Latest News :

கணவனின் கனவை நிறைவேற்ற தயாரிப்பாளரான மனைவி!
Friday February-06 2026

வீர அன்பரசு எழுதி, இயக்கி, நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’. இப்படத்தில் நாயகியாக ஏஞ்சல் நடிக்க, பப்லு பிரித்விராஜ், இயக்குநர் பேரரசு, ஆகாஷ், வாழை ஜானகி, உஷா, தங்கதுரை பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். 

 

இப்படத்தின் கதையை எழுதி இயக்கியதுடன் நாயகனாகவும் நடித்துள்ளார் வீர அன்பரசு. நாயகியாக ஏஞ்சல் நடித்துள்ளார்.இவர்களுடன் பப்லு என்கிற பிருத்விராஜ், இயக்குநர் பேரரசு, ஆகாஷ், 'வாழை' ஜானகி, உஷா, தங்கதுரைப்பாண்டியன் போன்றவர்களும் நடித்துள்ளார்கள்.

 

படத்திற்கு வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாவலர் வி .சிவராமன் மற்றும் கார்த்திக்ராஜா இசையமைத்துள்ளனர், சண்டைப் பயிற்சிகளை கோல்டன் என். கோபால் அமைத்துள்ளார். நாதன் உடை வடிவமைப்பாளராகவும், பழனி கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர். 

 

நாட்டுப்பற்றுள்ள கதையம்சம் கொண்ட இப்படத்தினை ஏஏஏ பிக்சர்ஸ் (AAA Pictures) சார்பில் அனுராதா அன்பரசு தயாரித்துள்ளார். இவர் இயக்குநரும், நாயகனுமான வீர அன்பரசுவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை, பரணி ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். 

 

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு பேசுகையில், “லவ் ஸ்டோரி என்கிற போது அது நூற்றுக்கு 200 சதவீதம் வெற்றி பெறும் .அதுதான் இந்த விழாவில் வெளிப்படும் உண்மை. கோல்டன் கோபால் எனக்குப் பல ஆண்டுகள் பழக்கம்.   பல ஆண்டுகளுக்கு முன்பு 1985 -ல் 'யார்' படம் வெளியிட்டபோது, அதற்கு பிறகு விஜயகாந்த் சாரை வைத்து 'கூலிக்காரன்', 'நல்லவன்',' தெருப்பாடகன்'  போன்ற பல படங்கள்  எடுத்துக் கொண்டிருந்த போது ஸ்டண்ட்டில் உதவியாளராக இருந்து சிறப்பாகப் பணியாற்றியவர்.அப்போது நான் கூப்பிட்டு நீ படம் பண்ணு உனக்கு நான் படம் தருகிறேன் என்பேன்.

 

இந்த மேடையில் அவரைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தில் சிறப்பான ஸ்டண்ட் செய்திருக்கிறார்.சட்டத்துக்கு உட்பட்டு ராணுவப் பயிற்சிகள் போன்றவற்றை அளித்து தேர்ந்த கலைஞர்களை வைத்து அமைத்து ஸ்டண்ட் காட்சிகள் எடுத்திருப்பதைப் பார்க்கும்போது 'துப்பாக்கி', 'ஆள வந்தான்'  போன்ற படங்களில் ஸ்டண்ட் காட்சிகள் எடுத்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது.இதற்கு முன்பு பேசியவர்கள் சொன்னார்கள் ,யாருமே எடுக்க முடியாத ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து, திரைக்கதை அமைத்து இருக்கிறார் இயக்குநர் அன்பரசு என்றார்கள். நான் இந்தப் படத்தைப் பார்க்க  ஆவலாக இருக்கிறேன். புதிய படத்திற்குப் புதுமுகங்களை  வைத்து பாடல், ஸ்டண்ட் என்று நிறைய செலவு செய்து இருக்கிறார்கள். ஆச்சரியமாக இருக்கிறது. கார்த்திக்ராஜா சிறந்த பின்னணி இசை கொடுத்திருக்கிறார். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.” என்றார்.

 

நடிகை வாழை ஜானகி பேசுகையில், “இந்த மேடையைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த மாதிரி படத்தை எடுப்பதற்குக் கணவருக்கு மன தைரியம் கொடுத்ததற்காகத் தயாரிப்பாளருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எங்கெங்கோ சென்று சிரமப்பட்டு இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். அன்பரசு சார் எனக்கு இந்த படத்தில் அவரது அம்மாவாக நடிக்க வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.எல்லாருமே இந்த படத்தைப் போய் திரையரங்கில் பார்க்க வேண்டும் என்று  வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

 

நடிகர் பப்லு என்கிற  பிருத்விராஜ்  பேசுகையில், “நான் 50 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். இன்று என்னை பேன் இந்தியா ஆர்டிஸ்ட் என்று அறிமுகம் செய்தார்கள்.இன்னும் ஆறுமாதங்களில் என்னை பேன் வேர்ல்ட் ஆர்டிஸ்ட் என்பார்கள்.ஏனென்றால் நான் நடிக்கும் இரண்டு படங்கள் 365 மொழிகளில் வெளியிடப் போகிறார்கள்.சினிமாவில்  நன்றாக இருக்கும் போது எல்லாம் நன்றாக இருக்கும். வாய்ப்பு இல்லை என்றால் யாருமே மதிக்க மாட்டார்கள். நம்மைப் பார்த்தால் கூட பார்க்காத மாதிரி சென்று விடுவார்கள். 

 

இயக்குநர் அன்பை எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். அன்பு என்றால் 24 கேரட் அன்பு  அவருடையது. அவர் சம்பாதித்ததில் பெரிது இந்த நண்பர்கள் தான்.  அன்பும் நிறைய கதைகள் வைத்திருக்கிறார். அது அவ்வப்போது நேரம் வரும்போதுதான் சினிமாவில் நடக்கும் .இந்த மாதிரி நிறைய படங்கள் செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

 

நாயகி ஏஞ்சல் பேசுகையில், “இந்தப் படத்தில் நடித்ததற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். நிறைய பேர் இந்த படத்துக்காக கடின உழைப்பை வழங்கி இருக்கிறார்கள்.அனைவரும் திரையரங்கு சென்று படத்தைப் பாருங்கள்.” என்றார்.

 

Commandovin Love Story

 

இயக்குநர் பேரரசு பேசுகையில், “ஸ்டண்ட் மாஸ்டர் கோல்டன் கோபால், நீங்கள் சம்பளத்தைச் சொல்லா விட்டாலும் ரெய்டு வந்துவிடும்.ஏனென்றால் நீங்கள் கோல்டன் கோபால். 30 நாள் ரஜினியுடன் பயணித்தால் போதும் ரெய்டு வரும். கணக்கைப் பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். பட்டாசு பாலு, பான்பராக் ரவி, சனியன் சகடை, என்று ரவுடிகளுக்கு நான் பெயர் வைப்பேன். மாஸ்டர்களுக்கு வெறுமனே பெயர் வைத்தால் சரியாக வராது. கோல்டன் கோபால் என்று பெயர் வைத்துள்ளார். அந்தப் பெயருக்கே ரெய்டு வரும்.இந்த மேடையில் நிறைய நன்றி உணர்வு வெளிப்பட்டது.மாஸ்டருக்கு நிறையவே உள்ளது.

 

இந்தப் படத்தில் கணவன் ஒரு பக்கம், மகன் ஒரு பக்கம் டூயட் பாடிக் கொண்டிருக்கிறார்கள். அப்பாவும் மகனும் போட்டி போட்டுக் கொண்டு லவ் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தைத் தயாரித்தது அம்மா.இந்த மாதிரி குடும்பம் யாருக்குக் கிடைக்கும்? அந்தளவுக்கு ரசித்துள்ளார்கள்.

 

இந்த இயக்குநர் நண்பர் வீர அன்பரசு,நடித்துச் சாதித்தாரோ இல்லையோ இயக்கிச் சாதித்தாரோ இல்லையோ ஒரு வகையில் உண்மையில் சாதித்து விட்டார் .அது என்னவென்றால் மனைவி அவரை ஹீரோ என்று பலமுறை சொல்லிவிட்டார்கள்.எந்த மனைவியும் கணவனை ஹீரோ என்று ஒப்புக் கொள்வதில்லை. ஜீரோ என்று தான் சொல்வார்கள். நடித்தது இயக்கியது எல்லாம் பெரிதில்லை, தனது மனைவி கதாநாயகன் என்று ஒப்புக்கொண்டது தான் பெரிய விஷயம். அங்கேயே அவர் சாதித்து விட்டார்.ஏனென்றால் யாருமே ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.இயக்குநர் அன்பரசு கதாநாயகி ஏஞ்சலைக் கொடுமைப்படுத்தி இருக்கிறார். குலுமனாலியில் எடுத்த காட்சிகளைப்  பார்க்கும்போதே நமக்குக் குளிர்கிறது. இவர் நன்றாக கோட் சூட் போட்டுக் கொண்டு கதாநாயகிக்கு மட்டும் அங்கே குறைந்த ஆடைகளைப் போட்டுப் பாடல் காட்சிகள் எடுத்துள்ளார்.

 

கதாநாயகியின் ஒவ்வொரு குளோசப்பும் அவ்வளவு அழகாக இருந்தது.லட்டு மாதிரி இருந்தது. பப்லு  50 வருடம் சினிமாவில் இருப்பதாகச் சொல்கிறார் அந்த உற்சாகம் இன்னும் குறையவில்லை.எனது நண்பர் இணை இயக்குநர் வெற்றிவேலன் இந்தப் படத்தில் ஒரு கேரக்டர் செய்ய வேண்டும் என்று ஒரு கல்லூரியில் படப்பிடிப்பு நடப்பதாக அழைத்தார்.  என்ன வேடமென்று யோசித்துக் கொண்டு சென்ற போது நீங்கள் நீங்களாகவே இருக்க வேண்டும் என்றார்கள் .நான் இதில் இயக்குநர் பேரரசாகவே வருகிறேன். நட்புக்காக என்று ஒத்துழைப்புக்கு நன்றி என்று கூறி கைக்குலுக்கி அனுப்பி விடுவார்களோ என்று நினைத்தேன் .ஆனால் போகும்போது எனக்கு ஒரு தொகையைக் கொடுத்தார்கள்.

 

முன்பெல்லாம் ராணுவம் பற்றிய கதைகள் அதிகம் வரும்.கேப்டன் விஜயகாந்த் இருக்கும்போது நாட்டுப்பற்றுக் கதைகள் அதிகம் வரும் .அதே போல் ஆக்சன் கிங் அர்ஜுன் நாயகனாக நடித்த போது அது போன்ற படங்களில் நடிப்பார். இப்போது அது மாதிரிப் படங்கள் அதிகம் வருவதில்லை. நாட்டுப் பற்றுக் கதைகளே இல்லாமல் போய்விட்டது.ராணுவம் சம்பந்தப்பட்ட கதை 'துப்பாக்கி'க்குப் பிறகு 'அமரன்' வந்தது . இப்போது 'கமாண்டோவின் லவ் ஸ்டோரி'.இந்தப் படத்தில் நாட்டுப் பற்றும் உள்ளது. காதல் பற்றும் உள்ளது.

 

 இயக்குநர் வீர அன்பரசு 35 ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவின் மேல் உள்ள காதலால் ஒரு படம் ஆரம்பித்து சில சூழ்நிலையால் அது வெளியாகவில்லை.அவர் கஸ்டம்ஸ் ஆபீசர்  . நன்றாகச் சம்பாதித்து செட்டிலாகி இருக்கலாம் .சினிமாவுக்கு வந்திருக்கிறார் .ஏனென்றால் சினிமாவின் மீது அவருக்கு அவ்வளவு காதல்.சினிமாவை உண்மையாக நேசித்தால் சினிமா நம்மைச் சாதிக்க வைக்கும்.எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சாதிக்கலாம்.இது சின்ன படம் தான். எத்தனை லொகேஷன்களில் எடுத்துள்ளார்கள். எவ்வளவு பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்கள்.நடித்திருப்பவர்கள் தான் புதியவர்களே தவிர சின்ன படத்திற்கான அறிகுறியே இல்லை.இது மாதிரி சிறு முதலீட்டுப் படங்கள் எடுக்கப்படும் போது தான் சின்னச் சின்ன தொழில்நுட்பக் கலைஞர்களுக்கெல்லாம்,சின்னச் சின்ன நடிகர்களுக்கெல்லாம்  வாய்ப்பு கிடைக்கும்.இது மாதிரியான படங்கள் வெற்றி பெற வேண்டும். இயக்குநர் அன்பரசு மனைவி அனுராதா மாதிரி அமைவதற்கு நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அந்த அளவிற்கு ஆதரவு கொடுத்து பக்கத் துணையாக இருந்து இருக்கிறார்கள்.இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும். தொடர்ந்து நீங்கள் படம் செய்ய வேண்டும். பலருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். படக்குழுவினருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

 

தயாரிப்பாளர்  அனுராதா அன்பரசு பேசுகையில், ”இந்தப் படத்தினைத் தயாரிப்பதற்காக அந்த வாய்ப்புக்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். எனது குடும்பம் மிகவும் சிறிய குடும்பம் 52 பேர் தான் அதில் உறுப்பினர்கள் .அவர்கள் எல்லாம் இங்கே  இருக்கிறார்கள், எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். முயற்சி திருவினையாக்கும் என்பது போல் அன்பரசு என்பவரின் முயற்சி தான் இந்த படம்.என் கணவரின் பல்லாண்டுகாலக் கனவு இன்று படமாக வந்திருக்கிறது.அதன் பின்னே அவரது கடின உழைப்பு இருக்கிறது. படம் வெற்றி பெற அனைவரும் ஆதரவு தாருங்கள்.” என்றார்.

 

படத்தில் இயக்குநர் கதாநாயகன் வீர அன்பரசு பேசுகையில், "படத்திற்கு இசையமைத்துள்ள சிவராமன் எனக்கு 25 ஆண்டுகளாக நண்பர்கள். அவர் பாடல்களுக்கு இசையமைத்தார். பின்னணி இசையை கார்த்திக் ராஜா அவர்களிடம் அமைக்க வேண்டும் என்று கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.சம்பளம் பற்றிப் பேசியபோது "நான் எதுவும் கேட்கவில்லை. நீங்கள் எது கொடுத்தாலும்  வாங்கிக் கொள்கிறேன் "என்றார்.முதல் நாள் இரவு படத்தில் ஒரு பாடல் வேண்டும் என்று கேட்டபோது, இரவு 8 மணிக்கு கேட்கிறேன். வீடு சென்று படுத்து தூங்கி எழுந்தால் காலை 8 மணிக்கு அவர் போன் செய்தார். இரவோடு இரவாக பாடலை கம்போஸ் செய்து பாட வைத்து காலையில் போட்டுக் காட்டினார். நான் பிரமித்துப் போய் விட்டேன்.அவர் ஒரு மேஜிக்கல்மேன் தான்.அவரை பலரும் தவறவிடுகிறார்கள்.

 

பாவலர் வரதராஜன் அவர்கள் புதல்வன் சிவராமன் இசையில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் தங்கை இஷரத் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் இரண்டு பாடல்களைப் பாடித் தந்தார். இப்படி இரண்டு இடங்களிலும் அப்படி யாரும் செய்ய முடியாது. நான் இரண்டு குடும்பங்களிடம் நட்பாக இருப்பதால் அது முடிந்தது.பிரம்மாண்ட படங்களை இயக்கிய பேரரசு அவர்கள் எங்கள் படத்தில் நடித்துக் கொடுத்தது எங்களுக்குப் பெருமையாக இருந்தது. பிரமாண்ட படங்களின் இயக்குநரான அவரை எப்படி இயக்குவது என்று எனக்கு பதற்றமாக இருந்தது.ஆனால் அவர் நன்றாக நடித்துக் கொடுத்தார். பிருத்விராஜ் தனது பிசியான ஷெட்யூலிலும் நடித்துக் கொடுத்தார்.இங்கே கங்கை அமரன் சார் வருவதாக இருந்தது . அவசரமாக வேறு ஒரு  நிகழ்வுக்குச் செல்ல வேண்டி இருந்ததால் அவரால் வர முடியவில்லை. அதேபோல் ஆர் கே செல்வமணி சார் வேறொரு நிகழ்ச்சிக்குச் செல்வதால் இங்கே வர முடியவில்லை.இயக்குநர்கள் எல்லாரும் கூப்பிட்டவுடன் வந்தார்கள் .அது எனக்குப் பிடித்திருந்தது. இயக்குநர் சங்கத்திற்கும் நன்றி.படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இந்த படத்தின் இந்தி வடிவத்திற்குச் சத்யா இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். நன்றாக இருக்கிறது.நான் சினிமா இலக்கு என்று ஓடிக்கொண்டிருப்பதில் வீட்டைக் கவனிப்பதில்லை. குடும்பத்தை விட்டுவிட்டு வெளியே பல நாட்கள் பயணம் செய்திருக்கிறேன். அந்த வலி எனது மனைவிக்கு இருக்கும். இருந்தாலும் எனது இலக்குக்காக அவர்கள் வலிகளை எல்லாம் தாங்கிக் கொண்டு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அவர்களுக்கு நன்றி.” என்று அனைவருக்கும் நன்றி கூறினார்.

Related News

10910

’கார்மேனி செல்வம்’ உங்களுடன் எப்போதும் இருக்கும் ஒரு படைப்பு! - சமுத்திரக்கனி
Friday March-27 2026

ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கார் மேனி செல்வம்' திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன் , ஹரிதா பராகோட், கோதண்டம், கரண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...

தமிழில் உருவான மிகப்பெரிய இணையத் தொடர் ‘முத்து என்கிற காட்டான்’!
Thursday March-26 2026

தேசிய விருது வென்ற படைப்பாளியான இயக்குநர் மணிகண்டன் மற்றும் இயக்குநரும், படத்தொகுப்பாளருமான பி...

Shruti Haasan and Murali Sharma Join Hands with Athira & Appa Cafe!
Thursday March-26 2026

Adhira & Appa Coffee, built on the philosophy of sustainability and authenticity and part of the EBG Group, has announced acclaimed actors Shruti Haasan and Murali Sharma as their brand ambassadors...

Recent Gallery