Latest News :

கருத்து சுதந்திரத்தில் தமிழகத்தை விட கேரளம் சிறந்தது - பார்த்திபன் பேச்சு!
Friday January-19 2018

ஆண்டாள் சர்ச்சை விவகாரத்தில் தமிழகமே பற்றி எரிந்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அதில் இன்னும் எண்ணெயை ஊற்றும் விதத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன். அவர் பேசியது அனைத்தும் நியாயமானது என்றாலும், அதற்கும் யாராவது எதிர்ப்பு தெரிவிப்பதும், அவரை வார்த்தையால் அடிப்பதும் என்று நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

முக்கிய சமூக பிரச்சினையான தண்ணீர் பிரச்சினைப் பற்றி பேசும் படமாக உருவாகியுள்ள படம் ‘கேணி’. தமிழ் மற்றும் மலையாளம் என்று இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை ஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் சார்பில் சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் ஆகியோர் தயாரிக்க, எம்.ஏ.நிஷாத் இயக்கியிருக்கிறார்.

 

ஜெயப்பிரதா, ரேகா, அனு ஹாசன், ரேவதி ஆகியோருடன் பார்த்திபன் மற்றும் நாசரும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

கேரளா - தமிழ்நாடு எல்லையில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பார்த்திபன், ஜெயப்பிரதா, சுஹாசினி, ரேகா, அனு ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன், “இந்த நிகழ்ச்சி நடைபெரும் இடம் க்ரீன் பார்க், பசுமைப் பூங்கா. இந்த இடம் மட்டுமே பசுமைப் பூங்காவாக இல்லாமல், இந்த நாடே பசுமைப் பூங்காவாக மாற வேண்டுமெனில் முக்கியமாக தண்ணீர் தேவை. ஆன்மீக அரசியலைப் பற்றி சமீபத்தில் நீங்கள் அறிந்திருப்பீர்கள், இது நீர்மீக அரசியல் பேசும் படம். இந்த நாட்டில் தண்ணீர் பிரச்சினை தீர வேண்டுமெனில் நதிகளை இணைக்க வேண்டுமென எல்லோரும் சொல்கிறார்கள். அதற்கு மனித மனங்களை இணைக்க வேண்டும். அப்படி இதயங்களை இணைக்கும் ஒரு படமாக நிச்சயமாக ’கேணி’ இருக்கும். இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பு கேரள எல்லைக்குள் பிரிக்கப்படுகிற தமிழகத்தைச் சேர்ந்த கிணற்றுக்காக கேரளத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் சேர்ந்து தமிழர் ஒருவர் போராடுவதே ‘கேணி’ படத்தின் கதை. இந்தப் படத்தை எடுத்திருப்பதும் ஒரு மலையாளி. பொதுவாக நீர் பிரச்சனை என்பது தமிழர்கள் சம்பந்தப்பட்டதோ, மலையாளிகள் சம்பந்தப்பட்டதோ இல்லை. அது மனிதர்கள் சம்பந்தப்பட்டது. தண்ணீரை வைத்துக் கொண்டு  கேரளாவோ தமிழ்நாடோ அரசியல் செய்யலாம், ஆனால் கலைஞர்கள் அந்த அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள். ஏனென்றால் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு  கவலையில்லை, பிரச்சனைகளைப் பேசிக்கொண்டே தான் இருப்போம்.

 

தமிழகத்தை விட கேரளாவில் கலைஞர்களுக்கான சுதந்திரம் என்பது அதிகமாக இருக்கிறது, அது பாராட்டிற்குரியது. அங்கே திருவனந்தபுரம் ராஜாவைக் கூட விமர்சனம் செய்யலாம், இங்கே யாரையுமே விமர்சனம் செய்ய முடிவதில்லை. அதனால் தான் நல்ல விசயத்தை சொல்லும் இந்த ‘கேணி’ படத்திற்குள் என்னையும் இணைத்துக் கொண்டேன். எனக்கு பெரியார் விருது கொடுத்த போது சில விஷயங்கள் பேசினேன். அதற்கு கூட சமூக வலைதளங்களில் என்னை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள், அந்தளவிற்கு சகிப்புத் தன்மை இல்லாமல் போய்விட்டது. அந்த வகையில் பார்க்கப் போனால் கருத்து சுதந்திரத்தில் தமிழகத்தை விட கேரளம் சிறந்து விளங்குகிறது. இந்தப் படம்  நல்ல தீர்வை நோக்கி அழைத்துச் செல்லும் என்பது பாராட்டிற்குரியது” என்று தெரிவித்தார்.

 

நடிகை ஜெயபிரதா பேசுகையில், “எனக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது. ஏனென்றால் நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி, ஏழை ஜாதி, தசாவதாரம் இப்போது கேணி என தமிழில் நல்ல படங்களில் நடித்திருக்கிறேன். மற்ற மொழிகளில் நடித்துக் கொண்டிருந்தாலும் தமிழில் நடிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன், அதனை நிறைவேற்றிய சஜீவ் மற்றும் ஆன் சஜீவ் இருவருக்கும் என் நன்றிகள். இந்த கேணி படத்தில் நான் நடித்திருக்கும் ’இந்திரா’ என்கிற கேரக்டர், என் மனதிற்கு மிக நெருக்கமாக மாறிப்போயிருக்கிறது. எல்லோரும் பெண்கள் முன்னேற்றம் பற்றி பேசிக்கொண்டே இருக்கிறோம், ஆனால் இந்த சமூகத்தை பெண்கள் தான் வழிநடத்த வேண்டும் என ’கேணி’ பேசியிருக்கிறது. தண்ணீர் என்பது தமிழ்நாடு சம்பந்தப்பட்டதோ, கர்நாடகா, கேரளா சம்பந்தப்பட்டதோ கிடையாது அது உலகளாவிய பிரச்சினை. அப்படி ஒரு உலகளாவிய பிரச்சினையை கதையாக்கி, அதில் என்னையும் நடிக்க வைத்ததற்காக இயக்குநர் நிஷாத்திற்கு நன்றிகள். இன்னும் குறிப்பாக ’கேணி’ படத்திற்காக 25 வருடங்களுக்குப் பிறகு ஏசுதாஸ் அவர்களும், எஸ்.பி.பி அவர்களும் இணைந்து பாடியிருப்பது எங்களுக்கெல்லாம் பெருமை. இந்தப் படத்தில் என்னோடு நடித்த அத்தனை பேருக்கும், பணியாற்றிய கலைஞர்களுக்கும் என் நன்றிகளும் வாழ்த்துகளும்.” என்றார்.

 

சுஹாசினி மணிரத்னம் பேசியதாவது, “நீண்ட நாட்களுக்குப் பிறகு கோடம்பாக்கம் வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. முன்பெல்லாம் மோகன்லால், மம்மூட்டி, ராஜ்குமார் இவர்களெல்லாம் பக்கத்து படப்பிடிப்பு தளத்தில் இருப்பார்கள், நாங்கள் தேடிப்போய் சந்தித்து வருவோம். அந்த நினைவைத் தருகிறது இந்த ’கேணி’. தமிழ் மற்றும் மலையாளம் இசை வெளியீட்டு விழா. இந்தப் படத்தைத் தயாரித்திருக்கும் என் நண்பர்கள் ஆன் சஜீவ் மற்றும் சஜீவ் பீ.கே இருவருக்கும் என் வாழ்த்துகள். படப்பிடிப்பு இருந்த நாட்களில் எல்லாம் என்னிடம் தொடர்பு கொண்டு ’கேணி’ படம் குறித்து பேசிக்கொண்டே இருப்பார்கள். படத்தில் பணியாற்றியிருப்பவர்கள் எல்லாரும் என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் என்றாலும், கேணியில் என் ரத்த சம்பந்தப்பட்ட ஒருவரும் (அனு ஹாசன்) இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இங்கு திரையிடப்பட்ட காட்சிகள் ஒன்றை உணர்த்துகின்றன, அவை மனதின் ஆழத்தைத் தொடுகின்றன. அப்படி பெண்களின் மனதைத் தொடும் வகையில் கேணியை உருவாக்கியிருக்கிற இயக்குனர் நிஷாத்திற்கு என் வாழ்த்துகள். அடித்தட்டு வர்க்கமாக இருந்தாலும், மேல்த்தட்டு வர்க்கமாக இருந்தாலும் தண்ணீர் இல்லாமல் போனால் முதலில் பாதிக்கப்படுவது பெண்கள் தான். அதை உணர்ந்து பெண்களை மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கியிருப்பது உண்மையிலே பாராட்டிற்குரியது தான். படத்தில் பணிபுரிந்துள்ள அத்தனை பேருக்கும் என் வாழ்த்துகள்” என்றார்.

 

இயக்குநர் எம்.ஏ.நிஷாத் பேசும் போது, “மலையாளத்தில் ’கிணறு’ எனது ஏழாவது படம், தமிழில் ’கேணி’ என் முதல் படம். எனது முந்தைய படங்களைப் போலவே கேணியும் சமூகம் சார்ந்த படம் தான். இந்த பூமியில் இருக்கிற எல்லா உயிர்களுக்கும் பொதுவான தண்ணீரை, மனிதன் எப்படி சொந்தம் கொண்டாட முடியும் என்ற கேள்வியை கேணியின் வாயிலாக எழுப்பியிருக்கிறேன். வெயில் மழை எல்லாம் இயற்கை தந்தது, வறட்சி மனிதனால் உண்டாக்கப்பட்டது. இந்தப் படம் நிச்சயமாக எல்லோராலும் பேசப்படக்கூடிய படமாக கண்டிப்பாக இருக்கும். சுவர் இல்லாமல் சித்திரம் இல்லை என்பது போல் எனது தயாரிப்பாளர்கள் இல்லாமல் ’கேணி’ இல்லை. எனவே எனது தயாரிப்பாளர்கள் சஜீவ் மற்றும் ஆன் சஜீவ் இருவருக்கும் எனது நன்றிகள். அதே போல் படத்தில் நடித்த அத்தனை பேருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ’தளபதி’ படத்திற்குப் பிறகு 25 ஆண்டுகள் கழித்து பாடகர்கள் ஜேசுதாஸ்  மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருவரும் இணைந்து இந்த படத்தில் ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். இதை பெருமைக்குரிய ஒன்றாகக் கருதுகிறேன்.” என்றார்.

 

விழாவின் முடிவில் சுஹாசினி மணிரத்னம் இசைத் தட்டை வெளியிட ஜெயப்ரதா, பார்த்திபன் உள்ளிட்ட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

Related News

1801

’இட்லி கடை’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவின் தொகுப்பு!
Monday September-15 2025

டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...

வந்த வழியையும், வாழ்ந்த வாழ்க்கையையும் என்றைக்கும் மறக்கக் கூடாது - நடிகர் தனுஷ்
Monday September-15 2025

டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...

Kollywood Stars in A Rhapsody 2025
Monday September-15 2025

The S.A.College of Arts & Science campus came alive with colors, music, and excitement as SA Rhapsody 2025 unfolded in all its glory on September 13, 2025...

Recent Gallery