Latest News :

என் படங்களில் தரமான படங்கள் பட்டியலில் ‘மருதம்’ இருக்கும் - நடிகர் விதார்த்
Monday September-29 2025

அருவர் பிரைவேட் லிமிடெட் சார்பில் சி.வெங்கடேசன்  தயாரிப்பில், விதார்த் நடிப்பில், இயக்குநர் வி.கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மருதம்’. இதில் விதார்த்துக்கு ஜோடியாக ரக்‌ஷனா நடித்துள்ளார். அருள் தாஸ், மாறன், சரவணன் சுப்பையா, தினந்தோறும் நாகராஜ், மாத்யூ வர்கீஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

 

என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு அருள் சோமசுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்துரு.பி படத்தொகுப்பு செய்துள்ளார். பாடல்களை நீதி எழுதியுள்ளார். மக்கள் தொடர்பு பணிகளை ஏ.ராஜா கவனிக்கிறார். 

 

தற்கால உலகில் ஒரு விவசாயியுடைய வாழ்வினை மையமாக வைத்து,  அழுத்தமான திரைக்கதையில் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள ‘மருதம்’ வரும் அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் நடிகர் அருள்தாஸ் பேசுகையில், “கஜேந்திரன் சார் முன்பே அறிமுகம். 10 வருடங்கள் முன்பு என்னை அழைத்து ஃபிலிம் இன்ஸ்டியூட் முடித்துள்ளேன். ஒரு குறும்படம் நடித்துத் தாருங்கள் என்றார். பின் இப்போது மீண்டும் அழைத்து படம் செய்வதாக சொன்னார். மகிழ்ச்சியுடன் சென்று நடித்தேன். திரையுலகில் சாதிப்பதற்காகத் துடிக்கும் அனைவருக்கும் நான் தோள் கொடுப்பேன். நண்பர் வட தமிழகத்தை சேர்ந்தவர் அந்தப் பக்கத்துக் கதைகள் திரையில் வந்ததில்லை.

 

 ஆனால், இப்படத்தில் அந்த வாழ்வியலை கொண்டு வந்துள்ளார். விதார்த் இயல்பான நடிப்பைத் தரும் அழகான நடிகன். சிறப்பாக நடித்துள்ளார். ரகுநந்தன் முதல் படத்திலிருந்து தெரியும். மிகச்சிறந்த திறமைசாலி. தயாரிப்பாளர்கள் தைரியமாக இப்படி ஒரு படத்தைத் தயாரித்ததற்கு வாழ்த்துகள். படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்.” என்றார்.

 

என் ஆர் ரகுநந்தன் பேசுகையில், “முதலில் இப்பட வாய்ப்பை தந்த தயாரிப்பாளர் வெங்கடேசனுக்கும் இயக்குநர் கஜேந்திரனுக்கும் என் நன்றிகள். கஜேந்திரன் படப்பிடிப்பை முழுதாக முடித்து விட்டு வந்து தான் என்னிடம் போட்டு காண்பித்தார். தென் மேற்கு பருவக்காற்று படத்தில் இப்படி தான் வேலை பார்த்தேன். இசை நன்றாக வந்துள்ளது. விதார்த் உடன் முன்பே வேலை செய்துள்ளேன். அந்தப்படம் 60 விருதுகள் வாங்கியது. அயோத்தி படத்தின் போது அந்தப்படம் குறிஞ்சிப் பூ  போல் வெற்றி பெறும் எனச் சொன்னேன். அதே போல், இந்தப்படமும் மக்களிடம் விவசாயி பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும். அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.

 

நாயகி ரக்‌ஷனா பேசுகையில், “மருதம் என் இரண்டாவது படம், கடவுளுக்கு நன்றி. என்னைத் தேடி இந்த வாய்ப்பு தந்த கஜேந்திரன் சாருக்கு நன்றி. சார் எஸ் ஆர் எம்’மில் ப்ரொபசர் கண்டிப்பாக இருப்பார் என நினைத்தேன். ஆனால், என்னிடம் மிக இயல்பாகக் கனிவாக நடந்து கொண்டார். இரண்டாவது படத்தில் பெரிய ஹீரோ கூட நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கவில்லை, அமேசிங்கான ஆக்டர் விதார்த் சார். அவருடன் நடித்தது ஒரு இனிய அனுபவம். ஒரு சின்ன  கிராமத்தை மிக அழகாகக் காட்டியுள்ளனர். மிகுந்த வெயிலில் படம் எடுத்தோம் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. மியூசிக் மிக அற்புதமாக வந்துள்ளது. குழந்தைக்கு எப்படி அம்மாவாக நடித்தீர்கள் எனக்கேட்கிறார்கள். இது இங்கு தான் ஒரு ஸ்ட்ரீயோடைப் அதை உடைக்க வேண்டும் என நினைத்தேன், அம்மாவின் உலகத்தை வாழ்ந்து பார்க்க ஆசைப்பட்டேன் அது இந்தப்படத்தில் நடந்தது. மருதம் மிக அற்புதமாக வந்துள்ளது படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.

 

நடிகர் விதார்த் பேசுகையில், “இந்தப்படத்தில் நடிக்க நான் முதல் காரணம் அன்பழகன் அண்ணன். அவர் தான் கஜேந்திரன் சாரை அறிமுகப்படுத்தினார். கதை சொன்ன போது இது உங்களுக்கு நடந்ததா எனக்கேட்டேன் என் நண்பருக்கு நடந்தது என்றார். ஷீட்டிங்கில் அவரைச் சந்தித்தேன். இது இந்தியா முழுதும் விவசாயிகளுக்கு நடக்கிறது. இந்த விசயத்தை நீங்கள் கண்டிப்பாக நேரில் பார்த்திருப்பீர்கள். இந்தப்படத்தில் நடித்தது மிகுந்த சந்தோசம். மாறன் இப்படத்தில் முக்கியமான ரோல் செய்துள்ளார். 

 

ஜே பேபி படம் பார்த்து அவரிடம் நாமும் இணைந்து நடிக்க வேண்டும் எனச் சொன்னேன், இதிலும் காமெடி மட்டுமில்லாமல் கலங்க வைத்துவிடுவார். அருள் தாஸ் அண்ணா நல்ல ரோல் செய்துள்ளார். ரக்‌ஷ்னா ஒரு குழந்தைக்கு அம்மா.  யாரை நடிக்க வைக்கலாம் என்றார், திடீரென வந்து ரக்‌ஷனா  நடிக்க வைக்கலாம் என்றார். அவர் ஒத்துக்கொண்டதே எனக்கு ஆச்சரியம் கதாப்பாத்திரம் தான் முக்கியம் எனும் அவரது கொள்கைக்கு என் நன்றிகள்.  குழந்தை நட்சத்திரம் இயக்குநரின் மகன் எங்கள் எல்லோரையும் விட நன்றாக செய்துள்ளான். சரவணன் சுப்பையா சார் மிக அழகான ரோல் செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் அருள் கிராமத்து வெயிலில் அழகாகப் படம் பிடித்துள்ளார். கலை இயக்குநர் தாமு சார் செட் என்பதே தெரியாமல் அழகாகச் செய்துள்ளார். அனு சின்ன ரோல் எமோசனலாக செய்துள்ளார். விழாவின் நாயகன் ரகுநந்தன் என்றாவது ஒரு நாள் படத்தில் பின்னணி இசையில் பின்னியிருந்தார். இந்தப்படத்திலும் அழகாக செய்துள்ளார். கஜேந்திரன் மிக அழகாகப் படத்தை எடுத்துள்ளார். பட்ஜெட் போட்டு  அவரே தயாரிப்பாளர் போல படத்தை எடுத்துள்ளார். என் படங்களில் தரமான படங்கள் லிஸ்டில் இப்படம் இருக்கும்.  வியாபார ரீதியாக இப்படம் ஜெயிக்க வேண்டும். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.

 

Marutham Movie Audio Launch

 

இயக்குநர் நடிகர் சரவணன் சுப்பையா பேசுகையில், “நான் என்ன நினைத்ததேனோ அதை விதார்த் பேசி விட்டார். கஜேந்திரன் ஃபிலிம் இண்ஸ்டிடியூட் ஸ்டூடன்ட், சிட்டிசன் படத்தில் 7 வது அஸிஸ்டெண்டாக வேலை பார்த்தார் 20  வருடங்களுக்குப் பிறகு சார் எஸ் ஆர் எம்மில் வேலை பார்க்கிறேன், இப்போது படம் செய்கிறேன் நீங்கள் நடிக்க வேண்டும் என்றார். மிக மகிழ்ச்சியோடு நடித்தேன். கார்பரேட் உண்மையான நல்ல மனிதனை எப்படி தவறு செய்ய தூண்டும் எனும் விசயத்தை தைரியமாகச் செய்துள்ளார். கஜேந்திரன் மிகத் திறமையானவர்.  எஸ் ஆர் எம் கல்லூரி தன் மாணவர் ஆசியர் படமெடுக்கிறார் என பெரும் ஆதரவு தந்துள்ளார். விதார்த் இந்த படத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டார் என நான் நேரில் பார்த்துள்ளேன். மிகப்பெரும் திறமைசாலி. வேலை பார்த்த அனைவரும் தங்கள் முழு உழைப்பைத் தந்துள்ளனர். இந்தப் படத்திற்கு முழுமையான  ஆதரவைத் தாருங்கள்.” என்றார்.

 

இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் பேசுகையில், “மருதம் இயக்குநர் கஜேந்திரன், 20 வருடத்திற்கு முன்பான கதை. வடபழனி தெருக்களில் எத்தனையோ இளைஞர்கள் திரையுலகில் சாதிக்க அலைகிறார்கள் அதில் எத்தனையோ பேர் விட்டு விட்டு ஓடிவிட்டார்கள். ஆனால் கஜேந்திரன் அதைச் சாதித்துக் காட்டி அனைவருக்கும் நம்பிக்கை தந்துள்ளார். கோ லோக்கல் டூ மேக் குளோபல் என ஒரு வாக்கியம் உள்ளது. நம் மண்ணின் கதை பேசுங்கள் அது உலகம் முழுக்க போகும் அதை கஜேந்திரன் செய்துள்ளார். அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். நன்றி.” என்றார்.

 

சாட்டை அன்பழகன் பேசுகையில், “கஜேந்திரன் என் நண்பன் அடையாறு திரைப்பட கல்லூரியில் படித்து வந்து இன்று வரை பயணிக்கும் நண்பர். நாங்கள் படிக்கும் போது நிறைய படம் பார்த்து விவாதித்துள்ளோம். எதிலும் நல்லதையும் தரத்தையும் பார்த்துப் பார்த்து செய்யக்கூடியவர். அவனுடைய நிறைய கதைகள் எனக்குத் தெரியும். அதில் ஒரு நல்ல கதையை எடுத்துள்ளான். தான் சார்ந்த தன் மக்கள் சார்ந்த வலியை பதிவு செய்துள்ளான் வாழ்த்துக்கள். அடுத்தடுத்து இன்னும் நிறையப் படம் செய்ய வேண்டும் வாழ்த்துக்கள். விதார்த் சார் பிரபு சாலமன் சாரிடம்  நான் வேலை செய்யும் காலத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். நிறைய படம் பார்ப்பார் அவர் நிறைய கதைகள் வைத்துள்ளார். அவரை இயக்குநராகப் பார்க்க ஆசை. அவர் படம் என்றால் நன்றாக இருக்கும் என பெயரெடுத்துள்ளார். ரகுநந்தன் பாடல்கள் மிகவும் பிடிக்கும். இதிலும் அழகாக இசையமைத்துள்ளார். இப்படத்தில் வேலை பார்த்த பலரும் என் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. படம் மிக அழகாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள்.” என்றார். 

 

எஸ் ஆர் எம் கல்லூரி தலைவர்  திருமகன் பேசுகையில், “எங்கள் கல்லூரி பேராசிரியர் கஜேந்திரன் இவ்வளவு பெரிய படத்தைச் செய்துள்ளார் என்பது பெருமையாக உள்ளது. இந்த விழாவினை நம் கல்லூரியில் வைத்திருக்கலாமே என்று தோன்றியது. இந்தப்படம் வெளியான பின்பு  கஜேந்திரன் என் கல்லூரி ஆசிரியர் என பெருமையாகச் சொல்வேன். அருமையான தமிழ் இசையை ரகுநந்தன் தந்துள்ளார். கஜேந்திரன் தன் குடும்பத்தையே நடிக்க வைத்துவிட்டார். அவர் மிகுந்த திறமைசாலி. அவர் என் ஆசிரியர் என்பது பெருமை. இந்தப்படம் மிக எதார்த்தமான படம் இப்படம் மிகச்சிறந்த வெற்றி பெறும். வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இயக்குநர் கஜேந்திரன் பேசுகையில், “அடையாறு ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் படிக்க வாய்ப்பு வாங்கி தந்த கேபி பாலசந்தர் சாருக்கு இன்று நன்றி கூறிக்கொள்கிறேன். சிட்டிசன் படத்தில் எனக்கு உதவி இயக்குநராக வாய்ப்பளித்த சரவணன் சுப்பையா சாருக்கு என் நன்றிகள். இப்படத்திற்கு என் நண்பன் சாட்டை அன்பழகன் பெரும் ஆதரவாக இருந்தார். இப்படத்திற்கு என்னை நம்பி முழு ஆதரவாக இருந்த என் தயாரிப்பாளருக்கு நன்றி.   என் நண்பன் ஒளிப்பதிவாளர் அருள் சோமசுந்தரம்  கடும் வெயிலில் எனக்காக பணியாற்றித் தந்தார். நாங்கள் படத்தையே ஷீட்டிங்க் செய்து முடித்து விட்டுத் தான் இசையமைப்பாளர் தேடினோம். உதயகுமார் சார் தான் ரகுநந்தன் சாரை அறிமுகப்படுத்தினார். படத்தை முடித்த பிறகு அதைப்பார்த்து நான் நினைத்த இடத்தில் நினைத்த உணர்வு வருவது போல அற்புதமான இசையைத் தந்தார் ரகுநந்தன் சார் அவருக்கு என் நன்றிகள். கல்லூரியில் பேராசிரியராக இருந்தாலும், எனக்கு 3 மாதம் லீவ் தந்தார்கள் அங்கேயே டப்பிங்க் செய்ய வசதி செய்து தந்தார்கள் அவர்களுக்கு என் நன்றிகள். நான் கதையில் யோசித்த நுணுக்கமான உணர்வுகளைப் புரிந்துகொண்டு அற்புதமாக நடித்துத் தந்த விதார்த் அவர்களுக்கு நன்றி. ரக்‌ஷனா நான் இந்த ரோலில் நடிக்க மாட்டார் என நினைத்தேன் ஆனால் கதையைப் புரிந்து கொண்டு நடித்துத் தந்ததற்கு நன்றி. இப்படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.

 

நம் தமிழின் ஐந்திணைகளில் விவசாய நிலத்தினை குறிக்கும் மருத நிலத்தின் அடையாளமாக இப்படத்திற்கு மருதம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

 

இயக்குநர்கள் சரவண சுப்பையா, மோகன் ராஜா, பொம்மரிலு பாஸ்கரிடம் பணிபுரிந்தவரும், அடையாறு திரைப்பட கல்லூரியில் பயின்றவரும்,  தற்பொது SRM கல்லூரியில் உதவி பேராசியராக பணியாற்றுபவருமான கஜேந்திரன் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். 

Related News

10681

’இறுதி முயற்சி’ நல்ல படத்தில் நடித்த திருப்தியை எனக்கு கொடுத்திருக்கிறது - நடிகர் ரஞ்சித் நெகிழ்ச்சி
Monday September-29 2025

வரம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கடேசன் பழனிச்சாமி தயாரிப்பில் நடிகர் ரஞ்சித் நடிப்பில் இயக்குநர் வெங்கட் ஜனா இயக்கத்தில் உருவாகியுள்ள 'இறுதி முயற்சி' எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...

’இரவின் விழிகள்’ பட இயக்குநரை புகழ்ந்து தள்ளிய கதாநாயகி!
Thursday September-25 2025

மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’...

சர்வதேச விருது வென்ற ‘ஒரு கடல் இரு கரை’!
Thursday September-25 2025

தமிழ் ஈழத்தில் நடந்த இறுதி யுத்தமும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற மிகப்பெரிய இனப்படுகொலைப் பற்றியும் செய்திகள் வெளியான வேகத்தில் மறைந்து போனது...

Recent Gallery