Latest News :

மலையாள சினிமாவில் இருப்பது தமிழ் சினிமாவில் இல்லை! - நடிகர் ஆர்.கே.சுரேஷ் கவலை
Thursday May-16 2019

மலையாள சினிமாவில் படக்குழுவினர் ஒன்றாக பழகும் சூழல் தமிழ் சினிமாவில் இல்லை, என்று நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் கூறி தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

 

ஆர்யா ஆதி இண்டர்நேஷனல் மூவீஸ் சார்பில் அப்துல் லத்தீப் வடுக்கோட் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03.’ மலையாளம் மற்றும் தமிழில் ஒரே சமயத்தில் தயாராகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

 

இந்த விழாவில் முன்னணி நடிகர் ஆர் கே சுரேஷ், அர்சிதா ஸ்ரீதர், நேகா சக்சேனா, சார்மிளா, ரத்னவேலு, இயக்குநர் மஞ்சித் திவாகர், தயாரிப்பாளர் அப்துல் லத்தீப் வடுக்கோட், ஒளிப்பதிவாளர் அய்யப்பன், திரைக்கதையாசிரியர் ரிஜேஷ் பாஸ்கர்,இசையமைப்பாளர் சிவ சுகுமாரன், தயாரிப்பு நிர்வாகி ஷாஜீன் ஜார்ஜ், கலை இயக்குநர் பீஜேஷ் நின்மாலா , தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் முருகன் கல்லூர், புகைப்படக் கலைஞர் அஜீஸ், நிதி நிர்வாக அதிகாரி ராஜீவ், சண்டைப் பயிற்சிஇயக்குநர் ஜாக்கி ஜான்சன், நடிகர்கள் அபுபக்கர், மாஸ்டர் ஷகர் அப்துல் லத்தீப், பாடலாசிரியர் கானா வினோத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

 

தயாரிப்பாளர் அப்துல் லத்தீப் வடுக்கோட் பேசுகையில், “சஸ்பென்ஸ் த்ரில்லராகத் தயாராகியிருக்கும் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் தங்களின் பங்களிப்பை நேர்த்தியாக வழங்கியிருக்கிறார்கள். இது பெண்களுக்கான அழுத்தமான மெசேஜ் உள்ள படம். தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகியிருக்கிறது. அனைவரும் ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என்றார்.

 

நடிகர் ஆர் கே சுரேஷ் பேசுகையில், “கொச்சின் ஷாதி அட் சென்னை 03 என்கிற மலையாளப்படத்தில் நடிக்கத்தான் நான் முதலில் ஒப்புக்கொண்டேன். ஆனால் படத்தை முடித்துவிட்டு டப்பிங்கில் பார்க்கும் போது, இயக்குநரிடம், ‘இதில் எழுபது சதவீதம் தமிழ் இருக்கிறது. முப்பது சதவீதம் தான் மலையாளம் இருக்கிறது.’ என்றேன். இதன் திரைக்கதை அனைவருக்கும் பொருந்தக்கூடியது. அதிலும் இந்தியாவிற்கு தற்போது தேவைப்படும் திரைக்கதை. சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட திரைக்கதை. அதனால் இதனை தமிழ் ரசிகர்களிடத்திலும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று சொன்னேன். அவர்களும் ஒப்புக்கொண்டு இதனை தமிழிலும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இதற்காக நான் ஊடகத்துறைக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். நாம் சாதி ரீதியில் பிரிக்கப்பட்டிருந்தாலும், மத ரீதியில் பிரிக்கப்பட்டிருந்தாலும் இந்தியன் என்ற உணர்வில் ஒன்றாகவேயிருக்கிறோம். மலையாள மக்கள் என்னை இந்தளவிற்கு ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. எனக்கு மலையாள உலகம் புதிதாக இருந்தது. ஆனால் படபிடிப்பிற்காக கேரள மண்ணில் கால் வைத்தவுடன் அங்கு பணியாற்றும் அனைவரும் ஒரு குடும்பம் போல் ஒருங்கிணைந்து பணியாற்றினார்கள். அந்த உணர்வு தமிழ் திரையுலகில் இல்லை என்று வெளிப்படையாக சொல்வேன். இருந்தாலும் தமிழ் நாடு என்னுடைய தாய் வீடு அல்லவா?.

 

இந்த படத்தின் படபிடிப்பின் போது ஒரு சம்பவம் நடைபெற்றது. தொழிலாளர்களுக்கான பணப்பட்டுவாடா செய்வதில் சற்று தாமதம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள தொழிலாளர் அமைப்பு படபிடிப்பை நிறுத்திவிட்டது. உடனே நான் என்னுடைய சொந்த பணத்தை ஒரு லட்ச ரூபாயைக் கொடுத்தேன். ஆனால் அவர்கள் முதலில் வாங்க மறுத்தார்கள். நீங்கள் வேற்று மாநிலத்தவர்கள் என்றும், உங்களிடம் வாங்க மாட்டோம் என்றும் சொன்னார்கள். நான் உடனே நான் வேற்று மாநிலத்தவன் அல்ல. சினிமாவின் நேசிப்பவன். சினிமாவிற்கு மொழி பேதம் கிடையாது. இதனை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டபிறகு அவர்கள் வாங்கிக் கொண்டார்கள். இந்த சம்பவத்திற்குப் பிறகு நானும் தயாரிப்பாளரும் நெருக்கமாகி விட்டோம். இதன் காரணமாக அவர் என்னை வைத்து அடுத்தடுத்து மூன்று படங்கள் தயாரிக்கும் அளவிற்கு, என்னுடைய நிறுவனத்தில் முதலீடுசெய்திருக்கிறார். இதற்காக நான் நன்றி சொல்லக்கடமைப்பட்டிருக்கிறேன்.

 

மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருக்கு இங்கு உள்ள வரவேற்பு, தமிழ் நடிகர்களான விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்களை அவர்கள் கொண்டாடுகிறார்கள். மதிக்கிறார்கள்.அந்த வகையில் தமிழ் திரையுலகமும், மலையாள திரையுலகமும் ஒன்றிணைந்த சகோதரர்கள் போல் செயல்படுகிறார்கள்.

 

இந்தப் படத்தின் கதையைக் கேட்டதும் எனக்கு பிடித்திருந்தது. நான் மலையாளத்தில் நாயகனாக நடிக்கும் முதல் படமிது. இந்த படத்தின் கதை ஒரு வருடத்திற்கு முன்னரே எழுதப்பட்டது. அதில் பொள்ளாச்சி சம்பவங்கள் போல் பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கிறது. பெண்கள் தங்களை எப்படியெல்லாம் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை சொல்லும் படமாகவும் தயாராகியிருக்கிறது.

 

தமிழகத்தில் மலையாளம், தெலுங்கு மொழியின் நேரடி படங்கள் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்று வருகின்றன. இங்கு பன்முக கலாச்சாரம் அறிமுகமாகியிருக்கிறது. இது சினிமாவை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.

 

Cochin Shadi at Chennai 03

 

இயக்குநர் மஞ்சித் திவாகர் பேசுகையில், "இது என்னுடைய இரண்டாவது படம். குருவாயூர் கோவிலில் முதல் நாள் படபிடிப்பைத் தொடங்கினேன். தற்போது வரை அவரின் அருள் இருக்கிறது என்று உறுதியாக நம்புகிறேன். தயாரிப்பாளர் அப்துல் சார் தான்இந்த படத்தை முடித்து, ஜூனில் வெளியிடுவதற்காக திட்டமிட்டு வருகிறார்.இந்தப் படத்தின் கதையை நான்காண்டுகளுக்கு முன் கதாசிரியர் ரிஜேஷ் கொச்சியில் சந்தித்து என்னிடம் சொன்னார். அப்போது சென்னை அம்பத்தூரில் 1993 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவம் பற்றிக் கூறினார். அதை மையமாக வைத்து தான் இதன் திரைக்கதையை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம்.ஷாதிகா என்ற கதாப்பாத்திரத்திற்கேற்ற நடிகைக்கான தேடலில் ஈடுபட்டோம். இறுதியில் அந்த கேரக்டரில் அர்சிதா ஸ்ரீதர் நடித்திருக்கிறார்.

 

இந்தப் படத்தின் டைட்டில் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03 ’என்றதும், சிலர் இணையத்தில் ஷாதி என்றால் திருமணம் என்பதால், இப்படத்தின் டைட்டிலை ட்ரோல் செய்தனர். ஆனால் அதற்கு நான் எந்த எதிர்வினையிலும் ஈடுபடாமல் அமைதியானேன். அதனையடுத்து இந்த படத்தில் போலீஸ் அதிகாரி அமீர் யூசுப்பாக ஆர் கே சுரேஷையும், டாக்டர் செரீனா தாமஸ் என்ற கதாபாத்திரத்தில் கன்னடத்து நடிகையான நேகா சக்சேனாவையும் ஒப்பந்தம் செய்தேன்.  லட்சுமி என்ற அம்மா கேரக்டரில் நடிகை சார்மிளா நடித்திருக்கிறார்.

 

‘ஷிகாரி சம்பவம்’ என்ற மலையாளப் படத்தில் நடிகர் ஆர். கே. சுரேஷின் நடிப்பைப் பார்த்து தான் இந்த கேரக்டரில் நடிக்க வைத்தேன். அற்புதமான திறமைக் கொண்ட நடிகர். அவர் நடித்த பிறகு தான் இந்த படத்தின் தோற்றமே மாறிவிட்டது. ‘கானா கொம்பத்து ’ என்ற படத்தில் நடித்த நடிகர் வினோத்தை, இந்த படத்தில் ரஞ்சன் என்ற கேரக்டரில் நடிக்க வைத்திருக்கிறேன். இது போல் ஒவ்வொரு கேரக்டருக்கும் பொருத்தமான நடிகர் நடிகைகளைத் தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறோம்.

 

இந்தப் படத்தின் கதை கொச்சியிலிருந்து சென்னை நோக்கி பயணிக்கிற கதை. இதில் நாயகி, தன்னுடைய சொந்த பணிக்காக சென்னைக்கு வருகை தருகிறார். அவர் வரும் போது சந்திக்கும் சம்பவங்களும், அதன் விளைவுகளும் தான் திரைக்கதை. பொள்ளாச்சி சம்பவங்களுக்கும், இந்த படத்தின் திரைக்கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனாலும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் செய்தி ஒன்றையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறோம். அதனை கமர்சியல் அம்சங்களுடன் இணைத்து உருவாக்கியிருக்கிறோம்.” என்றார்.

 

அதன் பிறகு படக்குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து படத்தின் டிரைலரை வெளியிட்டனர்.


Related News

4870

‘Thandakaaranyam’ Now Streaming on Amazon Prime Video!
Sunday November-23 2025

VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்க திரைப்படமாக தேர்வான ‘அமரன்’!
Saturday November-22 2025

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...

ரசிகர்கள் நிராகரிப்பு, காட்சிகள் ரத்து! - படுதோல்வியடைந்த கவினின் ‘மாஸ்க்’!
Saturday November-22 2025

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...

Recent Gallery