Latest News :

மக்கள் பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ‘பராசக்தி’ திரைப்பட உலகம்!
Friday December-19 2025

டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’.

 

1960-களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் தமிழின் பெருமை சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் 2026 பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இன்பன் உதயநிதி வழங்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறது. 

 

இந்த நிலையில், சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் இப்படத்தில் 60-களின் காலகட்டத்தைக் கொண்டு வர பயன்படுத்தப்பட்ட கார்கள், ரயில், ரயில் நிலைய செட் மற்றும் அந்தக்கால அத்தியாவசிய பொருட்களை வைத்து, பராசக்தி பட உலகை செட் மூலம் உயிர்ப்பித்துள்ளனர் படக்குழுவினர். பொதுமக்கள் பார்வையிடும் வகையில் பராசக்தி பட உலகம் ஒரு கண்காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. 

 

ஒரு படம் வெளிவருவதற்கு முன்னதாக, அதன் உலகம் மக்களுக்காக வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுவது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பொதுமக்கள் அடுத்த மூன்று நாட்கள் (19, 20, 21 டிசம்பர்) பராசக்தி உலகை கண்டுகளிக்கலாம் .

 

பராசக்தி படத்தின் இந்த உலகை அறிமுகப்படுத்தும் நிகழ்வு, வள்ளுவர் கோட்டம் அரங்கில், ரசிகர்கள் முன்னிலையில், படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், கோலாகலமாக நடைபெற்றது. 

 

நிகழ்ச்சியில் இயக்குநர் சுதா கொங்கரா பேசுகையில், “திரைப்படம் மூலம் நாம் ஒவ்வொரு வாழ்வியலில் போய் வாழலாம். அது எனக்கு மிகவும் பிடித்த விஷயம். இறுதிச்சுற்று படத்தில் ஒரு குத்துச்சண்டை உலகில் வாழ்ந்தது போல், பராசக்தி படத்தில் நம் வரலாற்றுக் காலத்தில் நுழைந்து பார்த்திருக்கிறோம். நம் உரிமைக்காக நாம் சண்டையிட வேண்டும் எனும் கருத்து என்னை மிகவும் பாதித்தது. வரலாற்று உலகைத் திரும்பக் கொண்டு வர ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளோம். அந்த காலகட்டத்தை மீண்டும் உருவாக்கியுள்ளோம். 1960 காலகட்டத்தில் மீண்டும் வாழ்ந்து விட்டு வந்தது போல் இருக்கிறது. கண்டிப்பாக அனைவருக்கும் இப்படம் பிடிக்கும் நன்றி.” என்றார்.

 

ஜீவி பிரகாஷ் பேசுகையில், “பராசக்தி ஒரு பெரிய உலகம். சுதா கொங்கரா எனக்கு சூரரைப் போற்று படத்தில் தேசிய விருது வாங்கி தந்தார். நான் ரஹ்மான் சாரிடம் இருக்கும் போதே, சுதா எனக்குப் பழக்கம். அவருடன் நிறையப் படங்கள் செய்யவில்லை. நீண்ட காலம் கழித்து சூரரைப் போற்று படம் செய்தோம். அது எனக்கும் சூர்யா சருக்கும் மிகப்பெரிய படமாக அமைந்தது. அதற்கான நன்றிக்கடன் தான் பராசக்தி. பராசக்தியில் மீண்டும் என்ன செய்யப்போகிறோம் என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருந்தது. ஏற்கனவே பீரயட் படங்களில் மதராஸப்பட்டினம் படம் செய்துவிட்டோம், அதிலிருந்து மாறுபட்டு என்ன செய்யப்போகிறோம் என்பது தான் கேள்வியாக இருந்தது. அதைத் தர உழைத்திருக்கிறோம். சிவா உடன் அமரனுக்குப் பிறகு மீண்டும் இணைகிறேன். ரவி மோகன், அதர்வா ஶ்ரீலீலா என எல்லோருக்கும் நன்றி. இவ்வளவு பெரிய படத்தைத் தாங்க ஆகாஷ் போன்ற தயாரிப்பாளர் இருக்க வேண்டும். இப்படத்தில் ஒரு பீரியட் ஃபீல் இருக்கும். ஒரு பெரிய புரட்சியைப் படத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்கள். அதை இசையாகக் கொண்டு வர முயற்சித்திருக்கிறோம். இதில் எல்லோரும் பெரிய உழைப்பைத் தந்துள்ளார்கள். கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.” என்றார்.

 

நடிகை ஸ்ரீலீலா பேசுகையில், “எல்லோருக்கும் நன்றி. பராசக்தி எனக்கு மிக முக்கியமான படம். என் அறிமுகத் தமிழ்ப்படம். சுதா மேடமுக்கு நன்றி. இங்கிருக்கும் ஒவ்வொரு பொருளுக்குப்பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது, ஒரு அர்த்தம் இருக்கிறது. அது படம் பார்க்கும் போது உங்களுக்குப் புரியும். பராசக்தி உலகிற்குள் தரிசித்து கொண்டாடுங்கள் நன்றி.” என்றார்.

 

நடிகர் அதர்வா பேசுகையில், “இந்த மாதிரி விழா எல்லா படத்திற்கும் எளிதாக நடக்காது. இது பிரம்மாண்டமான படம். ஜீவி பிரகாஷின் 100 வது படம், ரவிமோகன் சார் வில்லனாக நடிக்கும் படம், சிவகார்த்திகேயன் சாரின்  25 வது படம். ஶ்ரீலீலாவின் முதல் தமிழ்ப்படம். இப்படி எல்லோருக்கும் முக்கியமான படம். ஷீட்டிங் போன போது மிகவும் சந்தோசமாக இருந்தது. இவ்வளவு பெரிய படத்தை எடுத்துத் தயாரித்திருக்கும் ஆகாஷ் அவர்களுக்கு நன்றி. படம் எல்லோருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்.” என்றார்.

 

நடிகர் ரவி மோகன் பேசுகையில், “ஊரே இந்தப்படம் பற்றித் தான் பேசுகிறது. இந்தப்படம் மிகப்பிரம்மாண்ட படம். படத்திற்குள் நான் போகும் முன் எனக்குமே நிறையத் தயக்கம் இருந்தது. ஆனால் இந்த படத்திற்காக உழைப்பைப் போட்ட அனைவரையும் கண்டிப்பாக பாராட்ட வேண்டும். அவ்வளவு உழைத்துள்ளார்கள். என்னை அவ்வளவு அற்புதமாகப் பார்த்துக்கொண்டார்கள். என்னை நன்றாக பார்த்துக்கொண்ட சுதா மேடமுக்கு நன்றி. என்னைச் சரியாக அந்த கதைக்குள் கொண்டு சேர்த்துவிட்டார். ஆகாஷ் பாஸ்கரன், ஒரு ஹீரோ வைத்து படமெடுப்பதே கஷ்டம், அவர் மூன்று ஹீரோ வைத்துப் படமெடுத்துள்ளார். அதர்வாவை இந்தப்படத்தில் கொண்டாடுவீர்கள்.  அதர்வாவிற்கு இந்தப்படம் திருப்புமுனையாக இருக்கும். ஶ்ரீலீலாவை ஒரு நல்ல நடிகையாக இப்படத்தில் கொண்டாடுவார்கள். சிவா என்னிடம் அவ்வளவு அன்பாக நடந்து கொண்டார். ஒரு சின்ன அடிபட்டால் கூட என்னையும் அடித்துக்கொள்ளுங்கள் என்பார். சிவாவின் 25 படத்தில் நானும் இருக்கிறேன் என்பது பெருமை. பராசக்தி திரைப்படம் திரைத்துறையில் மிக முக்கியமான படமாக இருக்கும் நன்றி.” என்றார்.

 

நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், “சுதா மேம் 1960 களில் நடப்பதாகக் கதை அமைத்திருந்தார். அவர் தான் இந்தப்படம் பண்ணக்காரணம். இந்தப்படத்திற்காக 4,5 வருடம் அவர் உழைத்திருந்தார். அவர் சொன்னதைச் செய்தால் போதும். இந்தப்படம் செய்வது எல்லோருக்குமே கஷ்டம் தான். அதை எல்லோரும் ஏற்றுக்கொண்டு உழைத்துள்ளார்கள். அதர்வாவிற்கும் எனக்கும் உள்ள நட்பு உண்மையான அண்ணன் தம்பி போலத்தான். அவர் முதல் படத்திற்கு புரமோசன் நிகழ்ச்சிக்கு அப்பாவுடன் வந்தார்,  நான் தான் ஹோஸ்ட் செய்தேன். இந்தப்படத்தில் சேர்ந்து நட்சத்திருப்பது மகிழ்ச்சி. ஶ்ரீலீலாவை தமிழ் சினிமாவிற்கு வரவேற்கிறேன். அவருடன் நடித்தது நல்ல அனுபவம். அவருடன் கஷ்டமான டான்ஸ் மூவ்மெண்ட் தராததற்கு டான்ஸ் மாஸ்டருக்கு நன்றி. ரவி மோகன் சார் இந்தப்படத்திற்கு ஒத்துக்கொண்டது எனக்கு ஆச்சரியம். ஹீரோவாக கதை கேட்டுத் தேர்ந்தெடுப்பதே கஷ்டம். ஆனால் ஹீரோவாக ஹிட் படங்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் போது,  வில்லனாக ஒத்துக்கொள்வது மிகப்பெரிய விஷயம். அவர் எப்போதும் எனக்குக் கல்லூரியில் பார்த்த ஹீரோ தான். அவர் தான் எங்கள் செட்டில் மூத்தவர், அவர் பெயர் தான் முதலில் இருக்கும். அவரை அப்படித்தான் நாங்கள் பார்க்கிறோம். ஜீவி பற்றி  என் அம்மா சொன்னார்கள், அந்தப்பையன் சின்ன வயதிலிருந்து இசையமைக்கிறார் போல 100 படம் செய்துவிட்டார் என்றார். 100 படத்திலும் வித்தியாசமான ஜானர்கள் செய்து அசத்தியுள்ளார். இது 25 வது படமாக நடக்கக் காரணம் ஆகாஷ் தான். அவர் தான் இந்தப்படம் 25வதாக இருக்கட்டும் என்றார்.  இந்த மாதிரி ஒரு டீம், இந்த மாதிரி ஒரு கதை, எனக்கு 25 வது படமாக கிடைத்தது என் வரம் தான்.  பராசக்தி அருள் தான் காரணம். பராசக்தி ஒரு முக்கியமான பிரச்சனையைப் பேசும் படம். காதல், பாசம், வீரம், புரட்சி என எல்லாத்தையும் பேசும் படமாக இருக்கும். இந்த பொங்கலுக்கு நல்ல கொண்டாட்டமாக இருக்கும் பார்த்து ரசியுங்கள் நன்றி.” என்றார்.

Related News

10824

’சிறை’ என் 25 வது படமாக வருவது மகிழ்ச்சி! - விக்ரம் பிரபு
Friday December-19 2025

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...

’ஃப்ரேம் & ஃபேம்’ தலைப்பில் திரை கலைஞர்களுக்கு விருது வழங்கும் டூரிங் டாக்கீஸ்!
Wednesday December-17 2025

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...

’சிறை’ படத்தின் இரண்டாவது தனி பாடல் வெளியானது!
Wednesday December-17 2025

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் எஸ்...

Recent Gallery