Latest News :

”இந்த மூன்றை நம்பித்தான் படம் எடுக்க வருகிறார்கள்” - இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வேதனை
Thursday October-09 2025

அன்னை வேளாங்கண்ணி ஸ்டுடியோஸ் சார்பில் TS.கிளமென்ட் சுரேஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் த.ஜெயவேல் இயக்கத்தில், சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் ஹீரோவாக நடிக்க, பள்ளி மாணவர்களின் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘ராம் அப்துல்லா ஆண்டனி’. 

 

ஆண்டனி கதாபாத்திரத்தில் பூவையார், அப்துல்லா கதாபாத்திரத்தில் அர்ஜுன் மற்றும் ராம் கதாபாத்திரத்தில் அஜய் அர்னால்டு ஆகியோர் நடித்துள்ளனர். மேலும்,  வேலராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சாய் தீனா, சௌந்தர்ர்ராஜா,  கிச்சா ரவி, சாம்ஸ், வினோதினி வைத்தியநாதன், பிக் பாஸ் அர்ணவ் மற்றும் ராஜ் மோகன் ஆகியோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். சிறப்புத் தோற்றத்தில் வனிதா விஜய்குமார் நடிக்கிறார்..

 

டி.ஆர்.கிருஷ்ண சேட்டன் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். எல்.கே.விஜய் ஒளிப்பதிவு செய்ய, வினோத் சிவகுமார் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். 

 

வரும் அக்டோபர் 31ஆம் தேதி இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர்கள் எஸ்.ஏ சந்திரசேகரன், அகத்தியன், பேரரசு, பொன்ராம், எஸ்,ஆர் பிரபாகரன், தயாரிப்பாளர் மதியழகன், நடிகர் உதயா, கூல் சுரேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகரன் இந்த படத்தின் இசைத்தட்டை வெளியிட்டார்.

 

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கிளமென்ட் சுரேஷ் பேசுகையில், “எனக்கு சினிமாவில் இதுதான் முதல் தயாரிப்பு. வேறு தொழில்கள் எனக்கு இருந்தாலும் இந்த தொழிலில் தான் சினிமாவை நம்பி இத்தனை பேர் வாழ்கிறார்களா என்கிற ஆச்சரியம் ஏற்பட்டது. நடிகர்கள் என்றாலே ஏசியில் சொகுசாக இருப்பவர்கள் என நினைத்திருந்தபோது, நேரில் பார்க்கும் போது தான் மழையிலும் வெயிலிலும் அவர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிந்தது. நடிகர் சௌந்தர்ராஜா இந்த படத்திற்காக ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை கடும் உழைப்பை கொடுத்து எங்களுடன் கூடவே பயணித்துக் கொண்டு வருகிறார். குடும்பத்தோடு பார்க்கும் விதமாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். இந்தப்படம் வெற்றி பெற்றால் அந்த பணத்தை மீண்டும் பட தயாரிப்பிலேயே தான் செலவு செய்வேன். புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன்” என்றார்.

 

இயக்குநர் அகத்தியன் பேசுகையில், “ஒரு ஜெனரேஷன் கேப் இருப்பதாலேயே பல திரைப்பட விழாக்களுக்கு நான் அழைக்கப்படுவது இல்லை. ஆனால் இங்கே வந்து புதியவர்களை சந்திக்கும் போது ஒரு மகிழ்ச்சி இருக்கிறது. சிறுவயதில் அமர் அக்பர் ஆண்டனி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதன்பிறகு இப்போது தான் இப்படி மூன்று மதத்தையும் ஒன்றிணைத்து ஒரு தலைப்பு வைத்திருப்பதை பார்க்கிறேன். நிறைய படங்கள் சமூக படங்களாக புதிய கதைகளைக் கொண்டு வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த படமும் சேரும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. தயாரிப்பாளர் சொன்னது போல இந்த படம் வெற்றி பெறும். இன்னும் புதியவர்களை அவர் அறிமுகப்படுத்தும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

 

இயக்குநர் பொன்ராம் பேசுகையில், “இந்த படத்தில் மூன்று சிறுவர்களுமே நன்றாக நடித்திருக்கிறார்கள். அதிலும் பூவையார் ஏற்கனவே மாஸ்டர் படத்தில் நன்றாக பண்ணியிருந்தார்.. இந்த படத்தில் கலக்கி இருக்கிறார். அவருடைய ஸ்டைல் சூப்பராக இருக்கிறது. மூன்று மதங்களை ஒன்றிணைக்கும் விதமாக இந்த படத்தின் டைட்டிலே வித்தியாசமாக இருக்கிறது” என்றார்.

 

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசுகையில், “நான் வாழ்த்துவது பெரிய விஷயம் இல்லை. இந்த படம் வெளியான பிறகு தமிழ்நாடு உங்களை வாழ்த்தும். இந்த படத்தின் டிரைலரை பார்த்ததுமே யாருப்பா இந்த படத்தின் டைரக்டர் என்று கேட்கத் தோன்றுகிறது. டிரைலர் இன்ட்ரஸ்டிங்காக, புதுசாக இருக்கிறது. படம் பார்க்க தூண்டுவதற்காக தானே டிரைலரை உருவாக்குகிறோம்.. டிரைலர் இந்த அளவிற்கு வந்திருக்கு என்றால் அதற்குள் இருக்கும் கரு அந்த அளவிற்கு நன்றாக இருக்கும் என தோன்றுகிறது. சில நேரங்களில் டிரைலரில் கதையை சொல்வது தப்பாகி விடும். ஆனால் இதில் இன்ட்ரஸ்டிங்கா இருந்தது. என்ன நடந்திருக்கும் என்கிற ஆர்வத்தை தூண்டுகிறது. 

 

இப்போ ட்ரெண்ட் என்னவென்றால் சூப்பர் ஸ்டாரை வைத்து படம் எடுத்தால் போட்ட பணத்தை எடுக்க விடலாம். தயாரிப்பாளர் தப்பித்து விடுவார். இல்லை என்றால் இப்படி புதிய பசங்களை வைத்து படம் பண்ண வேண்டும். இதற்கு நடுவில் உள்ளவர்களை வைத்து யாராவது படம் பண்ணினால் தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விடுவார்கள். சூப்பர் ஸ்டார்களை வைத்து படம் எடுத்தால் அதற்கு பைனான்ஸ் பண்ணுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். நல்ல கதையை வைத்து படம் எடுப்பதற்கு இங்கே யாரும் பைனான்ஸ் பண்ண ஆட்கள் தயாராக இல்லை.

 

ஒரு புதிய இயக்குநரை நம்பி இரண்டரை கோடி பணம் போட்டு படம் எடுத்திருக்கிறார் என்றால் அந்த தயாரிப்பாளருக்கு நன்றி. அந்த நம்பிக்கை ஜெயிக்கணும். ஒரு காரியத்தை ஆரம்பிக்கும்போது நாம் ஜெயிப்போம் என நினைத்து ஆரம்பித்தால், கண்டிப்பாக ஜெயிப்போம். என் வாழ்க்கை அதுதான். இப்போது வரை நான் ஜெயிப்பேன் என்று தான் படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். நம்பிக்கை உள்ளவன் தான் ஜெயிப்பான். இந்த படம் வெற்றி அடையும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இன்றைய தலைமுறை வன்முறையை தான் ரசிக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டு வரும் இயக்குநர்கள் எல்லாம் கத்தி, ரத்தம், சத்தம் என இந்த மூன்றை நம்பித்தான் படம் எடுக்க வருகிறார்களே தவிர கதை இதெல்லாம் எதுவும் கிடையாது. ஒரு எழுத்தாளர் தான் நாட்டிலேயே ஒரு எழுச்சியை உண்டாக்க முடியும்” என்று பேசினார்.” என்றார்.

 

இசையமைப்பாளர் கிருஷ்ண சேட்டன் பேசுகையில், “தமிழில் இதுதான் எனக்கு முதல் படம். இயக்குநர் கதை சொன்ன விதமே எனக்கு பிடித்திருந்தது. பாடல்கள் அனைத்தையும் அவரே எழுதிக் கொண்டு வந்து விட்டார். படம் வெற்றிபெற எனது வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்”. என்றார்

 

நடிகர் பூவையார் பேசுகையில், “இயக்குநர் ஜெயவேல் அண்ணன் நான்கு வருடங்களுக்கு முன்பே இந்த கதையை சொல்லிவிட்டு பூவையார் தான் இந்த படத்தை பண்ண வேண்டும் என ஸ்ட்ராங்காக இருந்தார். வேறு யாராவது இருந்தார்கள் என்றால் அந்த சூழலுக்கு ஏற்ற மாதிரி மாறி இருப்பார்கள். ஆனால் அவர் உறுதியாக நின்றார். இந்த கதையின் மீது எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. இந்த படத்தில் எல்லாமே லைவ்வாக பண்ண வேண்டும் என அடி உதை எல்லாமே லைவ்வாக வாங்கினோம். எனக்கான ஒரு திரை விலகும் என ஒரு எதிர்பார்ப்புடன் இருந்தேன். அது இவ்வளவு சீக்கிரம் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை. பாட்டு தான் எனக்கு முதலில்.. கூடவே நடிப்பையும் தொடர்வேன். இந்த இடத்தில் நான் வந்து நிற்பதற்கு காரணமான விஜய் டிவி உள்ளிட்ட பலருக்கும் நன்றி” என்று பேசினார்.

 

நடிகர் சாய் தீனா பேசுகையில் , “இந்த படத்தில் பூவையார் நடிக்கிறார் என்று சொன்னதுமே நான் இந்த படத்தில் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். அதனாலேயே இயக்குநரிடம் கதை எல்லாம் கேட்காமல் ஒப்புக் கொண்டேன். ஆனால் படப்பிடிப்பிற்கு சென்ற பிறகுதான் தெரிந்தது ஒரு நல்ல டைரக்டரிடம் ஒரு நல்ல படம் பண்ணி இருக்கிறேன் என்று. இந்த மாதிரி இயக்குநர்கள் வரும்போது தான் என்னைப் போன்ற நடிகர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும்” என்றார்.

 

இயக்குநர் பேரரசு பேசுகையில், “இந்த படத்தின் தயாரிப்பாளர் விரும்புவதும் பேசுவதும் எல்லாமே பாசிட்டிவ் தான். இவரைப் போன்றவர்கள் வெற்றி பெற்றால் தான் புது புது இயக்குநர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். பசங்க தானே என்று குறைவாக எடை போட்டு விடக்கூடாது. காக்கா முட்டை படம் தங்க முட்டையாக மாறியது. பசங்க படம் சூப்பர் ஹிட் ஆனது. கோலி சோடா அதுவும் மிகப்பெரிய ஹிட். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது. மூன்று பசங்களை மையப்படுத்தி படம் எடுப்பது பெரிய விஷயம். அதுதான் திறமை. சிறிய பட்ஜெட்டில் நல்ல கதை அம்சத்துடன் வரும் படங்கள்தான் என்றும் நிலைத்து நிற்கும்.

 

சமூகத்தில் எல்லா மதமும் ஒன்றுதான். எம்மதமும் சம்மதம் என்று சொல்வதே அதிசயமாக போய்விட்டது. இன்று திரையரங்குகளுக்கு மக்கள் வருவதே அபூர்வமாகிவிட்டது. அதனால் இரண்டரை மணி நேரம் திரைப்படத்தில் என்ன சொல்கிறோம் என்பதை இரண்டு நிமிட டிரைலரில் காட்டவேண்டிய சூழ்நிலை இன்று இருக்கிறது. டிரைலரை பார்த்ததுமே படம் பார்க்க தோண வேண்டும். சிறிய படங்களுக்கு டிரைலர் ரொம்பவே முக்கியம். அந்த வகையில் இந்த படத்தின் டிரைலர் படம் பார்க்க தூண்டுகோலாக இருக்கிறது.

 

சினிமாவில் ஒரு நடிகர் ஜெயித்தால் அவர் எந்த மதம் என்று பார்ப்பதில்லை. அவர் நடிப்பு பிடித்திருக்கிறதா? என்று தான் பார்க்கிறார்கள். இன்று பாலிவட்டில் கோலோச்சும் அமீர்கான், ஷாருக் கான், சல்மான்கான் போன்றவர்களுக்கு எல்லா மதத்திலும் ரசிகர்கள் இருப்பதால்தான் அவர்களால் சூப்பர் ஸ்டார்களாக கோலாச்ச முடிகிறது. இங்கே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆன்மீகம் பேசினாலும் நடிகர் கமல்ஹாசன் நாத்திகம் பேசினாலும் இங்கே எல்லா மதத்திலும் அவர்களது நடிப்புக்காகவே ரசிகர்கள் இருக்கிறார்கள். மத நல்லிணக்கம் என்பதே சினிமாவில் தான் இருக்கிறது. அரசியலில் இல்லை. பிளவை உண்டாக்கி பிழைப்பு நடத்துவது அரசியல்வாதிகள் தான். சினிமாக்காரர்கள் எவ்வளவோ மேல்” என்றார்.

 

தயாரிப்பாளர் மதியழகன் பேசுகையில், “படங்களில் சின்ன படம் பெரிய படம் என எதுவும் இல்லை. நல்லா இருக்கும் படங்கள் எல்லாமே பெரிய படங்கள் தான். செல்வராகவன், வெற்றிமாறன் ஆகியோருக்கு பிறகு இயக்குனர் ஜெயவேல் இந்த இளைஞர்களை பயன்படுத்தி ஒரு படத்தை செய்து இருக்கிறார். இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என நம்புகிறேன். தயாரிப்பாளர்களுக்கு பணம் கொடுக்க ஆள் இல்லை. இப்போது இருக்கும் சூழ்நிலையில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி இயக்குனர்கள் வெற்றி படங்களை கொடுக்க வேண்டும். டிஜிட்டல், ஓடிடி இவற்றின் கைப்பிடிக்குள் நாம் இருக்கிறோம். இன்னும் ஒரு வருடத்திற்குள் இவை எல்லாம் சரியாகிவிடும் என நினைக்கிறேன். அதே சமயம் தியேட்டர்கள் பழைய நிலைமைக்கு மாறி லப்பர் பந்து, டூரிஸ்ட் பேமிலி போன்ற நல்ல படங்கள் இப்போது ஓடுகின்றன. ஒரு வெள்ளிக்கிழமையில் தயாரிப்பாளரின் நிலை மாறும். அந்த வகையில் இந்த அக்டோபர் 31 இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு நல்ல விதமாக அமையும்” என்றார்.

 

நடிகர் உதயா பேசுகையில், “இந்த படத்தின் டிரைலர் ரொம்பவே வித்தியாசமாக இருக்கிறது. அதற்காக இயக்குனர் ஜெயவேலுக்கு பாராட்டுகள். ஒருவரின் நல்லது கெட்டது என அனைத்திலும் முன்னின்று தோன் கொடுக்கும் நடிகர் சௌந்தரராஜா இந்த படத்தில் நடித்திருப்பது பெரும் பலம்.. அக்யூஸ்ட் படத்தில் வெற்றிக்கு மிக மிக முக்கிய காரணம் தயாரிப்பாளர் கிளமென்ட் சுரேஷ் அவர்கள்தான். இயக்குநர் ஜெயவேல் எப்போதுமே தயாரிப்பாளருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில் இயக்குநரையே தூக்க வேண்டிய சூழல் ஏற்பட்ட போது கூட அவருக்காக பரிந்து பேசி துணை நின்றவர் தயாரிப்பாளர் கிளமென்ட் சுரேஷ் சார்” என்றார்.

 

இயக்குநர் எஸ்.ஆர் பிரபாகரன் பேசுகையில், ”திரையுலகில் நிறைய எதிர்மறை எண்ணங்கள் தான் அதிகம் இருக்கின்ற.ன ஒரு படத்தை துவங்கப் போகிறோம் என்றால் அதற்கு நம்பிக்கை கொடுத்து பேசும் ஆட்கள் இங்கே குறைவு. இந்தப் படம் வெற்றி பெற்றால் மீண்டும் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன் என்று தயாரிப்பாளர் சொன்னார் அவருடைய அந்த நல்ல எண்ணத்திற்காகவே இந்த படம் வெற்றிகரமாக ஓடும். நடிகர் சௌந்தர்ராஜாவை சுந்தரபாண்டியன் படத்தில் இருந்தே தெரியும். அந்த படத்திற்கு அவர் எனக்கு எவ்வளவு உறுதுணையாக இருந்தார் என்பதை கண்கூடாக பார்த்திருக்கிறேன். அவர் ஒரு படத்தில் இருக்கிறார் என்றால் தன்னால் அந்த படத்திற்கு எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு உதவியாக இருப்பார். இந்த விழாவிற்கு கூட நான் வர முடியாத சூழலில் இருந்தாலும் அறிமுக இயக்குனர் என்பதாலும் சௌந்தர்ராஜாவின் அழைப்பு என்பதால் தட்ட முடியாமல் வந்திருக்கிறேன். அவர் தற்போது தவெகவில் பரபரப்பாக இயங்கி வருகிறார். தவெகவில் உங்களுக்கு எதுவும் பொறுப்பு, பதவி கொடுத்திருக்கிறார்களா என்று கேட்டேன்.. இல்லை என்றார்.. பிறகு எதற்கு இவ்வளவு வேலைகளை இழுத்து போட்டு செய்கிறீர்கள் என்றால், அண்ணனுக்காக செய்கிறேன் என்றார். அந்த அளவிற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான தொண்டன் சௌந்தர்.

 

யாரிடமும் உதவியாளராக பணியாற்றாத இயக்குநர் ஜெயவேல் ஒரு வெல்டராக வேலை பார்த்தவர் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டு போனேன். சினிமா ஆர்வம் உடையவர்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என ஆசைப்பட்டால் மட்டும் போதும். மற்றதெல்லாம் தானாக நடந்து விடும். அதற்கு ஜெயவேல் நல்ல உதாரணம்” என்றார்.

 

நடிகர் ஜாவா சுந்தரேசன் பேசுகையில், “இந்த டிரைலரை பார்த்துவிட்டு இந்த படம் நன்றாக இருக்கிறதே என்று பாராட்டுவது இருக்கட்டும். ஆனால் இந்த கதையை கேட்டு விட்டு படம் இப்படி நன்றாக வரும் என மனதுக்குள்ளயே கணக்குப் போட்டு இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் கிளமென்ட் சுரேஷ் அவர்களுக்குத்தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். ஒரு தொழில் முறை தயாரிப்பாளராக ஒரு படத்திற்கு எவ்வளவு பிசினஸ், யாரை வைத்து படம் எடுக்க வேண்டும் என நினைக்காமல் நல்ல கதை, நல்ல பசங்கள், இவர்களுக்காக படம் எடுப்போம் என நினைத்து அவர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

 

படப்பிடிப்பின் போது சிக்கன நடவடிக்கைகள் என நிறைய கடைபிடித்தார்கள். ஆனால் திரையில் தெரியும் காட்சிகள் எதிலும் அவர்கள் குறை வைக்கவே இல்லை. சமரசம் பண்ணிக் கொள்ளவே இல்லை. இந்த படத்தில் நடித்துள்ள மூன்று சிறுவர்களுமே மிகவும் திறமைசாலிகள். இந்த படத்தில் எனது மகனாக ராம் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பையனை ஒரு கட்டத்தில் நானே சுவீகாரம் எடுத்துக் கொள்ளலாமா என்று கூட நினைத்தேன். இந்த படம் இயக்குனர் ஜெவேலு சாருக்கு ஷ்யூர் ஷாட் ஹிட்” என்றார்.

 

நடிகர் சௌந்தர்ராஜா பேசுகையில், “அதிகாரம் அன்பாக இருந்தாலே ரொம்ப கஷ்டமாக இருக்கும். அதையே அடக்கு முறையாகத்தான் நான் நினைப்போம். அதிகாரத்தால் நல்லது நடந்தால் அது நல்ல வார்த்தை. கெட்டது நடந்தால் அது கெட்ட வார்த்தை. இன்று இருக்கும் சூழலில் அதிகாரமும் அடக்கு முறையும் அதிகமாக போய்க்கொண்டிருக்கிறது. நல்லவர்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட அதிகார துஷ்பிரயோகம் பண்ணுகின்ற அரசியல்வாதியை, ஒரு காவல் துறையை அதிகாரியை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் தான் இந்த ராம் அப்துல்லா ஆண்டனி, நல்லதே நினைப்போம்.. நல்லதே நடக்கும்” என்றார்.

 

நடிகர் பிக்பாஸ் ஆர்ணவ் பேசுகையில், “இந்தப் படத்தின் ஒரு காதல் காட்சியை திரையிட்ட போது அதில் ஆடியவர்களின் இடுப்பில் ஒரு கியூ ஆர் கோடு இடம் பெற்றிருந்தது. அதை ஸ்கேன் செய்தால் என்ன வரும் என இயக்குனரிடம் கேட்க வேண்டும் என ஒரு சந்தேகம் ரொம்ப நேரமாக ஓடிக் கொண்டிருந்தது. அனால் அது ஒரு புது முயற்சி.. இந்த படத்தில் நான் நடித்துள்ள கெட்டப்பை பார்த்து தான் எனக்கு தெலுங்கில் இருந்து இரண்டு பட வாய்ப்புகள் உடனடியாக வந்தது. அதனால் இயக்குனர் ஜெயவேலை பொறுத்தவரை என்னுடைய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்வேன்”  என்றார்.

 

இயக்குநர் ஜெயவேல் பேசுகையில், “இந்த இடத்தில் தான் இருப்பதற்கு ஒரே ஒரு காரணம் தயாரிப்பாளர் கிளமென்ட் சுரேஷ் தான். அவருடைய பெயரை என் செல்போனில் காட் (கடவுள்) என பதிந்து  வைத்திருக்கிறேன். பல தடங்கல்களுக்கு இடையே இந்த படம் வளர்ந்தது. ஆனால் அது பற்றி சொல்ல வேண்டிய இடம் இது இல்லை. அதற்கெல்லாம் படத்தின் வெற்றி மூலம் தான் பதில் சொல்ல முடியும். பல பேர் இந்த படத்தை எடுத்தவரை பார்த்துவிட்டு இது குப்பை இனிமேல் பணம் போடுவது வேஸ்ட் என்று சொன்ன நிலையில் அதையெல்லாம் ஒதுக்கி விட்டு இந்த குப்பையை கோபுரம் ஆக்கி காட்டு என என்னை நம்பி மீண்டும் படப்பிடிப்பை நடத்தத் தூண்டியவர் தயாரிப்பாளர் சுரேஷ். ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறேன் என்று திருப்தி இருக்கிறது” என்றார்.

Related News

10703

ஐபோனில் எடுக்கப்பட்ட ‘அகண்டன்’ இன்று திரையரங்குகளில் வெளியாகிறது
Friday October-10 2025

உலக நாடுகள் பலவற்றிலும் பல்வேறு விருதுகளை அள்ளிக்குவித்த படம் செழியன் இயக்கத்தில் வெளியான ’டூலெட்’...

‘வில்’ திரைப்படம் எனக்கு மிக முக்கியமான படம் - நடிகை சோனியா அகர்வால்
Thursday October-09 2025

புட் ஸ்டெப்ஸ் புரொடக்‌ஷன்ஸ் (Foot Steps Production) தயாரிப்பில், கோதாரி மெட்ராஸ் இண்டர்நேஷ்னல் லிமிடெட் (Kothari Madras International Limited) இணைந்து வழங்க, இயக்குநர் எஸ்...

அசுரனை மிஞ்சுமா சிலம்பரசனின் ‘அரசன்’?
Thursday October-09 2025

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், சிலம்பரசன் டி...

Recent Gallery