Latest News :

50 வது வருடத்தில் மீண்டும் படம் இயக்கும் கே.பாக்யராஜ்!
Wednesday January-07 2026

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதே சமயம், திரைத்துறையில் அவர் தனது 50 வது ஆண்டை நிறைவு செய்துள்ளார். இந்த இரண்டு நிகழ்வுகளை கொண்டாடும் விதத்தில் இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்த கே.பாக்யராஜ், அவர்கள் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியவர், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். 

 

மேலும், இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மக்கள் தொடர்பாளர்கள் டைமன் பாபு, சிங்காரவேல் மற்றும் ரியாஸ் கே. அஹ்மத் ஆகியோர் கே. பாக்யராஜுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

 

நிகழ்ச்சியில் பேசிய கே.பாக்யராஜ், “அனைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சினிமாவில் 50 ஆண்டுகள் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. என்னுடைய நண்பர்கள், எனது தாயார் என அனைவரும் என் மீது நம்பிக்கை வைத்து நான் சினிமாவில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று சொன்னார்கள். 16 வயதினிலே படத்தில் எனக்கு முதல் முறையாக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் கமல் அவர்கள் கூட, இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் அடுத்த சில ஆண்டுகளில் மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்தது, இதுவரை எந்த படத்தில் பணியாற்றியவர்களுக்கும் இப்படி நடந்தது இல்லை என்று கூறினார்கள். 

 

வாய்ப்பு தேடும் காலத்தில் பலரிடம் என்னுடைய உண்மையான பெயரை சொல்லாமல் கோவை ராஜா என்று கெத்தாக சொல்லிக் கொள்வேன். 16 வயதினிலே படத்தில் தான் என்னுடைய பெயரை பாக்கியராஜ் என்று வைத்தேன். என்னுடைய அம்மா எனக்கு வைத்த பெயர் இதுதான். டைட்டில் கார்டில் பார்த்துவிட்டு யார் இந்த பெயர் என்று என்னுடைய இயக்குநர் கேட்டார்கள். பிறகுதான் அது நம்முடைய ராஜன் என்று அனைவரும் சொன்னார்கள். அம்மாவின் பாக்கியத்தை இழந்து விடக்கூடாது என்பதால் கே. பாக்யராஜ் என்று வைத்துக் கொண்டேன். 

 

நான் துணை இயக்குநராக இருந்த காலத்தில் இருந்தே பத்திரிக்கை நண்பர்கள் என்னை பற்றி எழுதி உள்ளீர்கள். கிழக்கே போகும் ரயில் படத்தில் போது என்னுடைய இயக்குநர் எனக்குப் பிறகு ராஜன் தான் என்று சொன்னார்கள். துணை இயக்குநர், வசனகர்த்தா, திரைக்கதை எழுத்தாளர், பின்பு நடிகர் என படிப்படியாக வந்தேன். கிழக்கே போகும் ரயில் படத்தின் போது ஒரு கழுதையை கொண்டு வர வேண்டி இருந்தது. அப்போது நான் அதனை கொண்டு வந்தேன். அந்த புகைப்படங்கள் போஸ்டர்களாக ஒட்டப்பட்டது. அதனை பார்த்து எனது குடும்பத்தினர் கழுதை இழக்கவா சினிமாவிற்கு சென்றாய் என்று கிண்டல் அடித்தனர். அந்த சமயத்தில் எனது தாயார் உன்னுடைய இயக்குநரே உன்னை வரும் காலத்தில் வைத்து ஹீரோவாக படம் எடுப்பார் என்று சொன்னார்கள். பிறகு அது உண்மையிலே நடந்தது. ஆனால் அந்த படம் வெளியாவதற்கு முன்பு எனது தாயார் இறந்து விட்டார்கள். அது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. 

 

K Bagyaraj

 

முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்த பிறகு இரண்டாவது படமான கன்னி பருவத்தில் வில்லனாக நடித்தேன். பிறகு இயக்குநராக அறிமுகமானேன். அதற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. சினிமாவிற்கு வரும் முன்பு சினிமா பார்த்த அனுபவம் மட்டும் இருந்தது. மற்றபடி சினிமாவை பற்றி எதுவும் தெரியாது. இங்குள்ள இயக்குநர்களின் படங்களை பார்த்து தான் நான் நிறைய கற்றுக் கொண்டேன். பிறகு புத்தகத்தின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. சிறுவயதில் நான் பள்ளி முடித்து வந்தவுடன் எனது தாயார் தேன் மிட்டாய் வாங்க காசு கொடுப்பார். அதனை அருகில் உள்ள கடையில் கொடுத்து தேன் மிட்டாய் வாங்கி சாப்பிடுவேன். ஒருநாள் நான் பள்ளி முடித்து வீட்டுக்கு வந்து பார்த்தேன், என் தாயார் இல்லை. உடனே நான் பெட்டியை திறந்து காசை எடுத்துக் கொண்டு தேன் மிட்டாய் வாங்கி சாப்பிட்டேன். ஆனால் அன்று மாலை தான் எனக்கு தெரிந்தது நான் கொடுத்தது காசு இல்லை, தங்க மோதிரம் என்று. கடைக்காரர் நினைத்திருந்தால் மோதிரத்தை எடுத்து வைத்திருக்கலாம். ஆனால் அவர் அதனை எனது தாயாரிடம் திருப்பிக் கொடுத்து விட்டார். இந்த சம்பவம் நாம் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதை எனக்கு சிறுவயதிலேயே உணர்த்தியது. 

 

எனது ஆசிரியர்கள் இன்றும் எனக்கு உறுதுணையாக உள்ளனர். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மக்களுக்கு செய்யும் நல்லதை பார்த்து அவருடைய குணாதிசயங்கள் என் மனதில் ஆழமாக பதிந்தது. சிவாஜி அவர்களும் இயக்குநர் எவ்வளவு புதிது என்றாலும் அவருக்கான மரியாதையை கொடுப்பார்கள். இவை அனைத்தும் என் மனதில் இருந்தது. கமல் அவர்களின் நடிப்பை இளம் வயதிலேயே பார்த்து ஆச்சரியப்பட்டேன். ரஜினி சாரை 16 வயதினிலே படத்தில் பார்த்தேன். அன்று பார்த்தது போல இன்றும் இருக்கிறார். பத்திரிகையாளர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். ஒவ்வொரு படத்தையும் நல்ல முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தார்கள். சினிமாவில் 50 வருடங்கள் என்பது இன்னும் எனக்கு ஆச்சரியமாக தான் இருக்கிறது. அடுத்ததாக ஒரு வெப் தொடரும், ஒரு படமும் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வருடம் பல புதிய முயற்சிகளை மேற்கொள்ள தயாராக உள்ளேன். அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்தார்.

Related News

10870

’மெல்லிசை’ படம் பற்றி மனம் திறந்த நடிகர் கிஷோர்!
Tuesday January-06 2026

நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...

’பராசக்தி’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!
Tuesday January-06 2026

டாவ்ன் (Dawn Pictures) தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில்,  சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘பராசக்தி’...

ருக்மணி வசந்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு
Tuesday January-06 2026

யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups)  திரைப்படம், மேலும் மேலும் இருளும், ஆழமும் , துணிச்சலுடனும் வளர்ந்து வரும் ஒரு பிரம்மாண்டமான படைப்பாக தன்னை நிறுவி வருகிறது...

Recent Gallery