திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி.டி.செல்வகுமார், தனது ஆதரவாளர்களுடன் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார். இந்த இணைப்பு நிகழ்ச்சி அண்ணா அறிவாலயத்தில் பிராமாண்டமான முறையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பி.டி.செல்வகுமார், “சினிமாத் துறையில் ஆளுமைமாக இருந்து, நடிகர் விஜய் சினிமாவுக்கு வந்த காலத்தில் இருந்தே அவருடன் பயணம் செய்துள்ளேன். விஜய் மக்கள் இயக்கம் ஆரம்பித்தது தொடங்கி, இரவு பகல் பார்க்காமல் விஜய் வளர்ச்சிக்காக மட்டுமே வாழ்ந்துள்ளேன். அவரது தந்தைக்கு அடுத்த நிலையில் இருந்து பணியாற்றியவன் நான். அடுத்த கட்டங்களில் அவருடன் சேர்ந்த தவறான நட்புகளால், தந்தை, தாய்மாமன் உள்ளிட்ட குடும்ப உறவுகளையும், என் போன்றவர்களையும் புறக்கணித்து விட்டார்.
தவெக ஆரம்பித்ததும் உடன் இருந்து கஷ்டப்பட்டவர்களுக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என அறிவித்து விட்டு, இன்றைக்கு ஆதவ் அர்ஜூனா, ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்ட உதவாக்கரைகளை சேர்த்துள்ளார். இந்த கூட்டத்தோடு, செங்கோட்டையனும், நாஞ்சில் சம்பத்தும் இணைந்துள்ளதை பரிதாபமான செயலாக பார்க்கிறேன். மிகக்கடினமாக காலங்களில் அவருடன் இருந்தவர்களை மதிக்காமல் செயல்பட்டு வருவது வேதனையளிக்கிறது. மக்களோடு, மக்களாக இணைந்து நடிகர் விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது. நிலவு எப்படி தூரத்தில் உள்ளதோ, அதுபோல தான் விஜய்யும். நிலா 15 நாள் தெரியும். மீதி நாள்களில் மறைந்து விடும் அதுபோலத்தான் அவரும். எந்த காலத்திலும் அவரால் மக்களுடன் சேர்ந்து பயணிக்க முடியாது.

தனித்து செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில் கலப்பை மக்கள் இயக்கம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி தென் மாவட்டங்களில் கொரோனா காலகட்டத்திலும் சரி, மழையால் மக்கள் பாதிக்கப்பட்ட போதும் சரி, தீவிரமாக களப்பணியாற்றி வருகிறேன். இது மட்டுமின்றி 50க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு வகுப்பறைகள், கலையரங்கம், விளையாட்டு மைதானங்கள் அமைத்து கொடுத்துள்ளேன். இது மட்டுமின்றி இளைஞர்கள், பெண்களின் எதிர்காலத்துக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறேன்.
இந்த நிலையில், தமிழக மக்களின் தேவை அறிந்து செயல்பட்டு வரும் தமிழக முதல்வர் தளபதியார் அவர்கள் தலைமையில் திமுகவில் இணைகிறேன். மக்களின் தேவையறிந்து இரவு, பகல் பாராமல் மக்களுக்காக சுறு சுறுப்பாக உழைத்துக் கொண்டிருக்கிறார். இந்தியாவில் சிறந்த முதல்வர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். அவருடன் இணைந்து துணை முதல்வர் உதயநிதியும் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறார். மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டுத் துறையிலும் தனி முத்திரை பதித்து வருகிறார். தமிழகம் முழுவதும் மக்கள் பணி ஒன்றே தாரக மந்திரமாக கொண்டு திராவிட முன்னேற்றக்கழக தோழர்கள் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதே சிந்தனையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நானும் இந்த இயக்கத்தில் சேர்ந்து உழைக்க தயராக உள்ளேன்.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி தென்மாவட்டங்களில் எனது அறப்பணி சிறப்பாக தொடரும். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது என் உயிரோடும், ரத்தத்தோடும் கலந்தது. முன்பைவிட பலமடங்கு திமுகவுக்காக உழைக்க தயாராக உள்ளேன்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகள் இலக்கு என்றாலும், 224 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த அளவுக்கு முதல்வரின் அர்ப்பணிப்பு காரணமாக தேர்தல் களம் திமுகவுக்கு சாதகமாக உள்ளது. திமுக தோழர்களுடன் இணைந்து எனது உண்மையான பங்களிப்பை வழங்குவேன் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கலப்பை மக்கள் இயக்கத்தை சேர்ந்த மாநில துணைத்தலைவர் நந்தகுமார், பொதுச்செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் டி.எஸ்.பொன் செல்வி, கன்னியாகுமரி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் டி.பாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் அனிதா, மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் கௌதம் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தைச் சேர்ந்தவர்களும், விஜய் ரசிகர்களும் திமுகவில் இணைந்தனர்.
சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...
நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகனும், ‘96’ மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவருமான ஆதித்யா பாஸ்கரும், கெளரி கிஷனும் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது...
முன்னணி இளம் நட்சத்திர நடிகர் அர்ஜுன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென் ,நகைச்சுவை நடிகர் யோகிபாபு, ஆகியோர் நடிப்பில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் ( Power House Pictures) சார்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி, இயக்க, புதுமையான களத்தில் உருவாகும் ஃபேமிலி எண்டர்டெயினர் படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள இன்று இனிதே நடைபெற்றது...