Latest News :

“மிஸ்டர் எக்ஸ் வே, துரந்தர் வேறு” - இயக்குநர் மனு ஆனந்த்
Friday April-10 2026

’சர்தார்’, ’லப்பர் பந்து’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லஷ்மன்குமார், மேவரிக் மூவிஸ் வினீத் ஜெயின் உடன் இணைந்து  தயாரித்துள்ள படம்   ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr X). ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கௌதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன், அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன், சஞ்சனா சிங், காளி வெங்கட் மற்றும் ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

 

எப்ஃஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்.

 

ஏப்ரல் 17ஆம் தேதி ‘மிஸ்டர் எக்ஸ்’ வெளியாக இருக்கும் நிலையில் இதன் டிரைலர் வெளியீட்டு நிகழ்வு வடபழனி விஜயா ஃபோரம் மாலில் உள்ள பேலசோ திரையரங்கில் நேற்று நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் எஸ்.லஷ்மன்குமார் பேசுகையில், “இந்தப் படத்திற்காக உழைத்த அத்தனை பேருக்கும் நன்றி. இதில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடத்திருக்கிறார்களா என்கிற பிரமிப்பு ஏற்பட்டது. அதேபோல முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களது பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். படத்தைப் பார்த்ததும் ரொம்பவே சந்தோஷமாக இருந்தது. முழுமையான திருப்தி ஏற்பட்டது. இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் இதை எங்களால் எடுக்க முடிந்ததற்காக எங்களுடன் கைகோர்த்த மேவரிக் மூவிஸ்க்கு நன்றி. ஜியோ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட எங்களது பார்ட்னர்களுக்கும் நன்றி” என்றார்.

 

ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் பேசுகையில், “கொடுத்த காசுக்கு மேல் நடிக்கிறார்கள் என்று சொல்வது போல, இந்த படத்தில் பணியாற்றியவர்கள் கொடுத்த காசுக்கு மேல் கஷ்டப்பட்டு இருக்கிறார்கள் என்று சொல்லலாம். பார்ப்பதற்கு ஹாலிவுட் படம் போல ஸ்டைலிஷாக இருந்தாலும் இங்கே எல்லோருமே ஒரு அடிமட்ட தொழிலாளி போலத்தான் உழைத்தோம். அஜர்பைஜான் உட்பட எங்களுடைய படப்பிடிப்பு நடைபெற்ற இடங்கள் முழுவதுமே பஞ்சபூதங்கள் ஆக்ரோசமாக வந்தன. நானும் இயக்குநர் மனுவும் ரூம் போட்டு எல்லாம் பெரிதாக விவாதிக்க மாட்டோம். எங்களுக்குள் ஒரே அலைவரிசை இருப்பதால் பணியாற்றுவது எளிதாக இருக்கும்.. சண்டைக் காட்சிகளை படமாக்கும்போது பல காட்சிகள் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்டது. மஞ்சு வாரியார் ரொம்பவே அசால்டாக சண்டைக்  காட்சிகளில் நடித்தார்” என்றார்.

 

இசையமைப்பாளர் திபு நிணன் தாமஸ் பேசுகையில், “ஒரு நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு ‘மிஸ்டர் எக்ஸ்’ படம் வெளியாக இருக்கிறது. இதற்கு பின்னணி இசை அமைப்பது ரொம்ப எளிதாக இருந்தது. என்னுடைய பயணத்தில் இந்தப் படத்திற்காக பின்னணி இசையில் அடுத்த கட்டமாக ஒன்றை முயற்சி செய்து இருக்கிறேன்” என்றார்.

 

படத்தொகுப்பாளர் பிரசன்னா பேசுகையில், “இந்தியாவில் வெவ்வேறு காலகட்டத்தில் நடந்த உண்மையான சம்பவங்களை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் இந்தப்படத்தில் சொல்லி இருக்கிறோம்” என்றார்.

 

நடிகை ரைசா வில்சன் பேசுகையில், “‘மிஸ்டர் எக்ஸ்’ படத்திற்காக என்னை தேர்வு செய்வதற்கு பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் மனு ஆனந்த் ஆகியோருக்கு நன்றியைத்  தெரிவித்துக் கொள்கிறேன். நான் படம் பார்த்துவிட்டேன். ரொம்பவே நன்றாக வந்திருக்கிறது. அரசியல் ரீதியாக சரியான படம். சீரியசான டாப்பிக்காகவும் அறிவார்ந்ததாகவும் இந்தப் படம் இருக்கிறது. இது போன்ற படம் நமக்குத்  தேவையான ஒன்று. இதுபோன்ற கதைகளை இன்னும் அதிகமாக கொடுக்க வேண்டும்” என்றார்.

 

நடிகை அதுல்யா ரவி பேசுகையில், “எப்போதுமே நாம் ஒரே மாதிரி படங்கள் பண்ணும்போது இவர்களுக்கு இதுதான் வரும் என்று முத்திரை குத்தி விடுவார்கள். அதை உடைக்க வேண்டும் என்றால் நம் மீது ஒரு இயக்குநர் நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த வகையில் என்னை நம்பியதற்காக இயக்குநர் மனு ஆனந்திற்கு நன்றி. வித்தியாசமான ஒரு கதாபாத்திரம் கொடுத்ததுடன் இவ்வளவு பெரிய நட்சத்திரக் கூட்டத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பும் கொடுத்தார். இதில் நடித்த எல்லோருடனும் எனக்கு பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அனுபவங்களை கற்பதற்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தது. திபு இசையில் இந்தப் படத்தில் எனக்கு கிடைத்த பாடல் இப்போது வரை எனக்கு ஒரு பெரிய அங்கீகாரமாக இருக்கிறது. மிகப்பெரிய தியேட்டர் அனுபவம் கொடுக்கும் படமாக இது இருக்கும்” என்றார்.

 

நடிகை அனகா பேசுகையில், “இந்தப் படத்திற்காக நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்து இருந்ததால் இந்த தருணம் எங்களுக்கு ரொம்பவே முக்கியமானது. இதில் மிகச்சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக்  கலைஞர்களுடன் பணியாற்றியதில் எனக்கு உண்மையிலேயே மிகப்பெரிய அனுபவம் கிடைத்திருக்கிறது. மஞ்சு வாரியருடன் இணைந்து நடித்தது கனவு நனவான தருணமாக மாறியது” என்றார்.

 

நடிகர் சரத்குமார் பேசுகையில், “‘மிஸ்டர் எக்ஸ்’ படம் இப்போது அவசியமான ஒன்று. உண்மைச்  சம்பவங்களை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இதன் கதையை மனு ஆனந்த் என்னிடம் சொன்னபோது என்னை நடிக்க வைப்பதற்காக ஏதோ ரீல் விடுகிறார் என்று நினைத்தேன். ஆனால் அவர் இதற்கான ஆராய்ச்சி பேப்பர்களை பக்காவாக வைத்திருந்தார். அதில் இரண்டு மூன்று பக்கங்களை பார்த்ததுமே அவர் மிகப்பெரிய உழைப்பைக்  கொடுத்திருக்கிறார் என்று தெரிந்தது.  உடனே இதில் நடிக்க ஒப்புக் கொண்டேன். மிஸ்டர் எக்ஸ் என்னுடைய 172 வது படம். இத்தனை வருடங்களில் தாத்தா வேடம் உட்பட பல கதாபாத்திரங்களில் நடித்தாலும் இதில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். எனக்கு வெள்ளை முடி, வெள்ளைத் தாடியைக் கொடுத்து இயக்குநர் தன் ஆசையைத்  தீர்த்துக் கொண்டார். 2023ல் இந்தப் படத்தைத்  தொடங்கினாலும் இதை மிகுந்த சிரத்தையுடன் பொறுமையாக கொண்டு வந்ததற்கு மனு ஆனந்த்தைப்  பாராட்ட வேண்டும். தங்களது கதாபாத்திரங்களுக்காக ஆர்யா, கௌதம் ராம் கார்த்திக் இருவருமே மிகுந்த அளவு மெனக்கெடலை தந்திருக்கிறார்கள். கௌதம் இந்த படத்தில் வித்தியாசமாகத்  தெரிவார். படத்தில் எங்கள் அனைவரையும் இயக்கியிருப்பதால் மஞ்சு வாரியரை மேம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். போரில் பங்கேற்கும் வீரர்களுக்கு பரம்வீர் சக்ரா உள்ளிட்ட உரிய கௌரவங்கள் கிடைக்கின்றன. நமது நாட்டைப்  பாதுகாப்பதற்காக வெளிநாடுகளில் தங்கியிருந்து உளவாளிகளாக வேலை செய்வது யாருக்கும் வெளியே தெரியாது. அதை வெளியே சொல்லவும் முடியாது. தன் மனைவிக்குக் கூட நான் யார் என்று உண்மையைச் சொல்ல முடியாது.  அப்படிப்பட்ட முகம் வெளியில் தெரியாத ஹீரோக்களை நாம் பாராட்ட வேண்டும் என்றால் இது போன்ற படங்களை எடுத்து தான் பாராட்ட முடியும்.. பிரம்மாண்ட பட்ஜெட்டில் இந்தப் படத்தை எடுப்பதற்கு இயக்குநர் மனு ஆனந்திற்கு உதவியாக இருந்த தயாரிப்பாளர்களுக்கு என்னுடைய பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். அதை பட்டை தீட்டுவதற்காக  இந்த கால அவகாசம் தேவைப்பட்டது.. இந்த சமயத்தில் தான் துரந்தர் வெளியாகி சரித்திரம் படைத்தது. இதுபோன்ற படங்கள் வரவேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த படம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இந்த படங்களை திரையரங்குகளில் பார்த்து ரசித்தால் நல்ல அனுபவம் கிடைக்கும். படம் பார்த்து எனக்கே ஜேம்ஸ்பாண்ட் படம் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது என்றால் சாதாரண ரசிகனுக்கு எந்த அளவிற்கு அனுபவமாக இருக்கும் எனச் சொல்லத் தேவை இல்லை. படம் வெளியாகி 50 நாட்களுக்குப் பிறகு ஓடிடி தளத்தில் வெளியானால் ரசிகர்கள் அதிகமாக திரையரங்குக்கு செல்வார்கள்” என்றார்.

 

நடிகை மஞ்சு வாரியர் பேசுகையில், “இந்த ஒரு தருணத்திற்காக தான் மாதக்கணக்கில் நாங்கள் அனைவரும் காத்துக்  கொண்டிருக்கிறோம். இந்தப் படத்தின் கதையை ஓகே சொல்வதற்கு அதிக காலம் எடுத்துக் கொண்டது நான் மட்டும்தான் என பின்னாளில் ஆர்யா சொல்லி எனக்கு தெரிய வந்தது. மனு இந்தக்  கதையை சொன்னதும் அதைப்பற்றி இன்னும் நிறைய புரிந்து கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இருந்தது. நிறைய சந்தேகங்கள் இருந்தது. இது நம் தினசரி வாழ்க்கையில் பார்க்கும் ஒரு வாழ்க்கையே இல்லை. அதனால் அது குறித்து சில  சந்தேகங்களையும் இயக்குநர் மனுவிடம் கேட்டிருக்கிறேன். அதற்கெல்லாம் பொறுமையாக எனக்கு பதில் சொன்னார்.  எனக்கே ஒரு நம்பிக்கை வந்ததால் இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்தேன். இதற்கு முன்பாக நிறைய ஸ்பை படங்கள் பார்த்திருப்போம். அதில் பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக பல கதாபாத்திரங்கள் இடம் பெற்று இருக்கும். அந்த வகையில் மிஸ்டர் எக்ஸ் படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் எனக்கு கிடைத்ததற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். இந்தப் படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒவ்வொரு பின் கதை, ஒவ்வொரு கதாபாத்திர வடிவமைப்பு என எல்லோருக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நான் செய்திராத அளவிற்கு இந்த படத்தில் கொஞ்சம் அதிகப்படியான ஆக்ஷன் காட்சிகளிலும் நடித்திருக்கிறேன். அதனால் ஏற்பட்ட சின்ன சின்ன காயங்கள் இப்போதும் கூட இருக்கின்றன. ஆனால் அதை எல்லாம் எப்போதும் ஒரு ஞாபகார்த்தமாக வைத்துக் கொள்வேன்” என்றார்.

 

நடிகர் கௌதம் ராம் கார்த்திக் பேசுகையில், “என் மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பைக்  கொடுத்ததற்காக பிரின்ஸ் பிக்சர்ஸுக்கு நன்றி சொல்கிறேன். இரண்டு ஹீரோ சப்ஜெக்டில் நடிக்கும் போது எப்போதுமே எல்லோருக்கும் ஒரு சின்ன தயக்கம் இருக்கும். ஆனால் ஆர்யா தன்னிடம் உள்ள தன்னம்பிக்கையால் ரொம்பவே தைரியமாக இருந்தார். அதனாலேயே அவருடன் நான் நடிக்கும் போது என்னை, நீ பண்ணு மச்சான் என்று உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். அது மற்றவர்கள் நிச்சயமாக கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம். ஆர்யா எனக்கு செய்தது போலவே நானும் இனி எனது படங்களில் உடன் நடிப்பவர்களுக்கு அதைச் செய்வேன். மஞ்சு வாரியருக்கும் எனக்கும் இந்த படத்தில் இணைந்து நடிப்பது போன்று காட்சிகள் இல்லை என்பது தான் எனக்கு மிகப்பெரிய வருத்தம். கிட்டத்தட்ட 70% இது ஆக்சன் படம் என்பதால் இதில் நடித்துள்ள கதாநாயகிகள் அனைவருமே ஆக்ஷனில் இறங்கி அடித்துள்ளார்கள். சரத்குமார் சார் எனக்கு ஒரு அப்பா போலத்தான். அவருடன் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவம். ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா என் உடல்வாகு எந்த அளவுக்கு ஒத்துழைக்கும் என்பதைக் கணித்து அதற்கேற்ற வகையில் மிகச் சிறப்பான சண்டைக் காட்சிகளை எனக்கு வடிவமைத்துக்  கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தின் மொத்த ஆன்மாவையும் இசையமைப்பாளர் திபு அழகாக செதுக்கி இருக்கிறார். என்னைப் போன்றவர்கள் இந்த கதாபாத்திரத்தை பண்ணுவார்களா என வேறு யாராவது இருந்தாலும் சந்தேகம் பட்டிருப்பார்கள். ஆனால் இயக்குநர மனு ஆனந்த் என்னை நம்பி இந்த கதாபாத்திரத்தை கொடுத்ததற்காக அவருக்கு நன்றி. எனக்கே என் மீது கொஞ்சம் சந்தேகம் இருந்தபோது கூட அவர் என் மீது முழு நம்பிக்கை வைத்து உற்சாகப்படுத்தினார்” என்றார்.

 

இயக்குநர் மனு ஆனந்த் பேசுகையில், “‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தை பார்த்த பலரும் என்னிடம் நீங்கள் பான் இந்தியா படம் தான் எடுப்பீர்களா என்று கேட்டார்கள். ஆனால் இது பான் இந்தியா படம் அல்ல. தமிழ்  படம். அந்த ஒரு நோக்கத்தோடு தான் இந்தப் படத்தை எடுத்தேன்.. போலீஸ் அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் யார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் உளவாளிகளை யாருக்குமே தெரியாது. இந்தப் படம் உருவாவதற்கு காரணம் இரண்டு பேர். அவர்களைப் பற்றி எங்கேயும் சொன்னது இல்லை. இப்போது இங்கே கூட என்னால் சொல்ல முடியாது. அதுதான் உண்மை. அதில் ஒருவர் இப்போது உயிருடன் இல்லை. நன்றிக் கார்டில் கூட அவர்களின் பெயரை என்னால் இடம்பெறச் செய்ய முடியாது. அப்படிப்பட்ட சூழலில் உருவாக்கிய கதை தான் இது.

 

இந்தியாவில் வெவ்வேறு காலகட்டத்தில் நடைபெற்ற ஏழு உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி உள்ளது. ஆனால் சமீபத்திய பல  பேட்டிகளில் இது துரந்தர் படத்தைப் போல இருக்கிறது என்று ஒரு பேச்சு உருவாகி உள்ளது. துரந்தரையும் இதையும் ஒப்பிட வேண்டாம். இது துரந்தர் அல்ல. இரண்டு படங்களிலுமே உண்மை சம்பவங்களை எடுத்து படமாக்கி இருக்கிறோம் என்பதைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் இல்லை. ஆர்யாவிடம் இந்தக் கதையை சொல்லும்போது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் சொன்னேன். ஆனால் கதை கேட்டு அரை மணி நேரத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டார். இப்படி ஒரு படத்தை பண்ண உங்களால் முடியுமா என்று அவரிடம் கேட்டபோது, அது தயாரிப்பாளரின் கவலை என்று கூலாக சொன்னார். கௌதம் கார்த்திக் என் மீது நம்பிக்கை வைத்து அதில் நடிக்க ஒப்புக்கொண்டார். 

 

இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான வெங்கடேஷ் ரொம்பவே ஆர்வமுடன் தனது பங்களிப்பைக் கொடுத்தார்.. இதில் பல நட்சத்திரங்களைத் தேர்வு செய்வதற்கு அவர்தான் உறுதுணையாக இருந்தார். அப்படி அவர் மூலமாக வந்தவர்தான் நடிகை அனகா. என்னிடம் கதை பற்றி அதிகமாக கேள்வி கேட்டு சாகடித்தவர் என்றால் அது அனகா தான். எல்லா காட்சிகளிலும் ஏதாவது ஒரு சந்தேகம் கேட்டுக் கொண்டே இருப்பார். அதுல்யா ரவியை இந்த படத்தில் நடிக்க வைக்கும் எண்ணம் எனக்கு இருந்தது இல்லை. ஆனால் தயாரிப்பாளர் வெங்கடேஷ் மூலமாக அவரிடம் கதை சொல்ல சென்றபோது அவர் அந்த அரை மணி நேரத்தில் இந்த கதை குறித்து காட்டிய ஆர்வம், என்னிடம் எழுப்பிய கேள்விகள் எல்லாமே அவர் இந்த கதாபாத்திரத்திற்கு சரியானவர் தான் என எனக்கு உணர்த்தியது. இந்தப் படத்திற்கு நாங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டு தேர்வு செய்தது என்றால் ரைசா வில்சனை தான். இதற்காக பல பேரை பார்த்திருந்தாலும் கடைசியாக ரைசா தான் உள்ளே வந்தார். அவருடன் ஏற்கனவே பணியாற்றிய அனுபவமும் எனக்கு இருந்தது, அவருக்கு கதையை சொல்வதற்காக நான் அழைத்தபோது அதெல்லாம் வேண்டாம் என்று என் மீது இருந்த நம்பிக்கையில் நடிக்க ஒப்புக்கொண்டார், 

 

இவர்கள் அனைவரையும் விட மஞ்சு வாரியரை இந்தப்  படத்தில் கொண்டு வருவதற்குத் தான் எனக்கு கொஞ்சம் அதிக காலம் பிடித்தது. அவர் நடிப்பாரா என்கிற சந்தேகம் இருந்தாலும் ஒருமுறையாவது அவரைப் பார்த்து பேசி விட்டு வரலாம் என்று தான் சென்றேன். கதையைக் கேட்டதும் முழு ஸ்கிரிப்ட்டையும் கொடுங்கள் என்றார். அதற்கு மூன்று மாத காலம் ஆகும் என்று சொன்னேன். பரவாயில்லை என்று சொன்னார். மீண்டும் அவரிடம் சென்று முழு ஸ்கிரிப்ட்டையும் படித்துக் காட்டினேன், அதுவரை அமர்ந்திருந்தவர் பின்னர் நடந்து கொண்டே கதையை கேட்க ஆரம்பித்தார், ஒருவேளை அவருக்கு கதையைக் கேட்டு தூக்கம் வருகிறதோ என்று கூட நான் நினைத்தேன், அதற்கேற்ற மாதிரி அவரும் முழு ஸ்கிரிப்ட்டையும் படித்துவிட்டு நான் சொல்கிறேன் என்றார், எனது குழுவினரிடம் கூட அவர் வருவாரா என்பது சந்தேகம்தான் எனக் கூறினேன். ஆனால் ஆச்சரியமாக ஒரு வாரத்திலேயே அவர் தான் நடிப்பதாக சம்மதித்தார்.

 

சரத்குமார் சார் எப்போதுமே யூத் தான் இப்படிப்பட்ட ஒருவரை எப்படி வேறு ஒரு லுக்கில் காட்டலாம் என்பது ஒரு சவால் தான். ராஜஸ்தானில் பாலைவனத்தில் நல்ல கொளுத்தும் வெயிலில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தினோம். ரஷ்ய சண்டைக் கலைஞர்களை வைத்து சண்டைக் காட்சிகளைப்  படமாக்கினோம். சரத் சார் ரொம்பவே கூலாக இருந்தார். அந்த சண்டைக் கலைஞர்கள் தான் ரொம்பவே அந்த சூழலுக்கு சிரமப்பட்டார்கள். அதனால் அவருடைய வயது என்பது ஒரு பொருட்டே அல்ல.

 

பிரசன்னா ரொம்பவே விறுவிறுப்பாக இந்த படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார். பல்வேறு காரணங்களுக்காக பலர் இந்த படத்தை பார்த்தார்கள். அதில் பலரும் என்னிடம் சொன்னது திபுவின் இசை பிரம்மாதம் என்பதுதான். படத்தின் கடைசி முக்கால் மணி நேரத்தை நீங்கள் ரொம்பவே ரசித்து அனுபவிப்பீர்கள் என்றால் அதற்கு திபுவின் பின்னணி இசை தான் முக்கிய காரணமாக இருக்கும். ஒரு பயங்கரமான படம், இதுவரை நீங்கள் பார்த்திராத படம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். உண்மைச்  சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ஒரு படம். அவ்வளவுதான். துரந்தரை மிஞ்சிவிடும் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். படம் பார்ப்பவர்களுக்கு இது ஒரு பைசா வசூல் கேரண்டி என்று உறுதியாக சொல்வேன்” என்றார்.

 

நாயகன் ஆர்யா பேசுகையில், “கதை கேட்கும்போது மிகப்பெரிய பிரம்மாண்டமாக இது இருக்கும் எனத்  தோன்றியது. நம்மை நம்பி இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் எந்த தயாரிப்பாளராவது படம் எடுப்பாரா என சந்தேகத்துடன் தான் இந்தப் படத்துக்கு நான் ஓகே சொன்னேன். ஆனால் எங்களை நம்பி, படத்தின் கதையை நம்பி எங்களுக்கு பக்கபலமாக இருந்து ஒரு மிகப்பெரிய தன்னம்பிக்கையை கொடுத்தது தயாரிப்பாளர் லஷ்மன் தான், இயக்குநர் மனு ஒரு கடின உழைப்பாளி. அவரை மிஸ்டர் பர்ஃபெக்ட் என்று சொல்லலாம். இதன் கதையில் அவர் கடினமாக உழைத்து உள்ளார். இந்தப் படத்துக்காக மூன்று வருடங்களாக நாங்கள் ஒன்றாக பயணித்திருக்கின்றோம்.. ஆனால் ஒரு நாள் கூட அவர் முகம் சுளித்து கோபப்பட்டு நான் பார்த்ததில்லை. படத்தின் ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் அனைவரிடமும் சகஜமாகப் பழகக் கூடியவர். நாங்கள் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தச்  சென்றபோது கூட அந்த நாட்டு மக்களுடன் சென்று சகஜமாக அவர் பழகுவார்.. இசையமைப்பாளர் திபு நிணன் தாமஸ்.. இந்த படத்தில் அவருக்கு ஸ்கோர் செய்யும் வாய்ப்பு நிறையவே உள்ளது. படத்தின் முதல் காப்பி பார்த்தபோது நான் பிரமித்துப் போனேன். படத்தின் பின்னணி இசை சிறப்பாக வந்துள்ளது. எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. எனக்கு தன்னம்பிக்கை கொடுப்பதே எடிட்டர் பிரசன்னா தான். படத்தின் முதல் காப்பி பார்ப்பது அவர்தான். நான் இயக்குநரிடம் கேட்பேன் பிரசன்னா என்ன சொன்னார் ஓகே சொல்லிட்டாரா அந்த மாதிரி ஒரு சிறப்பான எடிட்டர் நமக்குத் தேவை. இந்தப் படத்துக்கு மிகப்பெரிய பலம் புரொடக்ஷன் டிசைனர் ராஜீவன் சார் தான். ஸ்டண்ட் சில்வா மாஸ்டர் இந்தப்  படத்துக்கு ஸ்டண்ட் மாஸ்டராக மட்டுமில்லாமல் கோ டைரக்டர் ஆகவும் வேலை செய்துள்ளார். 

 

எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் கௌதம் ராம் கார்த்திக் கதாபாத்திரத்தில் தான் நான் நடித்திருப்பேன். கௌதம் நடித்துள்ள அந்த கதாபாத்திரம் மிக முக்கியமான கதாபாத்திரம். நீங்கள் படம் பார்த்து பிறகு கௌதமை தான் நிச்சயம் அனைவரும் புகழ்வார்கள். புதுமையாகவும் ரசிக்கும்படியாகவும் நடித்துள்ளார் கௌதம். சரத்குமார் சாருடன் எனக்கு முதல் காட்சியே ராஜஸ்தானில் தான் படமாக்கப்பட்டது. ஏப்ரல் மே மாத வெயிலிலும் அதை பெரிது படுத்தாது ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்தார். இந்தப் படத்துக்காக கடினமான உடற்பயிற்சி எல்லாம் செய்து சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து கிளைமாக்ஸ் காட்சிகளில் நடித்துள்ளார்.

 

மஞ்சு வாரியரின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரை சூட்டிங் ஸ்பாட்டில் பார்த்தபோது நான் ரொம்ப சந்தோஷம் அடைந்து விட்டேன். அவரிடம் சென்று நாம் ஒரே ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளலாமா என்று கூட கேட்டேன். மஞ்சு வாரியரின் நடிப்பு நம் அனைவருக்கும் தெரியும் அவ்வளவு அழகாக சிறப்பாக நடித்துள்ளார். அனாகா ஆயிரம் கேள்வி கேட்பார். ரொமான்டிக் பாடலில் சிரியுங்கள் என்று சொன்னால் என் கேரக்டர் சிரிக்காதே சீரியஸாகத் தானே இருக்கும் என்று சொல்வார். நம்மையே இவ்வளவு கேள்வி கேட்கிறார் நாம் சரியாகத்தான் பண்ணுகிறோமா என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு மிகுந்த அர்ப்பணிப்போடு நடித்தார். அதுல்யா மற்றும் ரைஸா இருவருக்குள்ளேயும் படத்திற்குள் ஒரு போட்டி இருக்கிறது. மிஸ்டர் எக்ஸ் திரையரங்குக்கு வருபவர்களுக்கு ஒரு புது அனுபவத்தை தரும்.” என்றார்.

Related News

11015

’லிக் - லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட முன் வெளியீட்டு விழா!
Wednesday April-08 2026

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள ‘லிக்’ (Lik - Love Insurance Kombany) திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், நேற்று மாலை படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை, ஆவடியில் உள்ள வேல்டெக் கல்லூரியில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...

’காட்டான்’ வெற்றியை எளிமையாக கொண்டாடிய விஜய் சேதுபதி!
Wednesday April-08 2026

விஜய்  சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட் ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில், விஜய் சேதுபதி நடிப்பில்,  பி...

சில ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிடுகிறார்கள் - ஜாபர் சாதிக் விளக்கம்
Wednesday April-08 2026

பிரபல தொழிலதிபர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர், முன்னாள் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளராக இருந்தவருமான ஜாபர் சாதிக்கின், சென்னை வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் ஏப்ரல் 6 ஆம் தேதி, வருமான வரித்துறை (IT), என் சி பி மற்றும் தேர்தல் பறக்கும் படையினரால் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது...

Recent Gallery