பாரம்பரிய கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில், ஒரு சிறப்பு கவர், இரண்டு பட அஞ்சல் அட்டைகள் மற்றும் கேன்சலேஷன் ஸ்டாம்பை வெளியிட்டுள்ளது...