Latest News :

கணவரின் தயாரிப்பில் இயக்குநராகும் நடிகை அக்‌ஷயா!
Sunday May-06 2018

’கோவில்பட்டி வீரலட்சுமி’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமான அக்‌ஷயா, தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தார். ஆர்யா நடிப்பில் வெளியான ‘கலாபக் காதலன்’ படத்தில் ஆர்யாவுக்கு மச்சினிச்சி வேடத்தில் நடித்த அவரது நடிப்பு திறன் அனைவராலும் பாராட்டப்பட்டது. அதை தொடர்ந்து, ‘உளியின் ஓசை’, ‘எங்கள் ஆசான்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

 

திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு ஓய்வு கொடுத்திருந்த அக்‌ஷயா, தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். இந்த முறை நடிகையாக மட்டும் இன்றி இயக்குநர் என்ற புதிய அவதாரத்தையும் அவர் எடுத்திருக்கிறார்.

 

அக்‌ஷயாவின் கணவர் பாலச்சந்தர்.டி தயாரிப்பில் உருவாகும் ‘யாளி’ படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பதோடு, இயக்குநராகவும் அறிமுகமாகிறார். இப்படத்தில் ஹீரோவாக தமன் நடிக்கிறார். இவர்களுடன் ஊர்வசி, மனோபாலா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, அர்ஜுன் என்ற புதுமுகம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

 

இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரபல இயக்குநர் பி.வாசு, சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு போஸ்டரை வெளியிட்டார். 

 

Yaalee

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் பி.வாசு, “சினிமாவில் தற்போது நடந்து முடிந்த போராட்டத்தினால் சிறிய முதலீட்டு படங்களுக்கு நல்ல வழி கிடைத்திருக்கிறது. பொதுவாக சின்ன படங்களுக்கு சரியான திரையரங்கங்கள் கிடைக்காது. ஏன், என் மகன் நடித்த படத்திற்கே அப்படி நடந்திருக்கிறது. அதுபோன்ற சூழலில் படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர்களின் மன்நிலை எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள். ஆனால், தற்போது நிலை மாறிவிட்டது. 

 

என் காலத்தில் எல்லாம், பஸ்ட் லுக் போன்ற விஷயங்கள் இருக்கவில்லை. சந்திரமுகியில் ரஜினியின் வேட்டையன் கெட்டப்பை கூட ரொம்ப சாதாரணமாகத்தான் வெளியிட்டேன். ஆனால், தற்போது படத்தின் போஸ்டர் உள்ளிட்ட ஒவ்வொன்றையும் சிறப்பான முறையில் வெளியீட்டு அதன் மூலம் படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கிறார்கள். அதேபோல், புதிதாக வரும் இளைஞர்கள் நல்ல சிந்தனையுடன், வித்தியாசமான கதைகளுடன் வருகிறார்கள். அந்த படங்களை பார்க்கும் போது, நமக்கு இப்படிப்பட்ட கதை தோன்றவில்லையே, என்று நினைக்க தோன்றுகிறது. அக்‌ஷயாவும் அப்படிப்பட்ட கதையை தான் படமாக எடுத்திருப்பார், என்று நினைக்கிறேன். ’யாளி’ என்ற தலைப்பே படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது. நிச்சயம் இப்படத்தை வித்தியாசமான கதையோடு அக்‌ஷயா இயக்கியிருப்பார், என்று நம்புகிறேன். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

நாயகன் தமன் பேசுகையில், “சினிமாவில் மட்டும் அல்ல எந்த துறையாக இருந்தாலும் ஒரு பெண் அதில் வெற்றி பெறுவது என்பது ரொம்பவே பெரிய விஷயம். என் அம்மா டீச்சராக இருந்தவர். அவரை வீட்டில் நாங்கள் சாதாரணமாக தான் பார்ப்போம். ஆனால், அக்‌ஷயாவுடன் பணிபுரிந்த போது தான், பெண்கள் தாங்கள் பணிபுரியும் இடங்களில் எப்படிப்பட்ட பிரச்சினைகளை எதிர்க்கொள்கிறார்கள், என்பதை நான் புரிந்துக்கொண்டேன். அக்‌ஷயா இந்த படத்திற்காக மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருக்கிறார். நிச்சயம் அவர் இயக்குநராக வெற்றி பெறுவார்.” என்றார்.

 

இயக்குநரும் ஹிரோயினுமான அக்‌ஷயா பேசும் போது, “யாளி என்பது காவல் தெய்வம். சிங்கம் முகம், யானை தந்தம், குதிரை உடம்பு கொண்ட இந்த தெய்வத்தின் சிலை அனைத்து கோவில்களிலும் இருக்கும். 

 

பெண் இயக்குநர்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போது நல்ல வரவேற்பு இருக்கும் அந்த வரிசையில் நான் இணைந்துள்ளேன்.  இது ஒரு ரொமான்டிக், திரில்லர் படமாக உருவாக்கி இருக்கிறோம். மும்பை பின்னணியில் நடக்கும் கதை.                                    

 

முக்கியமான மூன்று கதாபாத்திரங்களை சுற்றி திரைக்கதை நகரும். நாயகி ஜனனி (அக்ஷயா), நாயகன் (தமன்) இருவரும் காதலிக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு தொடர்பு இல்லாத பாலா (அர்ஜுன்) என்ற கதாபாத்திரம் ஜனனியை பின் தொடர்கிறார். யார் அவர் எதற்காக ஜனனியை பின் தொடர்கிறார், அந்த நேரத்தில் மும்பையில் தொடர் கொலை சம்பவங்கள் வேறு  நடக்கின்றன. அந்த கொலை சம்பவங்களுக்கும் இந்த மூன்று கதாபாத்திரத்திரங்களுக்கும் என்ன தொடர்பு இறுதியில் ஜனனி என்ன ஆனார் என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்.

 

பெண்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சினைகளை சஸ்பென்ஸ் த்ரில்லராக இந்த படத்தில் சொல்லியிருக்கிறேன். ஜனனி தான் படத்தில் யாளி. இந்த படத்தின் கதை, தற்போது சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சினையைப் பற்றி பேசுவதோடு, கமர்ஷியலாகவும் இருக்கும்.” என்றார்.

 

இந்த நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் எஸ்.ஆர்.ராம், ஒளிப்பதிவாளர் வி.கே.ராமராஜு, பாடலாசிரியரும், இணை தயாரிப்பாளருமான கவிதாவாணி வி.லட்சுமி, இணை இயக்குநர் உன்னி பிரணவம, தயாரிப்பாளர் பாலச்சந்தர்.டி, பி.ஆர்.ஓ யூனியனின் தலைவர் டைமண்ட் பாபு ஆகியோரும் கலந்துக்கொண்டு பேசினார்கள்.

Related News

2563

”சினிமாவை வாழ விடுங்கள்” - ‘தடை அதை உடை’ பட இயக்குநர் ஆதங்கம்
Thursday October-23 2025

காந்திமதி பிக்சர்ஸ் என்ற  நிறுவனம் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்க, ’அங்காடித்தெரு’ மகேஷ், ’திருக்குறள்’ குணாபாபு நடிப்பில், 1990-களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘தடை அதை உடை’...

சமூகப் பிரச்சனைகளை தொடர்ந்து பேசுவேன் - ‘டியூட்’ இயக்குநர் கீர்த்தீஸ்வரன்
Thursday October-23 2025

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜூ, ரோகிணி உள்ளிட்டப் பலர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'டியூட்'...

’பயம் உன்னை விடாது..!’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியானது!
Thursday October-23 2025

சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்தின் 70-ஆவது ஆண்டு தீபாவளி விழாவில் ‘பயம் உன்னை விடாது...

Recent Gallery