Latest News :

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’. இயக்குநர் செல்வராகவன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் குஷி ரவி நாயகியாக நடித்திருக்கிறார். தயரிப்பாளர் சதீஷ் மற்றும் நடிகை கெளசல்யா மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க, மைம் கோபி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். 

 

ஏ.கே.பிரியன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கே.ரவி வர்மா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தீபக் எஸ்.துவாரக்நாத் படத்தொகுப்பு செய்ய, பாக்யராஜ் வெள்ளையன் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.

 

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பல தரமான மற்றும் வெற்றி திரைப்படங்களை வெளியிட்டு வரும் சக்தி பிலிம் பேக்டரி சார்பில் பி.சக்திவேலன் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

 

இந்த நிலையில், ’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை, சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய செல்வராகவன்,  "முதலில் சக்தி பிலிம் ஃபேக்டரி பற்றி சொல்லணும். நான் அவர்களின் படங்களை எப்போதுமே கவனித்து பார்த்திருக்கிறேன். அவர்கள் மிகவும் தேர்ந்தெடுத்து படங்களை தயாரிப்பார்கள், ஆனால் எதை எடுத்தாலும் அதைக் பெரிய அளவில், தரமாக மக்கள் முன் கொண்டு சேர்ப்பார்கள். அந்த பேனரில் ஒரு படத்தில் நான் இருக்க வாய்ப்பு கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதற்காக மிக்க நன்றி, சார்.

 

இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு, ஷூட்டிங்கிற்குப் போனபோது ஒரு விஷயம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. எல்லோரும் ஓய்வில்லாமல் தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருந்தார்கள். ஒருவித அதிரடியான உழைப்பு அந்த செட்டில் இருந்தது. சில நேரங்களில் பார்த்து, இவர்கள் எப்போது சாப்பிடுறாங்க, எப்போது ஓய்வு எடுக்குறாங்க, என்று கூட யோசித்திருக்கேன். அந்த அளவுக்கு முழு அர்ப்பணிப்புடன் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் டென்னிஸ். அந்த அசாதாரண உழைப்புக்கு கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.

 

தயாரிப்பாளர் சார் பற்றி சொல்லணும்னா, ஆரம்பத்தில் அவரை நான் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கவில்லை. ஆனால் பின்னர் பார்த்த போது, இந்த படத்திற்கு அவர் கொடுத்த ஆதரவு மிகப் பெரியது. எங்களுக்கு முழுமையான சப்போர்ட் கொடுத்து, இந்த திட்டத்தை சிறப்பாக நிறைவேற்ற உதவியிருக்கிறார். அதற்காக என் நன்றி.

 

இசை பற்றி சொல்லணும்னா, நான் சில வரிகள் மட்டும் கேட்டவுடனே “யார் இந்த இசையமைப்பாளர்?” என்று கேட்க வைத்தது. அந்த அளவுக்கு இசை மிகவும் இனிமையாகவும், தரமாகவும் இருந்தது. இந்த படத்திற்கு அருமையான இசையை கொடுத்திருக்கிறார். அவருக்கு என் பாராட்டுகள். அதேபோல், இந்த படத்தில் உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்கள் பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். அனைவருக்கும் என் நன்றி.

 

கௌசல்யா மேம் பற்றி சொல்லணும்னா, திரையில் பார்த்த அளவுக்கு கூட, நேரில் இன்னும் அமைதியான, மென்மையான மனிதர். அவருடன் பணியாற்றியது ஒரு நல்ல அனுபவம். அதற்கு முழுக்க எதிர்மாறாக குஷி, அவங்க எங்க இருந்தாலும் அந்த இடமே சந்தோஷமா இருக்கும் மாதிரி ஒரு positive energy. எப்போதும் சிரிப்புடன் இருப்பது ஒரு பெரிய வரம். அந்த எனர்ஜி எல்லாருக்கும் பரவுவது இந்த படத்திலும் தெரியும். மொத்தத்தில், இது ஒரு அருமையான டீம். இந்த குழு இன்னும் பெரிய உயரத்தை அடைய வேண்டும் என்று நான் மனதார வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.

 

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சதீஷ் பேசுகையில், “வந்திருக்கும் அனைத்து பத்திரிக்கை, ஊடகத்துறை மற்றும் சமூக வலைதள நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம். நிறைய விஷயங்கள் பேசலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், பிரியன் சொன்ன அந்த பாடல் என்னை கொஞ்சம் உணர்ச்சிவசப்படுத்திவிட்டது. அந்த பாடலை நான் கேட்கும் போது எப்போதும் என் அம்மா நினைவுக்கு வருவார். இன்று என் அம்மா என்னுடன் இல்லை. சிறுவயதிலிருந்தே என்னை திரையில் பார்க்க வேண்டும் என்பது அவருடைய ஆசை. அது பல ஆண்டுகளாக இருந்த ஒரு கனவு. எனக்கும் சினிமாவில் ஒரு நல்ல இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் பொறுப்புகள் காரணமாக நான் கார்ப்பரேட் வாழ்க்கையில் இருந்தேன். இருந்தாலும் அந்த ஆசை உள்ளுக்குள் எப்போதும் இருந்துகொண்டே இருந்தது. பலரும் சொல்லுவது போல, நாம் மனதில் நினைக்கும் விஷயம் ஒருநாள் நிச்சயம் நடக்கும். அதுபோல தான் எனக்கும் இந்த வாய்ப்பு வந்தது. ஒரு கட்டத்தில், இதை முழுநேரமாக செய்ய வேண்டும் என்று முடிவு செய்து இந்தப் பயணத்தில் இறங்கினேன்.

 

ஒரு நேர்காணலில் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் சொன்ன ஒரு விஷயம் எனக்கு நினைவுக்கு வருகிறது, நாம் எதையாவது உண்மையிலேயே விரும்பினால், சரியான நேரமும், சரியான மனிதர்களும் சேரும் போது முழு உழைப்புடன் முயற்சி செய்தால் அதை நிச்சயம் அடையலாம். அந்த வார்த்தைகள் இந்தப் பயணத்தில் உண்மையாகியிருக்கின்றன. இந்தப் படத்தை பற்றி பேசும்போது முதலில் டென்னிஸ் மஞ்சுநாத் பற்றி சொல்ல வேண்டும். அவர் எனக்கு சகோதரன் போன்றவர். கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள் ஒன்றாக பயணித்து வருகிறோம். அவரின் மூலம் தீபக், ரவி, சித்து ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் குறும்படங்களில் இணைந்து பணியாற்றிய அனுபவம் இந்த நாளை உருவாக்கியது.

 

எனக்கு சினிமாவில் முதல் வாய்ப்பை கொடுத்தவர் சசிகுமார் சார். ‘கிடாரி’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்த வாய்ப்பை நான் எப்போதும் நன்றியுடன் நினைவில் வைத்திருக்கிறேன். இந்தப் படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருவான கதை. இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. அதைப் பற்றி ஆராய்ந்த போது, இதுபோன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடந்திருக்கின்றன என்பதைக் கண்டறிந்தோம். அது எங்களை ஆச்சரியப்படுத்தியது. அதனால் இந்தக் கதையை மிகவும் பொறுப்புடன் எடுத்துக் கொண்டு, சரியான முறையில் சொல்ல வேண்டும் என்று தீர்மானித்தோம்.

 

அப்போது இந்தக் கதையை செல்வா சாரிடம் கொண்டு போவோம் என்று முடிவு செய்தோம். அவர் ஒப்புக்கொண்டால் மட்டுமே இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்று நாங்கள் தீர்மானித்திருந்தோம். அவர் ‘ஆம்’ என்ற ஒரே வார்த்தை இந்தப் படத்திற்கு உயிர் கொடுத்தது. அதற்காக அவருக்கு எங்களின் மனமார்ந்த நன்றி. அவர் இணைந்த பிறகு, இந்தப் படத்தின் தரம் இன்னும் உயர வேண்டும் என்ற பொறுப்பு எங்களுக்குள் உருவானது. எந்த விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், மிகுந்த கவனத்துடன் இந்தப் படத்தை உருவாக்கினோம். சேலம் உள்ளிட்ட இடங்களில் உண்மையான லொகேஷன்களில் படமாக்கி, தொழில்நுட்ப ரீதியாகவும் சிறந்த முயற்சிகளை செய்தோம்.

 

இந்தப் படத்தில் நடித்த குஷி ரவி அவர்களின் நடிப்பு மிகவும் பாராட்டத்தக்கது. மொழி மாற்றத்தையும் கடந்து, மிகுந்த உணர்வுடன் நடித்திருக்கிறார். அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருப்பது உறுதி. கௌசல்யா மேடம் இந்தக் கதாபாத்திரத்திற்காக முழுமையாக தன்னை மாற்றிக்கொண்டார். டி-கிளாமர் லுக்கில், அந்தக் கதாபாத்திரத்திற்கு தேவையான உண்மைத் தன்மையை மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார். மைம் கோபி சார் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவருடைய நடிப்பு இந்தக் கதாபாத்திரத்திற்கு மிகச் சிறப்பாக பொருந்தியுள்ளது. அவர் இல்லாமல் இந்தக் கதாபாத்திரத்தை நினைத்துப் பார்க்க முடியாது. Y.G.மகேந்திரன் சார் போன்ற மூத்த கலைஞர்கள் இந்த யங் டீமுடன் இணைந்து மிக எளிமையாக பணியாற்றியது எங்களுக்கு பெருமை. செல்வா சார் உடன் பணியாற்றிய ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு பாடமாக இருந்தது. அவருடைய அனுபவம் இந்தப் படத்தின் தரத்தை இன்னும் உயர்த்தியது.

 

இந்தப் படம் ஏன் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்றால், இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு கிராமத்தின் வாழ்க்கை, மனித உறவுகள், உணர்வுகள் அனைத்தையும் எதார்த்தமாக சொல்லும் ஒரு படம். ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசை ஆகிய அனைத்தும் இந்தக் கதையை இன்னும் உயர்த்தியுள்ளது. இந்தப் படம் குடும்பத்தோடு பார்க்கக்கூடியது. அனைவரும் குடும்பத்துடன் தியேட்டருக்கு வந்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

மேலும் இந்தப் பயணத்தில் எங்களுடன் இருந்த அனைத்து தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி. யாராவது பெயரை தவறவிட்டிருந்தால் மன்னிக்கவும். இந்தப் படத்தில் உழைத்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். மீண்டும் ஒரு முறை, உங்கள் அனைவரும் இந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.” என்றார்.

 

நடிகை கௌசல்யா பேசுகையில், “இங்கு வந்திருக்கும் அனைத்து மதிப்பிற்குரிய விருந்தினர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். இன்று இந்த மேடையில் பேசுவதற்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், ஒருவித பெருமையாகவும் இருக்கிறது. இங்கு இருக்கும் ஒவ்வொருவரும் மிக முக்கியமானவர்கள், உங்கள் அனைவரின் வருகையும் என்னை உண்மையிலேயே நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

 

முதலில் இயக்குநர் டென்னிஸ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். இந்த படத்தில் எனக்கு மிகவும் அழகான மற்றும் வலுவான கதாபாத்திரத்தை உருவாக்கி அளித்ததற்கு மிக்க நன்றி. இந்த படத்தின் தீவிரத்தையும், அதன் உணர்ச்சிப் பூர்வமான களத்தையும் நம்பி தான் நான் இந்த திட்டத்தில் இணைந்தேன். அடுத்து தயாரிப்பாளர்கள் சதீஷ் சார் மற்றும் விஜயா மேம் அவர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றி. உங்கள் திட்டமிடல், ஒழுங்கு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக இந்த படத்தை சிறப்பாக முடிக்க முடிந்தது. உங்களைப் போன்ற தயாரிப்பாளர்கள் அதிகமாக இருந்தால், தமிழ்சினிமா இன்னும் உயர்ந்த நிலையை அடையும் என்பது என் நம்பிக்கை.

 

செல்வா சார், உங்களுடன் இணைந்து நடிப்பது எளிதான விஷயம் அல்ல. ஆனால் நீங்கள் கொடுத்த அந்த கம்பர்ட் மற்றும் ஆதரவு காரணமாக பல விஷயங்கள் மிகவும் இயல்பாக அமைந்தது. அதற்காக மிக்க நன்றி. குஷி, பெங்களூரிலிருந்து வந்து முழு அர்ப்பணிப்புடன் இந்த படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது. உங்கள் கடின உழைப்புக்கு மனமார்ந்த நன்றி. ஒரு பெரிய விஷயத்தை அழகாக காட்சிப்படுத்துவது சுலபம். ஆனால் ஒரு எளிய விஷயத்தை அழகாக காட்சிப்படுத்துவது தான் உண்மையான சவால். அந்த சவாலை நம்முடைய ஒளிப்பதிவாளர் ரவி வர்மா அவர்கள் மிகச் சிறப்பாக செய்து காட்டியுள்ளார். அவருக்கு என் நன்றி.

 

இசையமைப்பாளர் ஏ.கே. பிரியன் அவர்களை இன்று தான் நேரில் சந்தித்தேன். இது அவர்களின் முதல் படம் என்று சொன்னார்கள்; ஆனால் அதை உணர முடியாத அளவுக்கு பாடல்கள் அனைத்தும் அருமையாக இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் நடனமாடியது அவர்களின் இசைக்காக தான். அந்த அளவுக்கு இனிமையான இசையை வழங்கியதற்கு நன்றி.

 

இங்கு வந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இறுதியாக, எங்கள் முழு குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். வரும் ஏப்ரல் 10ஆம் தேதி இந்த படம் வெளியாகிறது. இது முழு குடும்பமும் சேர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு சிறந்த திரைப்படம். கண்டிப்பாக அனைவரும் பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

 

நடிகை குஷி ரவி பேசுகையில், “இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். சில விஷயங்களை தவறவிடாமல் சொல்ல வேண்டும் என்பதால், நான் சிறிய குறிப்புகளை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறேன். ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள். ‘மனிதன் தெய்வமாகலாம்’ என் முதல் தமிழ் திரைப்படம் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த படத்தை அனைவரும் விரும்பி பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன். இது முழு குடும்பமும் சேர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு அழகான திரைப்படம்.

 

முதலில் செல்வராகவன் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இந்த படத்தில் என் நடிப்பை சிறப்பாக வெளிக்கொண்டு வந்த இயக்குநர் டென்னிஸ் அவர்களுக்கு என் நன்றி. என் தயாரிப்பாளர்கள் விஜயா மேடம் மற்றும் சதீஷ் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. என்னுடன் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் என் நன்றி.

 

இந்த படத்திற்காக உழைத்த ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞருக்கும் மற்றும் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இசையமைப்பாளர் பிரியன் அவர்களுக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள். இசை மிகவும் அருமையாக வந்துள்ளது. இறுதியாக, அனைவரும் கண்டிப்பாக திரையரங்குகளில் இந்த படத்தை பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

 

தயாரிப்பாளர் கதிரேசன் பேசுகையில், “இந்த அளவுக்கு சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட மேடையும், திரையுலகப் பிரபலங்கள் ஒன்றுகூடியதற்கும் முக்கிய காரணம் தயாரிப்பாளர் விஜயா சதீஷ் மற்றும் அவரது கணவர் சதீஷ் என்பதைக் குறிப்பிட்டு, தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்தார்.

 

தனது முதல் படத்திலேயே இயக்குநரை மேடையில் பாராட்டிய விஜயா சதீஷின் அணுகுமுறை குறிப்பிடத்தக்கது என்றும், ஒரு தயாரிப்பாளர்–இயக்குநர் உறவு வெற்றிகரமாக அமைந்தால், அது படத்தின் தரத்திலும் வெற்றியிலும் பிரதிபலிக்கும் என்றும் அவர் கூறினார். தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் உறவை “கணவன்–மனைவி” உறவுக்கு ஒப்பிட்டு, இருவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நல்ல படைப்பு உருவாகும் எனவும் தெரிவித்தார்.

 

இன்றைய காலகட்டத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள் குறைந்து வரும் நிலையில், குறைந்த செலவில் தயாராகும் சிறிய படங்களே அதிக வெற்றி பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சமீப காலத்தில் 5 முதல் 15 கோடி ரூபாய் செலவில் உருவான படங்களே வெற்றியைப் பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது என்றார்.

 

இந்த நிலையில், இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து படத்தை சிறப்பாக உருவாக்கிய விதம் பாராட்டத்தக்கது என்றும், அவர் தொடர்ந்து இதே நேர்மையுடன் செயல்பட்டால், திரையுலகில் மேலும் பல வெற்றிகளை பெறுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

படத்தின் இசை குறித்து பேசுகையில், இசையமைப்பாளர் ஏ.கே. பிரியன் அமைத்த பாடல்கள் சிறப்பாக அமைந்துள்ளதாகவும், குறிப்பாக “தங்க ரத்தினமே” மற்றும் “கலங்காதே ராசா” போன்ற பாடல்கள் குடும்ப உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவதாகவும் பாராட்டினார். மேலும், பாடலாசிரியர் விக்னேஷ் எழுதிய வரிகள் உணர்ச்சி மற்றும் குடும்ப பாசத்தை நன்கு பிரதிபலிப்பதாகவும் கூறினார்.

 

படத்தின் கதை மற்றும் காட்சியமைப்பு குறித்து பேசுகையில், இது ஒரு முழுமையான குடும்பக் கதையாக உருவாகியுள்ளது என்றும், குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு பயணிக்கும் இந்த படம் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். குறிப்பாக, செல்வராகவன் நடித்துள்ள கதாபாத்திரம் குடும்ப பின்னணியில் வலுவாக அமைந்துள்ளதாகவும், நடிகை கௌரி கிஷனின் நடிப்பு இயல்பாக இருப்பதாகவும் பாராட்டினார்.

 

இறுதியாக, நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முழுமையான குடும்ப உணர்வு கொண்ட படம் வெளியாகி இருப்பதாகவும், இந்த படம் பெரிய வெற்றியை பெறும் எனவும் அவர் வாழ்த்துகளை தெரிவித்தார்.

 

தயாரிப்பாளர் கமலக்கண்ணன் பேசுகையில், “மனிதன் தெய்வமாகலாம், கண்டிப்பாக ஆகலாம், அது எப்படி என்றால்? ஒரு தயாரிப்பாளருக்கு உண்மையான கடவுள் பார்வையாளர்கள் தான். தியேட்டருக்குப் போய் படம் பார்த்து அதை வெற்றி பெறச் செய்தால், “என்னை காப்பாற்றியது நீங்கள் தான்” என்று தயாரிப்பாளர் பார்வையாளர்களை கடவுளாகக் கருதுவார். அதனால், அனைவரும் கண்டிப்பாக திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்க்க வேண்டும்.

 

படங்களை மொபைல் போன்றவற்றில் பார்க்காமல், தியேட்டரில் பார்த்தால் தான் அதன் முழு அனுபவம் கிடைக்கும். நாம் நேரில் சென்று படம் பார்த்தால், அந்த படம் வெற்றி பெறும். அப்போது தயாரிப்பாளர், “என்னை காப்பாற்றியது இந்த ஆடியன்ஸ் தான்” என்று பெருமையுடன் கூறுவார். அடுத்ததாக, பத்திரிகையாளர்களும் ஒரு படத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அவர்கள் செய்தி மற்றும் விளம்பரத்தின் மூலம் படத்தை மக்களிடம் கொண்டு செல்கிறார்கள். அதனால், பார்வையாளர்களுக்கு அடுத்தபடியாக பத்திரிகையாளர்களையும் “கடவுள்” என்று சொல்லலாம்.

 

இங்கு கலந்து கொண்ட நடிகர்கள் மற்றும் இளம் கலைஞர்களின் திறமை மிகவும் பாராட்டத்தக்கது. குறிப்பாக பாடல்கள் மிக அழகாக அமைந்துள்ளன. இசையும் சிறப்பாக உள்ளது. இயக்குநர் மிக நன்றாக தனது பணியை செய்திருக்கிறார். மொத்தத்தில், இந்த குழு ஒரு நல்ல முயற்சியை வழங்கியுள்ளது. இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. கடவுளை நினைத்து இதற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன். மேடையில் கலந்து கொண்ட மூத்த கலைஞர்களையும் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது. மேலும், செல்வராகவன் அவர்கள் இந்த படத்தில் இருப்பது, அதன் வெற்றிக்கு கூடுதல் பலமாக இருக்கும்.

 

இறுதியாக, இந்த தயாரிப்பாளர் பார்வையாளர்களை கடவுளாகக் கருதுவார். அவரை நீங்கள் காப்பாற்ற வேண்டும் என்றால், தயவுசெய்து திரையரங்குகளில் சென்று படம் பாருங்கள். மொபைலில் பார்க்காமல், தியேட்டரில் பார்த்து இந்த படத்தை வெற்றி பெறச் செய்யுங்கள். நன்றி.” என்றார்.

 

தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர் தனஞ்செயன் பேசுகையில், “முதலில், தயாரிப்பாளரும் நடிகருமான சதீஷ் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த படத்தின் தயாரிப்பாளர் ஒரு கார்ப்பரேட் ப்ரொஃபஷனல் என்பது குறிப்பிடத்தக்கது. 25–30 ஆண்டுகள் கார்ப்பரேட் துறையில் பணியாற்றி, அதன் பின்பு சினிமாவுக்கு வந்திருப்பது அவருடைய ஆர்வத்தையும் உறுதியையும் காட்டுகிறது. நான் பணியாற்றிய அதே ஏர்டெல் நிறுவனத்திலேயே பின்னர் இணைந்தவர் என்பதும் ஒரு சிறப்பு. ஒருநாள் வந்து “நீங்கள் என்னுடைய சீனியர்” என்று கூறிய தருணம் மிகவும் மகிழ்ச்சியளித்தது.

 

கார்ப்பரேட் அனுபவத்தைப் பயன்படுத்தி, திட்டமிட்ட முறையில், சரியான பட்ஜெட்டிலும், குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குள் இந்த படத்தை உருவாக்கியிருப்பது பாராட்டத்தக்கது. இதற்காக இயக்குநர் டென்னிஸ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். அவர் மிகச் சிறப்பாக தனது பணியை செய்திருக்கிறார். படத்தின் பாடல்கள் மிகுந்த உற்சாகத்துடன் அமைந்துள்ளன. இசையமைப்பாளர் பிரியன், குறிப்பாக புதிய குரல்களையும் புதிய லிரிசிஸ்ட்களையும் பயன்படுத்தி தரமான பாடல்களை வழங்கியுள்ளார். லைவ் நிகழ்ச்சியிலேயே அந்த எனர்ஜி உணரப்பட்டது; அதேபோல் திரையிலும் அது மக்களை கவரும். இந்த பாடல்கள் படத்திற்கு ஒரு முக்கிய பலமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

இயக்குநர் டென்னிஸ் ஒரு வலுவான அணியை ஒருங்கிணைத்துள்ளார். முழு குழுவும் இணைந்து நல்ல முயற்சியை வழங்கியுள்ளது. இந்த படம் ஒரு சிறப்பான வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். நடிகர் அணியைப் பார்த்ததும் மகிழ்ச்சி அளித்தது. ஒய்.ஜி. மகேந்திரன், மைம் கோபி, கௌசல்யா போன்ற அனுபவம் மிக்க கலைஞர்கள் இணைந்திருப்பது படத்திற்கு கூடுதல் வலுவாக உள்ளது. கௌசல்யா மேடம் நீண்ட நாட்களுக்கு பிறகு மேடையில் காணப்பட்டது மகிழ்ச்சியாக இருந்தது.

 

சமீபத்தில் பார்த்த கன்னட படம் ‘நீதி’யில் சிறப்பாக நடித்த குஷி ரவி, இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அவருடைய வரவு தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக அமையும் என நம்புகிறேன். மேலும், தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்புகளை வழங்கிய இயக்குநர் செல்வராகவன் அவர்கள் இந்த படத்தில் ஹீரோவாக நடிப்பது பெருமையாகும். அவர் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்; தொடர்ந்து பல நல்ல படங்களில் அவரை பார்க்க முடிகிறது. எதிர்காலத்தில் அவரிடமிருந்து மேலும் பல முக்கியமான படங்கள் வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

 

சதீஷ் அவர்களின் இந்த முயற்சி மிக முக்கியமானது. தற்போதைய தமிழ் சினிமாவில், ஒரு படம் மிகப்பெரிய வெற்றி பெறுவது அல்லது முழுமையாக நிராகரிக்கப்படுவது போன்ற நிலை உருவாகியுள்ளது. வாரம் தோறும் பல படங்கள் வெளியாகும் நிலையில், குறைந்தது சில படங்களாவது மக்கள் ஆதரவைப் பெறுவது அவசியம். அப்படியானால் தான் துறை மேலும் வளர்ச்சி அடையும்.

 

‘மனிதன் தெய்வமாகலாம்’ படம் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இப்படிப்பட்ட தரமான படங்கள் மக்களிடம் சேர, ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் தங்களது ஆதரவை வழங்க வேண்டும்.

 

தயாரிப்பாளர் விஜயா சதீஷ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். முதல் படமாக இருந்தாலும், மிகுந்த நம்பிக்கையுடன் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளார். குடும்பமாக இணைந்து இந்த படத்தை வழங்குவது பாராட்டத்தக்கது. சதீஷ் அவர்களின் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் பயணம் மிகப்பெரிய வெற்றியை அடைய வேண்டும்.” என்றார்.

 

சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசுகையில், “வழக்கமான ஆடியோ லாஞ்ச் அல்லது பிரஸ் மீட்டிலிருந்து வித்தியாசமாக, “மனிதன் தெய்வமாகலாம்” படத்தின் பிரஸ் மீட் ஒரு குடும்ப விழாவைப் போல அமைந்திருந்தது. நிகழ்வு நடைபெறும் இடத்திலேயே, பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடும்ப நிகழ்ச்சியின் உணர்வோடு கலந்து கொண்டது, இந்த படத்தின் அணியின் ஒருமைப்பாட்டையும் அதன் நேர்மையான அணுகுமுறையையும் வெளிப்படுத்தியது.

 

இந்த படம் ஆரம்பிக்கப்பட்ட தருணத்திலிருந்தே, முழு அணியிலும் ஒரு உற்சாகமும் ஒற்றுமையும் காணப்படுகிறது. குறிப்பாக, படத்தில் காட்டப்படும் கிராமப்புற சூழல் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டு, முழு படமும் அதே இடத்தில் இயற்கையாக படமாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கதை, கதாபாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகள் எதுவும் திணிக்கப்பட்டதாக இல்லாமல், இயல்பான ஓட்டத்தில் நகரும் விதம் படத்தின் மிகப்பெரிய பலமாக உள்ளது.

 

இயக்குநர் செல்வராகவன் அவர்கள், வழக்கம்போல எளிமையான நடிப்பில் கதாநாயகனாக மிகவும் அழகாக காட்சியளித்துள்ளார். சிறிய கதாபாத்திரங்களிலும் தனித்துவமான முத்திரையை பதிக்கும் அவர், இந்த படத்தில் முழுநீள கதாநாயகனாக மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளார்.

 

படத்தை பார்க்கும் அனுபவம் மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருந்தது. இடைவேளையில் தயாரிப்பாளருடன் உரையாடியபோது, அவர் ஒரு கார்ப்பரேட் பின்னணியில் இருந்து வந்தவர் என்பதும் தெரிந்தது. அதே சமயம், படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு சாதாரண தோற்றமாக இல்லாமல், முக்கியமான கதாபாத்திரமாக இருந்தது என்பதும் அவரது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

 

மைம் கோபி அவர்கள், திரையில் வில்லன் கதாபாத்திரத்தில் வலுவாக காட்சியளித்துள்ளார். இயல்பில் மிகவும் எளிமையானவராக இருந்தாலும், திரையில் எதிர்மறை கதாபாத்திரத்தில் அவருடைய நடிப்பு சிறப்பாக உள்ளது. எதிர்காலத்தில் அவரை கதாநாயகனாகவும் பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை இந்த படம் உருவாக்குகிறது. ஒய்.ஜி. மகேந்திரன் போன்ற மூத்த கலைஞர்கள், இளம் அணியினருக்கு ஆதரவாக இணைந்திருப்பது படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது. குஷி ரவி, கன்னடத்தில் வெற்றி பெற்ற நடிகையாக இருந்தாலும், தமிழில் அறிமுகமாகும் இந்த படத்தில் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். கௌசல்யா அவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

மொத்தத்தில், இந்த படம் இயல்பான உணர்வுகளுடன் உருவாகிய ஒரு தரமான படைப்பாக உள்ளது. சண்டைக் காட்சிகள் கூட மிக நிஜத்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அம்சமும் சரியான முறையில் அமைந்துள்ளதால், இது ஒரு முழுமையான திரைப்படமாக உருவாகியுள்ளது. இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் அவர்களுடன் இது இரண்டாவது இணைப்பு என்பதும், முன்பிருந்த அனுபவத்தின் அடிப்படையில் இந்த படம் மேலும் சிறப்பாக உருவாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த ரேகா மேடம் அவர்களுக்கும் பாராட்டுகள். இந்த படம் ஒரு மாபெரும் வெற்றி பெற வேண்டும் என அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என்றார்.

நன்றி. வணக்கம்.

 

நடிகர் ஒய்.ஜி.மஹேந்திரன் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். மேடையில் இருக்கும் கலைஞர்களுக்கு எனது மரியாதையான வணக்கம். இந்த படம் வெற்றி பெறும் என பலரும் கூறியுள்ளனர். எனக்கும் அது நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் அவர்கள் கதை சொல்லும்போது மிகவும் வலுவாக இருந்தது. பொதுவாக, பல கதைகள் கேட்கும்போது வலுவாகத் தோன்றினாலும், அதை திரையில் வெளிப்படுத்தும்போது அந்த தாக்கம் குறைந்து விடும். ஆனால், இந்த படத்தின் டிரெய்லரை பார்த்தபோது, அவர் கூறியதைவிட இன்னும் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அதற்காக அவருக்கு பாராட்டுகள்.

 

இந்த படம் குறிப்பாக சிலருக்கு மிகவும் முக்கியமானதாகும் — தயாரிப்பாளருக்கும், இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள முழு அணியினருக்கும். இயற்கையான கதையை இயல்பாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். மேலும், கதையின் முக்கிய திருப்பங்களும், கிளைமாக்ஸ் காட்சிகளும் மிகவும் தாக்கம் அளிப்பதாக இருக்கும் என நம்புகிறேன். ஒளிப்பதிவாளர் ரவிவர்மா வழங்கிய காட்சிகள் மிக அழகாக அமைந்துள்ளன. இசையமைப்பாளர் பிரியன் அவர்களின் இசை மிகவும் இனிமையானது. இது ஒரு சாதாரண கிராமிய இசை அல்ல; மெலடியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த மெலடி கேட்கும் போது, பழைய இசையின் நுணுக்கத்தை நினைவூட்டும் வகையில் உள்ளது. இந்த தனித்துவத்தை தொடர்ந்து பேண வேண்டும். பாடல் வரிகளும் மிகவும் அழகாகவும், கதைக்கு ஏற்றவாறும் அமைந்துள்ளன.

 

இந்த படத்தில் நான் சில முக்கியமான காட்சிகளில் நடித்துள்ளேன். கதை நகர்விற்கு முக்கிய பங்காற்றும் அந்தக் காட்சிகள் நினைவில் நிற்கும் வகையில் இருக்கும். நான் ஏற்றுள்ள கதாபாத்திரம் ஒரு நேர்மையான அரசியல்வாதி — இன்றைய சூழலில் இது சுவாரஸ்யமான ஒரு அம்சமாகும். மைம் கோபி அவர்கள் மிக திறமையான நடிகர். அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி அளித்தது. டிரெய்லரில் சில வினாடிகளில் கூட அந்த கிராமத்தின் உணர்வை பார்வையாளர்களிடம் கொண்டு சென்றிருப்பது, இந்த படத்தின் மிகப்பெரிய பலமாகும்.

 

ஒரு மனிதன் சமூகத்துக்கு எதிராக நிமிர்ந்து நிற்கும் கதைகள் எப்போதும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும். இந்த படமும் அந்த வகையைச் சேர்ந்ததாக இருப்பதால், கண்டிப்பாக மக்கள் மத்தியில் இணையும். மீண்டும் ஒருமுறை, இந்த படத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். குறிப்பாக, பிரியன் அவர்களுக்கு என் நன்றிகள். என் பேரனுக்கு பாடும் வாய்ப்பு வழங்கியதற்காக. அது எனக்கு மிகுந்த திருப்தி அளிக்கிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு கௌசல்யா அவர்களை மேடையில் காணுவது மகிழ்ச்சி அளித்தது. மொத்தத்தில், இந்த படம் ஒரு குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பது போன்ற உணர்வை அளிக்கிறது. இந்த படக்குழுவில் உள்ள அனைவரும் இந்த வெற்றியை பெற தகுதியானவர்கள். நன்றி. வணக்கம்.” என்றார்.

 

இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் பேசுகையில், “இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். முதலில், நான் சொல்ல வேண்டிய பல விஷயங்களை ஏற்கனவே தயாரிப்பாளர் சதீஷ் சார் அழகாக கூறிவிட்டார். அதனால் ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டு மற்றவர்களை தவறவிட விரும்பவில்லை. இந்த படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

 

இந்தக் கதையை எழுதிக்கொண்டிருந்தபோது, பொதுவாக ஒரு கதையில் ஒரு ஹீரோ, ஒரு வில்லன் இருக்கும். ஆனால் வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு எதிர் திசை இருக்கும். கல் - இரவு, நிழல் - நிஜம், இன்பம் - துன்பம். இந்த எல்லா பரிமாணங்களும் ஒரே கதைக்குள் வந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணத்தில் தான் இந்தக் கதையை உருவாக்கினேன். அதில், நல்லவனாக செல்வராகவன் சார் அவர்களை தேர்ந்தெடுத்தேன். வலுவான எதிர்மறை கதாபாத்திரமாக மைம் கோபி சார் அவர்களை தேர்ந்தெடுத்தேன். இந்த கதையை சொன்னவுடன், “உனக்காக எதுவாக இருந்தாலும் நான் செய்வேன்” என்று உடனே ஒப்புக்கொண்டார். அந்த நம்பிக்கைக்கும் அன்பிற்கும் நான் மிகவும் நன்றி கூறுகிறேன். அந்த கதாபாத்திரம் அவருக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன். செல்வராகவன் சார் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவரை பார்த்து இன்ஸ்பையர் ஆகி இயக்குநராக வர முயற்சி செய்தவர்களில் நானும் ஒருவன். அவரை நேரில் சந்திப்பதே ஒரு கனவாக இருந்தது. ஆனால் இன்று அவருடன் சேர்ந்து வேலை செய்து, ஒரே மேடையில் உட்கார்ந்து பேசுவது, து எனக்கு கனவு நனவான மாதிரி உணர்ச்சி. இந்த படத்தின் மூலம் அவருடைய நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறேன் என்று நம்புகிறேன், சார்.

 

ஒரு சிறிய அனுபவத்தை பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். ஒரு முக்கியமான சீன் நாங்கள் இரவு நேரத்தில் பெரிய செட்டப்பில் படமாக்கிக் கொண்டிருந்தோம். நேரம் கடந்து குளிரும் அதிகமாகி, சார் உடல்நலமும் சற்று பாதிக்கப்பட்டிருந்தது. ஒரு கட்டத்தில் ஷூட்டிங்கை நிறுத்த வேண்டிய நிலை வந்தது. ஆனால் அந்த சீனின் flow கெடக்கூடாது, தயாரிப்பாளருக்கும் பாதிப்பு வரக்கூடாது என்று நினைத்தார். சிறிது தூரம் நடந்து சென்ற பிறகு, திரும்பி வந்து “இந்த சீனை முடித்துவிட்டு போகலாம்” என்று சொன்னார். அப்படியே அந்த சீனை முடித்து கொடுத்தார். அந்த தருணம் எனக்கு மிகவும் பெரிய பாடமாகவும், ஒரு இயக்குநராக இருக்க வேண்டிய அர்ப்பணிப்பு என்ன என்பதை உணர்த்திய அனுபவமாகவும் இருந்தது.

 

இந்த படத்தில் நடித்த குஷி மேம், இந்த கதையை கேட்டவுடன் உடனே ஒப்புக்கொண்டார். இது ஒரு கணவன்-மனைவி உறவின் பின்னணியில் உள்ள அழகான காதல் கதையை பேசுகிறது. திருமணத்திற்கு பிறகும் காதல் இருக்கிறது என்பதை இந்த படம் காட்டும்.

கௌசல்யா மேம், ஒய்.ஜி. மகேந்திரன் சார் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களின் அனுபவத்தால் இந்த படத்திற்கு பெரிய வலு சேர்த்திருக்கிறார்கள். அனைவருக்கும் என் நன்றி. இந்த படத்தை நம்பி வெளியிட முன்வந்த சக்திவேலன் சார் , அவர் எனக்கு தயாரிப்பாளர் மட்டுமல்ல, ஒரு அண்ணன் மாதிரி. இந்த படத்தை பார்த்தவுடன் என்னை நம்பி முன்னேற்றியதற்கு மிக்க நன்றி சார்.

 

இறுதியாக, நான் சினிமாவிற்காக நிறைய நேரம், உழைப்பு, வாழ்க்கையின் பல விஷயங்களை கொடுத்திருக்கிறேன். அதற்கு பதிலாக சினிமா எனக்கு அளித்த மிகப்பெரிய வாய்ப்பாக இந்த படத்தை பார்க்கிறேன். இந்த படம் எனக்கு இன்னும் அதிகம் கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

 

இந்த படத்தை வரும் ஏப்ரல் 10ஆம் தேதி உங்கள் முன் கொண்டு வருகிறோம். நீங்கள் அனைவரும் திரையரங்குகளில் வந்து பார்த்து ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன். மிக விரைவில் இந்த படத்தின் வெற்றி விழாவில், ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். இந்த கதையை நம்பி தயாரித்த விஜயா மேம் மற்றும் சதீஷ் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.” என்றார்.

 

இசையமைப்பாளர் A.K. பிரியன் பேசுகையில், “இந்த மாதிரி ஒரு மேடையில் நிற்க வேண்டும் என்பது எனக்கு நீண்ட நாள் ஆசை. அந்த ஒரு உணர்வை பகிர்ந்து கொள்ளவே இன்று இங்கே நிற்கிறேன். நான் 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில், பள்ளியில் இருந்து அடிக்கடி என் பெற்றோரிடம் ஒரு குறை கூறப்பட்டு வந்தது — “உங்கள் மகன் எப்போதும் இசை, நடனம், கலாச்சார நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு கொண்டே இருக்கிறார். இப்போது போர்டு தேர்வு காலம், இனிமேல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்” என்று. பொதுவாக, பல பெற்றோர் அந்த சூழலில் படிப்பையே முதன்மையாகக் கொள்ளச் சொல்வார்கள். ஆனால், என் பெற்றோர் முற்றிலும் மாறுபட்டவர்கள். “உனக்கு இசை பிடித்திருந்தால், அதில் முழுமையாக ஈடுபடு. நாங்கள் உனக்கு ஆதரவாக இருப்போம்” என்று ஊக்கமளித்தார்கள். அவர்களின் அந்த நம்பிக்கையும் ஆதரவும் தான் இன்று என்னை இந்த மேடையில் நிற்க வைத்துள்ளது. அதற்காக என் பெற்றோருக்கு நான் எப்போதும் நன்றி கூறிக்கொண்டே இருப்பேன்.

 

அடுத்து, என்னுடைய பயணத்தில் முக்கிய பங்காற்றிய என் அணியினருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். லிரிசிஸ்ட் விக்னேஷ் ராமகிருஷ்ணா — என் மிகவும் நெருக்கமான தோழரும், என் இசைப் பயணத்தின் முக்கிய அங்கமாகவும் இருக்கிறார்.

மேலும், என் சிறுவயது நண்பர் லிரிசிஸ்ட் மூவி — நாங்கள் இருவரும் சிறுவயதிலிருந்தே இணைந்து வளர்ந்து, சினிமாவில் ஒன்றாக சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் வந்தோம். அவருக்கும் என் மனமார்ந்த நன்றி. என்னுடன் இணைந்து பணியாற்றிய பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றிகள் — அரவிந்த் கார்னேஷ், எஸ்.பி. மலையண்ணா, பத்மஜா உள்ளிட்ட அனைவரும் இந்த படத்தின் இசைக்கு சிறப்பான பங்களிப்பு செய்துள்ளனர்.

 

இதேபோல், இண்டிபெண்டெண்ட் ஆர்டிஸ்டான ஆடி கிரிஸ் அவர்களையும் குறிப்பிட வேண்டும். பல பாடல்களை உருவாக்கியுள்ள திறமையான இசைக்கலைஞர். இனி வரவிருக்கும் என் படைப்புகளில் அவருடன் இணைந்து இசை இரட்டையராக பணியாற்ற இருக்கிறோம். மேலும், இந்த வாய்ப்பை உருவாக்கியவர் என் அண்ணன் சித்து குமார். இன்றைய போட்டி நிறைந்த சூழலில், ஒருவருக்குக் கிடைத்த வாய்ப்பை மற்றொருவருக்காக விட்டுக் கொடுப்பது அரிதான ஒன்று. அந்த அளவுக்கு பெரிய மனதுடன் இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய அவருக்கு என் மனமார்ந்த நன்றி. அவரிடமிருந்து எதிர்காலத்தில் பெரிய வெற்றிகளை நீங்கள் கண்டிப்பாக காண்பீர்கள்.

 

சிறு வயதிலிருந்தே சில இயக்குநர்கள் மீது ஒரு தனி ஈர்ப்பு இருக்கும். எனக்கு அப்படிப்பட்டவர்களில் ஒருவர் செல்வராகவன் சார். அவரை ஒரு ரோல் மாடலாகக் கொண்டு வளர்ந்த நான், இன்று அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது. மேலும், என் திறமையில் நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் டென்னிஸ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

 

மைக் கோபி பேசுகையில், “அந்த பாராட்டு உண்மையிலேயே மிகவும் அழகானது. எதைப் பாராட்ட வேண்டும் என்ற கட்டாயம் இல்லாவிட்டாலும், மனதார பாராட்டி மற்றவர்களை மகிழ்விப்பது மிகப் பெரிய விஷயம். அந்த மகிழ்ச்சி தான் எங்களுக்கு முக்கியம்.

இன்றைய சூழலில், நேருக்கு நேர் நல்லதை சொல்லும் மனிதர்கள் குறைந்து வருகிறார்கள். பலர் பின்னால் பேசுவதில் பழகியிருக்கிறோம். ஆனால், முகத்துக்கு நேராக உண்மையான பாராட்டை வழங்குவது ஒரு அரிய குணம். அப்படிப்பட்ட சிறந்த மனிதர்களுடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு ஒரு பெருமையும், ஒரு ஆசீர்வாதமும் ஆகும். இந்த நேரம் அனைவருக்கும் பசியான நேரம் என்பதால், சுருக்கமாக நன்றி சொல்ல விரும்புகிறேன். “நன்றி” என்பது மிகவும் அழகான வார்த்தை. அதேபோல், பாராட்டுவது மிகவும் அவசியமான ஒன்று. பாராட்டுகள் இல்லாமல் இருந்தால், நாம் செய்கிற முயற்சிகளுக்கு அர்த்தமே இருக்காது. ஒரு கைதட்டல் கூட ஒரு கலைஞனுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை தரும். அது மனதை இலகுவாக்கும், மேலும் சிறப்பாக செயல்படத் தூண்டும்.

 

நாம் “நல்லா பண்ணிருக்கீங்க”, “சூப்பரா இருக்கிறது” என்று சொல்வது, அந்த வார்த்தையை உண்மையாக்க கலைஞர்களை மேலும் முயற்சி செய்ய வைக்கும். அந்த முயற்சிக்கான மிகப்பெரிய ஊக்கம் பாராட்டுதான். அதனால், இந்த அன்பும் ஆதரவும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. தயாரிப்பாளர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தனஞ்செயன் சார் அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். அவரின் ஊக்கமும் நம்பிக்கையும் எனக்கு ஒரு முக்கியமான தருணத்தில் பெரிய ஆதரவாக இருந்தது. அதற்காக அவருக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

அதேபோல், கதிரேசன் சார், எப்போதும் சிரிப்புடன், அமைதியாக, எதையும் சமாளிக்கும் அவருடைய மனநிலை மிகவும் பாராட்டத்தக்கது. அந்த பொறுமையும் அணுகுமுறையும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இசையமைப்பாளர் ஏ.கே. பிரியன் மிகவும் நேர்மையான, திறமையான இளைஞர். அவரின் பேச்சிலேயே அவருடைய உண்மைத் தன்மை தெரிகிறது. நல்ல அணியுடன் இணைந்து பணியாற்றுகிறார். அந்த அர்ப்பணிப்பும் உண்மையும் அவரை மிகப் பெரிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை.

 

ஒளிப்பதிவாளர் ரவிவர்மா, அவருடைய காட்சிகள் எப்போதும் தனித்துவம் வாய்ந்தவை. மிகவும் எளிமையாக அணுகினாலும், காட்சிகளை அழகாக வடிவமைக்கும் திறமை அவருக்கு உள்ளது. அதற்காக அவருக்கு பாராட்டுகள். ஸ்டண்ட் மாஸ்டர், எடிட்டர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள். ஒவ்வொருவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். குறிப்பாக, தொழில்நுட்ப அணியினர் எப்போதும் தீவிரமாகவும், சினிமாவையே மையமாகக் கொண்டு செயல்படுவது மிகவும் பாராட்டத்தக்கது.

 

இந்த படத்தை வெளியிடும் சக்தி சார் அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். ஒரு நல்ல படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வெளியீட்டாளரின் பங்கு மிக முக்கியமானது. அவர் இணைந்துள்ளதால், இந்த படம் தரமான படைப்பு என்பதில் நம்பிக்கை அதிகரிக்கிறது. தயாரிப்பாளர் விஜயா சதீஷ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். மிகவும் நம்பிக்கையுடன் பேசினார். குடும்பமாக இணைந்து இந்த படத்தை வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது.

 

இயக்குநர் டென்னிஸ், அவருடைய முயற்சி மற்றும் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. மேலும், செல்வராகவன் சார் மீது எனக்கு உள்ள மரியாதையும், நேசமும் மிகவும் அதிகம். அவர் ஒரு சிறந்த கலைஞர் மட்டுமல்ல, மிகவும் இயல்பான மனிதரும் ஆவார். உண்மையை நேராகச் சொல்லும் குணம் அவருடைய தனிச்சிறப்பு. அவருடன் இணைந்து பணியாற்றுவது ஒரு பெரும் அனுபவமாகும்.

 

குஷி, கௌசல்யா உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக, குஷி தமிழில் மிகவும் அழகாக பேசுகிறார், அவருக்கு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது. கௌசல்யா மேடம் அவர்களின் இனிமையான நடிப்பும் இந்த படத்திற்கு கூடுதல் பலமாக உள்ளது. இறுதியாக, இந்த படத்தில் நான் நல்ல முறையில் தோன்றியிருந்தால், அதற்கான முழு புகழும் இயக்குநருக்கே சேரும். ஏதேனும் குறை இருந்தால், அது எனது பொறுப்பு. மொத்தத்தில், இந்த உலகில் அனைத்தும் நம் பார்வைக்கேற்ப அழகாக தெரியும். அந்த அழகான பார்வையை கொடுத்த அனைவருக்கும் என் நன்றிகள். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தயவுசெய்து அனைவரும் திரையரங்குகளில் சென்று இந்த படத்தை பார்த்து ஆதரிக்கவும். நன்றி.” என்றார்.

Related News

11008

தென்னிந்தியாவின் முதல் பான் இந்தியா இசை ஆல்பம் ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla)!
Thursday April-02 2026

தென்னிந்தியாவில் சுயாதீன பாடல்களுக்கான வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்களை கவரும் துள்ளல் மற்றும் காதல் பாடலாக உருவாகியுள்ளது ‘ஹார்ட்குல்ல’ (Heartkulla)...

’யூத்’ திரைப்பட நன்றி அறிவிப்பு விழா!
Wednesday April-01 2026

பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி...

’லீடர்’ படத்தை பாராட்டிய தனுஷ், வெற்றிமாறன்! - உற்சாகத்தில் சரவணன்
Wednesday April-01 2026

லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்...

Recent Gallery