கார்த்திக் சுப்புராஜ்-ராணா டக்குபட்டி தயாரிப்பில் ஆவணப்பட இயக்குநர் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா, கபிலா வேணு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நீளிரா’. ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம் வழங்கும் இப்படத்ஹ்டில் நவீன் சந்திரா, விது, ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, 'கயல்' வின்சென்ட், சித்து குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார்.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் சூழல் பின்னணியில் சர்வைவல் திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தின் பாடல், டீசர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் படக்குழுவினருடன் தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த முன்னணி படைப்பாளிகளான இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன், இயக்குநர் வினோத் ராஜ், இயக்குநர் சசி, நடிகை கபிலா வேணு, இயக்குநர் ரத்ன குமார், இயக்குநர் பொன் ராம், இயக்குநர் ராஜு முருகன், ட்ராட்ஸ்கி மருது, நடிகைகள் சித்து குமரேசன், ரூபா கொடுவாயூர், எழுத்தாளர் பவா செல்லத்துரை, இயக்குநர் வசந்தபாலன், நடிகர் சனந்த், இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், நடிகர் நவீன் சந்திரா, இயக்குநர் சோமிதரன், இயக்குநர் ஆர் கே செல்வமணி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ராணா டக்குபட்டி, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தயாரிப்பாளரும் இயக்குநருமான கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் திருமதி அகிலா பாலுமகேந்திரா 'நீளிரா' படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து படக் குழுவினரை வாழ்த்தி திருமதி அகிலா பாலுமகேந்திரா பேசுகையில், ''என் கணவர் பிறந்த ஊர் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம். நான் பிறந்தது மட்டக்கிளப்பு. எங்கள் ஊரைப்பற்றி சோமிதரன் படம் எடுத்திருப்பது மிகவும் பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. கணவரின் ஆசையை சோமிதரன் நிறைவேற்றி இருக்கிறார். என்னுடைய கணவர் இருந்திருந்தால் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பார். சோமிதரனின் 'நீளிரா' திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,'' என்றார்.
இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் பேசுகையில், ''நீளிரா படத்தை பார்த்தேன். போர் பற்றிய திரைப்படம் என்று சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் கலைப் படைப்பாக இருக்கும் என்ற ஆர்வத்துடன் படத்தை பார்த்தேன். ஆனால் இந்தப் படம் மெயின் ஸ்ட்ரீம் சினிமாவுக்கான படமாக இருந்தது. அதற்குரிய எல்லா எலிமெண்ட்ஸும் படத்தில் இருந்தன. படத்தின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை நம்மை ஒரு பதட்டத்திலேயே வைத்திருந்தது.
பொதுவாக ஒரு படம் பார்க்கும்போது நமக்கு அது தொடர்பான வேறு வேறு சிந்தனைகள் வந்து செல்லும். இந்தப் படத்தை பார்க்கும் போது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு தான் இருந்தது. குறிப்பாக அந்த வீட்டில் இருக்கும் கேரக்டர்ஸ் ஒரு இரவை எப்படி கடந்து செல்வார்கள் என்ற எண்ணங்கள் தான் என்னுள் ஓடிக் கொண்டிருந்தது.
படம் முடிந்த பிறகு இயக்குநரை சந்தித்து ஒரு காட்சியை குறிப்பிட்டு இயக்குநரை பாராட்டினேன். படத்தின் ஒளிப்பதிவு உண்மைக்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் வகையில் அமைந்திருந்தது, அழகாக இருந்தது, சில இருள் கூட வெளிச்சமாக இருந்தது,'' என்றார்.
தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில், ''இங்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருக்கும் திரைத்துறையின் லெஜென்டுகள் அனைவருக்கும் நன்றி. நான் சின்ன வயதில் இருந்து பார்த்தவர்களும் இருக்கிறார்கள், நான் வளரும்போது பார்த்தவர்களும் இருக்கிறார்கள், நான் வளர்ந்த பிறகு பார்த்தவர்களும் இருக்கிறார்கள். அனைவரையும் ஒன்றாக இங்கு பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நான் எட்டு வயதில் இருந்தே மேடை ஏறி பேசி இருக்கிறேன் ஆனால் இந்த மேடையில் எனக்கு சற்று பதட்டம் இருக்கிறது. இந்தப் படத்தை எங்கள் நிறுவனம் தயாரித்திருக்கிறது என்பது எங்களுக்கு பெருமிதம் ஆக இருக்கிறது. இதில் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்திருப்பதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.
நான் இங்கிலாந்திலிருந்து திரும்பிய பிறகு 2012ம் ஆண்டில் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் தொடங்கினோம். நான், கார்த்திக் சுப்புராஜ், பவன், கல்யாண் அனைவரும் இணைந்து தொடங்கினோம். முதல் படமாக 'மேயாத மான்' படத்தை தயாரித்தோம். 'நீளிரா' திரைப்படம் எங்களுடைய 18வது திரைப்படம்.
'மேயாத மான்' படத்தயாரிப்பிற்கு முன்பே இயக்குநர் சோமிதரனை எனக்குத் தெரியும். இன்றைக்கு சொல்ல வேண்டும் என்றால் சோமி எங்களுக்கு நண்பர் மட்டுமல்ல குல சாமி. அந்த அளவுக்கு இப்படத்தை உருவாக்கி இருக்கிறார். நிறைய படங்களை தயாரித்து இருந்தாலும் ஒரு சில படங்கள்தான் இதயத்திற்கு நெருக்கமாக இருக்கும். அந்த வகையில் 'நீளிரா' எங்களுடைய மனதிற்கு நெருக்கமான படம். இதுவரைக்கும் இந்தத் திரைப்படத்தை பார்த்த அனைவரும் நல்ல திரைப்படத்தை தான் தயாரித்திருக்கிறீர்கள் என்று பாராட்டினர். ஊடகங்களுக்கும் ரசிகர்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்தப் படத்தை வெளியிட வேண்டும் என தீர்மானித்து யாருக்கெல்லாம் திரையிடலாம் என திட்டமிட்ட போது முதலில் நடிகர் ராணாவை தொடர்பு கொண்டு அவருக்கு திரையிட்டு காண்பித்தோம். பார்த்து முடித்தவுடன் என்னுடைய பங்களிப்பு உறுதி என்று சொன்னார். அதற்குப் பின் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு திரையிட்டு காண்பித்தோம். அவர்களும் உடனடியாக தமிழகம் முழுவதும் திரையிடுவதற்கு மகிழ்ச்சியுடன் முன் வந்தனர். அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இத்திரைப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுகிறது. எங்களால் முடிந்த அளவிற்கு இந்த திரைப்படத்தை நல்லதொரு நிலையில் வெளியிடுகிறோம். இப்படம் நல்லதொரு அதிர்வலையை ஏற்படுத்தும் என நம்புகிறோம். இந்தப் படத்திற்காக நாங்கள் ஒரு பாடலை உருவாக்கினோம் அந்தப் பாடலை சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடுகிறது.
இந்த திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இது சாத்தியமாகி இருக்கிறது என்றால் இதன் பின்னணியில் உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.
இயக்குநர் ராம் குமார் பாலகிருஷ்ணன் பேசுகையில், ''ஒரு வாரத்திற்கு முன் இப்படத்தை பார்த்தோம். இந்த படத்தை பார்க்கும் போது அதைப்பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் பார்க்கத் தொடங்கினோம். பார்த்துக் கொண்டிருக்கும் போது அடுத்து என்ன அடுத்து என்ன என்ற ஒரு கிரிப்பிங் இருந்தது. ஒரு திரில்லர் திரைப்படத்தை பார்த்த ஃபீலிங் இருந்தது. இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது அதில் நடித்திருக்கும் நடிகர்கள் தான். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தேர்வு செய்யப்பட்ட முகங்கள் இந்த கதைக்கு மிகவும் பொருத்தமானதாக இருந்தது. நடிகர்கள் தங்களின் கேரக்டர்களை உணர்ந்து நடிக்கும் போது நம்மையும் அறியாமல் அந்த கேரக்டர்களுக்குள் அழைத்துச் சென்று விடுகிறார்கள். இயக்குநர் சோமிதரனுக்கு வாழ்த்துகள். படத்தை தயாரித்து வெளியிடும் தயாரிப்பாளருக்கும் நன்றி,'' என்றார்.
இயக்குநர் வினோத் ராஜ் பேசுகையில், "இந்த படத்தை பார்க்க அழைப்பு வந்த போது இலங்கை போரின் பின்னணியில் ஒரு கதையை சொல்ல இருக்கிறார்கள், அது எவ்வளவு கனமாக இருக்கப் போகிறது, அந்த கனத்தை நாம் எப்படி தாங்க போகிறோம் என்றவாறு மனநிலையை தயார்படுத்திக் கொண்டுதான் பார்க்க தொடங்கினோம். ஆனால் எங்களுக்கு ஒரு திரில்லர் படத்தை பார்த்த ஃபீலிங் தான் இருந்தது. படம் அவ்வளவு எங்கேஜிங்காக, கிரிப்பாக என்பதை சொல்லும் வகையில் இருந்தது.
இதில் நடித்த நடிகர்களை தேர்வு செய்தது குறித்து இயக்குநர் சோமிதரன் எங்களிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதுவே சுவாரஸ்யமானதாக இருந்தது, அவருக்கு வாழ்த்துகள். இந்த படத்தின் சிறப்பம்சம் என்று நான் சொல்ல வேண்டும் என்றால் அதனுடைய பிரசன்டேஷன், அதற்கான பிலிம் லாங்குவேஜ். இந்தப் படத்தின் போட்டோகிராபி, லொகேஷன், ஆர்டிஸ்ட், எடிட்டிங் என எல்லாம் சிறப்பாக இருந்தது. குறிப்பாக அந்த வீடு. படம் பார்த்துவிட்டு செல்பவர்களுக்கு அந்த வீடு நினைவில் இருக்கும்.
இலங்கை தமிழர்களை பற்றியும் அவர்களுடைய உணர்வுகளையும் கார்த்திக் சுப்புராஜ் தொடர்ந்து தன் படங்களில் இடம்பெறச் செய்து வருகிறார். இந்தப் படத்தின் தயாரிப்பாளராக அவரது பெயரையும் இணைத்து கொண்டிருப்பது இலங்கை தமிழ் மக்கள் மீதான அவருடைய அன்பை பிரதிபலிக்கிறது. இந்த படத்தை தயாரித்ததற்காக உண்மையில் கார்த்திக் சுப்புராஜூம் கார்த்திகேயன் சந்தானமும் பெருமைபட்டுக் கொள்ளலாம்,'' என்றார்.
இயக்குநர் சசி பேசுகையில், ''இயக்குநர்களுக்கென ஒரு வாட்ஸ் அப் குரூப் இருக்கிறது. அந்த குரூப்பில் கார்த்திக் சுப்புராஜ், 'நீளிரா' என்றொரு படத்தை திரையிட உள்ளோம். அனைவரும் வருகை தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த செய்தியை படித்து முடித்தவுடன் இயக்குநர் லிங்குசாமியிடமிருந்து எனக்கு போன் வந்தது. இந்தப் படத்தை நான் ஓராண்டிற்கு முன்னரே திரைப்பட விழாவில் பார்த்து விட்டேன். நல்ல படம். தவற விடாதீர்கள் என்றார். லிங்குசாமி எப்படி என்றால் 'பாகுபலி' படத்தை பார்த்தால் உடனடியாக போய் பார் என்று சொல்வார் 'கொட்டுக்காளி' படத்தை பார்த்தால் உடனடியாக போய் பார் என்று சொல்வார். அவருக்கு எல்லாவிதமான படங்களும் பிடிக்கும். ஆனால் அந்தப் படம் அவரை என்டர்டெய்ன் செய்ய வேண்டும். அதனால் 'நீளிரா' கண்டிப்பாக என்டர்டெய்ன்மென்ட் படம் என்று தெரிந்து விட்டது. எனக்கு அந்த டைட்டில் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தினாலும் லிங்குசாமி சொன்னதற்காக இப்படத்தை காணச் சென்றேன்.
ஈழத்து பிரச்சனையை ஈழ மக்களின் வாழ்வை அப்படியே கண்முன் கொண்டு வந்த கலை இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு ஆகிய இரண்டு தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் முதலில் என் வாழ்த்துகளையும் நன்றிகளையும் சொல்கிறேன். போர் சூழலில் ஈழத்திற்குள் ஒரு வீட்டிற்குள் இருக்கிறேன் என்ற ஒரு எண்ணத்தை உருவாக்கிய இவர்களுக்கு நன்றி. நடித்த நடிகர்களும் சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.
இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ், கார்த்திகேயன் சந்தானம், ராணா டக்குபட்டி ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள். இயக்குநர் சோமிதரன் கேட்டிருந்தால் பிரபலமான நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கலாம். ஆனால் திரைக்கதையை மட்டுமே நம்பி இப்படத்தை அவர் உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்தை பார்க்கும் போது இயக்குநரின் ஆளுமையை கண்டு வியந்தேன்.
இந்தப் படத்தில் இதுதான் கிளைமாக்ஸ் என்று தெரிகிறது. அந்த இடத்திற்கு சென்ற பிறகு, அங்கிருந்து இயக்குநர் வேறு ஒரு விஷயத்தை சொல்கிறார். தயாரிப்பாளர்களே, தைரியமாக இருங்கள். நீங்கள் ஒரு வெற்றிகரமான படத்தை வழங்கியுள்ளீர்கள், வாழ்த்துகள்,'' என்றார்.
நடிகை கபிலா வேணு பேசுகையில், ''நான் திரைப்பட நடிகை அல்ல. பாரம்பரிய கலை வடிவம் சார்ந்த மேடை கலைஞர் மற்றும் பரதநாட்டிய கலைஞர். இயக்குநர் சோமிதரன் அவருடைய தாயாரின் சாயலில் இருப்பதாக சொல்லி என்னை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தார். இதற்காக நான் அவருக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் என்னுடைய பங்களிப்பும் இருந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி.
நடிகர் நவீன் சந்திரா உள்ளிட்ட என்னுடன் நடித்த சக கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் சோமிதரன் நல்லதொரு கதைசொல்லி. படப்பிடிப்பிற்கு செல்லும் முன் பத்து நாட்கள் ஒர்க் ஷாப் வைத்து அனைவரிடமும் கதையை சொன்னார். இந்த படத்தில் இடம்பெற்ற வீட்டில் எந்தெந்த அறைகளில் எந்தெந்த பொருட்கள் இருக்கும் என்பது கூட எனக்கு நன்றாக தெரியும். இந்தப் படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்,'' என்றார்.
இயக்குநர் ரத்ன குமார் பேசுகையில், ''ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் முதல் படமான 'மேயாத மான்' படத்தின் இயக்குநர் என்பதை இந்த மேடையில் சொல்லிக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன். என்னுடைய முதல் படத்தின் ஹீரோ சனந்த், இப்போது நான் இயக்கிக் கொண்டிருக்கும் படத்தில் நடித்து வரும் விது ஆகிய இருவரும் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். இதுவும் எனக்கு சந்தோஷத்தை தருகிறது.
நான் ஒரு படத்தை இயக்கும்போது அதில் இடம்பெறும் இலங்கை கதாபாத்திரங்களுக்கான பின்னணி மொழிநடைக்காக இயக்குநர் சோமிதரன் என்னுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். அப்போதே உச்சரிப்பு இப்படி இருக்க வேண்டும் என உறுதியாக சொல்வார். அப்போதே அவர் ஒரு படைப்பாளராக எப்படி இருப்பார், அவருடைய படைப்புகள் எவ்வளவு வீரியமானதாக இருக்கும் என்று எனக்கு தெரிந்து விட்டது.
எனக்கு தமிழில் நிறைய ஸ்லாங் தெரியும். ஆனால் எனக்குப் பிடித்த ஸ்லாங் ஸ்ரீலங்கன் தமிழ். தமிழை அவர்கள் பேசும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். படம் முழுவதும் அந்த பேச்சு இருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
'நீளிரா' ஒன்றரை மணி நேர படம். அதையே ஹைலைட்டாக சொல்லலாம். 'சின்னர்ஸ்' என்று ஒரு படம் ஆஸ்கர் விருதுகளை வென்றது. அந்தப் படத்திற்குள் அவ்வளவு லேயர்கள் இருந்தது, அரசியல் இருந்தது, நிறைய ஐடியாலஜி இருந்தது. அந்தப் படத்தைப் போல் இந்த படத்திலும் நிறைய இடங்களில் மௌனங்கள் மூலம் பேசப்பட்டு இருக்கிறது.
இலங்கை பிரச்சனை பற்றிய பார்வையை இந்த திரைப்படம் மாற்றி அமைக்கும். போருக்கும் நமக்கும் தூரம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கோ ஒரு நாடு ஏதோ ஒரு நாடு மீது குண்டு வீசும் போது, கேஸ் சிலிண்டர் இல்லை என்று எங்கள் தெருவின் முனை கடையில் முட்டை போண்டா கிடைக்கவில்லை. எனவே அது நம்மை பாதிக்கவே செய்யும். நம்முடைய பக்கத்து நாட்டில் நம்முடைய சகோதரர்கள் பட்ட அவஸ்தைகளையும் பாதிப்புகளையும் இப்போது இந்த படத்தின் மூலம் நிறைய புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். கொஞ்ச நாள் நாம் அனைவரும் லாக் டவுனில் இருந்தபோது கஷ்டப்பட்டோம். ஆனால் ஈழத் தமிழர்கள் பல தசாப்தங்களாக அங்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்," என்றார்.
இயக்குநர் பொன்ராம் பேசுகையில், ''இலங்கை பிரச்சனையை பற்றியும் இலங்கை மக்களை பற்றியும் இதற்கு முன் நிறைய படங்கள் வெளியாகி இருக்கிறது. நானும் இந்த படத்தை பார்க்கும் போது, எப்படி இருக்கும் என்று தெரியாமல் தான் பார்க்கத் தொடங்கினேன். இயக்குநர் சோமிதரன் எனக்கு மூன்றாண்டுகளாக தெரியும்.
நீளிரா என்றால் என்ன என்று எனக்கு முதலில் புரியவில்லை. அதன் பிறகு அவரிடம் கேட்டபோது, 'நீண்ட இரவு ' என்று சோமிதரன் விளக்கம் அளித்தார். தமிழுக்கு இங்கிலீஷில் சப்டைட்டில் போட வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது, இது எப்படி எங்களை என்டர்டெய்ன் பண்ணும் என்று எதிர்பார்த்தேன். நான் பொதுவாக காமெடி கமர்ஷியல் என்ற படம் எடுப்பவன். ஆனால் படம் பார்க்க தொடங்கியதும் ஒரு ஸ்டேஜுக்குப் பிறகு வேகம் எடுக்கத் தொடங்கியது. செம திரில்லர். எல்லாவற்றையும் இயக்குநர் சமமாக பேலன்ஸ் செய்திருக்கிறார். அதுதான் இப்படத்தின் ஹை லைட். எல்லாவற்றையும் கடந்து ஒரு திரில்லருக்குள் ஒரு எளிய மக்களின் வாழ்வியலை சொல்வதுதான் இப்படத்தின் ஹைலைட்," என்றார்.
இயக்குநர் ராஜு முருகன் பேசுகையில், ''நாம் இப்போது முக்கியமான போர் சூழலில் இருக்கிறோம். போர் எப்படி நடைபெறுகிறது என்றால் நாம் பார்க்கும் ஏவுகணைகள், ஆயுதங்கள், குண்டுவெடிப்புகள்... இது ஒரு பக்கம். மற்றொரு பக்கம் சத்தமில்லாமல் ஒரு கருத்தியல் போர் நடைபெறுகிறது. அதுதான் மிக முக்கியமான விஷயமாக நான் பார்க்கிறேன். முதலில் கருத்தியல் போர். அதன் பிறகு தான் ஆயுதப் போர்.
ஈழத்தில் அவ்வளவு பெரிய அளவிலான போர் நடைபெற்றது. அது தொடர்பாக ஒரு படம் கூட வெளிவரவில்லையே என்ற வருத்தம் என்னைப் போன்ற ஏராளமானவர்களுக்கு இருக்கிறது, அதை உடைக்கக்கூடிய முதல் படமாக 'நீளிரா' இருக்கும்.
இயக்குநர் சோமிதரனுக்கு நான் சொல்லும் நன்றி என்னவென்றால், உலகம் முழுவதும் இருக்கும் போர் சூழலில் ஈழ சினிமா என்றதொரு வகையை நீங்கள் ஏற்படுத்தி இருக்கிறீர்கள். ஏற்கனவே நிறைய படைப்பாளர்கள் குட்டி குட்டியாக எடுத்திருக்கிறார்கள். ஆனால் நவீன சினிமாவில் நேர்த்தியாக எடுக்கப்பட்ட ஈழ சினிமாவாக நான் நீளிராவை பார்க்கிறேன். இதற்காக சோமிதரனுக்கு நன்றி," என்றார்.
எழுத்தாளர் பவா செல்லத்துரை பேசுகையில், ''இப்படத்தின் இயக்குநர் சோமிதரனுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகால நட்பு இருக்கிறது. எழுத்தாளர் பிரபஞ்சன் ''இவ்வளவுக்கு பிறகும் ஒரு பூ பூக்க தானே செய்கிறது'' என்றொரு வரி எழுதி இருப்பார். இந்த வரியை ஈழத்துடன் பொருத்தி பார்த்துக் கொள்ளலாம். அவ்வளவுக்கு பிறகும் ஈழத்தில் ஒரு பூ பூக்கத் தான் செய்கிறது. எல்லோரும் அந்த பூவை ரசிக்கத்தான் செய்கிறார்கள்.
இந்தப் படத்தில் இடம் பெறுகிற பல இடங்களை நான் நேரில் பார்த்த அனுபவம் உண்டு. உண்மையில் சோமிதரன் என்றொரு மகத்தான கலைஞனை முதன் முதலில் கண்டுபிடித்தது பாலுமகேந்திரா தான். நானும், பாலுமகேந்திராவும் சேர்ந்து தான் காஞ்சிபுரத்தின் அருகில் உள்ள ஒரு ஊரில் சோமிதரனுக்கு திருமணத்தை நடத்தி வைத்தோம். சோமிதரனுடைய வெற்றியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிற லட்சோப லட்சம் ரசிகர்களில் நானும் ஒருவன்,'' என்றார்.
இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில், ''கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி' எனக்கு மிகவும் பிடிக்கும், 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' மிகவும் பிடிக்கும். அவர் ஒரு அரசியலை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார். அன்பு அறமென எழுக என சொல்லும் படமாகத் தான் நான் நீளிராவை பார்க்கிறேன்.
ஒரு போர் படத்தை கத்தி இல்லாமல், துப்பாக்கி சத்தம் இல்லாமல், ரத்தம் இல்லாமல், ஒரு மரணம் கூட நிகழாமல் சோமிதரன் விவரித்திருப்பது கலையின் தீவிரம். இந்தப் படத்தை நான் ஏன் நேசிக்கிறேன் என்றால் எதுவும் இல்லாமல் ஒரு கலையை முன் வைக்க முடியும் என்பதை சோமிதரன் மிக அழகாக சொல்லி இருக்கிறார். உலகம் முழுவதும் வெறுப்பின் குரல் கேட்டுக் கொண்டே இருக்கிறது. எல்லா இடங்களிலும் வெறுப்பு கொப்பளித்துக் கொண்டே இருக்கிறது. அதற்கு எதிராக ஒரு படத்தை அழகாக முன் வைத்திருக்கிறார். இந்த படம் ஓர் இரவில் ஒரு வீட்டில் இரண்டு ராணுவத்திற்கு இடையே நடக்கும் ஒரு படம்," என்றார்.
இயக்குநர் லிங்குசாமி பேசுகையில், ''கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் நானும் இயக்குநர் ஆர்கே செல்வமணியும் தான் இப்படத்தை பார்த்தோம். அதற்குப் பிறகு இந்தப் படத்தை எப்படி கொண்டு மக்களிடம் சேர்ப்பிப்பது என்பதை பற்றி தான் கார்த்திக் + கார்த்திகேயன் சந்தானம் பேசிக் கொண்டிருந்தனர். அந்த வேலையை தற்போது அவர்கள் மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுடன் ராணா இணைந்திருப்பது கூடுதல் சிறப்பு.
ஒரு படம் எவ்வளவு தூரம் எங்கேஜிங்காக வைத்திருக்கிறது என்பதை மட்டும் தான் பார்ப்பேன். அந்த வகையில் இந்தப் படம் எங்கேஜிங்காக இருக்கும். படம் முழுவதும் ஒரு உயிர்ப்பு இருந்து கொண்டே இருக்கும். சோமிதரன் அந்த வாழ்க்கையை அனுபவித்ததாலும், பார்த்ததாலும் அந்த அளவிற்கு படத்தை நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார். இந்தப் படம் முடிந்த பிறகும் பார்ட் 2 எடுக்கலாம். அந்த அளவிற்கு ஒரு நீண்ட டிராவல் இருக்கிறது," என்றார்.
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் பேசுகையில், ''இதுபோன்ற ஒரு படத்திற்கு பக்க பலமாக ஆதரவு அளித்து வரும் ராணாவிற்கு நன்றி. உங்களைப் போன்ற தயாரிப்பாளர்கள் தமிழ் திரையுலகத்திற்கு தற்போது அவசியம். இங்கு பேசிய இயக்குநர்கள் யாரேனும் கதையின் அந்த முக்கியமான சம்பவத்தை சொல்லி விடுவார்களோ என என் அருகில் அமர்ந்திருந்த சோமிதரன் பதற்றத்துடன் இருந்தார்.
நமது பக்கத்து நாட்டில் நம்முடைய சகோதரர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை இந்த படத்தில் சொல்லி இருக்கிறார்கள். அதிலும் ஒரு போர் சூழலில் ஒரு வீட்டில் இருப்பவர்களுக்கு அது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது. போர் வீரர்கள், போராளிகள், பொதுமக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றி சோமிதரன் அருமையாக சொல்லி இருக்கிறார்.
பொதுவாக திருமணம் என்பது நமக்கெல்லாம் மறக்க முடியாத ஒரு நிகழ்வு. ஆனால் அதே திருமணம் 80, 90களில் அங்கு வாழ்ந்தவர்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும் என்பதை கண் முன் தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் எல்லாம் நடிக்காமல் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல முடியும். அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள், அந்த வீட்டின் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் புகைப்படங்கள் கதையை சொல்கிறது. சினிமாவில் உள்ள 24 கிராஃப்ட்டும் இணைந்து கதை சொன்னது போல் இருந்தது.
நான், லிங்குசாமி ஆகியோரெல்லாம் மணிரத்னத்தின் வசனங்களுக்கு பெரிய ரசிகர்கள். ஏனென்றால் ஒரு கதாபாத்திரம் ஒன்றை பேசுகிறது என்றால் அதற்கு எதிர் கதாபாத்திரம் என்ன பதிலளிக்கும் என்பதை கணிக்கவே முடியாது. அதுபோன்ற உரையாடல்கள் இந்த படம் முழுவதும் இருந்தது.
இந்தத் திரைப்படத்தை ஓடிடி-யில் பார்த்து விடலாம் என்று காத்திருக்காதீர்கள். அவசியமாக திரையரங்கத்திற்கு வருகை தந்து பாருங்கள். முக்கியமாக குழந்தைகளை அழைத்துச் சென்று காண்பியுங்கள். அவர்களுக்கு கடந்த காலத்தில் இலங்கையில் நடைபெற்ற போர் மற்றும் போர் சூழல் பற்றி தெரியவரும். இது ஒரு பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும். திரில்லர் படமாகவும் இருக்கும்,'' என்றார்.

நடிகர் நவீன் சந்திரா பேசுகையில், ''இப்படி ஒரு கதையை சொல்ல வேண்டும் என்ற எங்களுடைய இயக்குநரின் நோக்கத்தை புரிந்து கொண்டு ஆதரவளிப்பதற்காக இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.
அம்மு படத்தை இயக்கிய இயக்குநர் சாருகேஷ் தான் என்னை முதன் முதலாக ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்கு அறிமுகப்படுத்தினார். அன்று முதல் இன்று வரை இந்த நிறுவனத்துடன் தொடர்பு தொடர்கிறது. அந்த படத்தை பார்த்து தான் இயக்குநர் சோமிதரன் இப்படத்தில் ஒரு கேப்டன் கதாபாத்திரத்தை கொடுத்தார். இதனால் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்கு நன்றி.
நீளிரா படத்தில் பணியாற்றிய அனுபவம் அற்புதமானது. இந்தப் படம் அற்புதமான திரையரங்க அனுபவத்தை வழங்கக்கூடிய படம். ஒலி அமைப்பு சிறப்பானதாக இருக்கும்,'' என்றார்.
இயக்குநர் சோமிதரன் பேசுகையில், ''நானும் என்னுடைய நண்பர் எழுத்தாளர் சயந்தனும் பள்ளிக்கூடத்து நண்பர்கள். எப்போதும் ஒன்றாக சுற்றித் திரிவோம் அப்போது, 'நம்மைப் பற்றி நாம் தான் பேசிக் கொண்டே இருக்கிறோம், நம்மைப் பற்றி எப்போது இந்த உலகம் பேசும் என்று ஆதங்கத்துடன் பேசிக் கொள்வோம். ஈழத் தமிழர்களின் வலியையும் ஈழத் தமிழர்களின் கதையையும் என்றைக்கு இந்த உலகம் பேசும் என்றும் பேசியிருக்கிறோம்.
படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான இந்த நிகழ்வில் இங்கு வருகை தந்த ஏராளமான திரையுலக பிரபலங்கள் எங்களைப் பற்றி பேசி விட்டார்கள். இதை கேட்ட எனக்கு பேசுவதற்கு வார்த்தை இல்லை. இவை தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜால் நிகழ்ந்தது.
தமிழ் சினிமாவிற்கு வெளியில் சென்று ஒரு படத்தை இயக்கி தனியாக ஓரிடத்தில் சொல்வதைவிட தமிழ் சினிமாவில் இருந்து கொண்டு தமிழ் சினிமாவிற்குள் ஒரு ஈழத்து கதையை சொல்ல வேண்டும் என்பதுதான் நாங்கள் தமிழ் சினிமாவிற்கு செய்யும் பங்களிப்பு என்றும் தமிழ் சினிமாவில் எங்களுடைய கதைகள் பேசப்பட வேண்டும் என்றார் பாலு மகேந்திரா. அதை சாத்தியப்படுத்தி இருக்கின்ற தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானத்திற்கு நன்றி," என்றார்.
இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசுகையில், ''இயக்குநர் லிங்குசாமியும் நானும் கார்த்திக் சுப்புராஜ் அழைப்பின் பேரில் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிற்கு சென்று அங்கு திரையிடப்பட்ட நீளிரா படத்தை பார்த்தோம். படத்தைப் பார்க்கும் முன் படத்தைப் பற்றி எந்த அபிப்பிராயமும் இல்லை. இப்படத்தை பார்த்த பிறகு கார்த்திக்கிடம் இந்த படத்தின் இயக்குநர் யார், நான் அவரை சந்திக்க வேண்டும் என்று சொன்னேன். அப்போதுதான் இயக்குநர் சோமிதரனை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள்.
அப்போது கார்த்திக்கிடம் தமிழ் சினிமாவிற்கு இது மிக முக்கியமான படம். இந்தத் திரைப்படத்தை உடனடியாக வெளியிடாமல் சரியான முறையில் அனைவருக்கும் தெரிய செய்து மக்களை சென்றடையும் வகையில் படத்தை வெளியிடுங்கள் என கோரிக்கை வைத்தேன்
இதை சரியாக புரிந்து கொண்டு காத்திருந்து தற்போதைய நல்ல தருணத்தில் இப்படம் வெளியாகிறது. வாழ்த்துகள். தற்போது சிறிய பட்ஜெட்டிலான திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் சின்ன படங்களின் பொற்காலமாக இந்தக் காலத்தை குறிப்பிடுவேன். கடந்த இரண்டு மூன்று மாதங்களில் ஏழு சின்ன பட்ஜெட்டிலான படங்கள் வெற்றி பெற்று இருக்கின்றன. அந்த வகையில் இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது.
இந்தப் படம் சாதாரணமானதாக தொடங்கி ஒரு போர் சூழலை, யுத்தத்தையே காண்பிக்காமல், அதை பற்றிய பயத்தை கேரக்டர் மூலமாக ரசிகர்களுக்கு உண்டாக்குகிறார்கள்.
ஒவ்வொரு கதாபாத்திரமும் ஈழத் தமிழர்கள் அனுபவித்த வலியை தத்ரூபமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு நான் யாழ்ப்பாணத்திற்கு சென்றேன். ஒரு நாளில் திரும்பி விடுவதாக திட்டமிருந்தது. ஆனால் நான் அங்கு ஏழு நாட்கள் இருந்தேன்.
இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு சென்று பாருங்கள். அப்போதுதான் அந்த போர்ச் சூழலில் இருப்பது போன்ற உணர்வை இந்தப் படம் ஏற்படுத்தும்.
தமிழ் சினிமா உலக சினிமாவின் தரத்திற்கு நிகராக இருக்கிறது என்பதற்கான படமாகவும் இது இருக்கிறது என்பதால் இப்படத்தை நிச்சயமாக அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும்,'' என்றார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், ''இந்த படத்தை பார்க்க அழைப்பு விடுத்த போது பார்க்க முடியவில்லை. ஆனால் இந்த படத்தை பற்றி நண்பர் ரத்னாவிடம் கேட்டேன் அவர் நிறைய இடங்களில் அழுதேன் என்றார். நானும் அனைவரையும் போல ரசிகர்களுடன் பார்க்க வேண்டும் என்பதற்காக ஏப்ரல் மூன்றாம் தேதி வரை காத்திருக்கிறேன்.
கார்த்திக் சுப்புராஜ் உடைய எல்லா படங்களிலும் இலங்கைத் தொடர்பாகவும் இலங்கை தமிழர் தொடர்பாகவும் விஷயங்கள் இடம்பெறுகின்றன. அவற்றை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக இந்த படத்தை தயாரித்திருக்கிறார் என நினைக்கிறேன். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,'' என்றார்.
நடிகர் ராணா டக்குபட்டி பேசுகையில், ''சோமிதரனின் சொந்த வாழ்க்கை தான் இந்தத் திரைப்படம். அடுத்த தலைமுறைக்கான சிறந்த படம் இது. இங்கு பேசிய இயக்குநர்கள் ஜெர்மனி, வியட்நாம் ஆகிய நாடுகளில் நடைபெற்ற போர்களை பற்றி ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன, ஆனால் இந்தியாவில் இந்திய மண்ணில் இது பற்றிய படங்கள் வெளியாகவில்லை என குறிப்பிட்டனர். இதனால் தான் எங்களின் ஸ்பிரிட் மீடியா நிறுவனம் நம் மண்ணைச் சார்ந்த, நம் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் படைப்புகளை தயாரிக்க வேண்டும் என ஐந்தாண்டுகளுக்கு முன் தீர்மானித்தோம். மலையாளம், மராத்தி தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் கலாச்சாரம் சார்ந்த கதையை தயாரித்து வருகிறோம். இந்தப் படத்திற்காக கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றியதை பெருமிதமாக கருதுகிறேன்.
சோமிதரன் மிகவும் திறமைசாலி. யுத்தம் இல்லாமல், ஒரு துப்பாக்கி குண்டு இல்லாமல், ஒரு வீட்டிற்குள் பரபரவென்று செல்லும் கதையை சொல்லி இருக்கிறார். நான் இந்த படத்தை மூன்று முறை பார்த்திருக்கிறேன். தற்போதுள்ள உலகளாவிய போர் சூழலில் இந்த படத்தை சரியான தருணத்தில் வெளியிடுகிறோம் என நினைக்கிறேன்,'' என்றார்.
இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், ''இந்தப் படம் ஈழத்திலிருந்து வந்த ஒரு நண்பன். தன்னுடைய வலியை, தன்னுடைய நினைவுகளை, ஈழத்திலிருந்து வந்த மற்றொரு இளைஞனுடன் சேர்ந்து படமாக உருவாக்கி இருக்கிறார். இதற்காக கார்த்திக் சுப்புராஜ் மற்றும் அவரது குழுவினருக்கு நன்றி. நம்முடைய சகோதரர்களுடைய வலியை நம்முடைய வலியாகவே பார்த்து வளர்ந்திருக்கிறோம். ஆனாலும் சினிமாவின் வாயிலாக இதனை சாத்தியப்படுத்திய சோமிதரனுக்கு வாழ்த்துக்கள். ஒரு ரைட்டர் ஆக சோமிதரனின் அச்சீவ்மென்ட் ஸோ ஹை. எதிர்பாராதது.
இந்தப் படம் வெறுப்பை பேசவில்லை. இந்தப் படம் வன்முறையை ஆதரிக்கவில்லை. இது பிரச்சார படம் அல்ல. ஒரு கருத்தியலை உயர்த்தி பிடிப்பதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்து உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான படமும் அல்ல. வெறுப்பையும், வன்முறையையும் பணமாக்க விரும்பாத ஒரு படம். இந்த படம் யாரையும் நேரடியாக விமர்சனத்திற்கு உட்படுத்தாமல் சம்பவங்களை இயல்பாக சொல்லும் படம். வெறுப்பிற்கு எதிராக நாம் இதுபோன்ற படங்களை தான் பதிலாக சொல்ல முடியும்," என்றார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், ''மறக்க முடியாத தருணம் இது. நான் பார்த்து வியந்த இயக்குநர்கள் இங்கு வந்து படத்தை வாழ்த்தி பேசியதற்கு நன்றி. இந்த படத்தின் பணிகளை தொடங்கிய போது இதை நான் என்னுடைய மிகப்பெரிய பொறுப்பாக பார்த்தேன். நாங்கள் இதுவரை 18 படங்களை தயாரித்து இருக்கிறோம் .அதில் சில படங்கள் வெற்றி பெறும் என்று நாங்கள் எதிர்பார்ப்போம். ஆனால் வெற்றி இருக்காது. ஆனால் இந்தப்படம் அப்படி அல்ல. இந்தப் படத்தை தவறாக உருவாக்கி விட்டோம் என்றால் சோமிதரன் போன்ற ஏராளமான இயக்குநர்களின், படைப்பாளர்களின் கனவு தகர்ந்து விடும். இது போன்ற போர் சூழல் குறித்த கதைகளை செல்வதற்கு சினிமா தான் ஆகச்சிறந்த கலை வடிவம். ஆதனால் அதனை மிகவும் சரியாக செய்துவிட வேண்டும் என்று பதட்டம் இருந்து கொண்டே இருந்தது.
ஈழத் தமிழர்கள் மீது எனக்கு சின்ன வயதில் இருந்தே ஒரு அனுதாபம் இருக்கிறது. இந்தப் படத்திற்குப் பிறகு சோமிதரன் போன்றவர்கள் இது போன்ற கதைகளை எடுத்து வந்தால் அதை தயாரிப்பதற்கு பெரிய பெரிய தயாரிப்பாளர்கள் முன் வருவார்கள். இதற்கான தைரியத்தை முழுதாக கொடுக்கிறதோ இல்லையோ ஆனால் அதற்கான தொடக்க புள்ளியாக இப்படம் இருக்கும் என நம்புகிறேன்.
படப்பிடிப்பு நடைபெறும் ஒவ்வொரு நாளிலும் படைப்பு சிறப்பானதாக வரவேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியுடன் சோமிதரன் பணியாற்றினார். நம்மால் உணர முடியாத ஒரு எமோஷன் அந்த எமோஷனை இயக்குநர் சோமிதரன் மிக துல்லியமாக படத்தில் கொண்டு வந்திருக்கிறார்," என்றார்.
ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'கார் மேனி செல்வம்' திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன் , ஹரிதா பராகோட், கோதண்டம், கரண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
தேசிய விருது வென்ற படைப்பாளியான இயக்குநர் மணிகண்டன் மற்றும் இயக்குநரும், படத்தொகுப்பாளருமான பி...
Adhira & Appa Coffee, built on the philosophy of sustainability and authenticity and part of the EBG Group, has announced acclaimed actors Shruti Haasan and Murali Sharma as their brand ambassadors...