Latest News :

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா மற்றும் ஆர்யன் ரமேஷ் வழங்கும் இப்படத்தில் ஷ்ரத்த ஸ்ரீநாத் மற்றும் மானசா செளத்ரி கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள்.

 

வியாபார ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள ‘ஆர்யன்’ திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக நேற்று சென்னை பிரசாத் லேபில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்ததோடு, படத்தின் கிளைமாக்ஸில் மாற்றம் செய்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

 

இது குறித்து படத்தின் நாயகன் மற்றும் தயாரிப்பாளர் நடிகர் விஷ்ணு விஷால் பேசுகையில், “ஆர்யன் எனக்கும் மிகவும் ஸ்பெஷலான படம். என்னுடைய மகனின் பெயரில் எடுத்த படம். விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸில் எடுத்த மூன்றாவது தொடர் வெற்றிப்படம் . இது தமிழ் சினிமாவில் மிகவும் அரிது. என் மகனும் படம் பார்த்து மிகவும் சந்தோசப்பட்டார். படம் பார்த்துவிட்டு என்னைக் கட்டிப்பிடித்தார், அது எனக்கு மிகப்பெரிய விருது. 2023 ரிலீஸ் தேதி வைத்துவிட்டு இந்தப்படம் ஆரம்பித்தோம், ஆனால் சில காரணங்களால் அது தள்ளிப்போனது. ஆனால் இந்த இடைவெளியில் முழு உழைப்பைத் தந்து, இயக்குநர் பிரவீன் மிகப்புதுமையான படத்தைத் தந்துள்ளார். இந்தப்படத்தைப் பற்றி சில மாறுபட்ட கருத்துகளும் வந்தது, என்ன கிளைமாக்ஸ் வைப்பது என எங்களுக்குள் நிறைய விவாதங்கள் நடந்தது. அது பற்றிய விமர்சனங்கள் எங்களுக்கு உதவியாக இருந்தது. இனி படம் பார்ப்பவர்கள் புது க்ளைமாக்ஸை பார்ப்பார்கள், அது தான் பிரவீன் வைத்திருந்த கிளைமாக்ஸ். என் படங்கள் திரையரங்கத்தைத் தாண்டி ஓடிடியில் நல்ல வெற்றி பெறுகிறது. இது படத்திற்குப் படம் மாறுபடும். ஆர்யன் படமும் ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெறும். தியேட்டரிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான். இந்தப்படத்தில் எடிட்டிங் மிக முக்கியம் அதை சான் லோகேஷ்  சிறப்பாக செய்தார். ஜிப்ரான் சார் கடைசியில் தான் வந்தார், இப்போது மாற்றிய க்ளைமாக்ஸுக்கு  கூட மீண்டும் சிறப்பாக வேலை செய்து தந்தார். மானசா சௌத்திரி தந்த ஒத்துழைப்புக்கு நன்றி. நான் வேலை பார்த்ததில் என்னுடைய ஃபேவரைட் நடிகை  ஷ்ரத்தா. மிக வித்தியாசமானவர். நிறைய சினிமா பற்றிப் பேசுவோம் அவருக்கு நன்றி. செல்வா சார்  இப்படத்தில் நடிக்கப்போகிறார் என்பதே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. அவர் நடிப்பு பிரமிப்பைத் தந்தது. சைக்கோவிற்கு இருக்கும் வரைமுறைகளை தன் நடிப்பால் உழைத்துள்ளார். நான் எதிர்பார்த்ததை விட 2000 மடங்கு சிறப்பான உழைப்பத் தந்துள்ளார். இயக்க்குநர்பிரவீனை  இவ்வளவு காலம் காக்க வைத்தற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த படம் விரைவாகச் செய்ய வாழ்த்துக்கள். கட்டா குஸ்தி 2 விரைவில் வருகிறது. என் தம்பியுடன் ஒரு படம் செய்யவுள்ளேன், இயக்குநர் அருண்ராஜா காமராஜுடன் ஒரு படம் செய்கிறேன். அடுத்தடுத்து உங்களுக்குப் பிடித்த மாதிரி படங்கள் செய்வேன். அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

நிகழ்ச்சியில் படத்தொகுப்பாளர் சான் லோகேஷ் பேசுகையில், “ஆர்யன் படத்திற்குத் தந்த பாராட்டுக்களுக்கும் நல்ல விமர்சனங்களுக்கும் நன்றி. அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசுகையில், “ஒரு திரைப்படத்தை  மக்களிடம் கொண்டு சேர்ப்பது இப்போதைய நிலையில் மிகவும் முக்கியம். ஆர்யன் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்ததற்குப் பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி. இப்படத்தில் மியூசிக்கில் ஒரு புதுவிதமான முயற்சி செய்தோம். ஒன்று பாராட்டுவார்கள், இல்லை திட்டுவார்கள் என நினைத்தோம். அனைவரும் புதிய முயற்சியைக் குறிப்பிட்டுப் பாராட்டினீர்கள் நன்றி. இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்த பிரவீனுக்கு நன்றி. விஷ்ணுவைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் அர்ப்பணிப்பு பிரமிப்பானது. எப்போது கூப்பிட்டாலும் தயாராகவே இருப்பார். சினிமாவை நேசிக்கும் அவருக்கு வாழ்த்துக்கள். அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

நடிகை மானசா சௌத்திரி பேசுகையில், “மிகப்பெரிய அன்பைத் தந்த பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. அனிதா என் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான ரோல்,  இந்த வாய்ப்பைத் தந்த பிரவீன் சாருக்கு நன்றி. விஷ்ணு சாருடன் நடித்தது மிகச்சிறந்த அனுபவம் அவருக்கு நன்றி. அனைவருக்கும் நன்றி.” என்றார். 

 

நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் பேசுகையில், “இப்படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. நம்பிக்கை இருந்தது. இந்த அளவு பாராட்டுக்கள்  எதிர்பார்க்கவில்லை. நல்ல கதை ஜெயிக்கும் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டீர்கள். எல்லாவற்றையும் இணைத்த இந்த யுனிவர்ஸுக்கு நன்றி. இந்த மூன்று வருடத்தில் பல தடைகள் வந்தாலும்,  நாங்கள் நினைத்த திரைப்படத்தை கொண்டுவர முடிந்தது. பிரவீன் முதல் படத்திலேயே தன் திறமையை நிரூபித்துவிட்டார். விஷ்ணு மிகப் பொறுமையாக இருந்து இப்படத்தை உருவாக்கினார். ஆர்யன் படத்திற்கும், டயானா பாத்திரத்திற்காகவும், விஷ்ணுவிற்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி.” என்றார்.  

 

இயக்குநர் பிரவீன் பேசுகையில், “இப்படத்தைத் திரையரங்கில் சென்று பார்த்த அனைவருக்கும் நன்றி. இப்படத்திற்கு முழு ஆதரவைத் தந்த பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. இந்த வாய்ப்புக்கும் உடன் இருந்ததற்கும் விஷ்ணுவிற்கு நன்றி. படத்தின் நடிகர்கள் தொழில் நுட்ப  கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

நடிகர், இயக்குநர் செல்வராகவன் பேசுகையில், “நல்ல படம் எடு, நாங்கள் கொண்டு போய் சேர்க்கிறோம் என செயல்பட்டு வரும் பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. யாருமே கண்டுகொள்ளாத துள்ளுவதோ இளமை எனும் முதல் படத்திலிருந்து என்னைத் தூக்கிப்பிடித்து,  இப்போது வரை ஆதரவளித்து வருகிறீர்கள், அதற்கு நன்றி. விஷ்ணு மற்றும் பிரவீன் அவர்களின் பரந்த மனதிற்கும் அன்பிற்கும் நன்றி.” என்றார்.

 

நடிகர் விஷ்ணு விஷால், ராட்சசன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் இயக்குநர் செல்வராகவன்  மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், மானசா சௌத்திரி முக்கிய பாத்திரத்தில் நடிக்க, உடன் சாய் ரோனக், தாரக் பொன்னப்பா, மாலா பார்வதி, அவினாஷ், அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் ஆகியோர் இணைந்து  நடித்துள்ளனர். 

 

புதுமையான திரைக்கதையில் பரபரப்பான ஆக்சன் இன்வடிகேடிவ் திரில்லரான   இப்படத்தை இயக்குநர்  பிரவீன் K இயக்கியுள்ளார்.  விஷ்ணு விஷால் நடித்த ’எஃப்.ஐ.ஆர்’ படத்தை இயக்கிய மனு ஆனந்த், இந்த படத்தில் இணை எழுத்தாளராக பணியாற்றியுள்ளார்.

Related News

10740

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

Recent Gallery