வரம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கடேசன் பழனிச்சாமி தயாரிப்பில் நடிகர் ரஞ்சித் நடிப்பில் இயக்குநர் வெங்கட் ஜனா இயக்கத்தில் உருவாகியுள்ள 'இறுதி முயற்சி' எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார் - பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இயக்குநர் வெங்கட்ஜனா இயக்கத்தில் உருவாகியுள்ள 'இறுதி முயற்சி' எனும் திரைப்படத்தில் ரஞ்சித், மேகாலீ, விட்டல் ராவ், கதிரவன், ராஜா, சத்குரு, குணா, சதீஷ், மோனிகா, நீலேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சூரிய காந்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுனில் லாசர் இசையமைத்திருக்கிறார். வடிவேல் - விமல் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, கலை இயக்கத்தை தாமு கவனித்திருக்கிறார். தற்கொலை குறித்த விழிப்புணர்வை மையப்படுத்தி எமோஷனல் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வரம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கடேசன் பழனிச்சாமி தயாரித்திருக்கிறார். அஜய் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் அஜய் வழங்குகிறார்.
அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஆர் வி உதயகுமார் பேரரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டனர்.
இவ்விழாவில் இயக்குநர் வெங்கட் ஜனா பேசுகையில், ”இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி. இந்த கதைக்கு என்னுடைய நண்பரின் வாழ்வில் நடைபெற்ற சம்பவம் தான் உந்துவிசை. அதைத் தொடர்ந்து நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருப்பூரில் தொழிலதிபர் ஒருவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியானது. இந்த செய்தியை வாசித்தவுடன்.. என்னால் இயல்பாக கடந்து செல்ல முடியவில்லை. தொழிலதிபரான அவர் எப்படி இறந்திருப்பார்? இறப்பதற்கு முன் அவர் எந்த அளவிற்கு உணர்ச்சி வசப்பட்டிருப்பார்..? என பல கோணங்களில் எனக்குள் கேள்வி எழுந்தது. இவர்களை என்னுடைய படைப்பின் மூலம் ஏன் சிரஞ்சீவியாக்க கூடாது என்றும்... அதன் மூலம் எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வல்ல என்பதை சொல்ல முடியும் என்பதற்காகவும் இந்த படைப்பை உருவாக்கினேன்.
இந்தப் படத்திற்காக நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், நண்பர்கள் என பலரும் தங்களது முழுமையான பங்களிப்பை வழங்கினார்கள். இதற்காக அவர்களுக்கு இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கதையில் ஒரு ஆத்மா இருக்கிறது. அதுதான் இப்படத்தின் நடித்த அனைவரையும் சிறப்பாக நடிக்க வைத்திருக்கிறது.
இந்தப் படத்தை செய்தியின் அடிப்படையில் எடுத்தால் அது டாக்குமென்டரி ஆகவே ஆகிவிடும். அதற்குள் சுவாரசியத்தை சேர்க்க வேண்டும் என்றால்... சைக்கலாஜிக்கல் திரில்லர் அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும் என்பதை தீர்மானித்தேன். முழு திரைக்கதையும் எழுதிய பிறகு ரஞ்சித்தை சந்தித்தேன். முதலில் மறுப்பு தெரிவித்த ரஞ்சித்.. சிறிய தயக்கத்திற்கு பிறகு முழு கதையையும் கேட்டார். அதன் பிறகு நடிக்க ஒப்புக்கொண்டார். இந்தப் படத்தை பார்த்த பிறகு ரஞ்சித்தை எவ்வளவு தவற விட்டிருக்கிறோம் என்பதை அனைவரும் புரிந்து கொள்வார்கள். அவருடைய திரை உலக பயணத்தில் இந்த திரைப்படம் மைல்கல் படைப்பாக இருக்கும்.” என்றார்.
இசையமைப்பாளர் சுனில் லாசர் பேசுகையில், ”இசையமைப்பாளராக முதன்முறையாக மேடை ஏறி இருக்கிறேன். இதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திரைப்படத்தை ரசிகர்களை விட திரைப்படத் தொழில்நுட்ப கலைஞர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும். ஏனெனில் அவர்கள் வளரும் காலகட்டத்தில் இது போன்ற உணர்வை கடந்துதான் வந்திருப்பார்கள். நாங்கள் கதைக்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறோம். படத்தை திரையரங்கில் பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
பாடலாசிரியர் மாசூக் ரஹ்மான் பேசுகையில், ”2007 ஆம் ஆண்டில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாடல்களை எழுதத் தொடங்கினேன். ஆசிரியராக பணியாற்றுவதாலும்.. வணிக ரீதியிலான பாடல்களை எழுதுவதில் விருப்பமில்லாததாலும்... சற்று இடைவெளி ஏற்பட்டது. அதன் பிறகு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'எஃப் ஐ ஆர்' படத்தில் இரண்டு பாடல்களை எழுதினேன். அந்தப் பாடல்களை கேட்டு தான் இப்படத்திற்கு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது.
இயக்குநர் கதையை சொன்னவுடன்.. இப்படத்தில் சமூகம் சார்ந்த பிரச்சினையை இயக்குநர் கையில் எடுத்திருப்பதால்.. பாடல் எழுதுவதற்கு எனக்கு சுதந்திரம் அளித்தார்கள். இரண்டு பாடல்களையும் எழுதிய பிறகு அதற்கு ஏற்ப மெட்டமைத்தார் இசையமைப்பாளர் சுனில் லாசர். அவருடன் பணியாற்றிய வாய்ப்பு அற்புதமான அனுபவம். இந்தப் படத்தில் மொத்தம் மூன்று பாடல். அதில் ஒரு பாடலில் வலியையும், அதை தீர்ப்பதற்கான வழியையும் சொல்லும்.
பொதுவாக டியூன் கேட்கும் போது அந்த டியூனே சில பிரத்யேக வார்த்தைகளை உற்பத்தி செய்யும். ஆனால் இந்தப் படத்தில் கதைக்கான சூழல் தான் வார்த்தைகளை உருவாக்கியது. ஆகவே இந்தப் படத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்'' என்றார்.
நடிகை மேகாலீ பேசுகையில், '' நவராத்திரி திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருணத்தில் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இறுதி முயற்சி இது ஒரு கூட்டு முயற்சி. இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் அழகானது. மறக்க முடியாதது. படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் தங்களது முழுமையான ஒத்துழைப்பை அளித்தார்கள். இந்த கதாபாத்திரத்தை என்னை நம்பி வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. சக நடிகரான ரஞ்சித் படப்பிடிப்பு தளத்தில் அக்கறையுடனும், அன்புடனும் நடந்து கொண்டார். அக்டோபர் 10ஆம் தேதியன்று 'இறுதி முயற்சி' திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரிக்க வேண்டும்.” என்றார்.
நடிகர் ரஞ்சித் பேசுகையில், “சாலிகிராமம் -வடபழனி -கோடம்பாக்கம் - ஆகிய பகுதிகளில் உள்ள சாலையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு பயணித்த போதும், தற்போது பயணிக்கும் போதும் மனம் கனத்து விடும். ஏனெனில் சினிமாவில் என்றைக்காவது சாதித்து விட வேண்டும் என்ற கனவில் தங்களது வாழ்வை தொலைத்து விட்டு அலைபவர்கள் அதிகம்.
நான் எப்போதும் வாய்ப்புகளை தேடி அலைந்ததில்லை. ஆனால் எனக்கும் ஒரு வாய்ப்பு அமைந்தது. ஆர் கே செல்வமணி இயக்கத்தில் ஒரு படத்தில் நாயகனாக நடிக்க தேர்வானேன். இதற்காக அவரை சந்தித்ததில் இருந்து நடிகராக தேர்வாகும் வரை எனக்குள் பெரும் பதற்றம் இருந்தது. அந்த காலகட்டத்தில் எல்லாம் கதைக்குப் பொருத்தமான முகங்களை தான் இயக்குநர்கள் தேர்வு செய்தார்கள். அந்த வகையில் ஆர். கே. செல்வமணியின் கதைக்கு நான் பொருத்தமாக இருந்ததால் ஹீரோவாக தேர்வானேன். இதற்கு ஒளிப்பதிவாளர் பன்னீர் செல்வத்தின் விருப்பமும், சம்மதமும் முதன்மையாக இருந்தது. அன்று முதல் இன்று வரை ஒளிப்பதிவாளர் பன்னீர்செல்வம் என்னுடைய இனிய நண்பர்.
நான் சினிமாவில் நல்ல நடிகராக வேண்டும் என்று தான் வருகை தந்தேன். சினிமாவில் நுழைந்து வெற்றி பெற்றால் வீடு வாங்கிடலாம், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கலாம், என்று நினைத்து சினிமாவுக்கு வரவில்லை. நல்ல சினிமாவிற்காக தான் என்னுடைய கவனம் செல்லும். இதற்காகத்தான் நான் நிறைய சினிமாக்களில் நடிப்பதில்லை. இருந்தாலும் தினமும் இரண்டு சினிமாவை பார்ப்பேன். கதைகளை கேட்பேன். சினிமாவை.. நிலாவை ரசிப்பது போல் இதயத்தில் வைத்து ரசித்துக் கொண்டிருப்பேன். அதனால் எனக்கு சினிமா மீது மிகுந்த மரியாதை இருக்கிறது.
இந்தத் தருணத்தில் தான் இயக்குநர் வெங்கட் ஜனா என்னை சந்தித்து இப்படத்தின் கதையை சொன்னார். முதலில் இதற்கு தயக்கம் தெரிவித்தேன். அதன் பிறகு இந்தக் கதையில் நான் ஏன் நடிக்க வேண்டும்? என கேட்டேன். சினிமாவை நேசித்தால் தான் சினிமாவில் ஜெயிக்க முடியும். சினிமா என்பது ஏனைய தொழிலை போல் அல்ல. இந்தத் தொழிலை சுவாசித்தால் தான் இந்த தொழிலில் இருக்க முடியும். அதனை தொடர்ந்து இன்றைய சினிமா பிசினஸ் குறித்து அவரிடம் விவரித்தேன். அதற்குப் பிறகு அவர் இந்த கதையை திரைக்கதையாக எழுதி என்னிடம் வாசிக்குமாறு சொன்னார். அந்த கதையை படித்ததும் பிடித்துப் போனது. ஏனெனில் அந்த கதையின் வாழ்வியல் என்னை உலுக்கியது.
இந்த படைப்பில் இன்னும் சற்று கூடுதலாக உழைத்திருக்க வேண்டுமோ...! என்ற எண்ணம் இப்போதும் ஏற்படுகிறது. ஏனெனில் கதையின் நாயகனான ரவிச்சந்திரன் கதாபாத்திரம் அவ்வளவு உணர்வுபூர்வமாக எழுதப்பட்டிருந்தது.
இந்தப் படத்தில் கமர்சியல் அம்சங்கள் எதுவும் இல்லை என்றாலும் கதைக்கு தேவையான உண்மைத் தன்மையை திரைக்கதையில் நம்பக தன்மையுடன் இயக்குநர் வழங்கி இருக்கிறார். இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். நன்றாக இருக்கிறது. எங்கும் போரடிக்கவில்லை. ஆனால் இந்த படம் வணிக ரீதியாக வெற்றியைப் பெறுமா..? என்றால்.. என்னால் உறுதி கூற இயலாது. படத்தின் கன்டென்ட் நன்றாக இருந்தால், ரசிகர்களுக்கு பிடித்திருந்தால், இந்தப் படம் வெற்றி பெறும் என நம்புகிறேன்.
விநியோகஸ்தர்களில் பல வகையினர் உள்ளனர். ஒரு டீக்கடை வெற்றி பெற்றால் அதே பெயரில் மற்றொரு இடத்தில் கிளையைத் திறந்து வியாபாரம் செய்வார்கள். அந்த வகையில் இந்தப் படத்தை அஜய் ஃபிலிம் ஃபேக்டரி அஜய் பார்த்து, ரசித்து தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். அவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் நடித்த சக நடிகை மேகாலீ உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.
என்னுடைய 30 ஆண்டுகால திரையுலக பயணத்தில் ஒரு நல்ல படத்தில் நடித்திருக்கிறேன் என்ற திருப்தி இந்த படத்தில் நடித்ததின் மூலம் எனக்கு கிடைத்தது. இதனை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பலரும் படத்தின் தலைப்பு குறித்து தங்களது விமர்சனத்தையும், கவலையையும் தெரிவித்தனர். ஆனால் இந்த படத்தின் கதைக்கு இறுதி முயற்சி தான் பொருத்தமான தலைப்பு. இந்த படம் பார்த்த பிறகு ரசிகர்களுக்கு இது தெரியவரும்.” என்றார்.
இயக்குநர் ஆர். வி. உதயக்குமார் பேசுகையில், ”இறுதி முயற்சி படத்தின் முன்னோட்டம் சிறப்பாக இருந்தது. நண்பர் ரஞ்சித் எமோஷனலாக நடித்திருக்கிறார். நடிகர் ரஞ்சித் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பாக நடித்திருப்பார் என இந்த முன்னோட்டத்தை பார்க்கும்போது தெரிகிறது. இந்த கதையை நன்றாக உள்வாங்கி உணர்ந்து கொண்டு ரஞ்சித் நடித்திருக்கிறார் எனத் தோன்றுகிறது. இந்த விசயத்தில் இயக்குநர் என்ன எதிர்பார்க்கிறாரோ...! அதற்குள்ளாகவே வளைய வந்து நடித்திருக்கிறார். இதனை ஒரு சில நல்ல நடிகர்களால் மட்டுமே நடிக்க முடியும். அந்த வகையில் இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கும் ரஞ்சித்தை பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.
இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் ரஞ்சித்தின் நடிப்பை பார்க்கும் போது.. 'பொன்னுமணி' படத்தில் 15 பக்க உரையாடலை, ஒரே ஷாட்டில் கார்த்திக் சார் சிறப்பாக நடித்தது நினைவுக்கு வருகிறது.
இயக்குநர் வெங்கட் ஜனா தன்னுடைய முதல் படத்திலேயே 'இறுதி முயற்சி' என பெயரிட்டு அவருடைய முதல் முயற்சியை தொடங்கி இருக்கிறார். இந்தப் படத்திற்காக அவர் தேர்வு செய்திருப்பது கதைக்களம் அல்ல உணர்வு களம்... அதாவது ஒரு மனிதன் குடும்பத்தில் உள்ள அனைவருடனும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவருடைய மனநிலை எப்படி இருக்கும்..? என்பது போன்ற ஒரு பெட்டிக்குள் அடங்காதவற்றை இயக்குநர் விவரித்திருக்கிறார். அவரையும் பாராட்டுகிறேன்.
படம் நன்றாக இருக்கிறது. இசையும் நன்றாக இருக்கிறது. அனைத்தும் நன்றாக இருந்தும் என்ன பயன்...? வீட்டு சாப்பாடு நல்ல சாப்பாடு தான். ஆனால் மனம் பீட்சாவையும் ...பர்கரையும்... தானே விரும்புகிறது. இந்தப் படத்தில் பீட்சா இல்லை. ஃபாஸ்ட் ஃபுட்டும் இல்லை. மோனிகா இல்லை. ஆனால் நல்ல சினிமாவை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. அது நிச்சயமாக மக்களை சென்றடையும். நல்ல படைப்புகளை ரசிக்க கூடியவர்கள் தான் தமிழ் ரசிகர்கள். சிறந்த படங்களை கொண்டாடுபவர்கள் தான் தமிழ் ரசிகர்கள். ரசிகர்களை பற்றி நாம் எப்போதும் தப்பு கணக்கு போடக்கூடாது. ஆனால் நமக்கும், ரசிகர்களுக்கும் இடையே சில அரசியல் நடைபெறுகிறது. அந்த அரசியலை தான் திருத்த வேண்டும். நம் கன்டென்ட்டை மக்களிடம் சேர விடாமல் தடுப்பவர்கள் தான் இவர்கள்.
ஒரு படம் வெளியாகிறது. எத்தனை திரையரங்குகளில்... எத்தனை காட்சிகள் ஓடுகிறது.. எவ்வளவு பேர் பார்க்கிறார்கள்... என்பதனை துல்லியமாக கணக்கு கொடுக்கும் விநியோகஸ்தர் தான் நல்ல சினிமாவை நேசிக்க கூடிய நபர். இந்த வகையில் இந்த படத்தை வாங்கி வெளியிடும் விநியோகஸ்தர் அஜயை பாராட்டுகிறேன்.
தயாரிப்பாளர்களாக அறிமுகமாகபவர்களிடம் நான் திரைப்படத்திற்கான உங்களுடைய முதலீடு திரும்ப வராது என்றாலும் உங்களுடைய குடும்பத்தை காப்பாற்ற முயலும் என்றால் மட்டுமே அதாவது உங்களுடைய வருமான ம் எக்ஸ்ட்ராவாக இருந்தால் மட்டுமே படம் எடுக்க வாருங்கள். அதில் முதல் காப்பி- முதல் பிரதி எடுத்து விட்டால்.. அந்த முதல் பிரதி தான் உங்களது சொத்து.. அது எந்த அளவிற்கு வெற்றி என்பதை தரப்போகிறதோ...! அந்த அளவிற்குத் தான் அதிலிருந்து நமக்கு வருமானம் கிடைக்கும். ஆனால் இன்றுள்ள சூழலில் வெற்றியே வந்தாலும் அதிலிருந்து வருவாய் கிடைப்பதில்லை. கணக்கினை தப்புத் தப்பாக வழங்குவார்கள். இவர்களும் சினிமாவிற்கு எதிரிகள் தான்.
ரஜினிகாந்த் - கமல்ஹாசன்- இளையராஜா - இந்த மூவரையும் இனி யாரும் எந்த கோணத்திலும் விமர்சிப்பதை தவிர்த்து விடுங்கள். இவர்களெல்லாம் ஏராளமான சாதனை படைத்த சாதனையாளர்கள். தமிழ் மக்களுக்காக நிறைய உழைத்தவர்கள். அவர்களை மகிழ்வித்தவர்கள்.” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசுகையில், ”இப்படத்தின் தலைப்பு 'இறுதி முயற்சி' என்பதற்காக சிலர் விமர்சித்தனர். அந்த செண்டிமெண்ட்க்கும், படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த சென்டிமென்ட்டை ஏராளமான திரைப்படங்கள் முறியடித்திருக்கிறது. இயக்குநர் கே. பாக்யராஜின் ஆரம்ப காலகட்ட சினிமாக்கள் எல்லாம் நெகட்டிவ் தான். 'ஒரு கை ஓசை', 'தூறல் நின்னு போச்சு', 'சுவர் இல்லாத சித்திரங்கள்' என எல்லாமே நெகட்டிவ் தான். சமீபத்தில் 'பிச்சைக்காரன்' என்ற படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. படத்திற்கு 'கோடீஸ்வரன்' என பெயர் வைத்தார்கள். ஆனால் படம் வெளியாகவில்லை. 'கடைசி விவசாயி' என படமெடுத்தார்கள். அதற்கு தேசிய விருது கிடைத்தது. அதனால் படத்தின் தலைப்புக்கும், நெகட்டிவ் சென்டிமென்ட் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால் இந்தப் படத்தின் தலைப்பில் இறுதி முயற்சி என இருப்பதில்.. இறுதி யை பார்க்காமல், முயற்சியை மட்டுமே பார்க்க வேண்டும். முயற்சிக்காமல் இருப்பது தான் தவறு. முயற்சிப்பது தான் சரி. அந்த வகையில் இறுதி முயற்சி என்பது நம்பிக்கை. அது ஒரு தொடக்கம்.
நல்ல நோக்கத்துடன் நல்ல விசயத்துடன் நல்ல எண்ணத்துடன் சமூகத்திற்கு நல்ல செய்தியை சொல்ல வேண்டும் என்ற முனைப்புடன் முயற்சி செய்த இயக்குநருக்கு நிச்சயமாக வெற்றி கிட்டும். அவரின் இந்த முயற்சி திருவினை ஆக்கும்.
ஒரு நடிகர் வசனம் பேசி நடிப்பது நடிப்பல்ல. ஆனால் வசனங்களே இல்லாமல் உணர்வுகளை வெளிப்படுத்துபவர் தான் சிறந்த நடிகர். அந்த வகையில் இந்த படத்தின் நடிகர் ரஞ்சித் சிறந்த நடிகராக நடித்திருக்கிறார். முன்னோட்டத்தில் அவருடைய இறுக்கமான நடிப்பை பார்க்கும் போது ஏதோ அழுத்தமான விசயம் இருக்கிறது என தெரிகிறது. அதிலும் கணவன்- மனைவி இடையேயான எதிர்பார்ப்புடன் கூடிய அன்பு பகிர்தல் தொடர்பான காட்சி... நெகிழ்ச்சியை உண்டாக்கியது.
'தற்கொலை பண்ணிக்கிட்டான்' என சொல்வது தவறு. ஏனெனில் நாம் தற்கொலை செய்து கொள்வதில்லை. தற்கொலைக்கு தூண்டப்படுகிறோம். அதனால் தற்கொலைக்கு தூண்டப்பட்டிருக்கிறான் என்றுதான் குறிப்பிட வேண்டும். இது தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வை உண்டாக்கும் படம்.
பொதுவாக பொருளாதார பற்றாக்குறைக்காக தற்கொலை செய்து கொள்வார்கள் அல்லது பைத்தியக்காரத்தனமான காதலுக்காக தற்கொலை செய்து கொள்வார்கள். எப்படி பார்த்தாலும் தற்கொலை என்பது மிக தவறான விசயம் . இதை வலியுறுத்தும் இந்த திரைப்படம் மக்களுக்கான படம்.
இந்த சமூகத்தில் 60 சதவீத மக்கள் சந்தோஷம் இல்லாமல் தான் இருக்கிறார்கள். அடுத்தவர்களுடன் ஒப்பீடு செய்து இவர்கள் வாழ்கிறார்கள். இவர்கள்தான் இந்தப் படத்தை அவசியம் பார்க்க வேண்டும். உண்மை சம்பவத்தை தழுவி இந்த திரைப்படத்தை உருவாக்கி இருப்பதால் இப்படம் நிச்சயம் வெற்றி பெறும். இப்படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றியும், வாழ்த்தும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
அருவர் பிரைவேட் லிமிடெட் சார்பில் சி...
மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’...
தமிழ் ஈழத்தில் நடந்த இறுதி யுத்தமும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற மிகப்பெரிய இனப்படுகொலைப் பற்றியும் செய்திகள் வெளியான வேகத்தில் மறைந்து போனது...