Latest News :

கிம்பல் தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்ட ‘பரியேறும் பெருமாள்’!
Tuesday September-25 2018

இயக்குநர் பா.ரஞ்சி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பரியேறும் பெருமாள்’. கதிர், ஆனந்தி, யோகி பாபு, லிஜிஸ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படம் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், மக்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

ரசிகர்கள் மட்டும் இன்றி தமிழ் திரையுலகினரும் இப்படத்தின் ரிலீஸை எதிர்நோக்கியுள்ளார்கள். காரணம், எழுத்தாளரான மாரி செல்வராஜ்,  தனது சிறு கதைகள் மூலம் ஏற்கனவே பலரை கவர்ந்துள்ள நிலையில், அவரது முதல் திரைப்படம், அதுவும் பா.ரஞ்சித் தயாரிப்பில் என்பது தான். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மாரி செல்வராஜ் குறித்தும் இப்படத்தின் கதை குறித்து அவரது குருநாதன் இயக்குநர் ராம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பேசியது இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

 

இந்த நிலையில்,  இப்படம் முழுவதும் கிம்பல் என்ற புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படமாக்கப்பட்டிருப்பதாக இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் தெரிவித்திருக்கிறார்.

 

இது குறித்து ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் கூறுகையில், “பரியேறும் பெருமாள் என்னுடைய இரண்டாவது படம், முதல் படம் 'மாலை நேரத்து மயக்கம்'. நான் பிறந்து வளர்ந்தது சென்னை தான். எனக்கு அதிகமாக கிராமத்து வாழ்க்கை பற்றி பரிச்சயம் இல்லை, எனது முதல் படமும் நகரத்து கதை சார்ந்த படம் தான். ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார்தான் எனது குரு. அவரிடமிருந்து கற்றுக்கொண்ட விசயங்கள் தான் என்னை புதிதாக இயங்க சொல்கிறது.  எனக்கு சில எழுத்தாளர்கள் நண்பர்கள் இருக்கிறார்கள், வாசிப்பு அனுபவமும் கொஞ்சம் உண்டு. அந்த வகையில் என்னோடு அறிமுகமானவர் தான் இயக்குநர் மாரிசெல்வராஜ்.  ’பரியேறும் பெருமாள்’ கதையை கேட்டவுடன் இந்த கதைக்கு நாம் வழக்கமான ஒளிப்பதிவு செய்யாமல் கொஞ்சம் மெனக்கட வேண்டும் என்கிற எண்ணம் வந்தது. படப்பிடிப்பு முழுக்க முழுக்க திருநெல்வேலி மாவட்டத்தில் பெரும் பகுதிகள். அந்த ஊர்களின் பசுமை, வறட்சி பகுதிகள், தெருக்கள், வெயில் மனிதர்கள், விலங்கினங்கள் அனைத்தையும் அப்படியே படம்பிடிக்க வேணும் கூடவே ஒரு அழகியலும் இருக்க வேண்டும் என்கிற ஆசை. கதைக்களம், அதன் வேகம் இதற்கு படம் முழுவதும் கிம்பல் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறேன்.

 

Pariyerum Perumal Cinematographer Sridhar

 

40 கிலோ எடைகொண்ட கிம்பல் கேமரா உபகரணங்களை தோளில் சுமந்து கொண்டு முழுப்படத்தையும் எடுப்பது சிரமமாக இருந்தாலும், படம் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருந்தது.  பட்ட சிரமத்திற்கு பலன்கிடைத்திருக்கிறது. கிராமத்து நிலமும், மக்களும், வாழ்வியலும் தினம் தினம் என்னை உற்சாக மூட்டியதும், தயாரிப்பாளர் பா.இரஞ்சித் அண்ணனின் ஒத்துழைப்பும், இயக்குநர் மாரிசெல்வராஜ் ஒத்துழைப்பும் சவாலான வேலையை செய்துமுடிக்க பெரும் உதவியாக இருந்தது.

 

எந்த இடத்திலும் அந்த நிலத்தின் கலர் மாறாமல் அதை அப்படியே கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோம். மனிதர்களோடு விலங்குகளும் இந்த படத்தில் நடித்திருக்கின்றன அவற்றை படம்பிடிக்க கிம்பல் போன்ற உபகரணம் பெரிதும் உதவியது.

 

குடும்பத்தோடு பார்க்கக்கூடிய அழகான ஒரு படமாக வந்திருக்கிறது, திருநெல்வேலியின் நிஜ வெளிச்சத்தையும், அழகையும் இந்த படத்தில் பெரிதும் எதிர் பார்க்கலாம்.” என்றார்.

Related News

3491

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery