Latest News :

நாங்கள் எடுக்கும் படங்கள் தான் சினிமாவைச் சீரழிக்கின்றதா? – இயக்குநர் பா.ரஞ்சித் ஆவேசம்!
Monday October-27 2025

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்து பரவலான பாராட்டுகளும், வரவேற்பும் கிடைத்து ஓடிக்கொண்டிருக்கும் ‘பைசன்’ படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினார்கள்.

 

இயக்குநர் அமீர் பேசுகையில், “திரும்ப திரும்ப மாரியிடம் நீங்கள் ஏன் இந்த மாதிரி படம் எடுக்கிறீர்கள்? என கேட்கிறார்கள், இந்த சமூகத்தில் பிரச்சனையை ஏற்படுத்த நினைக்கிறீர்கள் என சொல்கிறார்கள். இது எவ்வளவு அபத்தமாக இருக்கிறது. கண்ணுக்கு தெரியாத சாமி, இல்லாத பேய் இது இரண்டு பற்றியும் எடுக்கப்படும் படங்கள் இங்கு வெற்றி பெறுகிறது. ஆனால் கண்ணுக்கு தெரியக் கூடிய சாதி, அது ஏற்படுத்திய தீமைகள், கொடுமைகள் குறித்து படம் எடுத்தால், கூடாது என்பதும், கேள்வியை முன் வைப்பது அபத்தமாக இருக்கிறது.

 

மாரி, இரஞ்சித் படங்கள் பொது வெளியில் அரசியல் சார்ந்தவர்கள் கருத்தும், எதிர்ப்பும் தெரிவிக்கிறார்கள் என்பது எனக்குப் புரிகிறது. ரொம்ப நாளாக அடித்தோம், அப்படியே அடிவாங்கிக் கொண்டே இருக்க வேண்டியது தானே, எங்கே இருந்து உங்களுக்கு இந்த தைரியம் என்ற கேள்வியாக இருக்கலாம். நடந்தது நடந்துவிட்டது அதை ஏன் வெளியே சொல்கிறாய்? என்ற எண்ணமாக இருக்கலாம். இதனை அரசியல் சார்ந்தவர்கள் அமைப்பு சார்ந்தவர்கள் சொல்லும் போது லாஜிக் இருப்பதாக பார்க்கிறேன்.

 

ஆனால் திரைத்துறையில் இருந்து வரும் எதிர்ப்பை அபத்தமாக பார்க்கிறேன். அதிலும் ஒரு இயக்குநர் இந்தப் படம் பற்றி பேசும் போது, ஒரு பாடல் பாடி காண்பிக்கிறார். மிக கேவலமாகவும், குரூரமாகவும் `பைசன் பைசன் பைசன், அது பாய்சன்’ என நாராசமான குரலில் பாடினார். நான் கேட்கிறேன், அவர் ஒரு கருத்து வைத்திருக்கிறார், அதை கலையின் மூலம் வெளிக் கொண்டு வருகிறார். உன்னிடம் நிஜமாகவே கருத்து இருந்தது என்றால் நீயும் அதை கலையின் மூலம் கொண்டு வரவேண்டியது தானே. அப்படித்தானே நீ சண்டையிட வேண்டும். அதற்கு உன்னிடம் திராணி இல்லை, அந்தக் கலைவடிவத்தில் வெளிப்படுத்த முடியவில்லை என்றால், அவதூறு பரப்பாதே, ஏன் எடுக்கிறார் எனக் கேட்காதே” என்றார்.

 

நடிகர் பசுபதி பேசுகையில், ”இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் அமீர் பருத்திவீரன் படத்தில் சரவணன் நடித்த சித்தப்பு கதாபாத்திரத்தில் பசுபதி தான் நடிக்க வேண்டும் என நினைத்து வைத்திருந்தேன். ஆனால் அவரை என்னால் அப்போது நடிக்க வைக்க முடியவில்லை எனக் கூறி இருந்தார். இந்த விஷயத்தை குறிப்பிட்டு பேசிய பசுபதி “அமீர் சாருடன் நான் நிறைய பேசியதில்லை. படத்திலும் எனக்கும் அவருக்குமான காட்சிகள் இல்லை, எனவே அங்கும் பேச முடியவில்லை. ஆனால் அவருக்கு ஒரு பதில் சொல்ல வேண்டும் என நினைப்பேன் ஆனால் விட்டுவிடுவேன். இப்போது அதை சொல்ல வேண்டும் போல தோன்றுகிறது.

 

அவரது பருத்திவீரன் படத்தில் என்னை நடிக்க (சித்தப்பு பாத்திரத்தில்) அவர்கள் என்னை அணுகியது உண்மை தான். ஆனால் அவர்கள் என்னை கேட்ட நாள், ‘வெயில்’ படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் இருந்தேன். ஒன்றரை மாதம் தொடர்ந்து படப்பிடிப்பு. இடையில் ஏதாவது கேப் கிடைத்தால் பார்க்கிறேன் என சொல்லி இருந்தேன். இல்லை அடுத்த வாரம் நீங்கள் படப்பிடிப்பு வர வேண்டும், இரண்டு மாதம் ஷூட் இருக்கிறது என்றார்கள். எனவே என்னால் முடியாது என கூறினேன். இதுதான் உண்மை.” என்றார்.

 

நடிகர் துருவ் விக்ரம் பேசுகையில், “ரஞ்சித் என்னை எப்படி நம்பினார் என்று எனக்கு தெரியவில்லை. மாரி செல்வராஜ் இப்படி ஒரு படம் கொடுத்திருக்கிறார். அந்த நம்பிக்கைக்கு நன்றி” என தெரிவித்தார்.

 

Bison Success Meet

 

நடிகர் மதன்குமார் பேசுகையில், “எத்தனை முறை மாரி சாருக்கு நன்றி சொன்னாலும் போதாது. அவர் என்னிடம் சொல்லும்போது உங்களுக்கு கொடுத்திருக்கும் கதாபாத்திரம் முக்கியமான ‘ஆன்மா’ என்றார். அப்பொழுது எனக்கு தெரியாது. படம் முடிந்து கிடைத்த வரவேற்பு மிகப்பெரிய வெற்றியாக இருந்தது. இவ்வளவு நாட்கள் வில்லனாக நடித்த கதாபாத்திரம் தற்பொழுது அப்படியே மாறிவிட்டது. இங்கு எப்படி படம் எடுக்க வேண்டும் என்று அப்படியே ஆணித்தரமாக எடுப்பது மாரியால் மட்டுமே முடியும். துருவை விக்ரமின் மகனாகவோ, நடிகராகவோ நான் பார்க்கவில்லை. படத்தில் நடித்த கிட்டனாக தான் பார்த்தேன்.” என்றார்.

 

இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், “ஒரு படத்தின் மூலம் சமூகத்திற்கு தவறான கருத்தை நாம் சொல்ல போவது கிடையாது. 75 ஆண்டுகளாக சினிமா வரலாற்றில் பேசப்படாத மக்களை பற்றி பேசப் போகிறோம். நாம் சரியான வேலையை செய்யும் போது நமக்கு எதற்காக பதற்றம் வருகிறது என்று தெரியவில்லை. எனது ‘அட்டகத்தி’ படத்தை காமெடியாக பார்த்தவர்கள், ‘மெட்ராஸ்’ படத்தில் இருந்து தான் சில குறியீடுகளைப் பற்றி விமர்சித்தார்கள். மெட்ராஸ் திரைப்படம் வெற்றி பெற்றாலும் கூட, எப்படி ஒருவர் மெட்ராஸ் என்ற பெயரில் படம் எடுக்கலாம் என விமர்சனங்கள் எழுந்தது.

 

மெட்ராஸ்னு ஒரு படத்தை நான் எடுக்கலான, ரஜினிகாந்த் ‘கபாலி’ படத்திற்கு வாய்ப்பு கொடுத்து இருப்பாரான்னு தெரியல. ஆனால் ஒவ்வொரு முறையும் ரஜினியை வைத்து எப்படி இதுபோன்ற வசனங்களை எடுத்தீர்கள்? என்று விமர்சனங்களும், கேள்விகளும் வந்தது. குறிப்பாக, ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? ரஜினிக்குள் எப்படி சாதியை கொண்டு வரலாம்? என்று விமர்சித்தார்கள். நான் ஒரு சாதி வெறியன் என்றெல்லாம் என்னை பேசினார்கள். அப்போது, இந்த மாதிரியான படங்கள் எடுக்கவே முடியாதா? யாராவது எடுக்க வந்தால் இப்படி ஒரு சிக்கல் வருமா? என பயங்கர விவாதம் நடந்தது.

 

முன்பெல்லாம் என்னை மட்டும் திட்டுவார்கள். தற்பொழுது அந்த லிஸ்டில் மாரி செல்வராஜும், வெற்றிமாறனும் சேர்ந்துவிட்டார்கள். தற்போது விமர்சனங்களை சமாளிப்பதில் இன்னும் இரண்டு பேர் சேர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. எங்கள் மூன்று பேரையும் தமிழ் சினிமாவைச் சீரழிக்கும் இயக்குனர்கள் என்கிறார்கள். பைசன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இருந்தாலும், மாரியால் எப்படி இதுபோன்ற தொடர் வெற்றிப் படங்களை கொடுக்க முடிகிறது என்று எனக்கு ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது.

 

ஒரு வருடத்துக்கு 400 படங்கள் தமிழில் வருகின்றன. நாங்கள் எடுக்கும் படங்கள் தான் சினிமாவைச் சீரழிக்கின்றதா? இதுபோன்ற கேள்விகளுக்கான பதிலை தேடுவதுதான் எங்கள் சினிமா. ‘பைசன்’ படம் வருவதற்கு முன்பாகவே இது சாதி படம் போகாதீங்க. ‘டியூட்’ படத்துக்கு போங்க என்றெல்லாம் வெறுப்புணர்வைப் பரப்பினார்கள். இதை நம்பி ‘டியூட்’ படத்துக்கு போனவர்களை அதன் டைரக்டர் கீர்த்தீஸ்வரன் வச்சு செஞ்சுட்டாருல்ல…” என்றார். 

 

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், , “பைசன் படம் நான் தொடர்ந்து வேலை செய்வதற்கான பலத்தை கொடுத்துள்ளது. எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும், முரண் வந்தாலும் என்னை திருப்பி விடலாம், என்னுடைய கதை சொல்லலை மாற்றிவிடலாம் என்று யாரும் நினைக்க வேண்டாம். அது எனது ரத்தத்திலேயே கிடையாது. நான் அதை விட்டு விலகுவதற்கான வாய்ப்பும் என்னிடம் இல்லை. நான் சந்திக்கும் பிரச்சனைகள், மனிதர்கள் அவர்கள் சொல்லும் கதைகளை எல்லாம் கேட்டால் நீங்கள் வேறு எந்த படமும் எடுக்க முடியாது. என்னுடைய ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் இடையில் இந்த சமூகம் எப்படி இருக்கிறது? அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதாகவே இருக்கும். நான் நிலையானவனாக இருக்க விரும்புகிறேன். ஏன் இது போன்ற படங்களை எடுக்கிறீர்கள்? என்ற கேள்விகளை பத்திரிகையாளர்கள் என்னிடம் தவிர்த்துவிடுங்கள். அது என்னை மட்டுமல்லாமல் எனது வேலையையும் மிகவும் பாதிக்கிறது. குறிப்பாக, எனது சிந்தனையை பாதிக்கிறது.

 

மாரி செல்வராஜ் எடுப்பது சாதி படமா? என்று கேட்டால் அது உங்களின் மொழி. மாரி செல்வராஜ் எடுப்பது சாதிய எதிர்ப்பு படம். அதை தொடர்ந்து எடுப்பேன். இதை நான் திமிரில் சொல்லவில்லை, உணர்வுப்பூர்வமாக சொல்கிறேன். நான் கலையை நம்புகிறவன். எனது வாழ்க்கையை கலையாக மாற்றுகிறேன். எனது கலைக்கு வெறி, ஆற்றாமை, கண்ணீர், கேள்வி, காதல் என அனைத்தும் உள்ளது” என்றார்.

Related News

10725

வியப்பில் ஆழ்த்தும் மாதவனின் புதிய மாற்றம்!
Monday October-27 2025

டிரைகலர் பிலிம்ஸ் உடன் இணைந்து வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள புரட்சிகர தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கொடையாளர் ஜி...

தினேஷ் ராஜ் மற்றும் தனஞ்செயன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் தொடங்கியது!
Monday October-27 2025

Zinema Media and Entertainment Ltd. சார்பில் தினேஷ் ராஜ் வழங்க, Creative Entertainers & Distributors நிறுவனத்தின் ஜி...

Recent Gallery