Latest News :

மக்களின் குரலாக, கேள்வி கேட்கும் படங்கள் வெளியாவது மகிழ்ச்சியளிக்கிறது - நடிகர் கிஷோர்
Tuesday November-11 2025

ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G. R. மதன் குமார் தயாரிப்பில் கருணாநிதி இயக்கத்தில் கிஷோர் - TTF வாசன், அபிராமி, குஷிதா ஆகியோரின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'IPL (இந்தியன் பீனல் லா)' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

 

'IPL -இந்தியன் பீனல் லா' திரைப்படத்தில் கிஷோர், TTF வாசன், குஷிதா, அபிராமி, சிங்கம் புலி, ஹரிஷ் பெராடி, 'ஆடுகளம்' நரேன், ஜான் விஜய், போஸ் வெங்கட், திலீபன், ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். S. பிச்சு மணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் G.R. மதன் குமார் தயாரித்திருக்கிறார்.

 

இம்மாதம் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் முத்திரை பதித்த இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஆர். கே. செல்வமணி, ஆர். வி. உதயகுமார், பேரரசு ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

 

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் மதன் குமார் பேசுகையில், ''இந்த விழாவிற்கு வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.

 

இந்தப் படத்தின் ஹீரோ வாசன், அவரது ஒரு முகத்தை காண்பித்து நன்றாக நடித்திருக்கிறார். அவரைப் பற்றி பேசுவதற்கு பல அத்தியாயங்கள் உள்ளது. அவருக்கு இன்னும் பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதற்கும் என் வாழ்த்துகள்.  

 

இயக்குநர் கருணாநிதி என் நெருங்கிய நண்பர். எங்கள் இருவருக்கும் இடையே 25 ஆண்டு கால நட்பு இருக்கிறது. ஒரு நாள் என்னை சந்தித்து யதார்த்தமாக இப்படத்தின் கதையை சொன்னார். இது உண்மை கதை.  எல்லோருடைய வாழ்விலும் நடைபெற்று இருக்கக்கூடும். பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் இது போன்ற சம்பவங்களை எதிர்கொண்டு அதிலிருந்து பிறகு மெல்ல மெல்ல மீண்டு வந்திருப்பார்கள். நாட்டில் நடைபெறுகிற ஒரு விஷயம் தான் . அதனை இப்படத்தின் முன்னோட்டத்திலேயே நீங்கள் பார்த்திருக்கலாம்.  இந்தப் படத்தை அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த படத்தை தமிழகம் முழுவதும் எங்கள் நிறுவனமே வெளியிடுகிறது.

 

இதற்கெல்லாம் தொடக்க புள்ளி என ஒன்று இருக்கிறது. அவர்தான் என்னுடைய இனிய நண்பர் மார்ட்டின் சுரேஷ். கொரோனா காலகட்டத்தின் போது அதிகார வர்க்கத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டவர். இவர் சொன்ன சம்பவங்களை தழுவி தான் இப்படத்தின் திரைக்கதையை  இயக்குநர் கருணாநிதி எழுதி, சிறப்பான படத்தை உருவாக்கி இருக்கிறார்,'' என்றார்.

 

பாடலாசிரியர் கு. கார்த்திக் பேசுகையில், ''இப்படத்திற்காக என்னைத் தொடர்பு கொண்டு, 'ஐபிஎல்' என்றொரு படம், இது போன்றதொரு சூழல், கவித்துவமான பாடல் வரிகள் வேண்டும் என இசையமைப்பாளரும், இயக்குநரும் கேட்டுக் கொண்டனர். இந்தப் படத்தில் 'யாவளோ..' எனத் தொடங்கும் பாடலை எழுதியிருக்கிறேன்.

 

இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி என்னிடம் பேசும் போது ஒரு மெட்டின் அடிப்படை அமைப்பை அனுப்பி, இதற்கு பாடல் வரிகள் எழுத வேண்டும் என கேட்டார். நாங்கள் இருவரும் நேரில் சந்தித்துக் கொள்ளாமல் வாட்ஸப் மூலமாகவே உரையாடினோம். எனக்கு முதலில் முழு திருப்தி கிடைக்கவில்லை. அதன் பிறகு இசையமைப்பாளர், 'முயற்சி செய்து பார்ப்போம். நன்றாக வரும்' என்றார். அதன் பிறகு இசையை இணைத்து, கோர்த்து முழுமையான பாடலாக வழங்கும் போது, அதில் ஒரு ஃபீல் இருந்ததை உணர்ந்தேன், மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அத்துடன் அந்த பாடலுக்கு பொருத்தமான பாடகர், பாடகியையும் தேர்வு செய்திருந்தார். அந்தப் பாடலை சின்மயி பாடியிருந்தார்கள். சிவம் மகாதேவனும் தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இது போன்ற வெற்றி பாடலை வழங்கிய இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்திக்கு வாழ்த்துகள். மிகுந்த உயரத்திற்கு செல்வார் என்று நம்புகிறேன்,'' என்றார்.

 

இயக்குநர் ஆர். கே. செல்வமணி பேசுகையில், ''இப்படத்தின் இயக்குநர் கருணாநிதி என்னுடைய நண்பர். இயக்குநர் சங்கத்தில் எங்களுடன் இணைந்து பணியாற்றுபவர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இப்படத்தின் பணியில் ஈடுபட்டிருந்தார். படப்பிடிப்பு நடைபெறும் தருணங்களில் என்னை சந்தித்து, 'இன்னென்ன பிரச்சனை' என்று ஒவ்வொரு பிரச்சனையையும் பட்டியலிடுவார். அனைத்து பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைப்பேன். இந்த மேடையில் இயக்குநரையும், தயாரிப்பாளரையும் ஒன்றாக சந்தோஷமாக இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். இசை மற்றும் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளரும், இயக்குநரும் நண்பர்களாக இருக்கிறார்களே, இதுவே இப்படத்தின் வெற்றி. ஏனெனில் பல இயக்குநர்கள் என்னிடம் இசை வெளியீட்டு விழாவிற்கு தயாரிப்பாளர் எனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று புகார் தெரிவிப்பார்கள். ஆனால் தயாரிப்பாளர் படத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார். அத்துடன் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுவேன் என்று சொல்லி இருக்கிறார். இந்த படத்தின் மீது இயக்குநர் வைத்திருக்கும் நம்பிக்கையை விட அதிகமாக தயாரிப்பாளர் வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. இதனால் தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

 

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அஸ்வின் பாடகர்களையும், பாடகிகளையும் வரவழைத்து பாடல்களை பாட வைத்தது தான் உண்மையிலேயே இந்த படத்தை சிறப்பாக விளம்பரப்படுத்தும் நிகழ்வு. இது அனைவரையும் சென்றடையும்.‌ படத்தின் பணியில் மட்டும் பங்கெடுக்காமல் படத்தினை விளம்பரப்படுத்துவதற்கும் ஒத்துழைப்பு வழங்கியதற்காக அனைத்து இசைக்கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இந்தப் படத்தின் பாடல்களை பாடல்கள் திரையிடும்போது நாயகன் டிடிஎஃப் வாசன் என்னிடம் என்னை மெருகேற்றிக் கொள்ள இன்னும் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டார். அவரிடம் எதையும் கற்றுக் கொள்ளாதே. நீ இப்போது எப்படி இருக்கிறாயோ, அப்படியே இரு. அனைவருடனும் நட்பாக இரு. ஹீரோ ஆனதுக்கு பிறகு மாறி விடாதே. இயல்பாக இருந்தால் போதும். மற்றவை அனைத்தும் தானாக நடக்கும். வாய்ப்புகள் வரும் போதும், வாய்ப்புகள் வழங்கும் போதும் தயாரிப்பாளர்களிடம் எவ்வளவு தூரம் நீங்கள் நட்பாக இருக்கிறீர்களோ, அதுவே உங்களை காப்பாற்றும். மேடையில் எப்போது நீங்கள் பேசினாலும் உங்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் பெயரை குறிப்பிட தவறாதீர்கள். அது தயாரிப்பாளருக்கான சிறந்த மரியாதையாக இருக்கும். அவருக்கு நீங்கள் மேடையில் நன்றி தெரிவிக்கும் போது ,அவருடைய வாழ்த்து உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். கலைஞர்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் ஏற்படாமல் சுமுகமாக இயங்க வேண்டும். ஏனெனில் கலைஞர்கள் மக்களின் சொத்து,'' என்றார்.

 

இயக்குநர் ஆர். வி. உதயகுமார் பேசுகையில், ''இவ்விழாவில் கலந்து கொண்டிருக்கும் நடிகை அபிராமியை மட்டும் என்னால் மறக்க இயலாது. நான் இணைந்து பணியாற்ற விரும்பிய நடிகை. அவருடைய சிரிப்பு சிறப்பானது. அழகானது. என்னுடைய இயக்கத்தில் 'உலகை விலை பேச வா' எனும் படத்தில் கார்த்திக் சாரும், அபிராமியும் நடிப்பதாக இருந்தது. அப்படத்தின் பணிகள் பிறகு நடைபெறவில்லை.

 

எங்க ஊரிலிருந்து ஒரு பையன் தாறுமாறாக பைக் ஓட்டிக்கொண்டு கண்ட இடங்களில் ஓட்டி வழக்குகளை வாங்கியவன். ஒரே ரகளையாக திரிந்த பையன். இங்கு வந்து அமைதியாக நடித்து நாயகனாக மாறி இருக்கிறார். திடீரென்று அவர் ஹீரோவாகி இருப்பது எனக்கு சந்தோஷம் தான். உன்னால் இந்த திரையுலகம் மேம்பட வேண்டும் என வாழ்த்துகிறேன். நன்றாக வளர வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன். தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருக்கிறார். இப்படியே இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

 

இந்த திரைப்பட குழுவினரை பார்த்தவுடன் தான் சினிமா ஆரோக்கியமாய் இருக்கிறது என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஏனெனில் இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் படத்தின் மீது இருக்கும் நம்பிக்கையின் காரணமாக தமிழகம் முழுவதும் படத்தை அவரே வெளியிடுகிறார். இதை நான் வரவேற்கிறேன்.

 

கே .பாக்யராஜ் - பாரதிராஜா வரிசையில்  பலர் வந்தாலும் இன்றும் அவர்களைப் பற்றி நாம் பேசுகிறோம் என்றால், அவர்களுடைய கிரியேஷன் தான் காரணம். அவர்களுடைய எதார்த்தமான வாழ்வியல் வெளிப்பாடுதான் காரணம்.  அந்த வகையில் 'ஐபிஎல்' கூட எதார்த்தமான வாழ்வியல் வெளிப்பாடாக இருக்கும் என நம்புகிறேன்.  

 

கருணாநிதியை போன்ற திறமையான இயக்குநர்கள் ஏராளமானவர்கள் எங்களுடைய இயக்குநர் சங்கத்தில் உள்ளனர். அவர்களுக்கும் தயாரிப்பாளர் வாய்ப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என அவரிடம் கோரிக்கையும் வைக்கிறேன்.

 

சினிமாவில் தயாரிப்பாளர்கள் முதல் கடைநிலை தொழிலாளி வரை ஒற்றுமையாக இருந்தால்தான் வெற்றி பெற முடியும். இப்படத்தில் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். அதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.

 

பாடலாசிரியர் மோகன் ராஜ் பேசுகையில், ''இந்தப் படத்தில் நானும் ஒரு பாடலை எழுதி இருக்கிறேன்.‌ இப்படத்தின் இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி எனக்கு மெட்டை அனுப்பி வைத்து விட்டார். அதன் பிறகு நான் அவருடைய இசை சார்ந்த பணிகளை பார்வையிட்ட போது அவர் கமர்ஷியலாக பணியாற்றுபவர், ஆனால் என்னுடைய பாடல் கதை சார்ந்து இருக்கிறது. நான் எப்படி அவருடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என நினைத்தேன். அதன் பிறகு இயக்குநருடன் உரையாடினேன். அப்போதுதான் இசையமைப்பாளருக்கு அவருடைய தேவை என்ன என்பதில் ஒரு தெளிவு உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன்.

 

இந்தப் படத்தில் 'காத்தோடு போகுமா..' எனத் தொடங்கும் ஒரு பாடலை எழுதியிருக்கிறேன். இந்தப் பாடலின் சரணத்தில் 'வெட்டவெளி எங்கேயும் காத்து வழித்துணை ஆகுமே .. விழி அறியா தோழனாக தொட்டுத் தொட்டுப் பேசுமே...' என்ற பாடல் வரிகளும், 'நதி மீது வீசும் கல்லால் காயம் ஆகாதே.. அதை வாங்கி உள்ளே வைக்கும் தேங்கி நிற்காதே...' போன்ற வரிகளை என்னுடைய இளமைக் காலத்தில் என் சொந்த கிராமத்தில் இயற்கையுடன் இணைந்து பெற்ற அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  இந்த வரிகள் இடம் பெற்றதற்கு இசையமைப்பாளரும், இயக்குநரும் தான் காரணம். அவர்கள் இருவரும் வரிகளை நேசிப்பவர்கள்.‌

 

நான் பாடலாசிரியர் ஆர்.வி. உதயகுமாரின் ரசிகன். 'பொன்னுமணி' படத்தில் 'நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா தெரியுமா...' அந்த வரிகளுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். அந்த வரிகள் சாதாரணமாக தெரிந்தாலும், அதை எழுத வேண்டும் என்ற யோசனை என்னை வியப்பில் ஆழ்த்தியது,'' என்றார்.

 

நடிகர் போஸ் வெங்கட் பேசுகையில், ''நான் சினிமாவை கற்றுக் கொண்டிருக்கும்போது, இன்னும் கூடுதலாக கற்றுக் கொடுத்த படம் 'ஐபிஎல்'. இந்த படத்தின் இயக்குநரின் பெயர். எனக்கு மிகவும் பிடித்தமான பெயர். என் அப்பா என்னை ஊட்டி ஊட்டி வளர்த்த பெயர். அவர் பெயர் கருணாநிதி. பெயருக்கு ஏற்றார் போல் இந்த படத்தில் ஒரு அருமையான அரசியலை சொல்லி இருக்கிறார்.

 

இந்தப் படத்தின் கதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் என் நண்பர் சுரேஷ் என்னிடம் சொன்னார். கதையை முழுவதும் கேட்டுவிட்டு, இது சீக்கிரம் திரைப்படமாகும். அதற்கு ஏற்ற கதை என்று அவரிடம் சொன்னேன். அதன் பிறகு இயக்குநர் கருணாநிதி இந்த கதையை என்னை சந்தித்து சொன்னார் அவருடன் சுரேஷையும் பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது.

 

திடீரென்று நம் வாழ்க்கையில் சில தம்பிகள் குறுக்கிடுவார்கள். அது போல் குறுக்கிட்டவர் தான் இப்படத்தின் தயாரிப்பாளர் மதன் குமார்.  நான் ஒரு சிக்கலில் இருந்தபோது கேட்காமலேயே கணிசமாக பணம் வழங்கி என்னை அந்தப் பிரச்சனையில் இருந்து மீட்டவர் மதன்குமார். இந்தக் காலத்தில் நேரில் சென்று காலில் விழுந்தாலும் பண உதவி என்பது கிடைப்பது கஷ்டம். அது போன்ற தருணத்தில் மதன்குமாரின் செயல் என்னை ஆச்சரியப்படுத்தியது. அவருடைய இந்த நல்ல உள்ளத்திற்காகவே இந்த படம் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்,'' என்றார்.

 

நடிகை குஷிதா பேசுகையில், ''எனக்கு தமிழ் மொழி தெரியாது. கற்றுக் கொண்டு வருகிறேன். நான் நடித்த 'ஐபிஎல்' தமிழ் திரைப்படம் நவம்பர் 28ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வந்து பார்க்க வேண்டும். இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்,'' என்றார்.

 

நடிகர் டி டி எஃப் வாசன் பேசுகையில், ''இந்த படத்திற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இது என்னுடைய முதல் படம். நிச்சயமாக நிறைய தவறுகளை செய்திருப்பேன். படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு உங்களுடைய நேர்மையான விமர்சனங்களை வெளியிடுங்கள். நீங்கள் குறிப்பிடும் என்னுடைய குறைகளை நான் திருத்திக் கொள்கிறேன்.

 

நான் நான் கூச்ச சுபாவம் உள்ள பையன், இதை சொன்னால் யாரும் நம்ப மறுக்கிறார்கள். இந்தப் படத்தின் பாடலுக்காக நடனம் ஆடும் போது நடன இயக்குநருக்கு என்னுடைய கூச்ச சுபாவம் தெரியும். எனக்கு ஆட வேண்டும் என்ற விருப்பம் உண்டு . ஆனால் ஆடத்தெரியாது. இருந்தாலும் இப்படத்தில் நடனமாடி இருக்கிறேன். அதற்காக நடன இயக்குநருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.‌

 

படப்பிடிப்பு தளத்தில் சக நடிகையான குஷிதா முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார். அதிலும் குறிப்பாக முத்த காட்சியில் சௌகரியமான பங்களிப்பை அளித்தார்.

 

இயக்குநருக்கு முதலில் கர்ணன் - அதன் பிறகு கருணாகரன்-  இறுதியாக அவருடைய அசல் பெயரான கருணாநிதியையே டைட்டிலில் இடம் பெற வைத்திருக்கிறார்.

 

படத்தில் என்னுடன் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இப்படத்தின் டீசர் வெளியான தருணங்களில் இருந்து நான் என் சைடு ப்ரோமோஷனை தொடங்கி விட்டேன். என்னுடைய முதல் படம். என்னை நம்பி ரிஸ்க் எடுத்திருக்கும் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் ஏதாவது நல்லது நடந்திட வேண்டும் என்ற நோக்கத்தில் புரமோட் செய்து கொண்டு வருகிறேன். அனைவரும் இப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

 

இந்த படத்தின் இரண்டாம் பகுதியில் என்னை நானே திரையில் பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது. அந்த அளவிற்கு இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி மேஜிக் செய்திருந்தார்.  

 

உண்மை சம்பவத்தை தழுவி, அது சற்று கற்பனையை கலந்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம். சமூகத்தில் எவ்வளவு அநியாயங்கள் நடைபெறுகிறது என்பதை மக்களுக்கு சொல்லி இருக்கிறோம். செய்தித்தாள்களில் இது போன்ற சம்பவங்களை பார்வையிடுகிறோம், எளிதாக கடந்து சென்று விடுகிறோம். அந்த செய்திக்கு பின்னால் எந்த அளவு உண்மை இருக்கிறது. எந்த அளவிற்கு அரசியல் பலமும், பண பலமும் மிக்கவர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்த படம் எடுத்துச் சொல்கிறது. நவம்பர் 28ம் தேதி உங்கள் வீட்டுப் பிள்ளை வாசனின் முதல் படம் 'ஐபிஎல்' வெளியாகிறது. அனைவரும் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.

 

நடிகை அபிராமி பேசுகையில், ''எங்களது 'ஐபிஎல்' படத்தை வாழ்த்த வந்த விருந்தினர்களுக்கு நன்றி. முதல் பட தயாரிப்பாளர், முதல் பட இயக்குநர், என்ற பாகுபாடு இல்லாமல் இங்கு வாழ்த்த வருகை தந்த அனைவருக்கும் நன்றி. கடினமாக உழைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். நாளிதழில் வெளியான செய்தியை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது. இருந்தாலும் அனைவராலும் எளிதில் தொடர்பு படுத்திக்கொள்ளக்கூடிய நிறைய விஷயங்கள் இதில் உள்ளது. குடும்பத்தின் கதை உள்ளது, அழகான காதல் கதை உள்ளது, சஸ்பென்ஸ் உள்ளது, சண்டை காட்சி இருக்கிறது. வாசன் பைக்கிலேயே சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும் இப்படத்தில் உள்ளது. இந்தப் படத்தை அனைவரும்  திரையரங்குகளில் வந்து பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.

 

IPL

 

நடிகர் கிஷோர் பேசுகையில், ''சினிமா மக்களின் மீடியம். அதற்கு மிகப்பெரிய உதாரணம் இங்கு மேடையில் வீற்றிருக்கும் இயக்குநர் கே. பாக்யராஜ். மக்களுக்காக மக்களுடைய கதைகளை எடுத்து அதன் மூலமாக நிறைய கேள்விகளை உண்டாக்கி தீர்வினை கண்டவர். தற்போது காலம் மாறி இருக்கிறது. சினிமா கிட்டத்தட்ட சிஸ்டத்தின் அடிமையாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து இதுபோன்ற மக்களின் குரலாக ஒலிக்கும், கேள்வி கேட்கும் படங்கள் வெளியாவது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த வகையிலான ஒரு படமாக 'ஐபிஎல்' இருக்கிறது. அதில் நானும் ஒரு பங்காக இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. இதற்காக தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும், உடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படக்குழுவின் துணிச்சலுக்கு மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என நம்புகிறேன்,'' என்றார் .

 

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ''கோயம்புத்தூரில் பீளமேடு பக்கத்தில் பாரதிபுரம் என்ற பகுதியில் நாங்கள் இருந்தோம் .அங்கிருந்து சித்தா புதூர் எனும் புது ஏரியாவிற்கு குடிபெயர்ந்தோம். அந்த ஊருக்கு செல்லும் வழியில் கேரம் கிளப் என்ற ஒரு விளையாட்டு கூடம் இருந்தது. எனக்கு கேரம் என்றால் மிகவும் பிடிக்கும். அந்த கிளப்பில் கேரம் விளையாடினேன். புது நபர் என்பதால் என்னுடன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் எதிர்த்து விளையாடினார்கள். நான் நன்றாக விளையாடுவேன். அதனால் தினமும் வெற்றி பெற்றுக் கொண்டே வந்தேன். அங்குள்ளவர்கள் 'ச்சே! இந்த நேரத்தில் நம்மாள் இல்லையே..!' என வருத்தப்பட்டனர். இது தினமும் தொடர்ந்தது. எனக்கும் அந்த நபர் யார், என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், அவருடன் விளையாட வேண்டும் என்ற ஆசையும் அதிகரித்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமையை தேர்வு செய்து எங்கள் இருவரையும் கேரம் விளையாட வைத்தனர். அவர் அறிமுகமான பிறகு அவரும் நானும் ஆடத்தொடங்கினோம். அவருடைய ஸ்டைல் என்ன என்று தெரிந்து கொள்வதற்காக நான் சற்று பொறுமையாக விளையாடினேன். அவர் தொடர்ந்து நன்றாக விளையாட அந்த ஏரியாவில் உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அவரை தொடர்ந்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தனர். அவருடைய பலவீனத்தை தெரிந்து கொண்டேன். அதன் பிறகு நான் என் திறமையை வெளிப்படுத்தினேன்.‌ அப்போது அவர் லேசாக வியப்படைந்து என்னை பார்த்தார். கூட்டத்தில் உள்ளவர்கள் அவர் தோல்வியை சந்தித்து விடுவாரோ என்ற பதற்றம் அடைந்தனர், சற்று உணர்ச்சிவசப்பட்டனர். அந்த நேரத்தில் நான் சற்று யோசிக்கத் தொடங்கினேன். அத்துடன் என் ஆட்டத்தின் வேகத்தையும் குறைத்துக் கொண்டேன். கூட்டத்தில் உள்ளவர்கள் அவரை ஹீரோவாக பார்க்கிறார்கள். அதனால் அவர் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினேன். பிறகு மெதுவாக விளையாடத் தொடங்க ஆட்டத்தில் அவர் வெற்றி பெற்றார். ஆட்டம் நிறைவடைந்த பிறகு அவரை பாராட்டினேன். அதற்கு நான் உங்களை வெற்றி பெறவில்லை. நீங்கள் தான் எனக்கு விட்டுக் கொடுத்தீர்கள். அதற்கு ரொம்ப நன்றி என்று சொன்னார்.‌  அன்றிலிருந்து எனக்கு அவர் தோழனாகி, சிறந்த நண்பன் ஆகி விட்டார். அதன் பிறகு நான் சினிமாவுக்கு வந்து விட்டேன். அவர் தொடர்ந்து குறைந்த சம்பளத்தில் மில்லில் வேலை பார்த்து வந்தார். அதன் பிறகு அவரை சினிமாவுக்கு அழைத்து வந்தேன். அவர்தான் எனது நண்பரான பழனிச்சாமி. 'இன்று போய் நாளை வா' திரைப்படத்தில் இந்தி வாத்தியராக நடித்த பழனிச்சாமி. 'தீனா', 'ரெட்டை ஜடை வயசு', 'ஆயுத பூஜை' என  மூன்று படங்களை தயாரித்த தயாரிப்பாளராகவும் உயர்ந்தார். இதை நான் இங்கு ஏன் பகிர்ந்து கொள்கிறேன் என்றால் நட்பு என்பது எப்போதும் உயர்வானது. அதை சம்பாதித்தால் வேறு எதையும் நீங்கள் சம்பாதிக்க வேண்டியதில்லை. இங்கு நான் அவரை அழைத்து வந்து தயாரிப்பாளராக்கினேன். ஆனால் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தன் நண்பனை அழைத்து வந்து இயக்குநராக்கி இருக்கிறார். இவர்களுடைய நட்பு என்னை  நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இதற்காக தயாரிப்பாளருக்கு நான் பிரத்யேகமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இயக்குநர் கருணாநிதி வெற்றிமாறனின் உதவியாளர் என சொன்னார்கள். அவருடைய நம்பிக்கை வெற்றி பெறும்.‌ அவருக்கு என்னுடைய பாராட்டுகள்.‌

 

நடிகை ரேவதி முதன்முதலில் என்னுடைய 'டார்லிங் டார்லிங் டார்லிங்' படத்தில் நடிப்பதற்காகத்தான் வந்தார்கள். அவருடைய வயது கதாபாத்திரத்துக்கு பொருத்தமானதாக இல்லை. அதனால் சிறிது காலம் காத்திருங்கள் என்று சொன்னேன்.‌ இந்த இடைவெளியில் எங்கள் இயக்குநர் பாரதிராஜா, 'மண்வாசனை' படத்தில் ரேவதியை அறிமுகப்படுத்திவிட்டார்.‌ அடுத்த படத்தில் நடிகை ரஞ்சனியை அறிமுகப்படுத்துவதற்காக போட்டோ ஷுட் நடத்தி காத்திருக்க சொன்னேன். அதற்குள் எங்கள் இயக்குநர் பாரதிராஜா 'முதல் மரியாதை' படத்தில் அவரை அறிமுகப்படுத்திவிட்டார். 'அந்த ஏழு நாட்கள்' படத்தில் நடித்த நடிகை அம்பிகாவை அவருடைய தங்கை ராதா தான் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது அவரிடம் அடுத்த படம் 'தூறல் நின்னு போச்சு' கிராமத்து சப்ஜெக்ட் அதில் அறிமுகப்படுத்துகிறேன் என்று சொன்னேன். இதற்குள் எங்கள் இயக்குநர் அம்பிகாவையும் நடிக்க வைத்தார். இப்படி நடிகைகளை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு தவறி தவறிக் கொண்டே இருந்தது. ஆனால் அனைவரும் சிறப்பான உயரத்திற்கு சென்றார்கள். ஏனெனில் எங்களுடைய இயக்குநரின் ஆசி அப்படி.‌

 

அதனால் அபிராமி கதாநாயகியாக நடித்ததை விட, கதையின் நாயகியாக நடிக்கும் போது அவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது. இப்போதுதான் அவர் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

 

ஹீரோ வாசன் யூடியூப் பிரபலம் என்பதால் அவர்முதல் படத்திலேயே நன்றாக நடனம் ஆடி இருக்கிறார் அவருக்கு ஏற்கனவே ரசிகர்கள் இருப்பதால் இந்த படம் வெற்றி பெறும்.

 

இந்தப் படத்தின் கதை உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்பட்டிருக்கிறது என்று இயக்குநர் சொன்னார். இது போன்ற கதைகளை மக்கள் எளிதாக அடையாளம் கண்டு, அதனுடன் தொடர்பு படுத்திக் கொள்வார்கள். அதனால் வெற்றியும் கிடைக்கும். இதனால் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலும் எழுந்து இருக்கிறது. அதனால் படம் நிச்சயமாக வெற்றி பெறும். வெற்றி விழாவில் அனைவரையும் சந்திக்கிறேன்,'' என்றார்.

 

இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி பேசுகையில், ''இந்தப் படம் இசையமைப்பாளரிடம் வந்த போது அந்தப் படத்தில் நடித்த கதாபாத்திரங்களாகவே நடித்திருந்தார்கள். திரையில் அப்படித்தான் தோன்றினார்கள். அதற்குத்தான் நாங்கள் இசை அமைத்திருக்கிறோம். அதிலும் குறிப்பாக இப்படத்தின் நாயகன் வாசன் தோன்றும் 15 நிமிட சேசிங் காட்சி இருக்கிறது. அது நிச்சயமாக அற்புதமான திரையரங்க அனுபவத்தை அனைவருக்கும் வழங்கும். இதற்காக அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று இந்த படத்தை பார்க்க வேண்டும்.‌ இந்தப் படத்தில் வாய்ப்பளித்ததற்காக தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும், பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.

 

இயக்குநர் கருணாநிதி பேசுகையில், ''ஐபிஎல்- இந்தியன் பீனல் லா-  இந்திய தண்டனை சட்டம். சாதாரண மனிதன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது அதிகார பலமும், பண பலமும் மிக்கவர்கள் தங்களுக்கு ஒரு பிரச்சனை வந்தால், அந்த பிரச்சனையை சாதாரண மனிதன் மேல் திணித்து விட்டு எப்படி தப்பித்துக் கொள்கிறார்கள், இதன் மூலம் சாதாரண மனிதார்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதற்காக இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்.

 

பத்திரிகைகளில் கொலைகள், விபத்து என நிறைய செய்திகள் வெளியாகும். இவை உண்மையான கொலைகளா, உண்மையான விபத்து தானா என்பது யாருக்கும் தெரியாது. அதற்கு பின்னணி குறித்து விசாரித்து பார்த்தால் தான் உண்மை தெரிய வரும். அதன் பின்னால் சதிகள் இருப்பதை தெரிந்து கொள்ள முடியும். ஆனால் நாம் அதை எளிதாக கடந்து சென்று விடுவோம்.‌

 

இது போன்றதொரு செய்தியைத் தான் 'ஐபிஎல்' படத்தில் நாங்கள் விரிவாக பேசியிருக்கிறோம். அனைவரும் இந்த படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.

Related News

10752

Kids special animation film 'kiki & koko' teaser launch event
Saturday December-27 2025

India's first kid's animation film, 'Kiki & Koko' directed by P.Narayanan and presented by Inika Productions, had its teaser launch event on Dec 26, 2025...

இந்த படம் எங்களுக்கு பெருமை - ‘கிகி & கொகொ’ படக்குழு உற்சாகம்
Saturday December-27 2025

இனிகா புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் அனிமேஷன் படம் ‘கிகி & கொகொ’...

வைரலான ஸ்ருதிஹாசன் பாடல்!
Saturday December-27 2025

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்புடன் மட்டுமல்லாமல் தன் இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார்...

Recent Gallery