Latest News :

காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை - ‘காதல் கதை சொல்லவா’ பட விழாவில் நடிகர் நகுல் நெகிழ்ச்சி
Saturday January-24 2026

பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில் ஜெயராம்,விஜய் சேதுபதி, நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் நடிப்பில் சனில் இயக்கியுள்ள திரைப்படம் காதல் கதை சொல்லவா.இப்படத்திற்கு ஷரத் இசையமைத்துள்ளார் . ஷாஜன் களத்தில் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் டிரைலர் மட்டும் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.

 

இந்த விழாவில் இயக்குநர்கள் கே எஸ் அதியமான்,  மனோஜ் குமார், ராஜ்கபூர்,  இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

 

இயக்குநர் கே.எஸ் அதியமான் பேசுகையில், “தம்பி நகுலின் ஒரு துடிப்பானநடிப்பை இந்தப் படத்தில் பார்ப்பீர்கள். ஆகாஷ் மும்மையில் பெரிய தயாரிப்பாளர் .இந்தப் படத்தை வெளியிடுவதற்காக வந்துள்ளார்.இயக்குநர் சனில் என் தம்பி மாதிரியானவர். நான் இசை அமைப்பாளர் ஷரத்தின் விசிறி என்றே சொல்ல வேண்டும்.

 

பல திறமைசாலிகள் சரியான நேர்கோட்டு பாதை கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருந்தார்கள். அனைவரும் ஒன்று சேர்ந்து இப்போது இணைந்துள்ளார்கள்.கடவுள் இவ்வளவுதூரம் இந்த படத்தைக் கொண்டு வந்துள்ளார்.படம் வெற்றி பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.படத்தின் கதை உண்மை கலந்து, சுவாரசியமாக இருக்கும். அனைவருக்கும் பிடிக்கும் .இப்போது  உணர்ச்சிகரமாக இருக்கிறது. இந்தப் படம் வெளிவந்து வெற்றி பெற வேண்டும். மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.” என்றார்.

 

இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் பேசுகையில், “இப்போது எவ்வளவோ ஏஐ தொழில் நுட்பங்கள் வந்துள்ளன. ஆனால் எந்த தொழில்நுட்பத்தையும் இலகுவாகக் கையாளர் தெரிந்தவர் இந்த இசையமைப்பாளர் ஷரத் .அவரால் இந்த தொழில்நுட்பம் இல்லாமலும் அருமையான இசையைக் கொடுக்க முடியும். நாட்டில் இசையில் உள்ள நான்கு திறமைசாலிகளில் அவரும் ஒருவர்.அந்த அளவுக்கு இசையில் ஞானம் உள்ளவர்.அவரால் எந்த இசையையும் அசலாகக் கொடுக்க முடியும்.அவர் என் நண்பர் என்பதில் மகிழ்ச்சி.” என்றார்.

 

இசையமைப்பாளர் ஷரத் பேசுகையில், “ஏற்கெனவே நான் தமிழில் ஜூன் 6, 180 போன்ற படங்களில் பணியாற்றி இருக்கிறேன். இந்தப் படம் வெளியாகுமா என்கிற  கேள்விக்குறி இருந்தது. இப்போது எல்லாம் கூடி வந்திருக்கிறது. இது ஒரு கனவு மாதிரி இருக்கிறது. இது கடவுளின் விருப்பம் என்று தான் நினைக்கிறேன். ஏனென்றால் ஒரு திரைப்படம் உருவாக்குவதை விட அது வெளிவரும்போது தான் அது முழுமை பெறுகிறது. தமிழ்த் திரை உலகில் உள்ள எம் எஸ் விஸ்வநாதன் இளையராஜா போன்றவர்களின் இசையைக் கேட்டு நான் வளர்ந்தவன் நான். மலையாளத்தில் இசையமைக்கும் போது கூட தமிழில்தான் டம்மி வரிகளை எழுதிக் கொள்வேன்.அப்படி ஒரு இனிமையான மொழி தமிழ் .எனக்கு தமிழ் மொழி மீது அன்பு பற்று பாசம் மதிப்பு மரியாதை உண்டு. நான் இங்கே ஒரு படம் இசையமைத்தேன்.மெட்டு போட்டு பாடல்கள் வரிகள் எல்லாம் எழுதி சித்ரா, மனோ பாடினார்கள்.ஒலிப்பதிவும் செய்யப்பட்டு விட்டது. 

 

அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மிகவும் நல்லவர் எப்போதும் பளபளவென்று ஜிப்பா போட்டிருப்பார். நான் எந்த இசைக் கருவியைத் தொட்டாலும், இசைத்தாலும் உடனே அவர் அற்புதம் என்று எனக்கு ஒரு உம்மா கொடுப்பார் அடுத்த கருவியைத் தொட்டால் இன்னொரு உம்மா கொடுப்பார்.இப்படி அவர் பல முத்தங்கள் கொடுத்தார். ஆனால் எல்லாம் முடிந்து சம்பளம் என்று வருகிறபோது அவர் ஆளைக் காணவில்லை .ஓடிப்போனவர் வரவே இல்லை. எனக்கு அப்படி ஒரு ஏமாற்றம் .அவர் எங்கிருக்கிறார் அவரைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது.நான் சாக முன்பு அவரைப் பார்த்துவிட வேண்டும் எனக்கு ஆஸ்கார் அவார்டு வாங்க வேண்டும் என்றோ ரஜினி சார் படத்தில் இசையமைக்க வேண்டும் என்றோ ஆசை இல்லை. அவரை எப்படியாவது பார்த்து விட வேண்டும்.

 

நான் 180  திரைப்படத்திற்கு இசையமைத்தது மறக்க முடியாது.அந்தப் படத்தின்  இயக்குநர் ஜெயேந்திரா சாதாரணமாகத் திருப்தி அடைய மாட்டார். அந்த படத்தில் நான் 180 மெட்டுகள் போட்டிருப்பேன். அந்த அனுபவம் மறக்க முடியாது. நான் இளையராஜா சாருடைய விசிறி இல்லை. புரப்பல்லர் என்றே சொல்ல வேண்டும். அவர் இசையில் எல்லாம் பாட முடியுமா என்று நான் நினைப்பேன், அது ஒரு கனவு போல இருந்தது. ஆனாலும் அது ஒரு நாள் நடந்தது. 'தாரை தப்பட்டை’ படத்தில் ”என் உள்ளம் கோயில் அங்கே உண்டு தெய்வம்” என்ற பாடலைப் பாடினேன். 

 

ஒரு நாள் நண்பர்கள் அழைத்த போது பிரசாத் ஸ்டுடியோ சென்றேன் அங்கே எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. வேறு வேறு அறையில் இருந்து பாடினால் அவருக்கு பிடிக்கவில்லை என்றால் அப்படியே ஓடிவிடலாம். ஆனால் அவர் கண்ணெதிரே நின்று பாட வேண்டும் எனக்குப் பயமாக இருந்தது.இரண்டு முறை வாசித்துக் காட்டிப் பாட வைத்தார். பாடலைக் கேட்ட பிறகு இரண்டு முறை ஓட விட்டுப் பார்த்தார்.எனக்குப் பதற்றம்.அருகில் அழைத்து என் கன்னத்தைத் தடவினார்.இதுவரை நீ எங்கே இருந்தாய் என்றார் .அது மட்டுமல்ல என்னை அழைத்து ஒரு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.அது என் வீட்டில் இன்னும் இருக்கிறது. மறுநாள் அழைத்தார் .இசைக்கு எந்த விலையும் இல்லை பணம் கொடுக்க முடியாது தெரியுமா? என்றார். ஆமாம் அவரது இசையில் பாடியதற்குப் பணம் வாங்க முடியாது. வேறு ஏதாவது கொடுத்தால் வாங்கிக் கொள்கிறேன் ,அடி கொடுத்தால் கூட சரி என்றேன். அவர் என் கையை விரித்து ஒன்று கொடுத்தார். அது ஒரு மோதிரம் அதுவும் நவரத்தின மோதிரம். எனக்கு அதைவிட வேறென்ன விருது வேண்டும்? ஆஸ்கார் விருதுகள் கிடைத்தது போல ஒரு மகிழ்ச்சியில் இருந்தேன். ஓ...என்று அழுதுவிட்டேன். என் குடும்பத்தில் உள்ள அனைவரும் இறந்தால் கூட அப்படி அழுது இருக்க மாட்டேன் அப்படி ஒரு அழுகை.அப்படியெல்லாம் அனுபவம் உள்ளது.

இங்கே வந்திருக்கும் என் நண்பன் ரமேஷ் விநாயகம் நல்ல திறமைசாலி. அவருக்கும் பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்" என்றார்.

 

Kadhal Kathai Sollava

 

இயக்குநர் சனில் பேசுகையில், “மலையாளத்திலன் தாய் தமிழ் மொழி .தமிழ்நாட்டில் இங்கே பேசுவதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.தமிழில் தமிழகத்தில் ஒரு படம் இயக்குவது என்பது எனது ஒரு கனவாக இருந்தது. மலையாளிகளின் கனவு  தேசமாக தமிழ்நாடு இருக்கிறது.எனது சிறுவயதில் நான் உதவியாளராக இருந்தபோது இங்கே பிரசாத் லேப் வந்து ஃபிலிம் எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறேன்.  மீண்டும் இங்கே என் படத்திற்காக வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  தமிழ்ப் படம் இயக்குவது என்பது  எனக்கு ஒரு கனவாக இருந்தது .திரையுலகில் வெற்றி தோல்வி முக்கியமல்ல. ஒரு திரைப்படம் எடுக்கும் போது மனது நிறைய வேண்டும். இங்கே இத்தனைப் பேரை சேர்த்து வைத்திருப்பது சினிமா தான் .கே. எஸ்.அதியமான் எனக்கு காட்ஃபாதர் மாதிரி. இங்கே மலையாளம் தமிழ் என்ற மொழி முக்கியமில்லை. திறமை தான் முக்கியம் .தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் அவரது முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டும்.” என்றார்.

 

இயக்குநர் மனோஜ் குமார் பேசுகையில், “இங்கே இருக்கிற நடிகர் நகுலைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர் ஆடும் ஆட்டத்தைப் பார்த்துப் பொறாமையாக இருக்கிறது. அவரது வயது என்ன என்று கேட்க வேண்டும் போல் இருக்கிறது .அவர் ஆட்டத்தைப் பார்த்து பலரும் அவரைக் காதலிப்பார்கள். அந்த கூட்டத்தை குறைக்க வேண்டும் என்று எனக்குப் பொறாமையாக இருக்கிறது .

 

படத்தின் பாடல் காட்சிகளை பார்த்தேன்.உதட்ட அசைவுக்கு இடமில்லாமல் பின்னணியில் பாடல் காட்சிகளை உருவாக்கி எடுத்து இருக்கிறார்கள் .காட்சிகள் நன்றாக இருக்கின்றன .ஒரு இயக்குநர் என்பவர்க்குள் அனைத்து தொழில்நுட்ப கலைஞரும் இருக்கிறான். அப்படி  எல்லாம் எல்லாவிதமான திறமைகளும் இருந்தால் தான் இப்படி எடுக்க முடியும் .நல்ல படம் கொடுத்தால் நிச்சயம் மக்கள் பார்ப்பார்கள் ,பாராட்டுவார்கள்.சமீப காலமாக சிறிய படங்கள் வெற்றி பெறுவது இதைத்தான்  கூறுகிறது" என்றார்.

 

இயக்குநர் ராஜ்கபூர் பேசுகையில், "இந்தப் படத்தின் டிரைலரை பார்த்தேன் .மிகவும் நன்றாக இருக்கிறது .இது போல் பார்த்து நீண்ட நாள் ஆகிறது. துப்பாக்கி சத்தம் என்றுதான் படங்கள் வருகின்றன .அந்த வகையில் இந்தப் படத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது .ஸ்ரீதர் சார் படத்தை பார்க்கிற உணர்வைத் தருகிறது.அப்படி ஒரு நல்ல படத்தை எடுத்திருக்கிறார்கள். நகுல் இந்தப் படத்திற்குப் பிறகு நல்ல ஆட்டம் போடுவார். இந்த ஆண்டு நகுல் ஆண்டாக இருக்கும் என்று நினைக்கிறேன். இன்னொரு காதல் கோட்டை போல் இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்" என்றார்.

 

கதாநாயகி நடிகை ரித்திகா சென் பேசுகையில், “எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி.படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம்.” என்றார்.

 

கையில் விசிலோடு வந்து, .மேடை ஏறி விசில் அடித்துக் கொண்டே பேசிய கூல் சுரேஷ், “இந்த விசிலைப் பார்த்து யாரும் ஏதாவது நினைக்க வேண்டாம், அண்ணன் விஜய் அவர்கள் கட்சிக்கு விசில் சின்னத்தை கொடுத்திருக்கிறார்கள். மகிழ்ச்சி வாழ்த்துகிறேன்.  நான்  இளமையாக ஸ்மார்ட் ஆக இருப்பதாகச் சொன்னார்கள்,  இதற்கெல்லாம் காரணம் நகுல் தான்.அவரைப் பார்த்து, அவரது தூண்டுதலில் தான் நான் இப்படி இருக்கிறேன். நான் அலப்பறை செய்வதாகவும் கூறினார்கள். அதற்கும் நகுல் தான் காரணம். என் முதல் படம் ’காதல் அழிவதில்லை’. என்னை அய்யா டி ஆர் அறிமுகப்படுத்தினார். அதே போல் இந்த படமும் வெற்றி பெறும்.” என்றார்.

 

நடிகர் நகுல் பேசுகையில், ”’காதல் கதை சொல்லவா’ என்கிற இந்தப் படத்தின் தலைப்பை பார்க்கும் போதே எனக்கு பிடித்திருக்கிறது. காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை. காதல் பற்றி ஏதாவது தத்துவார்த்தமாகப் பேச வேண்டும் என்று யோசித்துக் கொண்டே வந்தேன். பாய்ஸ் படத்தில் நடிக்கும் போது சினிமா தொழில் மீது, கலை மீது எனக்குக் காதல் வந்தது. அதை நினைத்துப்  பார்க்கும் போது எனது லவ் அதிகமாகிறது. முதலில் அம்மா என்னை நேசித்தார்கள். என்னை சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அவர்கள் கனவு கண்டார்கள். அம்மாவின் நேசத்தை நினைத்துக் கொள்கிறேன். என் உடலின் மீது ஒரு காதல் வந்தது அதற்குப் பிறகு உடற்கட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்தேன். அதேபோல் எனது திருமணம் குழந்தை என்று காதலுக்கு அர்த்தம் வந்தது. காதல் என்பது வாழ்க்கையின் அடிப்படையான ஒன்று. இங்கே இத்தனை பேர் ஒன்று சேர்ந்து இருப்பதற்கும் காதல் தான் காரணம்.  இந்தப் படத்திற்கு நான் வருவதற்கு காரணம் அதியமான் அண்ணன் அவர்கள் தான். நான் சென்னைக்கு வருவதற்கே அவர் தான் காரணம். அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர். அவர் எப்போது என்னை அழைத்தாலும் ஹலோ ஹாய் என்று சொல்ல மாட்டார். தம்பி என்று தான் கூப்பிடுவார். எப்படிடா இருக்குற ரொம்ப நாளாச்சு? என்பார். அவர் மூலம் தான் இந்த வாய்ப்பு வந்தது. நல்ல வித்தியாசமான கதை.

 

வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். நான் மாசிலாமணி படத்தில்  பேச வேண்டிய ஒரு வசனம் இருக்கும். "எது எப்போது நடக்குமோ அது அப்போது நடக்கும்" அதுதான் எனது வாழ்க்கையில் நடக்கிறது. இந்தப் படத்தில் வித்தியாசமான கதை உள்ளது. இதில் வித்தியாசமான பாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன்.இங்கே எல்லோருக்கும் ஒரு காதல் கதை இருக்கிறது. இந்தக் கதையை அனைவரும் தொடர்பு படுத்திப் பார்த்துக் கொள்ள முடியும். அனைவரும் நன்றாக உழைத்திருக்கிறோம். அருமையான இந்த படக் குழுவிற்கு நன்றி. 15 நாள் தான் இதில் பணியாற்றினேன். ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவம் வித்தியாசமான அனுபவம், அனைவருக்கும் நன்றி"என்றார்.

 

நிகழ்ச்சியில் பாடல்களை எழுதியுள்ள கண்மணி ராஜா முகமது, முத்தமிழ், கவிதா ரவி, பார்த்திபன் ,தயாரிப்பாளர்  பத்ரகாளி பிலிம்ஸ் வெங்கட்ராவ், கன்னட நடிகர் ரஞ்சித் குமார், தயாரிப்பாளர்கள் ராஜேந்திரகுமார் ,வேலாயுதம், படத்தை தயாரித்திருக்கும் ஆகாஷ் அமையா ஜெயின் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

Related News

10896

கலப்பை மக்கள் இயக்கம் நிறுவனர் பி.டி.செல்வகுமாருக்கு பாராட்டு விழா!
Saturday January-24 2026

கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவரும், திமுக'வில் தன்னை இணைத்துகொண்டு அரசியல் களத்தில் கால் பதித்துள்ளவரும், நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளருமான பி டி செல்வகுமார் அவர்களுக்கு திரையுலகம் சார்பில் கடந்த 23...

‘மாயபிம்பம்’ வெளியாகும் முன்பே இரண்டாம் பட வாய்ப்பு பெற்ற கே.ஜெ.சுரேந்தர்!
Thursday January-22 2026

அறிமுக இயக்குநர் கே.ஜெ.சுரேந்தர் இயக்கி தயாரித்திருக்கும் படம் ‘மாயபிம்பம்’...

Recent Gallery