Latest News :

3 மணி நேரத்தில் 21,000 மீம்ஸ்களை உருவாக்கி சாதனை
Tuesday December-19 2017

சென்னையில் நடைபெற்ற மீம்ஸ் மாரத்தான் போட்டியில் மூன்று மணி நேரத்தில் 21,619 மீம்ஸ்களை உருவாக்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

 

அச்சு ஊடகங்களான பத்திரிகைகளில் வெளியாகும் கேலிசித்திரங்களுக்கு என சென்ற தலைமுறையில் தனி வாசகர் வட்டமும், ரசிகர் கூட்டமும் இருந்தது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கேலிசித்திரங்கள், மீம்ஸ்கள் என பெயர்மாற்றம் பெற்று உலா வருகிறது. இதற்கென தனிஅடையாளமும், ஏராளமான லைக்குகளும் கிடைத்து வருகிறது. இதனை ஆயிரக்கணக்கான இளைய தலைமுறையினர் உருவாக்கி, இணையப்புரட்சியையும், சமுதாயப் புரட்சியையும் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்களை ஒன்றிணைத்து, சாதனையாளர்களாக மாற்றவேண்டும் என்ற எண்ணம் ‘த சைட் மீடியா ’ என்ற தனியார் நிறுவனத்தை நடத்தி வரும் லோகேஷ் என்பவருக்கு உருவானது. இவரின் அரிய முயற்சியால் ‘மீம்ஸ் மாரத்தான் ’ என்ற பெயரில் போட்டி ஒன்று சென்னையில் நடைபெற்றது. 

 

இது குறித்து இந்த போட்டியின் ஒருங்கிணைப்பாளரான லோகேஷ் பேசும் போது,‘ மீம்ஸ்கள் இன்றைய இளைஞர்களின் மனக்குரல். சென்னையை வெள்ளம், வர்தா புயல் என எத்தகைய இயற்கை பேரிடர் பாதிப்புகள் வந்தாலும் அல்லது ஜல்லிக்கட்டு போன்ற கலாச்சார ரீதியிலான உரிமைக்காக போராட்டம் நடைபெற்றாலும் அது குறித்த நேர்மறையாகவும், பொறுப்புணர்வுடனும் மீம்ஸ்களை உருவாக்கி இதனை வெற்றிப்  பெற செய்ததில் இவர்களுக்கும் பங்கிருக்கிறது. அத்துடன் இவர்களுக்கும் உலக அளவில் சாதனையாளர்கள் என்ற அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்று விரும்பியதால் உருவானது தான் ‘மீம்ஸ் மாரத்தான்’ என்ற எண்ணம்.

 

இதனை சாதாரணமாகத்தான் நாங்கள் நினைத்து தொடங்கினோம். இது குறித்த விளம்பரம் ஒன்றையும் வெளியிட்டோம். ஆனால் நாங்கள் எதிர்பார்க்காத வகையில் சுமார் ஆறாயிரம் பேர் இதற்காக தங்கள் பெயரை பதிவு செய்து கொண்டனர். நாங்கள் இந்த போட்டிக்காக சில நிபந்தனைகளையும் விதித்திருந்தோம். அதையும் ஏற்றுக் கொண்டு, கிட்டத்தட்ட 4,300 பேர் இந்த சாதனை மாரத்தானில் பங்கேற்றார்கள். இதில் 2,500 பேர் முழுமையாக மூன்று மணி நேரமும் மீம்ஸ்களை கற்பனை வளத்துடன் தயாரித்து அளித்துக்கொண்டேயிருந்தார்கள். இவர்களின் அயராத உழைப்பால் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக 21,619 மீம்ஸ்களை உருவாக்கி ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை படைத்திருக்கிறார்கள். இந்த சாதனையாளர்கள் அனைவரையும் நாங்கள் பாராட்டுகிறோம். எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.’ என்றார்.

 

இந்த மீம்ஸ் மாரத்தான் போட்டித் தொடர்பாக நடைபெற்ற விழாவில் இயக்குநர் வெங்கட்பிரபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் வழங்கிய சாதனை பத்திரத்தை, இதனை முன்னின்று நடத்திய ‘த சைட் மீடியா ’நிறுவனத்தாரிடம் வழங்கினார்.

 

இவ்விழாவில் இயக்குநர் வெங்கட்பிரபுடன் பார்ட்டி படக்குழுவைச் சேர்ந்த நடிகர் கயல் சந்திரன், நடிகை சஞ்சிதா ஷெட்டி ஆகியோரும், சென்னை டூ சிங்கப்பூர் படக்குழுவினருடன் அதன் தயாரிப்பாளரும் இசைமைப்பாளருமான ஜிப்ரான், நடிகர் ஆர் ஜே பாலாஜி, மீம்ஸ் கிரியேட்டர்களாக புகழ் பெற்ற கோபு மற்றும் சுதாகர், திரைப்பட விமர்சனர் பிரசாந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

இயக்குநர் வெங்கட்பிரபு பேசுகையில்,‘மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்களின் சமூக பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறார்கள். இதற்காக அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன். அவர்களின் சிந்தனை வேகம் என்னை ஆச்சரியப்படவைக்கிறது. என்னுடைய அடுத்தப்படத்தில் அவர்களையும் கலாய்க்க எண்ணியிருக்கிறேன். என்னுடைய பார்ட்டி பட டிரைலரை மீம்ஸ் கிரியேட்டர்கள் கலாய்த்து இங்கு திரையிட்டதை நான் சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன்.’ என்றார். 

 

நடிகர் ஆர் ஜே பாலாஜி பேசுகையில்,‘இன்றைய தேதியில் கையில் ஒரு மொபைல் இருந்தால் போதும். என்னவேண்டுமானாலும் செய்யலாம். அதிலும் மீம்ஸ் கிரியேட்டர்களால் ஒரு சமுதாயத்தில் மாற்றம் உருவாக்க முடியும். அதே சமயத்தில் மீம்ஸ் கிரியேட்டர்கள் தனி மனித தாக்குதலை விடுத்து, பொதுவான விசயங்களில் தங்களின் எண்ணத்தை கற்பனையுடன் இணைத்து ஆரோக்கியமான மீம்ஸ்களை உருவாக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.’ என்றார்.

 

விழாவில் ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதியான விவேக் அவர்கள் மீம்ஸ் மாரத்தானில் நிகழ்த்தப்பட்ட சாதனை குறித்த அறிவிப்பை புள்ளிவிவரங்களுடன் வெளியிட்டார்.

Related News

1563

‘மூன்வாக்’ மூலம் நடிகராக அறிமுகமாகும் ஏ.ஆர். ரஹ்மான்!
Wednesday December-31 2025

பிரபல நிறுவனமான Behindwoods Productions தயாரிக்கும் ‘மூன்வாக்’ (Moonwalk) திரைப்படத்தின் 14 கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது...

’டாக்ஸிக்’ படத்தில் கங்காவாக மிரட்டும் நயன்தார!
Wednesday December-31 2025

யாஷ் நடிக்கும் மிகப்பிரம்மாண்ட படைப்பான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழு அதன் இருண்ட மர்மமான உலகத்தின் இன்னொரு முக்கிய அத்தியாயத்தை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது...

சூரியின் ‘மண்டாடி’ படத்தில் இருந்து இயக்குநர் விலகிவிட்டாரா ?
Wednesday December-31 2025

இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவரும், அவரது உறவினருமான மதிமாறன் புகழேந்தி ’செல்ஃபி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்...

Recent Gallery