Latest News :

பெண்கள் பிரச்சனையை சொன்னால் இதுதான் நிலையா! - கலங்கும் இயக்குநர்
Monday November-13 2017

எக்ஸட்ரா எண்டர்டெய்ண்மெண்ட் சார்பாக V மதியழகன், R. ரம்யா  தயாரித்துள்ள படம் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன”. 

 

இயக்குநர் மோகன்ராஜாவின் உதவியாளர் ராகேஷ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ‘திலகர்’ துருவா ஹீரோவாக நடிக்க, ஹீரோயின்களாக ஐஸ்வர்யா தத்தாவும், அஞ்சனாவும் நடிக்கின்றனர்.

 

இவர்களுடன் J.D.சக்ரவர்த்தி, சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, நாகிநேடு, மனோபாலா, அருள்தாஸ், ‘மைம்’கோபி, ‘சதுரங்க வேட்டை’ புகழ் வளவன், ’நான் மகான் அல்ல’ ராம்ஸ் மற்றும் நிறைய அறிமுகங்களும் நடிக்கின்றனர்.

 

இந்த தலைப்பிற்கும், கதைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. காரணம் இன்று சமூகத்தில் நடக்கும் சிறுசிறு குற்றங்களை மையப்படுத்தி கதை நகர்கிறது. 

 

இன்று பெண்கள் தாங்கள் தங்கள் சுதந்திரத்தோடு இயங்கும்போது,  பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.  சமூகத்தில் ஒரு ஆண் எதிர்கொள்ளக்கூடிய சுதந்திரத்தின் எல்லை  பெண்களுக்கு உண்டா என்று கேட்டால்... இல்லை. இன்னும் பாரதியின் கனவு முழுமை பெறவில்லை. இன்னும் பயத்தோடவே தான் பெண்கள் தங்கள் வெளியில் நடமாடும் சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள் என்பேன் என்கிறார் இயக்குநர் ராகேஷ்.

 

மேலும் அவர் கூறுகையில், “காதல், காமம், கற்பழிப்பு, கந்துவட்டி, உரிமை மீறல், வரதட்சணை என பெண்களைச் சுற்றி நிற்கும் சமூகத்தின் வேலிகள் அவ்வளவு சாத்தியமாக்கிவிடவில்லை அவர்களின் சுதந்திரத்தை.  

 

வேலையிடங்களில் நேர்கிற பாலியல் ரீதியான தொந்தரவுகள், அவமானத்தைக் கொண்டுவரும் வீடியோக்கள் என அவர்களின் சுதந்திரமும் உரிமையும் ஒருவித பயத்தோடுதான் அனுபவிக்க முடிகிறது. 

 

அப்படி அவர்கள் வெளியுலகில் சமூகத்தில் சாதாரணமாக இயங்கும்போது நேரக்கூடிய ஒரு மிக மிக முக்கியமான பிரச்சனையை மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன படம் பேசுகிறது. 

 

பெண்களின் அழகு என்பது அவர்களின் நடவடிக்கைகளிலும், ஆளுமையிலும் தான் இருக்கிறது. தவிர,  அவர்கள் அணியும் ஆபரணங்களில் அல்ல.  அந்த ஆபரணங்களால் பெண்களுக்கு விளைவது தொல்லையே.. பெண்களுக்கு அழகு புன்னகைதானேயொழிய பொன்னகை அல்ல. 

 

சில பெண்கள் விழா நாட்களில் அளவுக்கதிகமாக நகைகள் அணிவதைப் பார்த்திருக்கிறோம். நகை அணிவது ஒரு கூடுதல் அழகுதான். ஆனால் அளவுக்கதிகமான அணிகலன்கள் கண்ணை உறுத்தும். சில பெண்கள் சுயதம்பட்டத்திற்கோ, பெருமைக்காகவோ நகைக்கடை போலவே காட்சியளிப்பார்கள். 

 

அப்படிப்பட்ட பெண்கள் ஒன்றை மட்டும் கருத்தில் கொள்ள வேண்டும். சமூக விரோதிகள் கடவுளின் கழுத்தில் கூட கை வைக்கத் தயங்குவதில்லை. 

 

அளவான அணிகலன்களோடு  வெளியே செல்லும்போது இழப்புகள் இருக்காது. நகை போனாலும் பரவாயில்லை. உயிர் போனால் என்னாவது? கோடிக்கணக்கில் பணம் இருந்தாலும் பாக்கெட்டிலா எடுத்துக்கொண்டா சுற்றுகிறோம்?

 

அதிக நகை என்பது எதிர்காலத்திற்கான சேமிப்பாக இருக்கட்டும். அளவுக்கதிகமான நகையோடும், ஒரேமாதிரியான நடவடிக்கைகளை தினந்தோறும் செய்வதும் பெண்களுக்கான ஆபத்தை வீடுதேடி அழைத்து வருகிறது.

 

பெண்களின்  பாதுகாப்பை பற்றி வலியுறுத்த எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்திற்கு சென்ஸார் வாங்குவதற்குள் நாங்கள் பட்ட பாடு சொல்லி மாளாது என கலங்குகிறார் இயக்குநர் ராகேஷ். 

 

இன்று படம் இயக்கவே  என்ன பாடு என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால் இங்கு இதை எடுக்கலாம். இதை எடுக்கக்கூடாது என்ற முன் அறிவுறுத்தல் இல்லாத அல்லது இதை ஏற்றுக்கொள்வார்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற எந்தவித வழிகாட்டுதலுமில்லாத ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கையில்தான் படமெடுக்க வேண்டியுள்ளது. 

 

காட்சிகள் அமைத்து அதை படமாக்கி காட்சிகளைக் கோர்த்து முழுமை பெற்ற ஒரு படமானபின் அதை இருக்கக்கூடாது என்கிறார்கள். அப்போ அந்த காட்சியை உருவாக்க செலவழித்த பணம் எல்லாம் வீண்தானே? ஒரு சென்ஸார் போர்டு உறுப்பினர்க்கு இந்த காட்சி படத்தில் இருக்கக்கூடாது என சொல்லத் தெரிகிறது. அது ஏன் இருக்கக்கூடாது என அவருக்கு சொல்லத் தெரியும்போது... அது ஏன் ஒரு இயக்குநருக்கு தெரியாமல் போகிறது என்ற கேள்வி வருகிறதே? அதற்கான பதில் என்ன? 

 

அப்படி எந்த விதிகளும் வரைமுறைகளும் இந்த சென்ஸாரில் தெளிவாக இல்லை. இந்த சினிமா எடுப்பவர்களுக்கு அந்த வழிகாட்டுதல் ஒரு புத்தகமாகவோ அல்லது வகுப்பாகவோ சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கிறதா என்றால், இல்லை என்றே சொல்வேன். 

 

அப்படியொரு திட்டவட்டமான விதிமுறைகள் ஏன் இல்லை என்பது என் கேள்வி? ஆளுங்கட்சியின்போது படம் எடுத்தால் எதிர்க்கட்சித் தலைவரைப் பற்றி வரும் கமெண்டுகள் அல்லது அவரைப் பற்றிய தவறான காட்சிகள் அனுமதிக்கப்படும். 

 

ஆளுங்கட்சியில் உள்ளவர் பற்றி அதே வார்த்தையில் அதே வார்த்தையால் காட்சிப்படுத்தப்பட்டால் அந்தக்காட்சி வெட்டப்படும். இதுதான் சென்ஸார். 

 

இந்தப் படத்தின் துவக்கத்தில் இடம்பெற்றுள்ள ஒருசில ரத்தக் காட்சிகளுக்காக, சில இடங்களில் கட் கொடுக்கப்பட்டது. அப்படியும் சென்ஸார் கிடைக்கவில்லை. ரிவைசிங் கமிட்டிக்கு சென்று படாதபாடு பட்டபின்னரே U/A சான்றிதழ் கிடைத்திருக்கிறது. 

 

இத்தனைக்கும் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம். அவர்களுக்கு நேரும் சில பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் முன் வைத்திருக்கிறது இந்தப்படம். 

 

அப்படிப்பட்ட படத்தையே பாடாய்ப்படுத்தித்தான் சென்சார் சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

 

சமீபத்தில் வெளியான ஒரு படத்தில் பேச்சுவழக்கில் இருக்கும் ஒரு வார்த்தையை அனுமதித்த சென்சார், அதே வார்த்தையை இந்தப்படத்தில் அனுமதிக்க மறுத்துள்ளது..

 

அதேபோல ரத்தக்காட்சிகளுடன் சில படங்களுக்கு ‘U’ சான்றிதழ் கொடுத்திருக்கும் அதே சென்சார் தான், இந்தப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியிருக்கிறது என்பதை என்னவென்று சொல்வது..? படம் எடுப்பதைவிடக் கொடூரம் இந்த சென்ஸாரில் சான்றிதழ் வாங்குவதுதான். சான்றிதழ் வாங்குவதற்கு மட்டுமே ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. என்ன பாடாய்ப்படுத்தினாலும் இறுதியில் சமூகத்திற்குத்தேவையான ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறோம் என்பதுதான் நிறைவு எனக் கலங்குகிறார் இயக்குநர் ராகேஷ். 

 

இந்தப்படத்தின் ஒளிப்பதிவை P.G.முத்தையா கையாள, கோலிசோடா2 படத்தின் இசையமைப்பாளர் அச்சு இசையமைத்துள்ளார், எடிட்டிங்கை ஷான் லோகேஷும், பாடல் வரிகளை பா.விஜய்யும், மீனாட்சி சுந்தமும் எழுத,   கலையை ரெம்போன் பால்ராஜூம் (பாபநாசம், தனி ஒருவன்), சண்டைப் பயிற்சியை விமலும் அளித்துள்ளனர். 

 

படத்தின் ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

Related News

1248

தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும் தான் ‘பராசக்தி' - சிவகார்த்திகேயன்!
Friday January-09 2026

தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...

’ஜன நாயகன்’ பட வழக்கின் தீர்ப்பு நாளை காலை வழங்கப்படுகிறது!
Thursday January-08 2026

விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...

50 வது வருடத்தில் மீண்டும் படம் இயக்கும் கே.பாக்யராஜ்!
Wednesday January-07 2026

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...

Recent Gallery