Latest News :

’வீர தமிழச்சி’ பெண்களுக்கான ஒரு விழிப்புணர்வு படம் - இயக்குநர் சுரேஷ் பாரதி
Thursday October-02 2025

அறிமுக இயக்குநர் சுரேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வீர தமிழச்சி’ திரைப்படத்தில் சஞ்சீவ் வெங்கட், இளயா, சுஷ்மிதா சுரேஷ், ஸ்வேதா டோரத்தி, மறைந்த நடிகர் மாரிமுத்து, எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி, கே. ராஜன், மீசை ராஜேந்திரன், ஜெயம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சங்கரலிங்கம் செல்வகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜூபின் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை மகிழினி கலைக்கூடம் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சாரதா மணிவண்ணன் மற்றும் மகிழினி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

 

இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், படக் குழுவினருடன் இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார், பேரரசு, ராஜகுமாரன், விஜய் ஸ்ரீ, தயாரிப்பாளர் அன்புச்செல்வன்  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் மணிவண்ணன் பேசுகையில், ''தமிழ் பெண்களின் வீரத்தை போற்றும் வகையில் 'வீர தமிழச்சி' உருவாக்கப்பட்டிருக்கிறது.  இந்த திரைப்படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிட உள்ளோம். இந்த 'வீர தமிழச்சி'யை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ரசித்து, வெற்றி தமிழச்சியாக மாற்றி தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.

 

இயக்குநர் ஆர். வி. உதயகுமார் பேசுகையில், ”தயாரிப்பாளர்கள் நல்லதொரு இயக்குநருக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். கட்டிட தொழிலாளியான இயக்குநரின் கனவை நனவாக்கிய தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குநர் கட்டிட தொழிலாளி என்பதால் எந்த கல்லை எங்கு வைக்க வேண்டும், எந்தக் கலவையை எங்கு பூச வேண்டும், ஜன்னலை எங்கு வைக்க வேண்டும், வாசக்காலை எங்கு வைக்க வேண்டும், பெட்ரூம் எப்படி இருக்க வேண்டும், கிச்சன் எப்படி இருக்க வேண்டும், எந்த அகலம்- எந்த நீளம் இருக்க வேண்டும்,  என்பதை பார்த்து பார்த்து தெரிந்து கொண்டு படைப்பை உருவாக்கி இருக்கிறார் என முன்னோட்டத்தையும், பாடல்களையும் பார்க்கும்போது தெரிகிறது. ஒவ்வொரு இயக்குநரையும் கட்டிட கலைஞருடன் தான் ஒப்பிடுவார்கள். இவர்கள்தான் கதையை எங்கு, எப்படி ஆரம்பிப்பது, எப்படி எடுத்து செல்வது, அந்த கதையில் கதாநாயகனின் பிம்பம் என்ன, கதாநாயகியின் வேலை என்ன,  நாம் சொல்லக்கூடிய சாராம்சம் என்ன, இந்த கதையின் முடிச்சு என்ன என ஏராளமான இன்ஜினியரிங் வேலைகளை பார்க்க வேண்டியது ஒரு இயக்குநரின் பொறுப்பு. நானும் ஒரு காலத்தில் மிகச்சிறந்த கட்டிட கலைஞராக இருந்தவன் தான். அதனால் இந்தப் படம் நன்றாக இருக்கும் என மனதார வாழ்த்துகிறேன்.

 

தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களைத் தழுவி இப்படத்தை இயக்குநர் உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்தில் பாடல்கள் அழகாகவும், நன்றாகவும் இருக்கின்றன. படத்தில் இடம்பெற்ற 'தீம் சாங்'கும் நன்றாக இருக்கிறது.

ஹீரோயின் ஓரியண்டட் ஸ்கிரிப்டான இந்த திரைப்படத்தில் சஞ்சீவ் - இளயா போன்றவர்கள் நடித்திருப்பதை பாராட்ட வேண்டும்.

 

இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்த பிறகு எனக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. இந்த திரைப்படத்திற்கு நிறைய திரையரங்குகள் கிடைக்க வேண்டும். இன்றைய சூழலில் சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பது கடினமாக இருக்கிறது. இருந்தாலும் இந்த திரைப்படத்தை 40 அல்லது 50 திரையரங்குகளில் தினசரி மூன்று கட்சியாகவோ நான்கு காட்சியாகவோ திரையிடுமாறு திரையரங்க உரிமையாளர்களிடமும், விநியோகஸ்தர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஒரு தியேட்டரில் மூன்று காட்சிகளாக ஒரு படம் வெளியானால் தான் 'மௌத் டாக்' மூலம் படத்திற்கான விளம்பரம் சில நாட்களில் கிடைக்கும்.‌ அப்போதுதான் இது போன்ற நல்ல படங்கள் மக்களை சென்றடையும்.

 

இந்தத் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும், நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் வெற்றி மூலம் இந்தக் குழுவினருக்கு மேலும் பல வாய்ப்புகள் கிடைக்கட்டும் என்றும் வாழ்த்துகிறேன்.” என்றார்.

 

சிறு பட தயாரிப்பாளர் சங்க தலைவர் அன்புசெல்வன் பேசுகையில், “வீர தமிழச்சி என்றால் தமிழக பெண்கள்தான் என உலகத்திற்கே தெரியும். இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து மூன்று மாதங்களுக்கு முன்னரே வெளியாக  இருந்தது. தயாரிப்பாளர் கடினமாக உழைத்து இப்படத்தினை வெளியிட முயற்சி செய்து வருகிறார்.  இந்த தயாரிப்பாளரின் கடின உழைப்பிற்காகவும், நல்ல மனதிற்காகவும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும்.

 

படம் வெளியாகும் நாளான வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் படத்தைப் பற்றிய விமர்சனங்களை வெளியிடாதீர்கள் என ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன்.‌ சிறுபட தயாரிப்பாளர்களை காப்பாற்றுங்கள்.” என்றார்.

 

இயக்குநர் ஷரவண சுப்பையா பேசுகையில், ”வீரம் என படம் வந்திருக்கிறது. 'தமிழ்' என படம் வந்திருக்கிறது. 'தமிழன்' என படம் வந்திருக்கிறது. 'தமிழச்சி' என்றொரு படம் வந்திருக்கிறது. இது 'வீர தமிழச்சி' பெயரை கேட்டாலே நல்ல அதிர்வு இருக்கிறது. தமிழ் மொழி என்பது உலகத்தில் எங்கும் இல்லாத ஒரு யுனிக்கான வார்த்தை. அதற்கான இலக்கணம் இருக்கிறதே.. 'த' உயிரெழுத்து 'மி ' என்பது மெய்யெழுத்து என தமிழுக்குள் ஒரு மிகப்பெரிய ரகசியமே இருக்கிறது. இப்படி தமிழிலிருந்து வரும் மரபணு இருக்கிறதே, அதன் ரத்தத்தில் வீரம் இயல்பாகவே இருக்கும், உணர்வும் இருக்கும். இதனை நாம் இதிகாசங்களில் பார்த்திருக்கிறோம், படித்திருக்கிறோம். இந்தப் படத்தில் அதனை நாம் காணவிருக்கிறோம். ஒரு பெண் தன்னுடைய பழி தீர்க்கும் உணர்வை வன்முறையால் தீர்த்துக் கொள்கிறாள் என்பது போன்ற ஒரு கன்டென்ட்டில் இந்த படம் இருக்கும் என நம்புகிறேன்.  அத்துடன் இந்த திரைப்படத்தின் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சில சட்ட திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாகவும் பேசி இருக்கிறார்கள். எனவே இந்தப் படம் வெற்றி பெற வேண்டும்.

 

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'புதுமைப்பெண்' திரைப்படம், இந்த சமூகத்தில் பெண்களுக்கான புரட்சியை உண்டாக்கிய படம் என குறிப்பிடலாம். அந்த காலகட்டத்தில் அந்த படம் பேசப்பட்டது. இந்த காலத்தில் 'வீர தமிழச்சி' படம் உருவாகி இருக்கிறது. கமர்ஷியலாக இல்லாமல் இது போன்ற கன்டென்ட் உள்ள படத்தினை தயாரித்ததற்காக தயாரிப்பாளரை பாராட்டுகிறேன்.

 

'சட்டம் ஒரு திறந்த புத்தகம். அதனால் அந்த சட்டத்தை பற்றி தெரியாதது குற்றம். அத்தகைய சட்டத்தை தெரிந்து கொள்வதற்கான முயற்சியை மேற்கொள்ளாமல் இருப்பதும் குற்றம்' என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் உச்சகட்ட காட்சியில் ஒரு கதாபாத்திரம் சட்ட மேதை அம்பேத்கரிடம் பேசுவது போல் அமைக்கப்பட்டு இருக்கிறது. அவரே ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளலாம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்தப் படம் தெரிவிக்கும் கருத்து மதிப்பு மிக்கதாக இருக்கிறது. இந்த படத்திற்கு இசை, பாடல்கள் நன்றாக உள்ளன. இந்தப் படத்திற்கு ஆக்ஷன் காட்சிகள் அதாவது கதாநாயகிக்கு ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்திருக்கும் விதமும் பாராட்டத்தக்கதாக இருக்கிறது.” என்றார்.

 

இயக்குநர் ராஜகுமாரன் பேசுகையில், ”பெண்களுக்கு அடிக்க வேண்டும் என்பதற்காக பயிற்சி கொடுக்க வேண்டியதில்லை. அவர்கள் அடித்தால் நம்மால் தாங்க முடியாது என்பதுதான் உண்மை. அவர்கள் நம்மை அடிக்காமல் இருக்கிறார்களே என்பது வரை தான் நமக்கு அது பெருமை. அவர்கள் மிக பயங்கரமான மன உறுதியும், உடல் வலிமையும் மிக்கவர்கள். நம்மை அவர்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் நமக்கு வலிமை குறைவு தான்.

 

தங்களை மலை போல் காண்பிப்பதில் ஆண்களுக்கு ஒரு கற்பனை உள்ளது. தங்களை மலர் போல் காண்பிப்பதில் பெண்களுக்கு ஒரு கற்பனை உள்ளது. ஆனால் நாம் காண்பது மவரல்ல, அவர்களிடம் இருப்பது தான் மலை. நான் இதனை என்னுடைய அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். நிறைய பெண்களிடம் அடி வாங்கி இருக்கிறேன் என்னுடைய அம்மாவை போன்ற கம்பீரமான - மலை போன்ற உறுதியான பெண்மணியை நான் இதுவரை சந்தித்ததே இல்லை. அவர்களை நான் எல்லா சூழ்நிலைகளிலும் பார்த்திருக்கிறேன்.

 

அதேபோல் தேவயானியை, பார்ப்பதற்கு நீங்கள் எல்லாம் புஷ்பம் போல் இருக்கும் அந்த  பெண் அவ்வளவு உறுதியான, வலிமையான, ஒரே அடியில் ஒரு டன் அல்ல இரண்டு மூன்று டன் வெயிட் உடன் அடிக்கக்கூடிய ஒரு பயங்கரமான பெண்மணி. இதையும் நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் உண்மையிலேயே வலிமையானவர்கள். ஆண்களுக்காக, குழந்தைகளுக்காக மென்மையாக நம்மிடம் நடந்து கொள்கிறார்கள். அதனால் இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும் போது நடிகை சுஷ்மிதா சுரேஷிற்கு பயிற்சி அளிக்கவில்லை என்றாலும்... அவர் ஆக்ஷன் காட்சிகளில் பயங்கரமாக தான் நடித்திருப்பார். அவர்களை நான் வாழ்த்துகிறேன். இந்த ஆக்ஷன் ஜானரில் நடிக்கக்கூடிய நடிகைகளே இல்லை‌, நீங்கள் அந்த இடத்திற்கு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

 

சிறுசிறு குறும்படங்களை இயக்கி தன்னை செதுக்கி கொண்ட பின் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் பாரதி. அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.” என்றார்.

 

நடிகை சுஷ்மிதா சுரேஷ் பேசுகையில், ”வீர தமிழச்சியாக என்னை தேர்வு செய்து நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் மனமார்ந்த நன்றி.

 

இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளில் நடிக்கும் போது ஸ்டண்ட் மாஸ்டர் என்னுடைய பாதுகாப்பையும், என்னுடைய சௌகரியத்தையும் மனதில் வைத்து பணியாற்றினார். குறிப்பாக நான் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கும் காட்சியில் நடிக்கும் போது நான் பயந்தேனோ, இல்லையோ அவர் பயந்து கொண்டே இருந்தார். என் மீது அக்கறை செலுத்தி பாதுகாத்த ஸ்டண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வாவிற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

திரைப்படங்களில் ஆக்ஷன் காட்சிகளை பார்த்திருக்கிறோம். ஆனால் அதில் நடிக்கும் போது தான் கஷ்டம் தெரிகிறது. இந்த படத்தின் சண்டைக் காட்சிகளில் நடித்த போது உடலில் வலி உண்டானது, இருந்தாலும் பொறுத்துக் கொண்டு படக் குழுவினருக்கு ஒத்துழைப்பு வழங்கினேன்.

 

படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் ஒரு குடும்பமாக பழகினார்கள். அற்புதமான அனுபவமாக இருந்தது. இந்தப்படம் பெண்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் படமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். இந்த சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்- அதனை எப்படி வெளிக் கொண்டு வரலாம் என்பதை கற்றுத் தரும் படமாக இது இருக்கும்.

 

ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரியான எனக்கு ஏன் நடிப்பு என பலர் கேள்வி கேட்டனர். ஆனால் என்னுடைய விருப்பம் நடிப்பாக இருந்ததால் ஆடிஷனுக்கு பொறுமையுடன் என்னுடைய பெற்றோர்கள் வருகை தந்து ஆதரவை வழங்கினார்கள்.  நிறைய பெண்களுக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவு இருக்கிறது. இதனை பெற்றோர்கள் உணர்ந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

 

இசையமைப்பாளர் ஜுபின் பேசுகையில், ”’திரௌபதி’, ’ருத்ர தாண்டவம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தில் பணியாற்றி இருக்கிறேன்.

 

இந்த திரைப்படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன. ஒரு பாடலை கலைமாமணி விவேகா எழுத, மற்றொரு பாடலை அறிமுக பாடலாசிரியர் செந்தில் ராஜா எழுதியிருக்கிறார். இந்த பாடலை எழுதிய பின் தான் மெட்டமைத்தோம். மூன்றாவதாக வீர தமிழச்சி என்ற பெயரில் ஒரு டைட்டில் சாங் இருக்கிறது.

 

பாதிக்கப்பட்ட ஒரு பெண் எப்படி போராடுகிறார் என்பதுதான் இதன் கதை.‌ இந்தப் படத்தில் நாயகி சுஷ்மிதா சுரேஷ் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி இருக்கிறார். அந்தக் கால விஜயசாந்தியை திரையில் பார்ப்பது போல் இருக்கிறது. இந்தப் படம் வெளியான பிறகு அவர்களுக்கு மிகப்பெரிய இடம் காத்திருக்கிறது, வாழ்த்துகள்.

 

இந்த படத்திற்காக எனக்கு என்ன சம்பளம் பேசப்பட்டதோ, அதனை முழுமையாக தயாரிப்பாளர் கொடுத்துவிட்டார். திரையுலகில் இவ்வளவு அன்பான பண்பான தயாரிப்பாளரை பார்க்க முடியாது. இவரிடம் நாம் சம்பளம் கொடுக்கிறோம் என்ற அதிகாரம் எப்போதும் இருக்காது, இவர்கள் தொடர்ந்து படத்தை தயாரிக்க வேண்டும்.” என்றார்.

 

இயக்குநர் சுரேஷ் பாரதி பேசுகையில், ”அடிமட்ட கட்டிட தொழிலாளியாக 35 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்த நான் இன்று இயக்குநராக உயர்ந்திருக்கிறேன் என்றால், இதற்கு முதல் காரணம் என்னுடைய மனைவி மற்றும் மகன்கள் தான். இந்த படத்திற்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக உழைத்து வருகிறேன். இந்த ஐந்து வருடங்களிலும் என்னையும், என் குடும்பத்தையும் வழிநடத்திச் செல்வது என் மனைவி தான்.

 

2016 ஆம் ஆண்டில் என்னுடைய  'கொஞ்சம் கொஞ்சமாக..' எனும் முதல் குறும்படத்திற்கு, சிதம்பரம் காட்மாடி பகுதியை சேர்ந்த என் குருநாதர் பழனிச்சாமி தான் ஒரு லட்ச ரூபாயை வழங்கினார். இந்த குறும்படம் சிறந்த விழிப்புணர்வுக்கான குறும்படம் என தேர்வு செய்யப்பட்டு,  தமிழக முதல்வரிடம் விருதினை பெற்றேன். என்னுடைய இரண்டாவது குறும்படமான 'தாய்'. இணையத்தில் வெளியாகி இதுவரை 46 மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டிருக்கிறது. இதுவரை நான் 18 குறும்படங்களை இயக்கியிருக்கிறேன், 36 விருதுகளை வென்றிருக்கிறேன். நான் இயக்கினால் அது நிச்சயம் வெற்றி பெறும், வெற்றி பெறும் படைப்பை தான் இயக்குவேன் எனும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

 

அதற்குப் பிறகு ஒரு கதையை சினிமாவுக்காக தயார் செய்துவிட்டு ஏராளமான தயாரிப்பாளர்களை அணுகி கதையை சொன்னேன். மகிழினி கலைக்கூடத்தில் கதையை சொன்னேன்.‌ அவர்களால் படத்தை தயாரிக்கும் அளவிற்கு பொருளாதாரமில்லை, அதனால் இந்த திரைப்படத்தை கிரவுட் ஃபண்டிங் முறையில் உருவாக்கத் தொடங்கினோம். ஒரு வார காலம் படப்பிடிப்பு நடைபெற்றது. படம் நன்றாக வந்திருக்கிறது என்பதை அறிந்து தயாரிப்பாளர் நித்தியானந்தம் எங்களுடன் இணைந்தார்.‌ அதன் பிறகு முழு படத்தையும் நானே தயாரிக்கிறேன் என்று அவர் சொன்னார். என்னை தொடர்ச்சியாக ஊக்குவித்து என்னுடைய இயக்குநர் கனவை நனவாக்கியவர் தயாரிப்பாளர் நித்தியானந்தம். அவருக்கு இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நான் இந்தப் படத்தை தொடங்கும் போது 60 லட்சம் ரூபாய் தான் பட்ஜெட் என்றேன். ஆனால் தற்போது மூன்றரை கோடி ரூபாயில் படம் நிறைவடைந்து இருக்கிறது.

 

இந்த திரைப்படம் பெண்களுக்கான ஒரு விழிப்புணர்வு படம். பெண்கள் எங்கு எப்போது பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள், அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வர வேண்டும், இதற்கு என்ன தீர்வு என அனைத்து விஷயங்களும் இந்த படத்தில் உள்ளன. படத்தின் கிளைமாக்ஸ் வித்தியாசமாக இருக்கும் என்று நம்புகிறேன் இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும்.

 

இந்தப் படத்தின் மூலம் நான் என்ன சொல்ல விரும்பினோனோ அது ஆறு மாதத்திற்கு முன்னதாக தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் சட்ட திருத்தமாக கொண்டு வந்திருக்கிறார். நான் இது தொடர்பாக படம் எடுத்தது மூன்று ஆண்டுகளுக்கு முன். நான் மக்களுக்கு எதனை தீர்வாக சொல்ல நினைத்தேனோ அதை சட்ட திருத்தமாக கொண்டுவரப்பட்டிருப்பது எங்களுக்கு பெருமை. இந்த படம் ஆறு மாதம் மாதங்களுக்கு முன்னர் வந்திருந்தால் எங்கள் கதை தான் ஹீரோ. இந்தப் படத்தில் இடம் பிடித்திருக்கும் சம்பவங்கள் அனைத்தும் உண்மை. இதற்கு என்னிடம் ஆதாரமும் இருக்கிறது.

 

நான் கேப்டன் விஜயகாந்தின் தீவிர ரசிகன். கேப்டன் விஜயகாந்தின் மறைவு செய்தியை கேட்டு மூன்று நாட்கள் உறக்கமில்லாமல் சாப்பிடாமல் அழுது கொண்டே இருந்தேன். கேப்டன் விஜயகாந்தின் திரைப்படங்களை பார்த்து தான் நான் சினிமாவை கற்றுக் கொண்டேன். விஜயகாந்தை வைத்து நான் என்ன திரைப்படத்தை இயக்க வேண்டும்cஎன நினைத்தேனோ, அவர் இல்லாததால் ஒரு புது ஹீரோயினை வைத்து இயக்கியிருக்கிறேன். அந்த வகையில் ஒரு பெண் விஜயகாந்தை அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.

 

ஆர்.வி. உதயகுமார், பேரரசு போன்றவர்களை பார்த்து ஆக்ஷன் திரைப்படங்களை இயக்க வேண்டும் என ஆசை.

 

தமிழ் மொழியில் இல்லாமல் வேறு மொழியில் 50க்கும் மேற்பட்ட ஆக்ஷன் திரைப்படங்களை பார்த்தேன். ஒரு ஹீரோயின் ஆக்ஷன் செய்தால் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக ஏராளமான ரெஃபரன்ஸ்களை பார்த்த பிறகு தான் படத்தின் நாயகியான சுஷ்மிதா சுரேஷுக்கு ஆக்ஷன் காட்சிகளை நானும் ஸ்டாண்ட் மாஸ்டர் மிரட்டல் செல்வாவும் விவாதித்து வைத்தோம்.

 

ஒரு தமிழ் பெண்ணை தலைகீழாக கட்டி வைத்து தொங்கவிட்டு அவருடைய நெஞ்சில் கால் வைத்து எட்டி உதைக்கும் காட்சியை வைத்திருக்க மாட்டார்கள், இத்தகைய காட்சி தமிழ் சினிமாவில் முதன் முதலாக இந்தப் படத்தில் தான் இருக்கும் என நினைக்கிறேன். இதற்கு முன் எந்த தமிழ் படத்திலும் பார்த்ததாக நினைவில் இல்லை.  இந்தக் காட்சியில் நடிப்பதற்கு நடிகை சுஷ்மிதா முழு ஒத்துழைப்பை வழங்கினார்.

 

நான் இதுவரை எந்த படப்பிடிப்பையும் வேடிக்கை கூட பார்த்ததில்லை. ஆனால் ஒரு படத்தை இயக்கியிருக்கிறேன் என்றால் அதற்கு என்னுள் ஐக்கியமாகி இருக்கும் விஜயகாந்த் தான் காரணம்.  இன்று கூட இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு முன்னதாக கேப்டன் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு தான் இங்கு வந்திருக்கிறேன். அதனால் அவருடைய ஆசி இந்த படத்திற்கு பரிபூரணமாக இருக்கும்.

 

மனிதராக பிறந்திருக்கும் ஒவ்வொருக்கும் திறமை இருக்கிறது. அதனை வெளிக்கொணர வேண்டும். எவரையும் பார்த்து அஞ்ச கூடாது. எவரையும் பார்த்து பிரமிக்க கூடாது. உனக்கு திறமை இருந்தால் வெற்றி பெறலாம். இதற்கு முன்னுதாரணமாக நான் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் நான் இயக்குநராகி இருக்கிறேன். ‌

 

எங்கள் ஊரில் சாதாரண கட்டிட தொழிலாளியான எனக்கு இன்று கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் 25 கட் அவுட்கள் வைத்திருக்கிறார்கள்.” என்றார்.

 

இயக்குநர் பேரரசு பேசுகையில், ”குடும்பத்தில் நடைபெறும் உண்மைகளை யார் ஒப்புக் கொள்கிறார்களோ, அவர்கள் தான் வீரத்தமிழர். அந்த வகையில் எங்கள் இயக்குநர் ராஜகுமாரன் தான் சிறந்த வீரத்தமிழர். அவருடைய பேச்சில் உண்மை படார் படார் என வெளிப்பட்டது.  நாம் இதுவரை தேவயானி மேடத்தை சாப்ட் ஆக தான் பார்த்திருக்கிறோம். ஆனால் வீட்டில் அவர் ஆக்ஷன் ஹீரோயின் என்பது இப்போதுதான் தெரியும்.

 

கட்டிட தொழிலாளியாக இருந்து இயக்குநராக உயர்ந்தவரை வாழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறேன்.

 

முயற்சிக்கும், விடாமுயற்சிக்கும் என்ன வித்தியாசம், என்றால், முயற்சியை நாம் செய்து கொண்டே இருப்போம். ஒரு கட்டத்தில் முயற்சி நம்மை விடாது. அதுதான் விடா முயற்சி.

 

வீட்டை நன்றாக கட்ட வேண்டும் என்றால் நல்லதொரு கொத்தனார் வேண்டும். குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் இரண்டு நார் வேண்டும் ஒன்று நாத்தனார். மற்றொன்று கொழுந்தனார். இயக்குநர் நல்லதொரு கொத்தனார். படத்தில் பாட்டு எங்கு வைக்க வேண்டும்? பைட்டு எங்கு வைக்க வேண்டும்? என தெரிந்து வைத்திருக்கிறார்.

 

வீர தமிழச்சி யார் என்றால்.. புருஷன் கஷ்டப்படும் போது பக்க பலமாக இருந்து, அவருடைய திறமையை வெளிப்படுத்துபவர் தான் வீர தமிழச்சி. அப்படிப் பார்த்தால் இயக்குநருடைய மனைவி தான் வீர தமிழச்சி.

 

சில தலைப்புகளை கேள்விப்படும் போது தான் எப்படி இந்த தலைப்பை இதுவரை தவற விட்டார்கள் என்று தோன்றும். அந்த வகையில் இந்த வீர தமிழச்சி டைட்டில் நன்றாக இருக்கிறது. தமிழகத்தில் தான் வேலு நாச்சியார் போன்ற ஏராளமான வீர தமிழச்சிகள் இருந்திருக்கிறார்கள். இந்த காலகட்டத்திற்கு ஏற்ற படம்தான் வீர தமிழச்சி.

 

வீர தமிழச்சி என்பது அடிப்பதோ உதைப்பதோ.அல்ல. செருப்பால் அடிப்பதோ கைகளால் அடிப்பதோ அல்ல. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மிருகம் தன்னை சிதைத்ததை இந்த சமூகத்தில் துணிச்சலுடன் புகாராக அளித்த பெண் தான் வீர தமிழச்சி. கராத்தே கற்பது, துப்பாக்கி சுடுவது, சிலம்பம் சுற்றுவது, இதெல்லாம் வீரமல்ல. வீரம் என்பது உடலில் அல்ல, மனதில் இருக்க வேண்டும். இந்த படத்தில் இதைத்தான் நான் பார்த்தேன். ஒரு பெண் அநியாயத்திற்கு எதிராக வெகுண்டு எழ வேண்டும், அதை சொல்வது தான் இந்த வீர தமிழச்சி.” என்றார்.

Related News

10687

Mahesh Babu Stars in Denver’s New Brand Film Showcasing the Autograph MB Collection
Tuesday September-30 2025

Denver, India’s prestigious men’s fragrance brand, in collaboration with superstar Mahesh Babu, has launched a brand film to promote the Autograph MB Collection, a luxury Eau de Parfums range —that captures Mahesh Babu’s unique style and spirit, embodying the sophistication of one of the most revered stars...

கவனம் ஈர்க்கும் பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ டிரைலர்!
Tuesday September-30 2025

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள பான் இந்தியா திரைப்படமான ‘தி ராஜா சாப்’ டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது...

அந்தப் படம் பார்த்தது என் வாழ்க்கையை மாற்றியது! - ஜாரெட் லெட்டோ
Tuesday September-30 2025

'டிரான்: ஏரஸ்' படத்தில் ஜாரெட் லெட்டோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்...

Recent Gallery