Latest News :

“வேகம் இருக்கிறது.. விவேகம் இல்லை” - விஷால் மீது ஆர்.வி.உதயகுமார் தாக்கு
Saturday February-16 2019

DK பிக்சர்ஸ் சார்பில் ஜெ.தனலட்சுமி தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கோணலா இருந்தாலும் என்னோடது’ கதாநாயகனாக கிரிஷிக், கதாநாயகிகளாக மேகாஸ்ரீ மற்றும் மணாலி ரத்தோட் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் டெல்லி கணேஷ்,பவர்ஸ்டார், அபினவ், தீப்பெட்டி கணேசன், கே.கே.சேஷூ, கிரேன்மனோகர் மற்றும் ஜோதிலட்சுமி, ஷகீலா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ந.கிருஷ்ணகுமார் இந்தப்படத்தை இயகியுள்ளார். வல்லவன் இசையமைத்துள்ளார். 

 

இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர தயாராக உள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, அய்யனார் வீதி பட இயக்குனர் ஜிப்ஸி ராஜ்குமார், தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ், பிஆர்ஓ யூனியன் தலைவர் விஜயமுரளி, சர்வதேச மனித உரிமை கழக செயலாளரும் மற்றும் சட்ட ஆலோசகருமான தின உரிமை மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் டாக்டர் கல்பனா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

இந்த நிகழ்வில் இயக்குனர் ஜிப்ஸி ராஜ்குமார் பேசியபோது, “புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஒரு முறை பேசியபோது யார் யார் மனது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே நிறை குறைகளுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். அதைத்தான் இந்த படமும் சொல்ல வருகிறது என நினைக்கிறேன். தற்போது சிறிய படங்கள் வெளிவருவதில் நிறைய சிரமங்கள் இருக்கின்றன அதை ஒழுங்குபடுத்தி 70% பெரிய படங்கள் 30% சின்ன படங்கள் என ரிலீஸ் முறையை மாற்றியமைக்க வேண்டும். பிரசாத் லேபில் 430படங்கள் ரிலீஸ் பண்ண முடியாமல் முடங்கி கிடக்கின்றன இப்படிப்பட்ட படங்கள் வெளிவந்தால் தான் சினிமா வாழும்.. இயக்குனர் பாலாவின் முதல் படம் ரிலீஸ் ஆனபோது அதை சின்ன படம் என ஒதுக்கி இருந்தால் என்னவாயிருக்கும்..? அதற்கு சில நாட்கள் வாய்ப்புக் கொடுத்தால் அது மிகப்பெரியதாக ஹிட்டானது.. தயாரிப்பளர்களை பொறுத்தவரையில்  யாருக்கும் யாரும் பயப்படத் தேவை. இல்லை. யாரும் யாரை நம்பியும் இல்லை. உழைப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். இதுதான் உண்மை” என கூறினார்

 

தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது, “சிறிய படங்களை நசுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. ஆர்.வி.உதயகுமார் போன்றவர்கள் அரசிடம் பேசி இதற்கு ஒரு வழிமுறை செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் அவருக்கு அனைவரும் ஒற்றுமையாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.. ஆண்டவனே வந்தாலும் சினிமாக்காரர்களிடம் ஒற்றுமை வருவது கஷ்டம் தான்.. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் பெரிய படங்களை ரிலீஸ் செய்வதை விட்டுவிட்டு, அவற்றை சிறிய படங்களுக்காக ஒதுக்க வேண்டும். பெரிய படங்கள் எப்போது வந்தாலும் ஓடிவிடும்” என கூறினார்

 

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ் பேசும்போது, “தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை விட பாப்கார்ன் கட்டணம் அதிகமாக இருக்கிறது. அதை விட பார்க்கிங் கட்டணம் அதிகமாக இருக்கிறது. அப்புறம் எப்படி மக்கள் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வருவார்கள். இன்று தயாரிப்பாளர்கள் சிரமப்பட்டு சினிமா எடுக்கிறார்கள் ஆனால் சினிமா சம்பந்தமில்லாதவர்கள் தான் அதன் லாபத்தை அனுபவிக்கிறார்கள். சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு தியேட்டர்களுக்கு உத்தரவு பிறப்பித்தது. இதேபோன்ற உத்தரவை தமிழ்நாட்டிலும் அமல்படுத்தினால்தான் தயாரிப்பாளர்கள் பிழைக்க முடியும்.. மக்களும் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வருவார்கள்:” என வேண்டுகோள் வைத்தார். 

 

இயக்குனர் பேரரசு பேசும்போது, “காதல் குடும்ப விஷயங்கள் அனைத்திலும் சம்பந்தப்பட்டவர்களே தீர்மானம் எடுத்துக் கொள்ளவேண்டும். எல்லா விஷயங்களிலும் கோர்ட்டு தலையிட்டால் அது உருப்படாது. இயக்குனர்கள் ஒரு தயாரிப்பாளரின் சூழல் அறிந்து படம் எடுக்க வேண்டும்.. ஒரு தயாரிப்பாளரின் வயிற்றெரிச்சல் நிச்சயமாக அந்த இயக்குனரை நிம்மதியாக வாழ விடாது. இந்த வெற்றி புகழ் எல்லாம் தற்காலிகம்தான்.. இந்த படத்தின்  இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்தபோது படத்தின் தலைப்பை கேட்டு கொஞ்சம் திகைப்படைந்தேன். படத்தின் கதை வேறு மாதிரி இருக்குமோ என  பி.ஆர்.ஓவிடம் விசாரித்தபோது இந்தப்படத்தின் அழகான கதையை என்னிடம் சொன்னார். அதன் பின்னரே இந்த விழாவிற்கு வர சம்மதித்தேன். இன்று பி.ஆர்.ஓ விற்கு கூட ஒரு படத்தின் கதை தெரிந்திருக்கிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு படத்தின் தயாரிப்பாளருக்கு அதன் கதை என்ன என்பதை சொல்ல பல இயக்குனர்கள் மறுக்கிறார்கள்.

 

தயாரிப்பாளர்கள் முன்பெல்லாம் இயக்குனர்கள், நடிகர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் என ஒவ்வொருவருக்கும் பயந்த காலம் போய் இன்று யூடியூப்பில் விமர்சனம் செய்பவர்களுக்கு பயப்பட வேண்டிய சூழல் உருவாகிவிட்டது. கோடிகளில் முதலீடு செய்து படம் எடுப்பவர்களை யாரோ ஒருவர் மிகவும் கீழ்த்தரமாக விமர்சிப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது. படங்களை தாராளமாக விமர்சனம் செய்யுங்கள்.. அதேசமயம் தனிநபர் விமர்சனம், ஒருமையில் விமர்சிப்பதற்கு உங்களுக்கு யாருக்கு உரிமை இல்லை. இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.. இது தொடர்ந்தால் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும்..

 

அதேபோல தயாரிப்பாளர்களுக்கும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.. உங்களை மதிக்காமல் தங்கள் விருப்பப்படி படம் எடுக்கும் தயாரிப்பாளர்களை தேடி ஓடாமல், உங்கள் நிலையறிந்து உங்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் படம் எடுக்கும் இயக்குனர்களை தேடிச்சென்று ஊக்குவியுங்கள் அப்போதுதான் சினிமா செழிக்கும். தயாரிப்பாளரும் லாபம் அடைவார்கள்.

 

சமீபத்தில் இசைஞானி இளையராஜாவின் 75வது விழா நடத்தி  சிறப்பித்தார்கள்.. மிக நல்ல விஷயம். ஆனால் இந்த விழாவிற்கு காட்டிய அக்கறையில் ஒரு பத்து சதவீதமாவது நலிந்து கிடக்கும் சின்ன பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்களை கைதூக்கி விடுவதில் காட்டினால் நன்றாக இருக்கும்” என பேசினார். அவரது பேச்சை கவனித்தபோது கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் இயக்குனர் பாலா போன்றவர்கள் குறித்துதான் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் என்பதை நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது. 

 

இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “நான் சினிமாவில் நுழைய வேண்டும் என சென்னையில் அடியெடுத்த வைத்த அந்த முதல்நாளே, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை சந்தித்து அவரது சிபாரிசுடன் திரைப்படத் துறைக்குள் நுழையும் பாக்கியம் பெற்றவன். ரஜினி, கமல், விஜயகாந்த் என அனைத்து முன்னணி ஹீரோக்களை இயக்கியவன். தயாரிப்பாளர் சங்கத்தில் நான் மூன்றுமுறை பொறுப்பில் இருந்தபோது, திரைப்பட துறைக்கு ஏதாவது நல்லது செய்து விடலாம் என முயற்சிப்பேன்.. ஆனால் அங்கு இருக்கும் சிஸ்டம் என்னை எதுவும் செய்யவிடாமல் ஒவ்வொரு முறையும் தடுத்துவிடும். 

 

இருந்தாலும் தற்போது இருக்கும் தயாரிப்பாளர் சங்கத்துடன் இணக்கமாகவே சென்று அவர்களுக்கும் அரசுக்கும் ஒரு பாலமாக இருந்து செயல்பட்டு திரையுலகிற்கு பல நல்ல விஷயங்களை கொண்டுவர முயற்சி எடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.. அரசாங்கமும் நல்லது செய்ய தயாராகத்தான் இருக்கிறது.. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா முன்பு சிறிய படங்களை வாழ வைப்பதற்காக ஆயிரம் சிறிய திரையரங்குகள் கட்டலாம் என முடிவெடுத்தார். அந்த விஷயத்தை செயல்படுத்த இப்போதும்கூட அரசு தயாராகத்தான் இருக்கிறது. 

 

ஆனால் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்துவிட்டு வெளியே வந்ததுமே, அவர்களைப் பற்றி குறை சொல்லி பேட்டி கொடுத்தால் அவர்களுக்கு எப்படி நமக்கு நல்லது செய்ய மனம் வரும்..? திரையுலகில் உள்ளவர்களை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களிடம் அழைத்துச் சென்று நமது கோரிக்கைகளை முன்வைக்கும் பணியில் நானாகவே முன்வந்து உதவி வருகிறேன். ஆனால் அவர்களை சந்திக்கும் வரை என்னை பயன்படுத்திக்கொண்டு அதன்பின் கறிவேப்பிலையாக ஒதுக்கி விடுகிறார்கள். 

 

அதனால் இனிமேல் இது தொடர்பான விஷயங்களில் தலையிடுவதில் இருந்து விலகி விட நினைக்கிறேன். மேலும் இனிவரும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்றும் முடிவு செய்திருக்கிறேன்.. தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு வேகம் மட்டும் போதாது விவேகமும் தேவை” என தற்போதுள்ள தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளை ஒரு பிடி பிடித்தார் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார். 

 

இந்தப்படத்தின் இயக்குனர் கிருஷ்ணகுமார் பேசும்போது, “சினிமாவைப் பொறுத்தவரை நடிப்பு, டைரக்ஷன், ஒளிப்பதிவு ஆகியவற்றிற்கெல்லாம் படிப்புகள் இருக்கின்றன.. ஆனால் திரைப்பட மார்க்கெட்டிங்கிற்கு என எந்த படிப்பும் இல்லை இன்று சின்ன பட்ஜெட் படங்களை வியாபாரம் செய்ய, தியேட்டர்கள் மட்டுமே இல்லாமல் டிஜிட்டல் மார்க்கெட்டிங் உட்பட பல வழிகள் உண்டு.. அதைப்பற்றி யாரேனும் விவாதிக்க முன்வந்தால் அவர்களோடு சேர்ந்து திரைப்பட வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்ல தயாராக இருக்கிறேன். எந்த சிறிய தயாரிப்பாளர்களும் நஷ்டம் அடையாமல் போட்ட முதலீடு கைக்கு கிடைக்கும் வகையில் பல திட்டங்கள் இருக்கின்றன.” என ஒரு யோசனையையும் முன்வைத்தார்.

Related News

4234

கியாரா அத்வானியை பாராட்டிய ‘டாக்ஸிக்’ இயக்குநர்!
Monday December-22 2025

2026-ம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களுல்  ஒன்றாகக் கருதப்படும், ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும்  ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairytale for Grown-ups), திரைப்படத்தில், கியாரா அத்வானி (Kiara Advani) ஏற்றுள்ள ‘நாடியா’ (Nadia) கதாபாத்திரத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு அதிகாரபூர்வமாக சமீபத்தில் வெளியிட்டது...

நடிகர் பிரபாஸின் புதிய முயற்சி!
Monday December-22 2025

உலகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளுக்கு நேரடியாக தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை அடையும் வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் விதத்தில், ’தி ஸ்கிரிப்ட் கிராஃப்ட் இன்டர்நேஷனல்’ (The Script Craft International Short Film Festival) என்ற தலைப்பில் குறும்பட போட்டி ஒன்று தொடங்கியுள்ளது...

’பருத்தி’ எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது - நடிகை சோனியா அகர்வால்
Saturday December-20 2025

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணியாற்றிய குரு...

Recent Gallery