லத்திகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சசிகுமார் பாலா தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்கள் ‘டிரம்ப் கார்டு’ மற்றும் ‘சேரநாட்டு யானைதந்தம்’.
வெளிநாட்டில் படிக்க செல்லும் இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், வெளிநாட்டுக்கு படிக்க செல்ல விரும்புகிறவர்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய விசயங்களையும் மையமாக வைத்து உருவாகும் ‘டிரம்ப் கார்டு’ படத்தை ஜியோ ராஜகோபால் இயக்குகிறார். காதல் கதையாக உருவாகும் ‘சேரநாட்டு யானைதந்தம்’ படத்தை பூலோகம் ரவி இயக்குகிறார். இந்த இரண்டு படங்களுக்கும் எஸ்.பார்த்திபன் ஒளிப்பதிவு செய்ய, கணேஷ் குமார்.டி படத்தொகுப்பு செய்கிறார்.
‘டிரம்ப் கார்டு’ படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் பிலாக் பாண்டி நடிக்கிறார். இவருடன் ஜி.எம்.குமார், இ.வி.கணேஷ் பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ‘சேரநாட்டு யானைதந்தம்’ படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
இப்படங்களின் அறிமுக விழா நவம்பர் 15 ஆம் தேதி, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் விஜயமுரளி, இயக்குநர் ஆர்.அரவிந்தராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றார்கள்.
நிகழ்வில் நடிகரும் இயக்குநருமான இ.வி.கணேஷ் பாபு பேசுகையில், “ஒரே தயாரிப்பாளரின், ஒரே நிறுவனத்தின் இரண்டு திரைப்படங்களின் அறிமுக விழா இது. லத்திகா புரொடக்ஷன்ஸ் சசிகுமார் பாலா தயாரிப்பில் இரண்டு திரைப்படங்கள், ஒன்று ’டிரம்ப் கார்டு’. இதை ஜோ ராஜகோபால் இயக்குகிறார். மற்றொரு படம் பூலோகம் ரவி இயக்கும் ’சேரநாட்டு யானைதந்தம்’. இந்த இரண்டு இயக்குநர்களும் மிகப்பெரிய ஆளுமைகள். இந்த இரண்டு படங்களின் அறிமுக விழாவுக்கு வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களான இயக்குநர் பேரரசு சார், தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி, இயக்குநர் ஆர்.அரவிந்தராஜ் ஆகியோருக்கு நன்றி.
’டிரம்ப் கார்டு’ திரைப்படத்தில் நானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். முதன்மை கதாபாத்திரத்தில் பாண்டி நடித்திருக்கிறார். நிறை இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க ஆசைப்படுகிறார்கள், அந்த ஆசையால் பெரிய நடைமுறை சிக்கல்களை அனுபவிக்கிறார்கள். கோடி கோடியாக பணம் வைத்திருப்பவர்கள் கூட வெளிநாட்டில் படிக்க ஆசைப்பட்டு, அதற்கான சரியான வழி தெரியாமல் தடுமாறுவதும், பிரச்சனைகளில் சிக்கிக் கொள்வதையும் ‘டிரம்ப் கார்டு’ சொல்கிறது. வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு பகுதி நேர வேலை நேர்மையாக கொடுக்கப்படுகிறதா ?, அவர்களுக்கு ஊதியம் சரியாக கொடுக்கப்படுகிறதா ? என்பதையும், வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான ஒரு விழிப்புணர்வு படமாகவும் இந்த படம் இருக்கும்.
‘பஞ்ச தந்திரம்’ உள்ளிட்ட பல பெரிய தமிழ்ப் படங்கள் மற்றும் இந்திய படங்களுக்கு பல்வேறு ஏற்பாடுகளை வெளிநாட்டில் செய்து கொடுத்திருப்பவர் ராஜகோபால் சார். அவருக்கு தெரியாத பிரபலங்களே இல்லை. அடுத்தடுத்த நிகழ்வில், அந்த பிரபலங்கள் பங்கேற்பார்கள்.
’சேரநாட்டு யானைதந்தம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் பூலோகம் ரவி, இயக்குநர் செந்தமிழனிடம் பணியாற்றியவர். ஷங்கர் சாரிடம் பணியாற்றிய செந்தமிழனிடம் பல வருடங்களாக பயணித்து பல அனுபவங்களை பெற்றிருக்கிறார். சசிகுமார் பாலா வெளிநாட்டில் இருந்து வந்து தயாரிக்கிறார். அவருக்கு சினிமா பற்றி சில சந்தேகங்கள், பயம் இருக்கிறது, அதை போக்க வேண்டிய கடமை நமக்கு உண்டு. அவர்கள் ஒரு படத்தை தொடங்கும் போது அதை சரியான முறையில் முழுமையாக முடித்து திரைக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அதற்கு முன்பாகவே சில தவறான மனிதர்களால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழல் உள்ளது. அந்த சூழலில் இருந்து அவரை மீட்டு அவர் நினைத்தது போல் படத்தை முடிக்க நாம் ஒத்துழைக்க வேண்டும்.
ஒரு படம் தயாரித்து அதன் மூலம் லாபம் சம்பாதிக்க வேண்டும், அல்லது போட்ட முதலீட்டை திரும்ப பெற வேண்டும் என்று கூட நினைக்கவில்லை. தயாரிக்கும் படங்கள் சரியான முறையில் முடிவடைந்து திரைக்கு வந்தாலே போதும், என்று தான் நினைக்கிறார்கள். அது நடக்க நாம் ஒத்துழைக்க வேண்டும்.
இரண்டு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய கூடிய பார்த்திபன், மூத்த கலைஞர், அசோக் குமாரிடம் பணியாற்றியவர். இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு மூன்றாவதாக இவர்கள் தயாரிக்கும் படத்தை பார்த்திபன் இயக்குகிறார். அதற்கு ’தேங்காய் சீனிவாசன்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார். முழுக்க முழுக்க காமெடி பட்மாக உருவாக உள்ளது.
குறுகிய காலக்கட்டத்தில் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த பி.ஆர்.ஓ கார்த்திக்குக்கு படக்குழு சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
தயாரிப்பாளர் விஜயமுரளி பேசுகையில், “ஒரே சமயத்தில் இரண்டு படங்கள் எடுக்கிறார்கள், இதை உங்கள் படம் போல் நினைத்து ஊடகத்தினர் சவாலாக எடுத்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இதில் பெரிய நடிகர், நடிகைகள் இல்லை. பெரிய படங்களை பொறுத்தவரை ஒரு புகைப்படத்தை வைத்தே விளம்பரம் செய்யலாம். ஆனால், இதுபோன்ற படங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பது பெரிய சவால், அதை ஊடகத்தினர் செய்ய வேண்டும், என்று கேட்டுக் கொள்கிறேன். தலைப்பு மிக சிறப்பாக இருக்கிறது. தினமும் செய்தியாக வரும் தலைப்பு. இந்த இயக்குநருக்கு வாழ்த்துகள், பெரிய வெற்றியடைய வேண்டும், வாழ்த்துகள்.” என்றார்.
இயக்குநர் ஆர்.அரவிந்தராஜ் பேசுகையில், “படக்குழுவினருக்கு வணக்கம், எங்கு சென்றாலும் நான் தமிழை மறக்க மாட்டேன் என்பது போல், தன் தாய்மொழிக்காகவும், தாய்நாட்டுக்காகவும் வெளிநாட்டில் இருந்து வந்து தமிழ்ப் படங்கள் தயாரிக்கும் சசிக்கு என் வாழ்த்துகள். ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் தயாரிப்பது கூடுதல் சிறப்பு. இரண்டு படங்களின் இயக்குநர்களும் சிறப்பானவர்கள். தலைப்பும் கவனம் ஈர்க்கும் வகையில் இருக்கிறது. இதன் போஸ்டரை பார்க்கும் போதே படத்தில் ஏதோ விசயம் இருப்பது தெரிய வருகிறது. இதில் ஏதோ உலக அரசியல் பேசுகிறார்கள் என்பது புரிகிறது. அரசியல் படம் பண்ணும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். நான் ஒரு படம் இயக்கி விட்டு இன்னமும், நீதிமன்றம், வழக்கு என்று பயணித்துக் கொண்டு இருக்கிறேன். அதிலும் உலக அரசியலைப் பற்றி பேசும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
சேரநாட்டு யானைதந்தம் இயக்குநர் பூலோகம் ரவி சிறப்பாக பண்ணியிருப்பார், அவரை எனக்கு நன்றாக தெரியும். இந்த இரண்டு படங்களும் சிறப்பாக வர வேண்டும், அதே போல் படத்தை வெளியிடும் போது சரியான நேரத்தில் வெளியிட வேண்டும், அது தான் இப்போது மிக முக்கியமானதாக இருக்கிறது. இரண்டு படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசுகையில், “தயாரிப்பாளர் சசி அவர்கள் இன்று இரண்டு படங்களை அறிவித்துள்ளார். இன்று ஒரு படம் அறிவிப்பதே சவலாக இருக்கிறது. இது அவரது நம்பிக்கை, சினிமா மீதான காதல். இரண்டு படங்களின் தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது. ஒன்று டிரம்ப் கார்டு, டிரம்ப் நம்மை வம்புக்கு இழுத்தது போல், அவரை நாம் வம்புக்கு இழுக்கிறோமா என்று படம் வெளியாகும் போது தான் தெரியும். மற்றொன்று சேரநாட்டு யானைதந்தம். இந்த தலைப்பே யோசிக்க வேண்டியது. இது முழுக்க முழுக்க காதல் கதை. இது சேர நாடு, டிரம்ப் கார்டு அயல் நாடு, இரண்டு நாடுகளை வைத்து எழுதியிருக்கிறார்கள்.
டிரம்ப் கார்டு என்பது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே தேவைப்படுகிற விசயம், முன்பெல்லாம் இங்கு படித்துவிட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு போவது போதையாக இருந்தது, இப்போது வெளிநாட்டில் படிப்பதே போதையாகிவிட்டது. இது நல்லதா ஆபத்தானதா என்று யோசித்தால், இது ஆபத்து தான். உங்களுக்கு உலகளவில் அனைத்து நாடுகளிலும், விரும்புகிற ஆட்கள் இந்தியர்கள், அவர்கள் அறிவாளிகள். ஏழு எட்டு ஆண்டுகளாக வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்ற ஆசை மாணவர்களிடம் அதிகரித்திருக்கிறது. அதற்கு முன்பு இந்தியாவில் படித்தவர்களை தான் வெளிநாட்டுக்கு வேலைக்கு அழைப்பார்கள். இன்று படிக்க செல்கிறார்கள், அதில் உள்ள சிக்கல்கள் என்ன என்று இயக்குநர் படத்தில் விரிவாக சொல்லியிருப்பார், என்று நினைக்கிறேன்.
ஒரு காலத்தில் துபாய்க்கு வேலைக்காக இந்தியர்களை தான் அதிகமாக அழைத்தார்கள். அங்கு அனைத்து வேலைகளுக்கும் நம் ஆட்கள் தான் பயன்படுத்தினார்கள். ஆனால், இப்போது இந்தியர்களை துரத்துகிறார்கள், காரணம் அவர்களுக்கான வேலைகள் முடிந்து விட்டது. இனி இந்தியவர்கள் தேவையில்லை என்று நினைக்கிறார்கள். சாலைகள் போடுவது உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக பயன்படுத்தப்பட்ட இந்தியர்கள், அத்தகைய பணிகள் முடிந்த உடன், விரட்டப்படுகிறார்கள். அமெரிக்காவிலும் தற்போது அதே நிலை தான் ஏற்பட்டுள்ளது. எனவே, அம்மா - அப்பா என்று குடும்பத்துடன் வாழ்வது தான் வாழ்க்கை. வெளிநாட்டில் இருப்பவர்கள், வேலை செய்பவர்கள் தங்களை ஒரு அனாதையாக நினைக்கிறார்கள்.
குழந்தைகளை பிளே ஸ்கூலில் சேர்க்கிறார்கள், எந்த வயதில், அப்பா - அம்மா அரவணைப்பு இருக்க வேண்டுமோ அந்த வயதில் அவர்களை பிளே ஸ்கூலில் சேர்க்கிறார்கள். அதேபோல், எந்த வயதில் பிள்ளைகள் அப்பா - அம்மாவுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமோ அந்த வயதில் அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி விடுகிறோம். பெற்றோருக்கு உறுதுணையாக இல்லாதவர்கள் பிள்ளைகளே இல்லை.
’சேரநாட்டு யானைதந்தம், வித்தியாசமான காதல் கதையாக இருக்கும். கதை பற்றி இயக்குநர் விரிவாக சொல்லவில்லை. ஆனால், கதையில் ஏதோ விசயம் இருக்கும் என்பது தெரிகிறது. பூலோகம் ரவி நல்ல விசயம் வைத்திருப்பார் என்று தெரிகிறது. இரண்டு படங்களும் பெரிய வெற்றி பெற வேண்டும், வாழ்த்துகள்.” என்றார்.
தயாரிப்பாளர் சசிகுமார் பாலா பேசுகையில், “குறுகிய காலத்தில் இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த பி.ஆர்.ஓ கார்த்திக் அவர்களுக்கு நன்றி. நான் கனடாவில் இருந்து வந்திருப்பதாக சொல்கிறார்கள், நான் இலங்கை நாட்டை சேர்ந்தவன், இலங்கை மலையக தமிழன். கனடா சென்று, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளை செய்திருக்கிறேன். இதற்கு முன்பு நான் ஒரு படத்தில் தயாரிப்பாளராக அறிமுகமானேன், அப்படத்தின் இயக்குநர் சுதாகரன் அண்னாவுக்கு நன்றி. அதன் மூலமாக ராஜகோபால் சார் அறிமுகம் கிடைத்து பிறகு பூலோகம் ரவியின் அறிமுகம் கிடைத்து, அவர்களிடம் கதை கேட்டு, வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற முயற்சியில் இந்த இரண்டு படங்களை ஆரம்பித்திருக்கிறோம். இந்த இரண்டு படங்களும் மக்களுக்கான கமர்ஷியல் படங்களாக மட்டும் இன்றி, ஒரு விழிப்புணர்வு படங்களாக இருக்கும், நன்றி.” என்றார்.
இயக்குநர் ஜியோ ராஜகோபால் பேசுகையில், “பெருமைக்காகவோ, பெயருக்காகவோ இங்கு நான் வரவில்லை, ஒரு திரைப்படம் தயாரிக்க வேண்டும், இயக்குநர் பேரரசு போல் ஒரு இயக்குநராக வேண்டும் என்பது தான் என் ஆசை. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து படிக்க செல்லும் மாணவர்கள், தங்களது பெற்றோர்கள் செலவில் செல்கிறார்கள். ஆனால், அவர்களுக்கான பண தேவைக்காக அங்கு வேலை செய்கிறார்கள். அப்போது அங்கிருக்கும் காய்ககறி உள்ளிட்ட கடைகளை நடத்தும், நமது மக்களில் சிலர் அவர்களை அடிமைப்போல் நடத்துகிறார்கள். படிக்க வரும் போது நேர் வழியாக வர வேண்டும், டிரம்ப் கார்டு என்பது அது தான். டிரம்ப் என்ன சொல்கிறார், நேர் வழியாக வாருங்கள், கல்லத்தனமாக வந்தால் நீங்ட்கள் உங்கள் வாழ்க்கையை இழக்க நேரிம், என்கிறார். அதை தான் டிரம்ப் கார்டு படமும் சொல்கிறது. அதேபோல், மொழி, ஜாதி கடந்து மக்கள் வாழும் நாடு கனடா, அங்கு அனைவருக்கும் சம உரிமை வழங்கப்படுகீறது. அதுபோல் உலகத்தின் அனைத்து நாடுகளில் இருந்து வரும் மாணவர்களுக்கும், இந்திய மாணவர்களுக்கும் அதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுக்க வேண்டும். வல்லரசாக வேண்டும் என்ற பேரரசுவின் ஆசைப்படி, இந்தியா கல்வி மற்றும் செல்வத்தில் திளைத்து மேல் நாடுகள் போல் வளர்ந்து, மாணவர்கள் வெளிநாடு செல்லாமல் இங்கேயே படிப்பை முடித்து, இந்த நாட்டுக்குள்ளேயே பணிகளை செய்து, ஆற்றலை வழங்க வவேண்டும் என்பது தான் எங்கள் ஆசை, நன்றி” என்றார்.
இயக்குநர் பூலோகம் ரவி பேசுகையில், “எனக்கு இந்த வாய்ப்பளித்த சசி சார் மற்றும் ராஜகோபால் சாருக்கு என் முதல் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் அம்மா பெயர் பூலோகம் அதனால் நான் பூலோகம் ரவி என்று பெயர் வைத்திருக்கிறேன். நான் பூலோகம் படத்தில் பணியாற்றவில்லை. அந்த படம் வெளியான பிறகு அதன் இயக்குநர் நான் தான் என்று நினைத்தார்கள், அது நான் இல்லை, என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். பல நாள் ஆசை திருநாளாச்சு...., அதற்கு காரணம் ராஜகோபால் சார், சசி சார் தான், அவர்கள் தான் என் கடவுள்கள், என்று கூறி தயாரிப்பாளர் காலி விழுந்தார்.
தொடர்ந்து பேசியவர், “எவ்வளவு வலி, கஷ்ட்டங்கள் இருந்தது, ஒரு படம் பண்ணுவது மிகவும் கஷ்ட்டம், அது எனக்கு கிடைத்தது இவர்களால் தான். வெளிநாட்டில் இருந்து வரும் தயாரிப்பாளர்கள் பலர், பத்து படங்கள் தயாரிப்போம், என்று அறிவிப்பார்கள். ஆனால், ஒன்று, இரண்டு படங்களோடு சென்று விடுவார்கள். ஆனால், சசி சார், தொடர்ந்து பல படங்களை தயாரிப்பார், பத்து படங்களுக்கு மேலாக படங்கள் தயாரிப்பார், என்று நான் சொல்கிறேன். காரணம், ‘சேரநாட்டு யானைதந்தம்’ மிகப்பெரிய ஹிட்டாகும். அதில் அவர் பணம் சம்பாதிப்பார், அதன் மூலம் அவர் அடுத்த படம் பண்ணுவார், என்னைப் போல் பல இயக்குநர்களை உருவாக்குவார். நன்றி.” என்றார்.
நடிகர் பிளாக் பாண்டி பேசுகையில், “டிரம்ப் கார்டு படத்தில் நான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இப்படி ஒரு கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்த ஜியோ ராஜகோபால் சார், சசி சாருக்கு நன்றி. எங்கள் படக்குழுவினருக்கு நன்றி, உங்களுடன் பயணிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. உதவும் மனிதம் என்ற என்னுடைய அறக்கட்டளை சார்பில் இலங்கையை சேர்ந்த நான்கு மாணவிகளை, அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் படிக்க வைத்திருக்கிறோம். இதுவரை சுமார் 70-க்கும் மேற்பட்டவர்களை நாங்கள் படிக்க வைத்திருக்கிறோம். சசி சாரும், ராஜகோபால் சாரும் இலங்கை தான். மலையகம் மக்கள் அங்கு மிகவும் கஷ்ட்டத்தில் தான் இருக்கிறார்கள். அவர்கள் இன்னமும் அங்கு அடிமைகளாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவங்க பிள்ளைகள் படிப்புக்காக ஏங்குகிறார்கள். என்னிடம் பல பேர் கேட்டார்கள், இங்கே செய்யாமல் ஏன் இலங்கைக்கு செய்கிறாய், என்று. எனக்கு அதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது, அதனால் செய்கிறேன். இங்கு தான் செய்ய வேண்டும் அல்ல, கஷ்ட்டப்படுகிறவர்கள் எங்கிருந்தாலும் செய்யலாம். எனக்கு அப்படி ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்த அன்னை வேளாங்கண்ணி கல்லூரி சேர்மன் தேவானந்த் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 20 சீட் கொடுத்தார், இந்த முறை நான்கு தான் கிடைத்தது. அடுத்த முறை 20 சீட் கொடுப்பதாக சொல்லியிருக்கிறார். கல்விக்கு நிகர் எதுவும் இல்லை. படிப்பு தான் ஒரு மனிதன் உயர்வுக்கு முதல்படி. நான் பத்தாம் வகுப்பு பெயிலானவன், அதனால் என் தங்கையை பொறியியல் படிக்க வைத்தேன். படிப்பு இல்லை என்றால் வாழ்க்கையில் பிடிப்பில் இல்லாமல், ஒருவித தோல்வி பயத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. எனவே கல்வி தொடர்பான எந்த விசயமாக இருந்தாலும் எனக்கு ஒரு ஏக்கம், ஆதங்கம் இருந்துக்கொண்டே இருக்கும். சமூகத்தில் இருந்து எடுக்கிறோம், சம்பாதிக்கிறோம், எனவே சமூகத்திற்கு எதாவது செய்ய வேண்டும் என்று அனைவரும் நினைப்பது உண்டு.
இன்று எங்களை போன்ற கலைஞர்களை வாழ வைப்பது சிறு படங்கள் தான், சினிமா உலகம் வாழ்வது சிறு பட தயாரிப்பாளர்களால் தான். நான் விஜய் அண்ணாவோ அல்லது அஜித் சாரோ கிடையாது. ஒரு படம் ஓடவில்லை என்றால் அனைவருக்கும் விளக்கம் கொடுக்க முடியாது. ஒவ்வொரு படைப்புக்காகவும் நாம் உணர்வுப்பூர்வமாக உழைத்திருப்போம், ஆனால் அது சரியாக போகவில்லை என்றால் அதற்கு நாம் பொறுப்பல்ல, சூழல் தான் பொறுப்பு. இங்கு குறைகள் நிறைய இருக்கு, ஆனால் அதை நிறையாக பார்க்க வேண்டும். இன்று இங்கு மைக் இல்லை, சரியான அரங்கம் இல்லை என்பது உண்மை தான், ஆனால் குறுகிய காலக்கட்டத்தில் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது ஒரு பெரிய விசயம் தானே, அதை செய்த பி.ஆர்.ஓ கார்த்திக் சாருக்கு நன்றி. இந்த உலகத்தில் குறை இல்லாமல் எதுவும் இல்லை, பிளஸ் மைனஸ் இருக்க தான் செய்யும், நாம் தான் அனைத்தையும் பாசிட்டிவாக பார்க்க வேண்டும்.
டிரம்ப் கார்டு தலைப்பை பார்த்த உடன் கொஞ்சம் பயமாக தான் இருந்தது. அமெரிக்கா போனால் எதாவது பிரச்சனை வருமா ? என்று யோசித்தேன். ஆனால், அப்படி இல்லாமல் டிரம்ப் சொல்வது சரியானது, என்று சொல்வது தான் இந்த படம். இதில் நான் ஒரு மாணவனாக நடிக்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த எனது உறவுகளுக்கு நன்றி. ஒரு படம் உருவாக வேண்டும், அதை சரியான முறையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று உழைக்கும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. இது அறிமுக நிகழ்ச்சி தான். அடுத்தடுத்த நிகழ்வில் படம் பற்றிய பல விசயங்களை சொல்வோம். நன்றி.” என்றார்.
ஒளிப்பதிவாளர் எஸ்.பார்த்திபன் பேசுகையில், “இரண்டு படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறேன். இரண்டும் வெவ்வேறு வண்ணங்கள். ஒரு படம் வெளிநாடு, மற்றொரு படம் கிராமம், இரண்டுமே வித்தியாசமாக இருக்கும். இரண்டு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துவிட்டு, படம் இயக்குவது என்பது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு, எனக்கு கிடைத்திறுக்கிறது. அதற்கு சசி சாருக்கும், ராஜகோபால் சாருக்கும் நன்றி. எனது முதல் படம் காமெடி படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன், அதன்படி தான் முதல் படத்தை இயக்க இருக்கிறேன். என்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு உழைத்திருக்கிறேன், இயக்குநர்களுடன் இணைந்து பயணித்திருக்கிறேன். இந்த இரண்டு படங்களும், நான் இயக்கும் படமும் என்று மூன்று படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நன்றி.” என்றார்.
படத்தொகுப்பாளர் கணேஷ் குமார்.டி பேசுகையில், “இரண்டு படங்களுக்கும் படத்தொகுப்பாளராக என்னை தேர்வு செய்த, ராஜகோபால் சார் மற்றும் சசி சாருக்கு நன்றி. இந்த படத்தின் காட்சிகளை பார்த்த போதே படம் எப்படி வரப்போகிறது என்று எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. முழுமையாக படத்தொகுப்பு செய்துவிட்டு, படம் எப்படி வந்திருக்கிறது, என்று அடுத்த சந்திப்பில் சொல்கிறேன். நன்றி.” என்றார்.
தலைப்பு மூலமாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இரண்டு படங்களின் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படம் பற்றிய மேலும் பல தகவல்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பற்றி படக்குழுவினர் விரைவில் அறிவிக்க உள்ளனர்.
அதிரடியான தொடர் ப்ளாக்பஸ்டர் வெற்றிகளால் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற காட் ஆஃப் த மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தற்போது மீண்டும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் கோபிசந்த் மலினேனியுடன் கைகோர்க்கிறார்...
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...