Latest News :

விஜய் பெரிய ஹீரோ ஆவதற்கு யார் காரணம்? - 'ஆறாம் திணை’ பட விழாவில் கிடைத்த பதில்!
Thursday December-28 2017

MRKVS சினி மீடியா சார்பாக ஆர்.முத்து கிருஷ்ணன் மற்றும் வேல்மணி இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’. அருண்.சி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார். கதையின் நாயகனாக மொட்ட ராஜேந்திரன். முக்கியமான கதாபாத்திரங்களில் ரவிமரியா, லாவண்யா மற்றும் விஜய் டிவி குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர். 

 

ராஜ் கே .சோழன் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினரை வாழ்த்த இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பேரரசு, திரையரங்குகள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், நடிகர் ஆரி, கவிஞர் சினேகன், மறைந்த அப்துல் கலாம் அவர்களின் உதவியாளரான பொன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இசைத்தகட்டை இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட திரு. அபிராமி ராமநாதன் பெற்றுக்கொண்டார். 

 

இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இயக்குனர் ரவிமரியா பேசியதாவது, “இந்தப்படத்தின் தலைப்பை மாற்றக்கூடாது என்பதில் தயாரிப்பாளர் பிடிவாதமாக இருந்தார். இயக்குனர் அருண் அவரது பெயரை அவ்வப்போது விதவிதமாக மாற்றிக்கொள்பவர். சுந்தர்.சி மாதிரி பெரிய இயக்குனராக வரவேண்டும் என இப்போது அருண்.சி என மாற்றியுள்ளார். இந்தப்படத்துல வில்லனா ஆரம்பிச்சு காமெடியில முடிக்கிறோமா என அருணிடம் கேட்டேன். ஆனால் அவர் அதெல்லாம் இல்லை, இந்தப்படத்தில் உங்களுக்கு காமெடியே இல்லை என சொல்லி என்னை இயக்குனர் கேரக்டரிலேயே நடிக்கவைத்து புதிய பாதை போட்டுத்தந்துள்ளார். பேய்க்கு லாஜிக் இருக்கு என்பதை இந்தப்படத்தில் தெளிவாக கூறியுள்ளார். 

 

பாலிவுட்டில் சூப்பர் நடிகர்களான ஷாருக்கான், சல்மான் கான் உட்பட அனைத்து நட்சத்திரங்களும் தங்களது பட புரமோஷன்களுக்காக இருபது நாள்கள் ஒதுக்கி பங்கேற்கின்றனர். ஆனால் இந்த படத்தில் நடித்த கதாநாயகி இந்த விழாவிற்கு வரவில்லை. இப்போது நடிகைகளிடம் அவர்கள் நடித்த படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கூடாது என்பது ஒரு நோய் மாதிரி பரவி வருகிறது. புரமோஷன்களில் கலந்துகொள்ளாத நடிகைகளை புறக்கணியுங்கள்” என கூறினார்.. 

 

இந்தப்படத்தில் நடித்துள்ள விஜய் டிவி புகழ் குரேஷி பேசும்போது, “இந்தப்படத்தில் மொட்ட ராஜேந்திரனின் கடின உழைப்பை பார்த்தேன்.. ஒரு பக்கம் மழைபெய்து கொண்டிருக்க, அந்த மழையிலும் மலைப்பாறைகளில் ஏறவேண்டிய காட்சிகளில் சிரமப்பட்டு நடித்தார். அந்த கஷ்டங்களை கூட அவர் பாணியில் ஜாலியாக எடுத்துக்கொண்டார்” என கூறினார். 

 

நடிகர் ஆரி பேசும்போது, “இந்தப்படக்குழுவினர் யாரையும் எனக்கு தெரியாது. சிறிய படங்களின் விழாக்களில் கலந்துகொண்டு ஊக்கப்படுத்துவதற்காக வந்துள்ளேன். அண்ணன் மொட்ட ராஜேந்திரன் இங்கே வரவில்லை. அவரது பி.ஆர்.,ஓவாக வந்துள்ளேன் என சொல்லலாம். சமீபத்தில் புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளுக்கு சென்று வந்தேன். அங்கே பெரும்பாலான குடும்பங்களில் ஆண்கள் பலரும் காணமால் போய், இறந்துபோய் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. பலருக்கு சின்னதாக உதவி செய்வதை விட பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தினருக்கு அத்தியாவசிய தேவைகளுக்கான மொத்தமான செலவுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன் என இங்கே உங்கள் முன் வாக்குறுதி அளிக்கிறேன். இதேபோல ஒவ்வொருவரும் முன்வந்தால் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திருப்ப முடியும். 

 

கடலுக்குள் செல்லும் மீனவர்களை கண்காணிக்க, காணாமல் போனால் தேடுவதற்கு என இன்றைக்கு வெளிநாடுகளில் எவ்வளவோ தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. அவற்றை இங்கேயும் விரைவில் அறிமுகப்படுத்த வேண்டும்” என கோரிக்கை வைத்தார். 

 

மேலும் படக்குழுவினர வாழ்த்திய ஆரி, இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெரும்.. அதற்காக ஆர்.கே.நகர் வெற்றி மாதிரியா என கேட்காதீர்கள். அது மாயாஜால வெற்றி. ஆர்.கே. நகருக்குள் 2௦ ரூபாய் நோட்டை கொடுத்தாலே கடைக்காரர்கள் மிரளுகிறார்கள். எனக்குத்தான் ஆர்.கே.நகரில் ஓட்டுப்போடும் பாக்கியம் கிடைக்கவில்லை” என அரசியலையும் லைட்டாக டச் பண்ணினார். 

 

இயக்குனர் பேரரசு பேசும்போது, பேய் உண்மையிலேயே இருக்கு.. பணப்பேய், பதவிப்பேய், காமப்பேய், மதப்பேய், ஜாதிப்பேய் என இப்படி பல பேய்கள் நமக்குள்ளேயே இருக்கு. இந்த சினிமாவையும் கடந்த ஐந்தாறு வருடங்களாக பேய் பிடித்திருக்கிறது. ஆனால் இது சினிமாவை வாழவைக்கும் நல்ல பேய். இந்தப்படத்தின் தயாரிப்பாளரையும் இந்த பேய் நிச்சயமாக காப்பாற்றும்” என்றார். 

 

அப்துல் கலாமின் உதவியாளராக பணியாற்றிய பொன்ராஜ் பேசும்போது, “நான் அப்துல் கலாம் ஐயாவுடன் ஒருமுறை வடமாநிலம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அப்போது இரவு நேரம் கடற்கரையில் வெள்ளையாக உருவம் நடந்துவந்து மறைந்ததை பார்த்தேன். என்னுடன் வந்தவர்கள் சிலரும் அதை பார்த்தனர். இதை அப்துல் கலாம் ஐயாவிடம் சொன்னபோது, அதைப்பற்றி பலபேரிடம் சொல்லி என்னை கிண்டல் செய்துவந்தார். 

 

இங்கே சினிமாத்துறையை அழிக்கும் பேய் என்றால் அது கந்துவட்டி பேய் தான். இனி வரும் காலங்களில் படங்களில் நடிக்கும் முக்கிய நட்சத்திரங்கள் தங்களது பங்களிப்பாக ஐம்பது சதவீதம் பணத்தை படத்தில் முதலீடு செய்யவேண்டும். பின்னர் வரும் லாபத்தில் தங்களது பங்கை எடுத்துக்கொள்ளும் முறையை கொண்டுவரவேண்டும்.. எனக்கு தெரிந்த சில நண்பர்கள், தங்கள் படங்களுக்கு சரியாக் தியேட்டர் கிடைக்காததால், கிடைத்த தியேட்டர்கள் பலவற்றில் இருந்து வசூல் தொகை வராமல் பாதிக்கப்பட்டதாக கூறினார்கள். இன்றைக்குள்ள தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அனைத்து தியேட்டர்களையும் அதில் விற்பனையாகும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையும் இணையதளம் மூலமாக எளிதாக கணக்கிட முடியும். இங்கே வந்திருக்கும் அபிராமி ராமநாதன் சாரிடம் இதுபோன்ற குறைகளை களைய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என பேசினார். 

 

தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பேசும்போது, “இன்று சினிமா தயாரிக்கவேண்டும் என்றாலே பயமாக இருக்கிறது. படத்திற்கு பூஜை போட்டத்தில் ஆரம்பித்து ரிலீஸ் தேதி வரை எந்த திசையில் இருந்து என்ன பிரச்சனை வருமோ என பயந்துகொண்டே இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. ஒரே இந்தியா ஒரே வரி என சொன்னார்கள்.. ஆனால் இங்கே தமிழ்நாட்டில் மட்டும் சினிமாவுக்கென தனியாக அதிக வரி விதிக்கிறார்கள். இதை அரசாங்கத்துக்கு எதிரான குரலாக நினைக்கவேண்டாம்.. நமக்கான கஷ்டங்களுக்கு நாம் குரல் கொடுத்தால் தான் தீர்வு கிடைக்கும். இன்று புதிதாக திரையுலகில் படம் எடுக்க வருபவர்கள் சீனியர்களான பாக்யராஜ், பேரரசு போன்றவர்களிடம் உதவிகளை கேட்கலாம்” என தனது குமுறலை வெளிப்படுத்தினார். 

 

இதை தொடர்ந்து பேசிய திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், “பேய் இருக்கா இல்லையான்னு கேட்டா இருக்குன்னுதான் சொல்வேன்.. அமானுஷ்யம்னா அது பேயா, இல்ல முனியா எதோ ஒன்னு இருக்குங்க. மனுசனால எது ஒன்றை பாக்க முடியாதோ அதை பார்க்கத்தான் ஆசைப்படுவான். இல்லைன்னா நயன்தாரா படத்துக்கு எதுக்கு இவ்வளவு கூட்டம் வருது. 

 

பொன்ராஜ் பேசும்போது தியேட்டர்காரர்கள் கொளையடிக்கிறார்கள், அதனால் சின்ன படங்கள் சாகிறது என குற்றம் சாட்டினார். கடந்த வருடத்தில் நான் ஐம்பது படங்கள் விநியோகம் பண்ணினேன். அதுல 45 படங்கள் சின்ன படங்கள் தான். இன்றைக்கு விஜய் பெரிய ஹீரோவாக இருந்தாலும் அவர் முதன்முதலா நடித்தபோது அது சின்ன படம் தான். எங்களை போன்ற தியேட்டர்காரர்கள் சின்ன படம் என அதை புறக்கணித்திருந்தால் அவர் இன்று இந்த அளவிற்கு வளர்ந்திருக்க முடியுமா..? 

 

தியேட்டர்களில் சில சின்ன படங்களுக்கு 15 பேர் கூட வர மாட்டேங்கிறாங்க.. இதுனால எங்களுக்கு ஏசி போடுற காசு கூட கிடைக்காது. அப்படின்னா அந்த படத்தை நிறுத்துறத தவிர எங்களுக்கு வேற வழியில்ல.. இதோ இப்ப அருவின்னு சின்ன படம் ஒன்னு வெளியாச்சு. ஆனால் முதல்நாள்ல இருந்து நல்ல கூட்டம்.. அந்தப்படத்துக்கு மட்டும் கூட்டம் எப்படி வந்துச்சு. மக்களுக்கு மட்டும் எப்படியோ அது தெரியுது. அந்த வித்தை மட்டும் எங்களுக்கு தெரிஞ்சிருந்தா அத்தனை சின்ன படங்களையும் ஓட வைச்சிருப்போம். அந்த சக்ஸ் பார்முலாவ கண்டுபிடியுங்க. 

 

முதல்ல திருட்டு விசிடி பிரச்சனை இருந்துச்சு. இப்போ படம் ரிலீஸாகி 15 நாட்கள்ல அமேசான்ல படம் வந்துருது. இது லீகலா வருதுன்னாலும் குறைஞ்சது ஒரு மாதத்திற்காவது படங்களை இப்படி அமேசான்ல கொடுக்காம இருங்க. திரையரங்குகள் தான் வசூலை மொத்தமாக அள்ளிக்கொடுக்க முடியும். அமேசனால அப்படி அள்ளிக்கொடுக்க முடியாது. தியேட்டர்கள் பொன்முட்டையிடும் வாத்து. அதை நீங்கள் அழித்து விடாதீர்கள்” என சூடு கிளப்பினார் அபிராமி ராமநாதன். 

 

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக பேசிய இயக்குனர் கே.பாக்யராஜ், “பேய் இருக்கா இல்லையான்னு இப்ப வரைக்கும் எல்லோரிடமும் ஒரு கேள்வி இருந்துட்டே இருக்கு.. சின்ன வயசுல நான் கூட, இப்படி பேய் இருக்கும்னு நினைச்சு பயந்து பத்தடி தூரத்துல இருக்க என்னோட வீட்டுக்கு ஒரு பர்லாங் தூரம் சுத்திலாம் நடந்து வந்திருக்கேன். அப்புறம் போகப்போகத்தான் பேய் இல்லைன்னு எனக்கு தெளிவாச்சு. 

 

ஒரு சிம்பிள் லாஜிக்.. இப்ப யாராலோ கொல்லப்பட்டு பேயா மாறுகிறவங்களுக்கு தங்களை கொன்னது யார்னு தெரியும். பேயா மாறிவந்ததும் அவங்களை கொன்னு பழி தீர்த்துட்டு போயிட்டா அப்புறம் காவல்துறை, நீதி மன்றம் இதுக்கெல்லாம் வேலையே இருக்காதே. அப்படி ஏன் கொல்றது இல்ல..?“ என ஒரு பகுத்தறிவு கேள்வியுடன் படக்குழுவினரை வாழ்த்தி, இசை குறுந்தகட்டை வெளியிட்டார். 

 

நன்றி தெரிவித்து படத்தின் இயக்குனர் அருண்.சி பேசும்போது, “கடந்த மாதம் ஒரு கனவு வந்தது.. அந்த கனவில் நானும் படத்தின் தயாரிப்பாளரும் பாக்யராஜ் சாரிடம் இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு வரவேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். அதெல்லாம் வர முடியாது என முகத்தில் அடித்தாற்போல சொல்லிவிடுகிறார் பாக்யராஜ். ஆனால் இப்போது நிஜத்தில் நாங்கள் சென்று அழைத்தபோது, நீங்க போங்க.. நான் வந்திடுறேன் என ஒரே வார்த்தையில் சொன்னார். இந்தப்படமும் இதுபோல நிறைய ட்விஸ்ட்டுகளுடன் இருக்கும். 

 

என்னுடைய 12 வருட கனவு நனவாகி இருக்கிறது. மொட்ட ராஜேந்திரன், ரவி மரியா இருவருமே பல சிரமங்களை பொறுத்துக்கொண்டு கடுமையான உழைப்பை இந்தப்படத்திற்காக கொடுத்துள்ளார்கள். விஜய் டிவி குரேஷி இந்தப்படத்தின் வசனங்களில் சில கவுன்ட்டர்களை சேர்த்துக்கொள்ள அனுமதி கேட்டார், நிச்சயம் அவை படத்தில் கைதட்டல் பெறும். இந்தப்படத்துல நடிகை லாவண்யா கண்களாலேயே பேசி நடித்தார். படத்தில் பேய்களுக்கான வழக்கமான பிளாஸ்பேக் இல்லாமல் புதிய பாணியில் திரைக்கதை அமைத்திருக்கிறோம்” என  கூறினார் அருண்.சி.

 

Related News

1648

’இட்லி கடை’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவின் தொகுப்பு!
Monday September-15 2025

டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...

வந்த வழியையும், வாழ்ந்த வாழ்க்கையையும் என்றைக்கும் மறக்கக் கூடாது - நடிகர் தனுஷ்
Monday September-15 2025

டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...

Kollywood Stars in A Rhapsody 2025
Monday September-15 2025

The S.A.College of Arts & Science campus came alive with colors, music, and excitement as SA Rhapsody 2025 unfolded in all its glory on September 13, 2025...

Recent Gallery