ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்து, நாயகனாக நடித்துள்ள படம் ‘ரெட் லேபில்’. பொன்.பார்த்திபன் கதை எழுதியுள்ள இப்படத்தை கே.ஆர்.வினோத் இயக்கியுள்ளார். சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்ய, லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார்.
இதில், நாயகன் லெனின் ஜோடியாக அஸ்மின் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆர்.வி.உதயகுமார், முனிஷ்காந்த், இயக்குநர் அனுமோகன் தருண், கெவின், கார்மேகம் சசி, அனுஷா ஆகியோர் நடித்துள்ளனர்.
வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘ரெட் லேபில்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்து கொண்டு படம் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனாக நடித்துள்ள லெனின் பேசுகையில், “நான் எப்போதும் நேரம் தவறாமையைக் கடைப்பிடிப்பவன்.சினிமா விலும் அதைப் பின்பற்ற நினைத்தேன்.சரியான நேரத்தில் வந்ததால்தான் இந்த இயக்குநரையை தேர்வு செய்தேன்.எதையும் முறைப்படி செய்ய வேண்டும் என்பதை சினிமாவிலும் நான் தொடர விரும்பினேன். எந்த வேலையாக இருந்தாலும் நேர்மையாகச் செய்தால் போதும், நடப்பது நடக்கும். பலன் நல்லதாகவே இருக்கும். இந்தப் படத்திற்கு ஐந்து கதாநாயகிகளைப் பார்த்து ஆறாவதாகத்தான் அஸ்மின் வந்தார்.
இந்த ஒரே படத்தில் எனக்குப் பல அனுபவங்கள் கிடைத்தன, படத்திற்குத் தலைப்பு பதிவு செய்வதே சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது. முதலில் ஒரு தலைப்பைப் பதிவு செய்தோம். கிடைத்தது,பிறகு அது காலாவதி ஆகிவிட்டது, இல்லை என்றார்கள்.அதைப் புதுப்பிக்க வேண்டும் என்கிற விஷயம் எனக்குத் தெரியாது. ஓர் ஆண்டுக்குள் புதுப்பிக்க வேண்டுமாம். பிலிம் சேம்பரில் தலைப்பு பதிவு செய்யும்போது நாம் ஒரு ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
பிலிம் சேம்பரில் கணினி மயமாக்கி இணைத்தால் மிகச் சுலபமாக இந்த வேலையைச் செய்ய முடியும். பல பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். ஆனால் யாரும் இதைச் செய்வதில்லை . நான் உங்களுக்கு உதவத் தயாராக இருக்கிறேன் அதுவும் இலவசமாக. பேப்பர் வேலை,அலைச்சல்கள் எதுவும் தேவையில்லை.எல்லாவற்றையுமே எளிமையாகச் செய்யலாம்.
நான் முதலில் நல்ல தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு தான் பிறகு நடிப்பவர்களைத் தேர்ந்தெடுத்தேன். நான் சரியாகத்தான் செய்திருக்கிறேன் என்பதற்கு எனது இசையமைப்பாளருக்கு கேரளாவில் விருது கிடைத்தது, எனது எடிட்டருக்கு தமிழ்நாடு அரசு விருது கிடைத்து இருக்கிறது என்பதிலேயே தெரிந்துவிடும். ஒரு படத்திற்கு நடிப்பதற்கு முக மதிப்பு உள்ளவர்கள் தேவைதான். இருந்தாலும் நல்ல தொழில்நுட்பக் கலைஞர்கள் தேவை. நான் பணம் சம்பாதிக்க என்று இங்கே வரவில்லை. சினிமா மீதுள்ள காதலால் இங்கே வந்திருக்கிறேன்.
முதலில் 2023-ல் கதை தேர்வானது, கதை பிடித்து விட்டது. ஆனால் எந்தப் படம் வந்தாலும் நமது படத்தில் உள்ள காட்சிகள் இருப்பது போல் தோன்றியது. அதனால் போன ஆண்டில் வந்த அனைத்து படங்களையும் பார்த்து விட்டேன். வாரம் எட்டு படம் வருகிறது. எல்லாவற்றிலும் நாங்கள் நினைத்தது வந்தது போலவே தோன்றும். இருந்தாலும் கதை வலுவாக இருந்ததால் தைரியமாக இருந்தோம்.
நான் படப்பிடிப்பில் கேட்கிற அளவுக்கெல்லாம் வசதிகள் செய்து கொடுக்க மாட்டேன்.ஒரு காட்சியில் 10 நாற்காலிகள் வேண்டுமென்றால் ஐந்து தான் கொடுப்பேன். இப்படித்தான் நான் தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டு மிச்சப்படுத்தினேன். இந்த சினிமாவில் எதற்கெடுத்தாலும் கமிஷன் என்கிற போக்கு இருக்கிறது. இது மிகவும் தவறானது. இதைப் பார்த்த போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.சினிமாவில் கமிஷன்கள் ஒழிக்கப்பட வேண்டும்.
ஒரு சினிமாவிற்கு இசையமைப்பாளரும் எடிட்டரும் முக்கியமானவர்கள்,அவர்கள் இருவரால்தான் ஒரு படத்தை நன்றாகக் கொண்டு வர முடியும். இசையமைப்பாளர் தெரிகிற அளவிற்கு எடிட்டர் வெளியே தெரிவதில்லை. இசையமைப்பாளர் அளவுக்கு எடிட்டர் கவனத்தில் வருவதில்லை. நான் நடித்த போது முதலில் இரண்டு நாள் சுமாராகத்தான் நடித்து இருந்தேன். எனக்கே சந்தேகம் இருந்தது .படத்தில் சில இடங்களில் தொய்வு இருந்தது.ஆனாலும் எல்லாவற்றையும் தோன்றாத அளவிற்கு சரி செய்து நன்றாகப் படத்தை தொகுத்துள்ளார் எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் அவருக்கு நன்றி.
படம் தொடங்கும்போதே பெப்ஸி பிரச்சினை வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து போன்கள் வந்து கொண்டே இருந்தன. ஆறாவது நாள் நாங்கள் படத்தை நிறுத்தி விடுவோம் என்றார்கள். படப்பிடிப்பை நிறுத்தி விடுவோம் என்றார்கள் .எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.நாம் முதல் போட்டு படம் எடுக்கிறோம்.அவர்கள் என்ன நிறுத்துவது என்று நானே நிறுத்திவிட்டேன். ஆறாவது நாளே படப்பிடிப்பு நின்று விட்டது. பலருக்கும் இந்தப் படம் தொடருமா என்கிற சந்தேகம் வந்திருக்கும்.
இப்படி 2023 இல் கதை விவாதத்தில் தொடங்கி 2026 வெளியாகிற தேதி வரை ஏதாவது தடைகள், முரண்பாடுகள் இருந்து கொண்டே தான் இருந்தன. இருந்தாலும் இயக்குநரும் மற்றவர்களும் இணைந்து இந்தப் படத்தை முடித்து இருக்கிறோம்.
சினிமாவில் ஒரு தயாரிப்பாளர் செலவு செய்வது அனைத்தும் செலவுக் கணக்கில் தெரியுமா என்றால் தெரியாது. ஒரு படத்திற்கு 5 கோடி செலவு செய்கிறார்கள் என்றால் பத்திலிருந்து பதினைந்து சதவீதம் செலவில் வராது. கமிஷனாகப் போய் விடுகிறது. இப்படி நாலு ஷெட்யூலுக்கு நாலு யூனிட் மாற்றினேன். முதலில் ஒரு லட்சம் கேட்டார்கள், பிறகு 90 ஆயிரம் , பிறகு 80 ஆயிரம், 70 ஆயிரம் என்று மாறிக்கொண்டே போனது. இது எப்படி இடையில் அவ்வளவு கமிஷன் போகிறது. சம்பளம் வாங்குவது மட்டும் போதாதா? கமிஷன் ஏன் வாங்குகிறார்கள்? சினிமாவில் கமிஷனை ஒழிக்க வேண்டும்.
சங்கர் சார் லஞ்சத்தை ஒழிப்பதற்குப் படம் எடுத்தது மாதிரி இதையும் ஒழிக்கப் படமாக எடுக்க வேண்டும். இந்த கமிஷன் சினிமாவில் வெகு சகஜமாக இருக்கிறது .நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து படம் எடுக்க வந்தால் இடையில் உள்ளவர்கள் யாராவது சாப்பிட நினைக்கிறார்கள். நான் சம்பாதித்த காசுக்கு எனக்கு கணக்கு வேண்டும்.இதை நான் விடமாட்டேன். இன்னொரு அனுபவம். ஒரு குணச்சித்திர நடிகரை அணுகிய போது பெரிய சம்பளம் கேட்டார். அது அவரது விருப்பம் பரவாயில்லை.ஆனால் பயணப்படியாக கிலோமீட்டருக்கு இருபது ரூபாய் கேட்டார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏன் நான் கொடுக்க வேண்டும்? அதுபோல உதவியாளர்கள் சம்பளமும் ஒழிக்கப்பட வேண்டும். இப்படி எல்லாம் நிபந்தனை போட்டால் யாரும் வர மாட்டார்கள் .ஆனால் அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை .
இந்தப் படத்தில் நாங்கள் நியாயமாக உழைத்திருக்கிறோம்.ஏதாவது எடுத்து ஒப்பேற்றி விடலாம் என்று நாங்கள் நினைக்கவில்லை. அதனால் தான் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எங்கள் மீது நம்பிக்கை வைத்து எங்களை ஊக்கப்படுத்தி இந்தப் படத்தை வெளியிடுகிறார்கள்.” என்றார்.
படத்தின் நாயகி அஸ்மின் பேசுகையில், “இந்த ரெட் லேபில் படத்தின் அனுபவம் மறக்க முடியாது. இந்த படத்தின் மூலம் புதிய உறவுகள் கிடைத்தனர் .நான் வேறு ஒரு தொழிலில் இருந்து இங்கே வந்திருக்கிறேன். இருந்தாலும் இந்த படத்திற்குள் நான் வரக் காரணம் தயாரிப்பாளர் லெனினும் இயக்குநர் வினோத்தும் தான். இயக்குநர் என்னை நன்றாகப் படத்தில் வடிவமைத்திருக்கிறார். இசைஅமைப்பாளர் கைலாஷ் மேனன் இந்தப் படத்திற்குள் வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது .இந்தப் படத்தில் நாம் அறிமுகமானது பெரிய விஷயம். ஒரு குடும்பம் போல் என்னைக் கவனித்துக் கொண்டார்கள் அனைவருக்கும் நன்றி" என்றார்.

படத்தின் கதாசிரியர் பொன். பார்த்திபன் பேசுகையில், "இந்தப் படக்கதையைப் படமாக எடுக்கும் போது முதலில் எதெல்லாம் வேண்டாம் என்று முடிவு எடுத்து தவிர்க்க வேண்டியவற்றையெல்லாம் தவிர்த்தோம் .ஆனால் ஆதாரமாக இருக்கும் ஒருவரியை மட்டும் அதன் பொறியை அக்கினி குஞ்சு இருப்பது போல் அதன் தன்மை மாறாமல் பார்த்துக் கொண்டோம். 2023 இல் கதை விவாதமாகத் தொடங்கப்பட்டு 2026 வரை ஒவ்வொரு நாளும் மெருகேறி வருகிறது இந்தப் படம். முதல் காட்சிலிருந்து கதை தொடங்கிவிடும். ஒவ்வொரு காட்சிக்கும் சங்கிலி போலத் தொடர்பு இருக்குமாறு இந்தத் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.
பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், "இந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்னோடு உரிமையாகப் பழகுபவர். எனக்கு ஒருமுறை பணத் தேவை இருந்த போது தயங்கிக் கொண்டு நான் அவரிடம் கேட்கவில்லை.அடுத்த வாரம் தாமதமாகத்தான் கிடைத்தது. அப்போது தயாரிப்பாளர் பேசும்போது மகிழ்ச்சியா என்றார் .ஒரு வாரத்துக்கு முன்பு கிடைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றேன். ஏன் கேட்டிருக்க வேண்டியதுதானே? ஏன் தயக்கம் உங்களுக்கு ? என்றார் .அந்த அளவுக்கு உரிமையோடு பழகுபவர். இந்த படத்தின் பாடல்கள் நன்றாக வந்துள்ளன" என்றார்.
படத்தின் கலை இயக்குநர் பிரகதீஸ்வரன் பேசுகையில், "படங்களில சின்ன படம் பெரிய படம் என்றெல்லாம் இல்லை. எல்லா படமும் ஒன்றுதான். எது ஓடுகிறது அது பெரிய படம். எது ஓடும் என்று யாராலும் சொல்ல முடியாது .எனக்கு இந்தப் படத்தில் ஒரு சம்பளம் கொடுத்தார்கள் .அதை வெளியே சொல்ல முடியாது. ஆனால் பணத்துக்காக நான் இங்கே வரவில்லை. சினிமா மீதுள்ள காதலால் இங்கே வந்திருக்கிறேன். பணம் வளர வளர கிடைக்கும் "என்றார்.
இசை அமைப்பாளர் கைலாஷ் மேனன் பேசுகையில், "இதுதான் எனக்குத் தமிழில் முதல் படம் .ஆனால் இங்கே முதலில் வந்தபோது எனக்குத் தயக்கம் இருந்தது .ஆனால் தயாரிப்பாளரும் இயக்குநரும் நன்றாக என்னைப் பார்த்துக் கொண்டார்கள் .அதனால் இந்தப் பயணம் சௌகரியமாக இருந்தது .ஒரு வகையில் மலையாளப் படங்களை விட எனக்கு இங்கே மிகவும் சௌகரியமாகவும் சுலபமாகவும் இருந்தது. இங்கே தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நல்ல மதிப்பளிக்கிறார்கள். அது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இந்த இயக்குநரும் தயாரிப்பாளரும் சினிமாவை நேசிப்பவர்களாக இருக்கிறார்கள். மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த இந்தப் படம் இப்போது வெளியாக இருக்கிறது மகிழ்ச்சி" என்றார்.
இயக்குநர் கே .ஆர் வினோத் பேசுகையில், "நாங்கள் வளர்ந்து வரும் திரைப்படக் குழுவினர். வளர்ந்து வரும் நடிகர்களைக் கொண்டு இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம். அனைவருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் படம் யாரையும் நிச்சயமாக ஏமாற்றாது என்று நம்புகிறேன் "என்றார்.
படத்தில் நடித்துள்ள இயக்குநர் அனுமோகன் பேசுகையில், "அப்போதெல்லாம் சினிமாவில் ஒரு வழிமுறையைப் பின்பற்றினார்கள் முதலில் கதாசிரியரைக் கொண்டு கதையைத் தேர்ந்தெடுப்பார்கள் . பிறகு திரைக்கதை ஆசிரியர் வசனம் என்று ஆள் தேர்ந்தெடுப்பார்கள்.அவர்களும் தயாரிப்பாளரும் இணைந்து இயக்குவது யார் என்று தேர்ந்தெடுப்பார்கள். பிறகு அவர்கள் இணைந்து அந்தக் கதைக்குரிய கதாநாயகன்,நடிகர்கள் யார் என்று தேர்ந்தெடுப்பார்கள்,அந்த வழியில் தான் இப்போது இந்தப் படம் உருவாகி இருக்கிறது. இப்போதெல்லாம் கதாநாயக நடிகர்கள் தான் கதையையும் படத்தின் காட்சிகளையும் முடிவு செய்கிறார்கள் .ஷாட் என்ன என்பது கூட அவர்கள் தான் முடிவு செய்கிறார்கள். அப்படி எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்து சுயநலமாக இருக்கிறார்கள். உங்கள் சுயநலத்தை விட்டு விடுங்கள்.
இந்தப் படத்தில் ரத்தினபுரி என்று பாடலில் வரி வருகிறது. அதுதான் எங்கள் சொந்த ஊர். அந்த ரத்தினபுரியில் தான் பல சினிமாக்காரர்கள் சுற்றி வந்திருக்கிறார்கள். அங்கேதான் சத்யராஜ், சுந்தர் சி, தயாரிப்பாளர் கே ஆர் ஜி, கே. கோபிநாத் எல்லாரும் சுற்றி இருக்கிறார்கள்.
சினிமா டிக்கெட்டுக்கு 120 ரூபாய் கொடுத்தால் அந்த பணத்தில் தான் 120 குடும்பங்கள் பிழைக்கின்றன. இந்தப் படத்தில் நான் ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.இந்தப் படத்திற்குப் பிறகு எனது பெயரே மாறிவிடும்.” என்றார்.
படத்தை விநியோகம் செய்து வெளியிடும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் குகன் பேசுகையில், "ஒரு படத்திற்கு ரசிகர்கள் எப்படி வருகிறார்கள் என்றால் முதலில் ரசிகர்கள் அதிகம் உள்ள கதாநாயகர்களுக்கு வரும் கூட்டம் பெரியது .அதைத் தவிர்க்க முடியாது. அது அல்லாத படங்களும் வரத்தான் செய்கின்றன. அப்படி சிறை, மெட்ராஸ் மேட்னி போன்ற படங்கள் ஓடின. இப்போது வரும் பார்வையாளர்கள் யார் என்றால் 15 முதல் 32 வயது வரை உள்ளவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் .அவர்கள் எதிர்பார்த்து எது அவர்களைத் தூண்டுகிறதோ அந்தக் கதைகள் ஓடுகின்றன. பிறகு தான் வாய் வழியாக பேசப்பட்டு மற்றவர்கள் உள்ளே நுழைகிறார்கள்.
முதல் 10 கதாநாயகர்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அதையும் தாண்டி கதை உள்ள படங்கள் ஓடத்தான் செய்கின்றன. எனவே கதை என்பதை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். அடுத்து பாடல்கள் முக்கியம். ரீ ரிலீஸ் படங்கள் எல்லாம் பாடல்களால்தான் பேசப்படுகின்றன .எனவே பாடல்களுக்கு ஓர் இடம் உள்ளது .
இன்று 8 கோடி பேர் இருக்கிறார்கள் என்றால் அதில் 10% பேர் என்றால் 80 லட்சம் பேர் படம் பார்க்க வர வேண்டும் .ஆனால் இது போன்ற புதுப் படங்களுக்கு இரண்டு முதல் ஐந்து லட்சம் பேர்கள் தான் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது .அது ஒரு சதவீதம் தான். அப்படி இருக்கும்போது நல்ல கதை உள்ள படங்கள் வெற்றி பெறுகின்றன. சினிமாவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று யோசிக்கும்போது, சினிமா டிக்கெட் மட்டுமல்ல பிற செலவையும் கணக்கில் கொள்ள வேண்டி உள்ளது. வெளியில் 30 ரூபாய் விற்கும் காபி உள்ளே 150 ரூபாய் விற்கிறார்கள்.
20 ரூபாய் பப்ஸ் உள்ளே 120 ரூபாய். பாப்கான் 700 ரூபாய் வரை விற்கிறார்கள்.படம் பார்க்க வருபவர்களுக்கு இது ஒரு பெரிய அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே நாம் கொடுக்கிற காசுக்கு சரியாக படம் உள்ளதா என்று பார்க்கிறார்கள். எனவே படத்திற்கு கதை முக்கியம்.இந்தப் படக் குழுவினரை வாழ்த்துகிறேன்" என்றார்.
ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கார் மேனி செல்வம்' திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன் , ஹரிதா பராகோட், கோதண்டம், கரண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
தேசிய விருது வென்ற படைப்பாளியான இயக்குநர் மணிகண்டன் மற்றும் இயக்குநரும், படத்தொகுப்பாளருமான பி...
Adhira & Appa Coffee, built on the philosophy of sustainability and authenticity and part of the EBG Group, has announced acclaimed actors Shruti Haasan and Murali Sharma as their brand ambassadors...