Latest News :

தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும் தான் ‘பராசக்தி' - சிவகார்த்திகேயன்!
Friday January-09 2026

தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார். பொதுமக்கள் அனைவரையும் கவரும் வகையில் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் தனித்த அடையாளம் கொண்ட சிவகார்த்திகேயன், இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில், ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் உலகம் முழுவதும் நாளை (ஜனவரி 10, 2026 அன்று) வெளியாக உள்ள ’பராசக்தி’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

 

இந்தப் படத்தில் நடித்துள்ளது பற்றி தனது அனுபவங்களை சிவகார்த்திகேயன் உற்சாகமாக பகிர்ந்து கொண்டார், “’பராசக்தி’ கதையுடன் சுதா கொங்காரா என்னை அணுகியபோது கலவையான உணர்வுகள் எனக்குள் இருந்தது. இந்தப் படத்தில் நடிக்கப் போகிறோம் என்ற உற்சாகம் இருந்தாலும், அவரது அற்புதமான திரைக்கதைக்கு நான் நியாயம் செய்ய முடியுமா என்ற சந்தேகமும் இருந்தது. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மிகுந்த பொறுப்புணர்வுடன் அணுகினேன். என் வழக்கமான இமேஜைத் தாண்டி, வேறொரு பரிமாணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். இயக்குநராக சுதா கொங்காரா என்னிடமிருந்து சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வந்திருக்கிறார். ரசிகர்களும் அதை முழுமையாக ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

 

ரவி மோகன் இந்தத் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கவே இல்லை. இந்தக் கதாபாத்திரத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டது எனக்கு நம்ப முடியாத ஆச்சரியம்தான். செட்டில் அனைவரிடமும் எளிமையாகவும் அன்பாகவும் நடந்து கொண்டார். நீண்ட காலமாக அவரை திரையில் பார்த்து ரசித்திருக்கிறேன். ஆனால், நேரில் அவரின் பணிவும் நேர்மறை அணுகுமுறையும் எனக்கு பெரும் உற்சாகம் கொடுத்தது. இந்தப் படத்தில் அதர்வா முரளியின் நடிப்பு அவரது ரசிகர் வட்டத்தை இன்னும் அதிகமாக்கும். 

 

ஸ்ரீலீலாவுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. படம் வெளியான பிறகு அவரின் நடிப்பு நிச்சயம் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்கும். நம் இந்திய வரலாற்றில் அழியாத ஒரு அத்தியாயத்தை உருவாக்கிய தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும்தான் ‘பராசக்தி’. இந்த படம் சிறப்பான முழுமையான சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்கும்.  

 

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் ஆதரவு இல்லாமல் ’பராசக்தி’ இல்லை. ஒவ்வொரு காட்சியையும் உயர்ந்த தரத்துடன் உருவாக்க எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்ததற்காக அவருக்கு நன்றி” என்றார். 

 

டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள 'பராசக்தி' படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள நூறாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

படத்தின் புரமோஷன் காட்சிகளே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜனவரி 10, 2026 அன்று உலகம் முழுவதும் ‘பராசக்தி’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Related News

10872

’ஜன நாயகன்’ பட வழக்கின் தீர்ப்பு நாளை காலை வழங்கப்படுகிறது!
Thursday January-08 2026

விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...

50 வது வருடத்தில் மீண்டும் படம் இயக்கும் கே.பாக்யராஜ்!
Wednesday January-07 2026

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...

’மெல்லிசை’ படம் பற்றி மனம் திறந்த நடிகர் கிஷோர்!
Tuesday January-06 2026

நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு தமிழ் சினிமா எப்போதும் வரவேற்பு கொடுக்கும்...

Recent Gallery