Latest News :

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்.

 

ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வதை நோக்கமாக கொண்ட அந்த அமைப்பின் 10-வது ஆண்டு துவக்க விழா 3.11.2025 அன்று மதியம் சென்னை தி நகர் சோஷியல் கிளப்பில் நடைபெற்றது.

 

நிகழ்வில் ஆட்டோ ஓட்டும் அனுபவமுள்ள ஏழைப் பெண்கள் 10 பேருக்கு ஆட்டோக்கள் வழங்கப்பட்டது.

 

இந்த நிகழ்வில் பங்கேற்று பயனாளிகளுக்கு ஆட்டோக்களை வழங்கிப் பேசிய பி டி செல்வகுமார், ''பத்திரிகையாளராக இருந்து, நடிகர் விஜய்க்கு பி ஆர் ஓ'வாக இருந்து, அவரது வளர்ச்சிக்காக 27 வருடங்கள் உழைத்து, சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறேன்.

 

பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம் என்பதோடு நின்று விடக் கூடாது என்பதை மனதில் கொண்டு சமூக சேவைகளை முன்னெடுத்துச் செய்வதற்காக கலப்பை மக்கள் இயக்கம் தொடங்கினோம். தொடங்கியபோது இவரால் என்ன செய்துவிட முடியும் என்றெல்லாம் கேலி கிண்டல் செய்தவர்கள் உண்டு. அப்படியான பேச்சுக்களையெல்லாம் கடந்து 10-வது வருடத்திற்கு வந்துள்ளோம். 10 பேருக்கு ஆட்டோக்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

 

எங்களுடைய உதவித் திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கு, குறிப்பாக மலையோர, பழங்குடி கிராம மக்களுக்கு சென்று சேரும்படி பார்த்துக் கொள்கிறோம்.

 

கொரோனா காலகட்டத்தில் ஒரு வருடகாலம் தொடர்ச்சியாக நாங்கள் செய்த உதவிகளைப் பாராட்டி, எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சியில் எனக்கு 'மனிதநேயச் செம்மல் விருது' தந்தார்கள்.

 

அதன்பிறகு, நெல்லை மாவட்ட சுற்று வட்டாரத்தில், மலைக் கிராமங்களில் 30-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகள், கலையரங்குகள் கட்டிக் கொடுத்துள்ளோம். அந்த சேவையைப் பாராட்டி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களும் சபாநாயகர் அப்பாவு அவர்களும் எனக்கு 'சிறந்த கல்வி சேவையாளர் விருது' வழங்கி ஊக்கப்படுத்தினார்கள்.

 

இதோ இப்போது 10-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். அந்த நிகழ்வை சிறப்பாக நடத்த முடிவெடுத்து பெண்களின் உழைப்புக்கு மதிப்பளித்து ஏழை எளிய ஆட்டோ ஓட்டுநர் பெண்கள் 10 பேருக்கு ஆட்டோக்கள் வழங்குவதென தீர்மானித்து செயல்படுத்தியிருக்கிறோம்.

 

நேற்று தமிழ்நாடு சி எம் தலைமையேற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு சென்று வந்துள்ளேன் என்றால், அந்தளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் அது சாதரணமாக நடந்துவிட வில்லை.

 

சவால்கள், அவமானங்கள் என எல்லாவற்றையும் கடந்துதான், வியர்வையும் ரத்தமும் சிந்தி இந்த இடத்திற்கு வந்துள்ளோம். எதுவுமே சும்மா வந்து விடாது. ஒவ்வொரு செயல்பாட்டுக்கு பின்னேயும் கடுமையாக உழைத்திருக்கிறேன். பெரியளவில் போராட்டங்களைச் சந்தித்திருக்கிறேன். இனியும் சவால்களைச் சந்திக்க, மக்கள் நலனுக்காக எதையெல்லாம் செய்ய முடியுமோ அவற்றைச் செய்யத் தயராக இருக்கிறேன். இந்த எங்களின் சமூக சேவை பணிகள் வரும் நாட்களில் இன்னும் சிறப்பாக தொடரும்.

 

எப்படி பெரிய பெரிய நடிகர் நடிகைகள் பற்றிய செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கிறீர்களோ, அதேபோல் சாமானியர்களான எங்களைப் போன்றோரின் சமூக சேவை பணிகள் பற்றி மக்களிடம் பத்திரிகையாளர்கள் கொண்டு சேர்த்து ஆதரவளிக்க கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்.

 

Kalappai Makkal Iyakkam

 

அதையடுத்து பத்திரிகையாளர்கள், 'நடிகர் விஜய்யின் கட்சியோடு கூட்டணி வைப்பீர்களா?'  என்று கேட்டபோது ''காலச் சுழல் கூடி வந்தால் இணைந்து செயல்படலாம். விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்'' என்றார்.

 

கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் பற்றி கேட்டதற்கு, ''விஜய் இனிவரும் நாட்களில் தனக்கான கூட்டத்தை கட்டுப்படுத்த, நெறிப்படுத்த அரசியல் அனுபவம் வாய்ந்த இரண்டாம் கட்டத் தலைவர்களை தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். கூட்டங்களுக்கு சரியான நேரத்துக்கு போவது உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.

 

எஸ் ஐ ஆர் (Special Intensive Revision - SIR) பற்றிய கேள்விக்கு, ''தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அவசர அவசரமாக மத்திய அரசு எஸ் ஐ ஆர் நடைமுறைப்படுத்துவது தவறானது'' என்றார்.

 

நிகழ்வின் தொடக்கத்தில் வரவேற்புரை வழங்கிய கலப்பை மக்கள் இயக்கத்தின் துணைத் தலைவர் நந்தகுமார், ''ஏழை எளிய மக்களுக்கு இயன்றதை செய்வோம்' என்ற குறிக்கோளுடன் தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் மூலம் கஜா புயல் பாதிப்பின்போது 6 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் செய்தோம். கொரோனா பாதிப்பு காலகட்டத்தில் பல்வேறு இடங்களில் உதவிகள் செய்தோம். மற்ற அரசியல் கட்சிகள் யாருக்கெல்லாம் ஓட்டுரிமை இருக்கிறதோ அவர்களுக்கு உதவிகள் செய்தார்கள். நாங்கள் இந்தியாவில் ஓட்டுரிமையில்லாத பர்மா அகதிகளுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகளைச் செய்தோம். பெண் ஆட்டோ ஓட்டுநர்கள், திருநங்கைகள் என பலருக்கும் எங்களுடைய உதவிகள் போய்ச் சேர்ந்தது.

 

ஏழை எளிய மக்களுக்குத் தேவையான செவித்திறன் மேம்பாட்டுக் கருவிகள், மூக்குக் கண்ணாடிகள் வழங்குவது, மரக்கன்றுகள் வ்ழங்குவது, ஆட்டுக் குட்டிகள் வழங்குவது என பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம். எந்த உதவிகளாக இருந்தாலும் ஏழை எளிய மக்கள், மலைவாழ் மக்கள், பழங்குடி மக்கள் பயன் பெறுவதை நோக்கமாக கொண்டு செயலாற்றுகிறோம். எங்களின் செயல்பாடுகளை தெரிந்துகொண்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் எங்களை மூன்று முறை அழைத்து அங்கீகரித்துள்ளார்.

 

நேற்றைய (2.11.2025) தினம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடந்த, மத்திய அரசு நடைமுறைப்படுத்தவிருக்கிற எஸ் ஐ ஆர் (Special Intensive Revision - SIR) செயல்திட்ட எதிர்ப்புக் கூட்டத்திலும் கலப்பை மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் பி டி செல்வகுமார் அவர்கள் கலந்து கொண்டு தனது கருத்துக்களை முன் வைத்தார்.

 

பி டி செல்வகுமார், நடிகர் விஜய்யின் வளர்ச்சிக்கு மட்டும் துணை நின்றவர் அல்ல; விஜய் சேதுபதி நடித்த 'தென்மேற்குப் பருவக் காற்று' பட வெளியீட்டில் பிரச்சனை வந்தபோது, அதை தீர்க்க உதவி செய்து அவரது வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டவர்'' என்றார்.

 

ஆட்டோக்களைப் பெற்றுக் கொண்டவர்கள் சார்பாக ஒரு பெண்மணி, கொரோனா காலத்திலிருந்து இப்போது வரை பி டி செல்வகுமாரின் கலப்பை மக்கள் இயக்கம் தங்களுக்கு செய்து வருகிற உதவிகளைக் குறிப்பிட்டு, ஆட்டோக்கள் வழங்கி ஊக்குவித்ததற்காக நன்றி தெரிவித்ததோடு நிகழ்வு நிறைவுக்கு வந்தது.

Related News

10739

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

Recent Gallery