ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் என். யோகேஸ்வரன் மற்றும் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் இணைந்து தயாரிக்க, ‘காளிதாஸ்’ வெற்றிப்படத்தைத் தந்த ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் ’காளிதாஸ் 2’.
முதல் பாகத்தை இயக்கி முத்திரை பதித்த இயக்குநர் ஸ்ரீ செந்தில் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். பரத் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருடன் இணைந்து அஜய் கார்த்தி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், 'பூவே உனக்காக' புகழ் நடிகை சங்கீதா நீண்ட இடைவேளைக்குப் பிறகு மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் இப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இவர்களுடன் பவானி ஸ்ரீ மற்றும் அபர்ணதி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.
முதல் பாகம் ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்ட புலனாய்வு திரில்லராக அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதே பாணியில், இந்த இரண்டாம் பாகமும் உணர்ச்சிகரமான அதேசமயம் அதிரடியான களத்தில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. படத்தின் போஸ்டரில் இடம்பெற்றுள்ள நடிகர்களின் தோற்றங்கள், படம் ஒரு பரபரப்பான திரில்லர் அனுபவத்தைத் தரும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்ய, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
இந்த திரைப்படத்தை ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விநியோகஸ் தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும் டாக்டர் என். யோகேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ளனர். முன்னதாக இவர்களது வெளியீட்டில் ‘பார்க்கிங்’, ‘கருடன்’, ‘மகாராஜா’ போன்ற வெற்றி படங்கள் வெளியானதால், ‘காளிதாஸ் 2’ திரைப்படத்திற்கும் திரையுலகத்திலும் ரசிகர்களிடையிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 10-ம் தேதி உலகம் முழுவதும் 'காளிதாஸ் 2' திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், ஏராளமான திரையுலக பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.
நிகழ்ச்சியில் ஃபைவ் ஸ்டார் செந்தில் பேசுகையில், “இங்கு வருகை தந்துள்ள அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும், தென்னக மாவட்டங்களைச் சேர்ந்த நண்பர்களுக்கும், பத்திரிகை, ஒளிக்காட்சி மற்றும் இணையதள ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இது எங்கள் நிறுவனத்தின் முதல் திரைப்படம். இந்தப் படத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது. நீங்கள் தரும் ஆதரவும், வெளிச்சமும் இந்தப் படத்தை இன்னும் அதிகமான மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இங்கு வந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. வணக்கம்.” என்றார்.
யோகேஷ்வரன் பேசுகையில், “என்னோட பெயர் யோகேஷ். இந்தப் படத்தில் நான் பெரிய பங்கு எடுத்துக் கொள்ளவில்லை. இந்தப் படத்துக்காக உண்மையாகக் கஷ்டப்பட்டவர்கள் செந்தில் சார் மற்றும் நாராயணசாமி சார். அவர் என்னோட அப்பா. மேடைக்கு வரச் சொன்னாலும் வரமாட்டார்; என்னைத் தான் அனுப்பிவைத்தார். முதலில், இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த ஆடியோ லாஞ்ச் விழாவை பெரிய அளவில் சிறப்பாக மாற்றியதற்கு எல்லாருக்கும் ரொம்ப நன்றி. பல நாளாக ஒரு நல்ல அறிமுகத்திற்காக காத்திருக்கிறோம். அது கண்டிப்பாக நல்ல தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். பரத் சார் இந்தப் படத்துக்கு ஒரு பெரிய பலமாக இருக்கிறார். இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல வரவாக இருக்கும். இயக்குநர் சார் இந்தப் படத்தை மிகவும் அழகாக எடுத்திருக்கிறார். தயாரிப்பாளரும் மிகவும் நம்பிக்கையுடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்துக்கு கண்டிப்பாக பெரிய வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன். நன்றி.” என்றார்.
சக்தி பிலிம்ஸ் சக்திவேலன் பேசுகையில், “இது ரொம்ப சந்தோஷமான விஷயம். ஒரு வினியோகஸ்தர் தனது மகனை இந்தத் துறையில் பெரிய அளவில் அறிமுகப்படுத்தும் முதல் விழாவாக இதைப் பார்க்கிறேன். அது மிகவும் பெருமைக்குரிய விஷயம். சினிமாவில் சம்பாதித்த பலர் வேறு துறைகளில் முதலீடு செய்திருக்கலாம். ஆனால், சம்பாதித்த அதே சினிமா துறைக்குள்ளேயே தனது மகனை ஒரு நம்பிக்கையோடு அழைத்து வந்து அறிமுகப்படுத்துவது மிகப் பெரிய விஷயம். அதுவே இந்த நிகழ்ச்சியின் சிறப்பு என்று நான் நினைக்கிறேன். அதிலும், ஒரு அருமையான கதையைத் தேர்ந்தெடுத்து, பரத் சார் மற்றும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து, ஒரு பெரிய வெற்றி படத்துக்கான அனைத்து அம்சங்களுடனும் இந்தப் படம் உருவாகி வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. செந்தில் சார் என்றாலே மிகவும் நியாயமான ஒரு டிஸ்ட்ரிப்யூட்டர். அனைவரிடமும் அன்பாகவும் அழகாகவும் பழகக்கூடியவர். நாராயணசாமி சார் பற்றி சொல்லவே வேண்டாம். இக்காலத்தில் இவ்வளவு நல்ல மனசுடைய மனிதர்கள் அரிது என்று சொல்லலாம். இந்தக் குழு, சினிமாவை வெறும் பொருளாதார நோக்கில் மட்டும் பார்க்காமல், அதற்கான பேரார்வத்தோடும் பாசத்தோடும் மிக அழகாக ஒரு டீம் வொர்க்காக இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார்கள். அவர்கள் நினைத்ததை நேர்த்தியாகவும் நம்பிக்கையுடனும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இந்த குழுவினர் எல்லா தளங்களிலும் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று நான் இறைவனை வேண்டுகிறேன். என் இதயம் கனிந்த வாழ்த்துகள். நன்றி.” என்றார்.
தயாரிப்பாளர் லலித்குமார் பேசுகையில், “செந்தில் சார் ரொம்ப கஷ்டப்பட்டு, இன்று ஒரு உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறார் என்பதுதான் எங்களுக்கு மிகவும் பெருமையான விஷயம். அவர் வாழ்க்கையை எப்படி ஆரம்பித்தார், எவ்வளவு போராட்டங்களைக் கடந்து வந்தார் என்பதைக் குறித்து பலமுறை சொல்லியிருக்கிறார். ஆனால் இன்று அவர் ஒரு தயாரிப்பாளராக இங்கே நிற்பது உண்மையிலேயே சந்தோஷமான விஷயம். அவர் விநியோகித்த படங்கள் வெற்றி பெற்றதுபோல, தயாரிப்பாளராக உருவாக்கும் இந்த முதல் படமும் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாராயணசாமி அண்ணாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த முதல் முயற்சி மிகச் சிறப்பாக அமையும். அஜய்க்கும் எனது வாழ்த்துக்கள். முதல் படம் என்பதால் இது அவருக்கு மிகவும் முக்கியமான தொடக்கம். அவர் நல்ல முறையில் தன்னை நிரூபிப்பார் என்று நம்புகிறேன்.
பரத், உங்கள் ‘காதல்’ படத்தை நான் மிகவும் ரசித்து ரசித்து பார்த்தவன். அந்த படம் உண்மையிலேயே ஒரு மாஸ்டர் பீஸ். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், அந்த மாதிரி ஒரு படம் எளிதாக வராது. அந்தப் படம் எங்கள் மேல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக அதன் கிளைமாக்ஸ் குறித்து எங்களுக்குள்ளும் நிறைய விவாதங்கள் நடந்திருக்கின்றன. சிறை படத்தின் போது நெகட்டிவ் கிளைமாக்ஸ் வைத்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணமே அந்தப் படத்திலிருந்து எங்களுக்குள் வந்த ஒன்று தான். அந்த அளவுக்கு அது மனதில் பதிந்த படம். அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் பெரிய வெற்றி பெற வேண்டும். நன்றி.” என்றார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தமிழ்க்குமரன் பேசுகையில், “மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த விழாவுக்கு வருவதற்கான முக்கிய காரணம் செந்தில் சார்தான். அவர் மிகவும் நல்ல மனிதர். நாங்கள் இணைந்து நிறைய படங்களில் வேலை செய்திருக்கிறோம். இந்தப் படம் முழு குழுவுக்கும் ஒரு பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள். நன்றி.” என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், “‘காளிதாஸ்’ எனக்கு மிகவும் பிடித்த படம். அது எல்லோருக்குமே ஒரு இனிய ஆச்சரியமாக இருந்தது. அதனால், ‘காளிதாஸ் 2’ வரும்போதும் நிச்சயம் அதே மாதிரி ஒரு ஆச்சரியம் நமக்கு காத்திருக்கிறது என்று நினைக்கிறேன். குறிப்பாக, ஒரு திரில்லர் படத்தில் பரத் சாருடன் இணைந்து அஜய் கார்த்திக் வருவது இந்தப் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. இன்று ஃபைவ் ஸ்டார் செந்தில் சார், விநியோகத் துறையில் ஆரம்பித்து, அவர் கை வைத்த படங்கள் ஊடகங்களில் பேசப்படும் அளவுக்கு வெற்றிகளைப் பெற்றிருக்கின்றன. ‘ஃபைவ் ஸ்டார் செந்தில் சார் டிஸ்ட்ரிப்யூட் பண்ணினால் அந்தப் படம் வெற்றி பெறும்’ என்ற நம்பிக்கையே இன்றைக்கு உருவாகி இருக்கிறது. மியூசிக் லேபிளாக இருந்தபோது வெற்றி கொடுத்தது போல, டிஸ்ட்ரிப்யூஷனிலும் தொடர்ந்து வெற்றி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இப்போது அடுத்த கட்டமாக, தனது மகனை அறிமுகப்படுத்துகிறார். அது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். இங்கே ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்றால், ஃபைவ் ஸ்டார் அமைப்பில் உள்ள மூன்று முக்கியமான கூட்டாளிகளின் மகன்களும் சினிமாவில் வருகிறார்கள். கல்யாண் சாரின் மகன் ஹரிஷ் கல்யாண் இருக்கிறார். செந்தில் சாரின் மகன் அஜய் கார்த்திக் வருகிறார். அதேபோல் நம்முடைய தயாரிப்பாளர் கவுன்சில் செயலாளர் கதிரேசன் சாரின் மகனும் வர இருக்கிறார். ஒருநாள் இந்த மூன்று பேரும் சேர்ந்து நடிக்கும் ஒரு படம் வர வேண்டும். ‘ஃபைவ் ஸ்டார் குழு’ என்று சொல்லும் அளவுக்கு ஒரு படம் உருவாக வேண்டும். அந்த ஆசை எனக்குள்ளது.
இன்றைக்கு தமிழ் சினிமாவைப் பற்றி பலரும் பலவிதமாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ‘இண்டஸ்ட்ரி சற்று சிரமமாக இருக்கிறது’ என்று சொல்லப்படும் நேரத்தில்கூட, கடந்த இரண்டு மூன்று மாதங்களாக தமிழ் சினிமா மிக அழகாக வளர்ந்து வருகிறது. நல்ல உள்ளடக்கம் இருந்தால் போதும், ரசிகர்கள் அதை பெரிய அளவில் ஏற்றுக்கொள்கிறார்கள். இன்றைக்கு தமிழ் சினிமா ஸ்டார்களை மட்டும் நம்பி ஓடுவதில்லை, நல்ல கதைகளையும் நல்ல படைப்புகளையும் மக்கள் மனதார வரவேற்கிறார்கள். சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்குக் கூட பெரிய வரவேற்பு கிடைக்கிறது. இது பார்க்க நமக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் விஷயம். அந்த அளவுக்கு தமிழ் சினிமா வளர்ந்திருக்கிறது. அந்த வரிசையில், இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். செந்தில் சாரின் டிஸ்ட்ரிப்யூஷனில் தொடர்ந்து வந்த வெற்றிகளைப் போலவே, இப்போது ஸ்கை பிக்சர்ஸ் மூலமும் மிகப்பெரிய வெற்றி கிடைக்க வேண்டும். இந்தப் படம் ஐம்பது, நூறு கோடி வசூலைத் தொட்டு, மிகப்பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அனைவருக்கும் என் நன்றி. வணக்கம்.” என்றார்.
தயாரிப்பாளர் ஆர் பி சௌத்திரி பேசுகையில், “டிரெய்லர் மிகவும் நன்றாக இருந்தது. ஃபைவ் ஸ்டார் கல்யாண் சார் சொன்னதுபோல, அவர் ஏற்கனவே படத்தை பார்த்திருக்கிறார். அவர் அளித்த நம்பிக்கையைப் பார்த்தால், படம் நிச்சயமாக மிகவும் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. தயாரிப்பாளர் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். டிஸ்ட்ரிப்யூஷன் துறையிலிருந்தும், மியூசிக் நிறுவனத் துறையிலிருந்தும் வளர்ந்து, இப்போது தயாரிப்பாளராக வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அதிலும், தயாரிப்பாளராக மட்டும் இல்லாமல், தனது மகனையும் இந்தப் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியிருப்பது மிகவும் சிறப்பானது. அவருக்கும், அவருடைய குடும்பத்திற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் அவர்களுக்கு ஒரு மிகப் பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும். குறிப்பாக இப்போது அவர்களுக்கு ஒரு பெரிய வெற்றி தேவைப்படுகிற நேரத்தில், இந்தப் படம் அந்த வெற்றியை கண்டிப்பாகத் தரும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இசையமைப்பாளருக்கும் என் வாழ்த்துகள். நடித்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள்.” என்றார்.
தயாரிப்பாளர் தாணு பேசுகையில், “இரண்டு விநியோகஸ்தர்கள் — ஒருவர் தம்பி செந்தில், இன்னொருவர் நண்பர் நாராயணசாமி. செந்தில் அவர்களின் மகன் நாயகனாக நடிக்கிறார், நாராயணசாமி அவர்களின் மகன் தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார். ஆகவே, இந்த விழாவில் நான் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய நாயகன் பரத், இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று நம்புகிறேன். அவர் எந்தக் கதாபாத்திரத்தையும் தனித்தன்மையுடன் உயிர்ப்பிக்கக் கூடிய திறமையான நடிகர். ஆகவே, அஜய் கார்த்திக்கும் பரத்தும் இணைந்து உருவாகும் இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
செந்தில் பற்றி தனியாகச் சொல்லவேண்டியது இல்லை. மிகவும் நல்ல விநியோகஸ்தர். விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்களாக வருவது உண்மையிலேயே நல்ல விஷயம். நானும் அந்தப் பாதையில் வந்தவன் என்பதால், இன்னும் பல விநியோகஸ்தர்கள் தயாரிப்புத் துறைக்குள் வர வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் வருவதற்கு முன் அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
டிரெய்லரைப் பார்த்தபோது, பின்னணி இசை மிகவும் கவனம் ஈர்த்தது. சாம் சி எஸ் மிக அருமையாக இசையமைத்திருக்கிறார். அவர் திறமையான இளம் படைப்பாளி. அவருக்கு இன்னும் பெரிய வாய்ப்புகள் வந்து, தொடர்ந்து சிறந்த சாதனைகள் படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்தப் படம் எங்கும் மாபெரும் வெற்றி பெற்று, இந்த அணியின் அனைவருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.” என்றார்.
தயாரிப்பாளர் அருண் விஷ்வா பேசுகையில், “செந்தில் சார் ஒரு பயங்கரமான hard-working மனிதர். அவரை எனக்கு பத்து வருடங்களாகத் தெரியும். எந்தப் படத்தையும் சுமாராகச் செய்யாமல், தேர்ந்தெடுத்து, யோசித்து, ஒரு ஒரு படமாக முன்னேற்றிக் கொண்டு போகக்கூடியவர். மிகப்பெரிய ஹீரோக்களின் படங்களாக இருந்தாலும், நல்ல உள்ளடக்கமுள்ள படங்களாக இருந்தாலும், அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் அவர் எடுத்த உழைப்பு மிக பெரியது. அந்த சிரமத்தையும் பொறுப்பையும் உண்மையாகச் சுமந்து வந்திருக்கிறார். அவருடைய மகன் அஜய் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறதே என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அஜய், உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பரத் பிரதருடன் சேர்ந்து இந்தப் படத்தில் அறிமுகமாகிறீர்கள் என்பது இன்னும் சிறப்பு. ஏனெனில், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக நல்ல நல்ல படங்களைத் தொடர்ந்து செய்து, இன்னும் இந்தத் துறையில் தன்னுடைய இடத்தை நிலைநிறுத்திக் கொண்டு, அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார் பரத். அது பெரிய விஷயம். அப்படிப்பட்ட ஒரு நடிகருடன் இணைந்து உங்கள் பயணம் தொடங்குவது மிகவும் நல்ல ஆரம்பம் என்று நான் நம்புகிறேன்.
அதேபோல், சாம் சி.எஸ். போன்ற திறமையான இசையமைப்பாளர் இந்தப் படத்தில் இருப்பதும் இன்னும் கூடுதல் பலம். அவர் இசையும் இந்தப் படத்திற்கு ஒரு பெரிய ஆதாரமாக இருக்கும் என்று நம்புகிறேன். செந்தில் சார், நாராயணசாமி சார், அஜய், பரத் மற்றும் இந்தப் படத்தின் முழுக் குழுவினருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி.” என்றார்.
நடிகர் சாந்தனு பேசுகையில், “இந்த மேடையில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியான விஷயம். முதலில் இந்தப் படத்தின் முழு குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். டிரெய்லரை இரண்டு முறை பார்த்தேன். உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், அது மிகவும் வொர்த்தாக இருந்தது. ‘காளிதாஸ்’ முதல் பாகம் எல்லோருக்கும் பிடித்த படம். அதேபோல, அதைவிட double impact கொடுக்கக்கூடிய படமாக ‘காளிதாஸ் 2’ இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. அந்த அளவுக்கு டிரெய்லர் தரமாக இருந்தது. அதனால் இயக்குநர் முதல் இந்தப் படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
இந்த பங்சனுக்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன். ஏனெனில், பரத் சம்பந்தப்பட்ட பங்சன் என்றால் அதை நான் என்னோட பங்சனாகத்தான் பார்க்கிறேன். அந்த அளவுக்கு எனக்கு பரத்தை ரொம்ப பிடிக்கும். அவர் எனக்கு சகோதரர் போலத்தான். இந்த டீமில் எனக்கு நன்றாகத் தெரிந்தவர்கள் இருவர். ஒருவர் பரத், இன்னொருவர் பவானி. பவானியுடன் நான் ‘பாவக் கதைகள்’ல வேலை செய்துள்ளேன். She is a very sincere artist. இங்கே ரொம்ப அமைதியாக உட்கார்ந்து இருப்பாங்க, ஆனால் அவருடன் இருக்கும்போது அவ்வளவு ஃபன். அதே நேரத்தில் கேமரா முன்னால் வந்துவிட்டால், மொத்தமாக அந்த கேரக்டராக மாறி நடிப்பார். அவர் நடித்த எல்லா கதாபாத்திரங்களிலும் அந்த அர்ப்பணிப்பு தெரியும். ‘விடுதலை’யிலிருந்து இப்போது ‘ஹாட்ஸ்பாட்’, அதற்குப் பிறகு இப்போது ‘காளிதாஸ் 2’ வரை அவ்வளவு அழகாக செய்து வருகிறார்.
அஜய், இது உங்களோட அறிமுகம். ஆனால் வெற்றிகள், தோல்விகள், இதையெல்லாம் தாண்டி, silent-ஆ, consistent-ஆ, தனக்குக் கிடைக்கும் வேலையை சரியாகச் செய்து கொண்டு, 50-க்கும் மேற்பட்ட படங்களை கடந்திருக்கிற என் நண்பன் பரத் — அந்த பயணத்துக்கான celebration ஆக இந்த விழாவைப் பார்க்கிறேன். மொத்தத்தில், இந்தப் படம் இந்த மொத்த குழுவிற்கும் ஒரு பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும். அஜய்க்கு ஒரு மிகச் சிறந்த அறிமுகமாக இருக்க வேண்டும். பரத்துக்கு இன்னொரு முக்கியமான மைல்கல்லாக அமைய வேண்டும். Sky Pictures-க்கு இது ஒரு பிரம்மாண்டமான ஆரம்பமாக இருக்க வேண்டும். வாழ்த்துக்கள்.” என்றார்.
நடிகர் கலையரசன் பேசுகையில், “‘காலிதாஸ் 2’ டிரெய்லர் மிகவும் சூப்பராக இருந்தது. நான் படத்தையும் பார்த்திருக்கிறேன். நிச்சயமாக இது ஒரு அருமையான படம். குறிப்பாக கிளைமேக்ஸ் கணிக்க முடியாததாக இருக்கும். அதேபோல் படம் முழுவதும் எல்லாரும் ரொம்ப நல்லா நடித்திருக்கிறார்கள். சங்கீதா மேம், பவானி, எல்லாருமே மிக அருமையாக நடித்துள்ளார்கள். அஜய், உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இது உங்கள் முதல் படம். அதே நேரத்தில், இன்னொரு படத்தையும் முடித்து வைத்திருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷம். ஒரு நல்ல பயணம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்று நம்புகிறேன்.
பரத்… லவ் யூ, எப்போதுமே. பரத் கேரியரின் ஆரம்பத்தில் இருந்தே ஒரு பெரிய ஸ்டார். இப்போவும் அதே மரியாதையோட இருக்கிறார். ஆனால் CCL மாதிரி இடங்களில் நெருக்கமாக பழகிய பிறகு, அவரைப் பற்றி இன்னும் அதிகமான மரியாதை வந்தது.
சினிமா உலகத்தில் success, failure, appreciation, disappointment — எல்லாமே ரொம்ப வேகமாக வரும். அதை கையாள தைரியமாக இருக்கணும். அது இயக்குநர் என்றாலும், நடிகராக இருந்தாலும் அதே தான். அந்த மாதிரி சூழலில், உச்சத்தையும் பார்த்து, தடைகளைச் சந்தித்து, மறுபடியும் அதே fire-ஓட திரும்பி வருவது எப்படி என்று பரத்திடம் இருந்து நான் நிறைய கற்றிருக்கிறேன். அவரிடமிருந்து நிறைய அறிவுரைகள் வாங்கியிருக்கிறேன். அதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி. இந்தப் படம் கண்டிப்பாக பெரிய ஹிட்டாகும் என்று எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். ‘காலிதாஸ் 2’, முதல் பாகத்தை விட இன்னும் பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். நன்றி.” என்றார்.

ஆதவ் கண்ணதாசன் பேசுகையில், “‘காளிதாஸ்’ முதல் பாகத்தில் எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைத்தது. அந்த அனுபவம் எனக்கு மிகவும் நல்ல நினைவாக இருக்கிறது. இப்போது ‘காளிதாஸ் 2’ டிரெய்லரைப் பார்க்கும்போது, அஜய்க்கு இந்தப் படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரம் அமைந்திருக்கும் என்று தோன்றுகிறது. செந்தில் சார் நிச்சயமாக ஒரு நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து, அழகாக இந்தப் படத்தை உருவாக்கியிருப்பார் என்று நம்புகிறேன். ஒரு அறிமுக நடிகராக அஜய்க்கு இது உண்மையிலேயே மிகச் சிறந்ததாக இருக்கும். அஜய், உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படத்தின் முழுக் குழுவினருக்கும் — பரத், பவானி, ஒளிப்பதிவாளர் மற்றும் இதில் பணியாற்றிய அனைவருக்கும் — என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும். நன்றி.” என்றார்.
இயக்குநர் கணேஷ் கே.பாபு பேசுகையில், “நான் இந்தப் படத்தை பார்த்துவிட்டேன். இன்று இந்த நிகழ்ச்சிக்கு நான் முக்கியமாக வந்ததற்கான காரணம் அஜய் தான். அவர் எனக்கு ஒரு தம்பி மாதிரி. எங்களுக்குள் அப்படிப்பட்ட ஒரு பந்தம் இருக்கிறது. அஜய்யை நான் முதல் நாளிலிருந்தே பார்த்துக்கொண்டிருக்கிறேன். நியூசிலாந்திலிருந்து வந்த பிறகு, கடந்த மூன்று வருடங்களாக அவருடைய பயணத்தை நெருக்கமாக பார்த்திருக்கிறேன். முதல் நாள் ஷூட்டிலிருந்து பார்த்திருக்கிறேன். அந்த நேரத்தில் அவருக்கு சினிமா பற்றி பெரிய ஐடியாவே இல்லை. நடிப்பு பற்றியும் இந்த துறையைப் பற்றியும் ஒரு தெளிவான புரிதல் இல்லாத நிலையில்தான் அவர் ஆரம்பித்தார். ஆனால் அந்த நிலையிலிருந்து, முழு படப்பிடிப்பு முடியும் வரை அவர் எவ்வளவு பெரிய மாற்றத்தை அடைந்தார் என்பதுதான் எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம். உண்மையாகச் சொன்னால், அஜய் எனக்கு ரொம்ப பெரிய surprise. நேரில் பழகும்போதும் சரி, திரையில் பார்க்கும்போதும் சரி — ஒரு நடிகராக அவர் தன்னை அவ்வளவு அழகாக மாற்றிக் கொண்டிருக்கிறார். அதற்காக அவர் மிகுந்த கடின உழைப்பை தந்துள்ளார். உங்களுக்காக நான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன் அஜய். நீங்க இன்னும் பெரிய அளவுக்கு வரணும்.
பரத் சார், நான் அவரோட பெரிய ரசிகன். நிறைய இடங்களில் சந்தித்திருக்கேன்; நேரிலேயே பலமுறை அதைச் சொல்லியிருக்கேன். இந்தப் படத்தில் அவரும் மிகப் பெரிய பலம். செந்தில் சாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். படம் ரொம்ப நன்றாக இருக்கிறது. நான் பார்த்தபோது, படம் முழுக்க பல டிவிஸ்ட்கள் வருது. ஆனால், அதை ஒரு நம்பகமான திரைக்கதையாக மாற்றி, நம்மை முழுக்க இழுத்துக்கொண்டு போகும் வகையில் அவர் எடுத்திருக்கிறார்.
இந்தப் படத்தின் முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். சாம் சார் பற்றியும் சொல்லணும் — அவர் இசையால் இந்தப் படத்தை அழகாக மேம்படுத்தியுள்ளார். கண்டிப்பாக இந்தப் படம் குடும்பத்தோடு எல்லாரும் சேர்ந்து பார்க்கக்கூடிய ஒரு நல்ல படமாக இருக்கும். முழு குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.” என்றார்.
இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில், “செந்தில் சாரும் நாராயணசாமி சாரும் எனக்கு நீண்ட நாளாக நண்பர்கள். நாராயணசாமி சார், வம்சம் படத்தில் இருந்து என் படங்களை பின்தொடர்ந்து விநியோகம் செய்து வரும் ஒரு நல்ல நண்பர். இருவரும் என்னை அழைத்தார்கள். நான் கொஞ்சம் தாமதமாக வந்ததற்குக் காரணம், இந்தப் படத்தை முதலில் பார்த்துவிட்டு, அப்படியே அந்த உணர்வோடு இந்த விழாவுக்கு வந்தது தான். ஒரு படத்தைப் பார்த்த உடனேயே அதன் விழாவிற்க்கு வருவது ரொம்ப ஸ்பெஷல் - ஆன உணர்வு. உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், படம் ரொம்ப நன்றாக இருந்தது. இதை நான் அவர்களிடம் தனியாக சொல்லவே இல்லை; இந்த மேடையில்தான் சொல்கிறேன். இது ஒரு நல்ல திரில்லர். சாம் சார், உங்கள் பின்னணி இசை செமையாக இருந்தது. இப்போது பல படங்களில் உங்கள் இசை ஒலிக்கிறது. ஆனால் இந்தப் படத்தில் கூட, அந்த பின்னணி இசையில் ஒரு தனித்தன்மை இருந்தது. படம் முழுக்க அதை ஒரு அழகான அனுபவமாக மாற்றியிருக்கிறீர்கள். அது எனக்கு பிடித்திருந்தது.
அதேபோல் இயக்குநர் பற்றியும் சொல்ல வேண்டும். இப்போ முன்பு ஒருவர் சொன்னது மாதிரி, இந்தப் படத்துக்குள்ளே twist இருக்கிறது என்பதல்ல — படம் முழுவதுமே twist-களால் நிரம்பியுள்ளது. ஒவ்வொரு காட்சி கடந்துகொண்டே போகும்போதும் எப்போதும் ஒரு புதிய ஆச்சரியம் காத்திருக்கிறது. அதற்காக இயக்குநருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பரத் சார், உங்களுடைய நடிப்பு ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது. சங்கீதா மேம், நீங்களும் ஒரு பெரிய ஆச்சரியம். பவானி உட்பட இந்தப் படத்தில் நடித்த அனைவரும், தங்களுடைய கதாபாத்திரங்களை மிகவும் அழகாகவும் நம்பகமாகவும் செய்து இருந்தீர்கள்.
அஜய் கார்த்திக், நாங்கள் ஏற்கனவே நேரில் சந்தித்திருக்கிறோம். உண்மையிலேயே இது உங்களுக்கு ஒரு நல்ல படம். ரொம்ப நன்றாக செய்திருக்கிறீர்கள். மனமார்ந்த வாழ்த்துகள். ‘கார்த்திக்’ என்ற பெயருடன் தமிழ் சினிமாவில் பலர் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்; அதேபோல் நீங்களும் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படத்தை எல்லாரும் கண்டிப்பாகப் பாருங்கள். இது ஒரு நல்ல திரில்லர் வாழ்த்துக்கள்.” என்றார்.
இயக்குநர் பா ரஞ்சித் பேசுகையில், “செந்தில் சாருக்கும், நாராயணசாமி அண்ணாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். சமீபமாக அவர்கள் என் நண்பர்கள் வட்டத்தில் இன்னும் நெருக்கமாக இணைந்து, என்கூட நிறைய விஷயங்களைப் பகிர்ந்து, சினிமா குறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அவர்களுடன் சேர்ந்து இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இருக்கிறது. நண்பர்களாக மட்டும் இல்லாமல், சினிமாவைப் பற்றி தீவிரமாக சிந்திக்கும் மனிதர்களாக அவர்கள் என்னோடு இணைந்திருப்பது மிகவும் சந்தோஷம் தருகிறது.
நான் இந்தப் படத்தை பார்த்துவிட்டேன். உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், இது மிகவும் interesting-ஆன ஒரு film. இந்தப் படத்தில் நடித்திருந்த அனைவரும் மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள். குறிப்பாக மூன்று பெண் கதாபாத்திரங்களும், சங்கீதா மேம், பவானி, அபர்ணா ஆகிய மூவரும் மிகவும் அருமையாக நடித்திருந்தார்கள். பரத் சாரும் ரொம்ப நன்றாக நடித்திருந்தார்.
இது ஒரு ரொம்ப நல்ல க்ரைம் திரில்லர். கதை சொல்லப்பட்ட விதம், மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு சிறிய உள்ளடக்கத்தைக் கொண்டு, இயக்குநர், தயாரிப்பாளர்கள், மற்றும் தொழில்நுட்பக் குழு எல்லோரும் சேர்ந்து அதை மிகவும் தெளிவாகவும் வலுவாகவும் மக்களிடம் கொண்டு செல்ல முயன்றிருக்கிறார்கள். அந்த முயற்சி இந்தப் படத்திலும் நிச்சயமாக பலிக்கும் என்று நான் நம்புகிறேன். அஜய் கார்த்திக், உங்களுடைய நடிப்பு, லுக், எல்லாமே நன்றாக இருந்தது. கண்டிப்பாக உங்களுக்கு ஒரு பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.
சாம் சி.எஸ். அவர்களின் பின்னணி இசை இந்தப் படத்துக்கு ஒரு பெரிய தூணாக இருந்தது. படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை, அவர் பயன்படுத்திய சவுண்ட் டிசைன் மற்றும் இசை நம்மை கதைக்குள் பிடித்துக் கொண்டு போகிறது. ஒரு க்ரைம் திரில்லருக்கு இது மிகப் பெரிய பலம். இந்தப் படம் அந்த வகையில் நல்ல ஒரு வெற்றிப்படமாக அமையும் என்று நான் நம்புகிறேன்.
சமீபத்தில் சில சிறிய படங்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று, தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய நம்பிக்கை கொடுத்திருக்கின்றன. முன்னாடி இப்படி நடக்கும் என்று எல்லோருக்கும் எப்போதும் நம்பிக்கை இருக்காது. ஒரு படம் நல்ல படம் என்று நம்புவோம்; ஆனால் அதற்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்க மாட்டோம். இப்போது அந்த நிலை மாறிக் கொண்டு வருகிறது. அது உண்மையிலேயே மகிழ்ச்சி தருகிறது. அந்த நம்பிக்கை ‘காளிதாஸ் 2’-க்கும் தொடர வேண்டும். இந்தப் படம் நிச்சயமாக பெரிய வெற்றி அடையும் என்று நான் மனதார நம்புகிறேன். எல்லாருக்கும் என் வாழ்த்துகள். மகிழ்ச்சி. நன்றி.” என்றார்.
நடிகர் ஹரீஷ் கல்யாண் பேசுகையில், “முதலில் செந்தில் சாருக்கும் நாராயணசாமி சாருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விநியோகஸ்தர்களாக இருந்த இடத்திலிருந்து தயாரிப்பாளர்களாக உயர்ந்து வந்திருக்கிறீர்கள். இனிமேலும் நல்ல கதைகள், நல்ல நடிகர்கள், நல்ல உள்ளடக்கங்களைத் தமிழ் சினிமாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன். அதன் அழகான தொடக்கமாக இன்று ‘காளிதாஸ் 2’ அமைந்துள்ளது. இன்னொரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், அஜய் கார்த்திக் என் தம்பி. அவர் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார் என்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துகள் அஜய். உங்களை வாழ்த்துவதற்காக இன்று தயாரிப்பாளர் சங்கத்திலிருந்தும், விநியோகஸ்தர் சங்கத்திலிருந்தும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களிலிருந்தும் பல முக்கியமானவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுடைய ஆசிகளோடு உங்கள் இந்தப் பயணம் தொடங்குகிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
பரத் பற்றி நிறைய பேர் ஏற்கனவே பேசியிருக்கிறார்கள். அதற்கு மேலாக நான் ஒரு விஷயம் மட்டும் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் நிறைய வெற்றிகளைப் பார்த்திருக்கிறீர்கள். பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறீர்கள். ஆனால் இந்தப் படத்தில் இன்னொரு கதாபாத்திரத்துக்கும் சமமான இடம் கொடுத்து நடித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அது எல்லோராலும் செய்ய முடியாத ஒன்று. கதையை நம்பி, மற்றொரு கதாபாத்திரத்தையும் சமமாக மதித்து நடித்ததற்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவரையும் பின்னணி இசையையும் பிரித்து பார்க்க முடியாது. படம் பார்த்தவர்கள் எல்லாரும், அவருடைய பின்னணி இசை இந்தப் படத்தை இன்னொரு நிலைக்கு உயர்த்தியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். அது உண்மையென்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மிகுந்த மகிழ்ச்சி.
இந்தப் படத்தில் நடித்த பவானி ஸ்ரீ, அபர்ணா மற்றும் மற்ற எல்லா நடிகர் நடிகைகளுக்கும் என் வாழ்த்துகள். இந்தப் படத்தின் இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்பக் குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். ‘காளிதாஸ்’ முதல் பாகம் போலவே, ‘காளிதாஸ் 2’வும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நான் முழு நம்பிக்கையுடன் கூறுகிறேன். நன்றி.” என்றார்.
இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசுகையில், “முதலில் இந்த வாய்ப்புக்காக என் மனமார்ந்த நன்றி. இன்று இந்த மேடையிலேயே ஒரு நல்ல பாஸிடிவ் உணர்வு இருக்கிறது. எல்லோரும் மனதார வாழ்த்துவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ‘காளிதாஸ்’ முதல் பாகத்திலிருந்தே இயக்குநர் இந்தக் கதையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். ஒரு விசாரணைத் திரில்லரை புதிதாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லுவது எளிதல்ல. ஆனால் இந்தப் படத்தில் கதை, திரைக்கதை, திருப்பங்கள் எல்லாமே நன்றாக அமைந்திருக்கிறது. நான் சின்ன படம், பெரிய படம் என்று பார்க்க மாட்டேன். நல்ல படம் என்றால் போதும். இந்தப் படமும் அப்படிப்பட்ட ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இதில் நடித்திருக்கும் அனைவரும் ரொம்ப நன்றாக நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் வேலை செய்தது எனக்கு மகிழ்ச்சி. எனக்கு துணையாக இருந்த என் இசைக் குழுவினருக்கும், பாடகர்களுக்கும், பாடலாசிரியருக்கும், ஒலி கலவை செய்த குழுவினருக்கும் என் நன்றி. பரத் சார் இந்தப் படத்தில் மிகுந்த உழைப்பு கொடுத்திருக்கிறார். அது திரையில் தெளிவாகத் தெரியும். அவருடன் பணியாற்றியது சந்தோஷம். சங்கீதா மேம் உட்பட இதில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இப்போது மக்கள் பெரிய ஹீரோ இருக்கிறாரா என்று மட்டும் பார்க்காமல், படம் நல்லா இருக்கா என்று பார்க்கிறார்கள். அந்த வகையில் இந்தப் படம் கண்டிப்பாக மக்களிடம் சேரும். எல்லோரும் திரையரங்கில் வந்து இந்தப் படத்தைப் பாருங்கள். இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும். நன்றி. வணக்கம்.” என்றார்.
தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசுகையில், “இந்தப் படத்தில் நிறைய புதிய அறிமுகங்கள் இருக்கின்றனர். அதே சமயம், ‘காளிதாஸ்’ என்ற வெற்றிப் படத்தின் தொடர்ச்சியாக ‘காளிதாஸ் 2’ வருவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். முதலில் தயாரிப்பாளர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். ஒரு கதையை நம்பி தொடர்ந்து உழைப்பது சுலபமல்ல. அந்த முயற்சிக்கு இந்தப் படம் பெரிய வெற்றியைத் தர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
அஜய் கார்த்திக்குக்கும், இவருடன் நடித்த அபர்ணதி, பவானி மற்றும் மற்ற கலைஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள். ஃபைவ் ஸ்டார் செந்தில் சார் இந்தத் துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர். அந்த அனுபவத்திலிருந்து அடுத்த தலைமுறையை சினிமாவுக்கு அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சியான விஷயம்.
இன்று தமிழ் சினிமா ஒரு நல்ல மாற்றம் கொண்ட காலத்தில் இருக்கிறது. சிறிய முதலீட்டில் உருவாகும் நல்ல படங்களுக்குக் கூட பெரிய வரவேற்பு கிடைக்கிறது. இது புதிய திறமைகளுக்கும் புதிய தயாரிப்பாளர்களுக்கும் நல்ல நம்பிக்கையைத் தருகிறது. இந்தப் படத்தில் பணியாற்றிய இயக்குநர், சாம் சி.எஸ். மற்றும் முழுக் குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி.” என்றார்.
நடிகை அபர்ணதி பேசுகையில், “முதலில் பழனி சாருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் படம் உங்கள் வழியாகத் தான் ஆரம்பமானது. இயக்குநர் செந்தில் சாருக்கும், ஃபைவ் ஸ்டார் செந்தில் புரொடக்ஷனுக்கும் என் நன்றிகள். அஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நேரில் பார்க்கிற அஜய்யும், திரையில் பார்க்கிற அஜய்யும் முற்றிலும் வேறு. அந்த மாற்றம் ரொம்ப நன்றாக இருந்தது. பரத் சார், உங்களுக்கு வாழ்த்துகள். சங்கீதா மேம், மீண்டும் தமிழில் ‘காளிதாஸ் 2’ மூலம் வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. உங்களுடன் வேலை செய்தது மகிழ்ச்சி. இந்தப் படத்தில் பணியாற்றிய தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர் நடிகைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
‘காளிதாஸ் 2’, முதல் பாகத்தை விட இன்னும் அதிகமாக மக்களோடு இணையும் என்று நான் நம்புகிறேன். இது முழுக்க முழுக்க த்ரில்லும் சஸ்பென்ஸும் நிறைந்த படம். என்ன நடக்கப் போகிறது என்று யூகிக்க முடியாத அளவுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். அதனால், இந்தப் படத்தை எல்லாரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படம் அனைவருக்கும் நிச்சயமாகப் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.” என்றார்.
நடிகை பவானி பேசுகையில், “முதலில் செந்தில் சாருக்கு நன்றி. இந்தக் கதாபாத்திரத்துக்கு என்னை நம்பி அழைத்ததோடு மட்டும் இல்லாமல், அதை நம்பிக்கையோடு செய்யும் தைரியத்தையும் எனக்கு கொடுத்தார். அதற்காக ரொம்ப நன்றி சார். பரத் சார் மிக அனுபவம் வாய்ந்த நடிகர். அவரிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள முடிந்தது. சங்கீதா மேமுடன் வேலை செய்த அனுபவமும் ரொம்ப இனிமையானது. அஜயும் நானும் ஒரே நடிப்பு வகுப்பில் படித்தவர்கள். அவர் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார் என்பது எனக்கு ரொம்ப சந்தோஷம். அவருக்கு நல்ல எதிர்காலம் அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.
சாம் சி.எஸ். சார் இந்தப் படத்திற்கு பின்னணி இசையால் பெரிய பலம் சேர்த்திருக்கிறார். ஒளிப்பதிவாளரும் இந்தப் படத்தை மிக அழகாகக் காட்டியிருக்கிறார். பிரகாஷ் ராஜ் சார், கிஷோர் சார் போன்ற மூத்த நடிகர்களுடன் வேலை செய்தது எனக்கு மறக்க முடியாத அனுபவம். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இன்று நீங்கள் தரும் ஆதரவைப் பார்த்து எங்களுக்கு ரொம்ப நம்பிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த ஆதரவு படம் வெளியான பிறகும் தொடரும் என்று நம்புகிறோம். மிக்க நன்றி.” என்றார்.
நடிகை சங்கீதா பேசுகையில், “இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு, எனக்கு மிகவும் பிடித்த தமிழில் ஒரு படத்தில் நடித்து, அதன் வெளியீட்டு விழாவில் இருப்பது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. இதை இன்னும் நம்பிக்கையோடு உணர்ந்து கொண்டிருக்கிறேன். முதலில் இயக்குநர் செந்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. என்னை நம்பி இந்தக் கதையைச் சொல்லி, எனக்கு மிகவும் பிடித்த இந்தத் துறைக்குள் மீண்டும் அழைத்ததற்கு ரொம்ப நன்றி. அதேபோல், இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களான செந்தில் சாருக்கும் என் வாழ்த்துகள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இதன் பிறகும் இன்னும் பல நல்ல படங்களை உருவாக்க வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன்.
‘காளிதாஸ் 2’ படக்குழுவில் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இரவு நேரப் படப்பிடிப்புகள் அதிகமாக இருந்தாலும், முழுக் குழுவும் மிகுந்த உற்சாகத்தோடும் அர்ப்பணிப்போடும் வேலை செய்தார்கள். அந்த ஆற்றல் எங்களுக்கும் உற்சாகம் கொடுத்தது. பரத் உடன் வேலை செய்த அனுபவம் ரொம்ப இனிமையானது. மிகவும் எளிமையான, அன்பான, மரியாதையான மனிதர். அவருடன் வேலை செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி இருந்தது.
அஜய் மிகவும் மென்மையான மனிதர். ஆனால் திரையில் அப்படியே மாறி நிற்கிறார். மிக நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பவானி மிகவும் நெகிழ்ச்சியான நடிகை. கேமரா முன் வந்தவுடன் முழு கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார். அபர்ணதியும் மிகவும் இனிய குணம் கொண்டவர். அவர்களுடன் வேலை செய்த அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது. சாம் அவர்களின் இசையுடன் இந்தப் படத்தில் இணைந்தது எனக்கு ஒரு கூடுதல் மகிழ்ச்சி.
இந்தப் படம் நிச்சயமாக திரையரங்கில் பார்க்க வேண்டிய ஒரு அனுபவம் தரும் படம் என்று நான் முழு நம்பிக்கையோடு சொல்கிறேன். அதனால், அனைவரும் திரையரங்கில் சென்று இந்தப் படத்தைப் பார்த்து ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.” என்றார்.
நடிகர் அஜய் கார்த்திக் பேசுகையில், “இந்த சிறப்பான விழாவை இவ்வளவு அழகாக மாற்றிய பத்திரிக்கை, ஊடக நண்பர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த மேடையில் நான் ஒரு நடிகராக மட்டும் இல்லாமல், சினிமாவை காதலிக்கும் ஒருவராக நிற்கிறேன். இந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்க காரணமான எங்கள் தயாரிப்பாளர் பழனி அண்ணாவுக்கும், என்னை நம்பி இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் செந்தில் சாருக்கும் என் மனமார்ந்த நன்றி.
செந்தில் சார் மிகவும் திட்டமிட்டு, தெளிவான கண்ணோட்டத்துடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். அந்த உழைப்பின் பலன்தான் இன்று இந்த மேடை. இந்தப் படத்தில் என்னை ஒரு பகுதியாக இணைத்ததற்கு ரொம்ப நன்றி சார். தயாரிப்பாளர்களான செந்தில் சார், டாக்டர் யோகேஷ்வரன், நாராயணசாமி அங்கிள் — உங்களுடைய முழு ஆதரவால்தான் இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக உருவாக முடிந்தது. அதற்காக ரொம்ப நன்றி.
எங்கள் ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., பாடலாசிரியர் மற்றும் எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. குறிப்பாக சாம் சி.எஸ். சார் இசையால் இந்தப் படம் இன்னும் சிறப்பாக உயர்ந்திருக்கிறது.
பரத் அண்ணா, உங்களுடன் வேலை செய்தது எனக்கு ஒரு பெரிய அனுபவம். நீங்கள் கொடுத்த ஆதரவும் ஊக்கமும் எனக்கு மிகவும் முக்கியமானது. பவானி, சங்கீதா மேம், அபர்ணதி, துரை அண்ணா, ஆனந்த், குழந்தை நட்சத்திரங்கள் — அனைவருடனும் வேலை செய்த அனுபவம் எனக்கு ரொம்ப இனிமையானது. என் அப்பாவுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஒரு பெரிய நன்றி. இந்த இரண்டு ஆண்டுகளில் நான் கொடுத்த தொந்தரவுகளையும் பதட்டங்களையும் பொறுமையுடன் தாங்கியதற்கு மனமார்ந்த நன்றி.
இந்தப் படத்துக்கு நீங்கள் தரும் அன்பும் ஆதரவும் தொடர வேண்டும். ‘காளிதாஸ் 2’ படத்தை திரையரங்கில் பார்த்து ஆதரவு தாருங்கள். மிக்க நன்றி.” என்றார்.
இயக்குநர் ஸ்ரீசெந்தில் பேசுகையில், “முதலில் இந்த மேடையை இவ்வளவு அழகாக அமைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. ஆரம்பத்தில் நான் சும்மா நன்றி சொல்லிட்டு போயிடலாம் என்று நினைத்தேன். ஆனால் இந்த ‘காளிதாஸ் 2’ பயணம் ஒரு சாதாரண பயணம் இல்லை. அது ஒரு நீண்ட, உணர்ச்சியான, நம்பிக்கையோடும் போராட்டத்தோடும் வந்த பயணம்.
‘காளிதாஸ்’ முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு, பெரிய வாய்ப்புகளும் பெரிய நடிகர்களோடு வேலை செய்யும் சந்தர்ப்பங்களும் வந்தன. அப்படிச் செல்லும் நேரத்தில் பல சூழல்கள் மாறின. அப்போது எனக்கு ஒரு முக்கியமான விஷயம் புரிந்தது — பெரிய படம் பண்ணணுமா என்பதற்கும் மேலாக, நல்ல படம் பண்ணணும் என்பதுதான் முக்கியம். அந்த எண்ணத்தில்தான் ‘காளிதாஸ் 2’ தொடங்கியது.
இந்தப் பயணத்தை ஆரம்பிக்க வைத்த பழனி அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றி. அதன்பிறகு இந்தப் படத்துக்கு மிகப் பெரிய நம்பிக்கையையும் வலிமையையும் கொடுத்தவர்கள் செந்தில் சார், நாராயணசாமி சார். நான் ஒரு நல்ல படமாக நினைத்ததை, அவர்கள் பெரிய அளவிலான படமாக மாற்றி நிறுத்தியிருக்கிறார்கள். படம் திரைக்கு வரும் போது அதன் அளவும் உழைப்பும் எல்லோருக்கும் தெரியும். அஜயை இந்தப் படத்தில் கொண்டு வந்த தருணமும் இந்தப் பயணத்தில் ஒரு முக்கியமான நிகழ்வு. அந்த சந்திப்பு மிகச் சாதாரணமாக தொடங்கியது. ஆனால், இன்று அது ஒரு முக்கியமான முடிவாக மாறியிருக்கிறது.
இந்தப் படத்தில் நடித்தும் பணியாற்றியும் இருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படம் முழுக்க இரவு நேரப் படப்பிடிப்புகளோடு, மிகவும் கடினமான சூழலில் உருவானது. மாலை ஆறு மணிக்கு தொடங்கி, காலை ஆறு மணி வரை, சில சமயம் அதையும் தாண்டி படப்பிடிப்பு நடந்தது. ஆனாலும், எல்லாரும் எந்தப் புகாரும் இல்லாமல், முழு அர்ப்பணிப்போடு வேலை செய்தார்கள். அதனால்தான் இன்று இந்தப் படம் இவ்வளவு நன்றாக நம் முன் நிற்கிறது.
என் எழுத்து மற்றும் படைப்புப் பயணத்தில் என்னுடன் இருந்த என் குழுவினருக்கும், குறிப்பாக என்னுடன் தொடர்ந்து உழைத்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
கடைசியாக, எனக்குப் பெரிய துணையாக இருந்த என் குடும்பத்தினருக்கு நன்றி சொல்ல வேண்டும். நான் ஒரு நிச்சயமான வாழ்க்கையை விட்டு, சினிமா என்ற கனவுக்காக முழுமையாக வந்தபோது, என்னைத் தாங்கி பிடித்தது என் குடும்பம்தான். என் மனைவியும், என் குழந்தைகளும், என் கனவை என்னுடன் சுமந்தவர்கள். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. இந்தப் பயணத்துக்கு நீங்கள் தரும் அன்பும் ஆதரவும் எங்களுக்கு மிகப் பெரிய பலம். ‘காளிதாஸ் 2’ உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். மிக்க நன்றி.” என்றார்.
நடிகர் பரத் பேசுகையில், “‘காளிதாஸ்’ 2019-ல் தொடங்கிய ஒரு பயணம். என் நடிப்பு வாழ்க்கையில் பல புதிய இயக்குநர்களுடன் வேலை செய்திருக்கிறேன். ஆனால் செந்தில் சார் போன்ற இயக்குநர்கள் மிக அரிது. ஒரு நடிகருக்கு நல்ல இயக்குநர் கிடைத்துவிட்டால், அந்தப் படத்தின் பாதி வெற்றி அங்கேயே உறுதியாகிவிடும். எனக்கு அப்படிப்பட்ட ஒரு நல்ல இயக்குநராக செந்தில் சார் அமைந்தார். அவரை என் வாழ்க்கையில் பெற்றிருப்பது எனக்கு ஒரு ஆசீர்வாதம். ‘காளிதாஸ்’ எனக்கு ஒரு முக்கியமான திருப்பம். அந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் ‘காளிதாஸ் 2’ வாயிலாக இந்தக் கதாபாத்திரத்துக்கு திரும்பி வருவது எனக்கு இன்னும் அதிக மகிழ்ச்சி தருகிறது.
இந்தப் படம் ஆரம்பத்தில் ஒரு சின்ன க்ரைம் த்ரில்லராகத் தொடங்கியது. ஆனால் செந்தில் சார், நாராயணசாமி சார், யோகேஷ்வரன் சார் ஆகியோரின் நம்பிக்கையாலும் ஆதரவாலும் இது ஒரு பெரிய படமாக மாறியது. இந்தக் கதைக்கு என்ன வேண்டுமோ அதனை முழுமையாகக் கொடுத்து இந்தப் படத்தை உயர்த்திய தயாரிப்பாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
இது என் படமென்பதற்காக மட்டுமல்ல, இந்தப் படத்தில் உள்ள உள்ளடக்கத்தின் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையால் தான் நான் இவ்வளவு உறுதியாகச் சொல்கிறேன் — ‘காளிதாஸ் 2’ ஒரு சாதாரண க்ரைம் த்ரில்லர் அல்ல. இதில் உணர்ச்சி உள்ளது, மர்மம் உள்ளது, சஸ்பென்ஸ் உள்ளது. ஆரம்பத்திலிருந்து முடிவு வரை பார்வையாளரைப் பிடித்து வைத்து செல்லும் வலிமை இந்தப் படத்துக்கு இருக்கிறது.
என் கூட நடித்த நடிகர்கள் பற்றி சொல்ல வேண்டும் என்றால், பவானி இந்தப் படத்தில் மிக அழகாக அவர் கதாபாத்திரத்தைச் செய்திருக்கிறார். அபர்ணதி மிகவும் இயல்பான நடிப்பால் கவர்கிறார். சங்கீதா மேம் — உங்களுடன் வேலை செய்தது ஒரு பெரிய மகிழ்ச்சி. திரையில் மிகவும் நளினமாகவும் உணர்ச்சியோடும் நீங்கள் நடித்திருக்கிறீர்கள்.
அஜய், உங்களுக்கு இது ஒரு கனவு போலான அறிமுகம். இந்த வாய்ப்பை நேர்மையோடும் உழைப்போடும் பயன்படுத்தினால் சினிமா கண்டிப்பாக உங்களைத் தாங்கிக்கொள்ளும். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
சாம் சி.எஸ். சார், இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் உங்கள் இசைதான். ஒவ்வொரு காட்சிக்கும் நீங்கள் கொடுத்த பின்னணி இசை இந்தப் படத்தை இன்னொரு நிலைக்கு உயர்த்தியுள்ளது.
இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. ‘காளிதாஸ் 2’ உங்களுக்குப் பிடிக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கிருக்கிறது. நன்றி.,” என்றார்.
ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நீளிரா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
மேக்ஸ் ஃபேஷன் நிறுவனம், சென்னை வளசரவாக்கத்தில் தனது புதிய கிளையைத் தொடங்கியதன் மூலம் ஃபேஷன் மற்றும் திரைப்பட கலாச்சாரத்தை ஒன்றிணைத்தது...
மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த ‘கெணத்த காணோம்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...