Latest News :

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது. 

 

சென்னை சத்யம் தியேட்டர் வளாகத்தில் டிசம்பர் 11 ஆம் தேதி நடைபெற்ற இந்த விழாவுக்கு அமைப்பின் தலைவர் சிவன் கண்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆனந்த் ரங்கசாமி, பொதுச்செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தனர். தமிழக அரசின் செய்தி துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நடிகை சிம்ரன், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

 

விழாவில் சினிமாவில் 50 ஆண்டுகளைக் கடந்த ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருதை அமைச்சர் மு.பெ. சாமிநாதனிடம் இருந்து ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா பெற்றுக்கொண்டார். 

 

விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசுகையில், “சென்னையில் நடைபெறும் 23-வது சர்வதேச திரைப்பட விழா சிறப்பான ஒன்று. நாளை (12.12.2025) ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பல்லாண்டு காலம் வாழ்ந்து அவர் திரையுலகை வழி நடத்த வேண்டும். உலக அரங்கில் திரைப்படத்துறையில் தனி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் கேன்ஸ், வெனிஸ், ஜெர்மனி, டொரோண்டோ போன்ற புகழ்பெற்ற திரைப்பட விழாக்களின் வரிசையில் சென்னை திரைப்பட விழாவும் கம்பீரமாக திகழ்வதில் மகிழ்ச்சி. சுமார் 51 நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 122 தலைசிறந்த படங்களை ரசிகர்களின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளனர். இந்த விழா தரத்திலும் உலக விழாக்களுக்கு இணையானது. தென் கிழக்கு ஆசியாவில் மிகச்சிறந்த விழாக்களில் ஒன்றாக சென்னையில் நடைபெறும் இந்த விழாவை உயர்த்துவதே நமது இலக்கு.

 

2008-ம் ஆண்டில் இந்த விழா சிறப்பாக நடத்த ரூ.25 லட்சம் வழங்கி வித்திட்டவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி. அவரது வழியில் வந்த நமது தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழாவின் முக்கியத்துவம் உணர்ந்து, 2023-ம் ஆண்டு முதல் இந்த நிதியை ரூ.85 லட்சமாக உயர்த்தினார். இந்த ஆண்டு முதல் ரூ.95 லட்சமாக உயர்த்த அனுமதி தந்திருக்கிறார். அதேபோல கோவா சர்வதேச திரைப்பட விழாவுக்கான மானியத்தை ரூ.15 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டு உள்ளார். திரைப்படத்துறைக்கும், திராவிட இயக்கத்துக்கும் உள்ள உறவை பிரிக்க முடியாது.

 

திரைப்பட துறையினருக்கு சொந்த வீடு என்பது நீண்ட கால கனவு. அந்த கனவை நிஜமாக்கும் வகையில் 2019-ம் ஆண்டு பையனூரில் சுமார் 90 ஏக்கர் நிலத்தை கருணாநிதி ஒதுக்கீடு செய்தார். இடையில் ஏற்பட்ட தடைகளை நீக்கி சமீபத்தில் அந்த அரசாணையை மீண்டும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுப்பித்து தந்தார். மறுநாளே பெப்சி தொழிலாளர்களுக்கு 50 ஏக்கரும், தயாரிப்பாளர் சங்கத்திற்கு 10 ஏக்கரும், நடிகர் சங்கத்திற்கு 7 ஏக்கரும் மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு 8 ஏக்கர் நிலத்துக்கான ஆணையும் வழங்கியுள்ளார். 

 

திரைப்படத்துறைக்கும், திராவிட இயக்கத்துக்கும் உள்ள உறவு வரலாற்று பக்கங்களில் பொறிக்கப்பட்டவை. கலைஞர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் 2009-ம் ஆண்டு கருணாநிதியால் உருவாக்கப்பட்ட திரைப்பட தொழிலாளர் நல வாரியம் இன்றைக்கு 27 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை போன்றவைகள் எல்லாம் தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக இருக்கக்கூடியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சென்னை பூந்தமல்லி அருகே உள்ள குத்தம்பாக்கத்தில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் ரூ 500 கோடி மதிப்பில் வி.எப்.எக்ஸ்., அனிமேஷன் வசதிகளுடன் கூடிய அதிநவீன திரைப்பட நகரம் அமைக்கும் பூர்வாங்க பணிகள் தொடங்கி இருக்கிறது.  தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்திற்கு சுமார் ரூ.40 கோடி மதிப்பில் 3 புதிய அதிநவீன படப்பிடிப்பு தளங்கள் கட்டப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு வழங்கும் திரைப்பட விருதுகளை பொருத்தவரை இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு ஏறத்தாழ 2009-ம் ஆண்டு முதல் பாக்கியிருந்த விருதுகள் அனைத்தும் வழங்கப்பட்டு வருகின்றன. 2016 முதல் 2022 வரையிலான விருதுகள் விரைவில் வழங்கப்பட இருக்கின்றன. தொடர்ந்து இந்த அரசு திரையுலகுக்கு உறுதுணையாக இருக்கும்.” என்றார்.

 

23rd Chennai International Film Festival

 

வருகிற 18-ந்தேதி வரை நடைபெறும் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் தமிழில் இருந்து '3 பி.எச்.கே.', 'மாமன்', 'மெட்ராஸ் மேட்னி', 'அலங்கு', 'பிடிமண்', 'காதல் என்பது பொதுவுடமை', 'மாயக்கூத்து', 'மருதம்', 'ஒன்ஸ் அப்பான் அ டைம் இன் மெட்ராஸ்', 'பறந்து போ', 'டூரிஸ்ட் பேமிலி', 'வேம்பு' உள்ளிட்ட 12 படங்கள் திரையிடப்படுகின்றன. 

 

ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளையொட்டி, அவரது 50 ஆண்டு கலைச் சேவையை கவுரவிக்கும் வகையில் இன்று (டிசம்பர் 12) 'பாட்ஷா' படம் திரையிடப்படுகிறது.

Related News

10817

தி.மு.க வில் இணைந்தார் ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்!
Thursday December-11 2025

திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...

தாடி பாலாஜிக்கு மருத்துவ உதவி! - ரூ.1 லட்சம் வழங்கிய பிடி செல்வகுமார்!
Thursday December-11 2025

சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...

ஆதித்யா பாஸ்கர் - கெளரி கிஷன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது!
Thursday December-11 2025

நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகனும், ‘96’ மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவருமான ஆதித்யா பாஸ்கரும், கெளரி கிஷனும் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது...

Recent Gallery