Latest News :

”’ஜிப்ஸி’ எனக்கு ஒரு பெரிய பயணம்” - ஜீவா பெருமிதம்
Monday May-20 2019

தரமான படங்களை கொடுக்கும் இயக்குநர் ராஜு முருகனின் எழுத்து, இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் இசை மற்றும் டிரைலர் இன்று வெளியாகி மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தனது ஒவ்வொரு படத்திலையும் அதிரடியாக அரசியல் பேசும் ராஜு முருகனின் இந்த ‘ஜிப்ஸி’ யும் அரசியல் பேசுவதோடு நின்றுவிடாமல் வேறு சிலதையும் செய்திருக்கிறது, என்பது டிரைலரிலேயே தெரிகிறது.

 

ஒலிம்பியா மூவிஸ் சார்பாக எஸ்.அம்பேத்குமார் தயாரித்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், “ராஜு முருகன் அண்ணன் எழுதிய பின் தான் நான் எழுதினேன். அப்போது அவரிடம் நிறைய கேட்டு தான் எழுதினேன். நாம் பேச நினைக்கும் அரசியலை அதோட கலைத்தன்மை கெடாமல் எப்படி பதிவு செய்ய வேண்டும் என்பதை அறிந்து வைத்திருப்பவர். இந்தப்படம் எதைத் தாங்கி நிற்கிறது என்பதை கணிக்க முடிகிறது. அண்ணன் இப்படியான படங்கள் எடுத்து வருவது சந்தோஷமாக இருக்கிறது. இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மிகச் சிறந்த உழைப்பைக் கொடுத்திருக்கிறார். நான் பேசிய முதல் ஹீரோ ஜீவா தான். அவர் இப்படத்திற்கு மிகப்பொருத்தமாக இருக்கிறார்.” என்றார்.

 

இயக்குநர் கோபி நயினார் பேசுகையில், “இந்தப்படம் மக்கள் நேசிக்கும் படமாக இருக்கும். இந்தமாதிரியான படங்களில் நடிப்பதற்கு சமூக அக்கறை கொண்டிருக்க வேண்டும். என்னைப் போன்றவர்களுக்கு ராஜு முருகன் தான் பெரிய நம்பிக்கை. அவர் அவரது அரசியலை துணிச்சலாகப் பேசி வருகிறார். தாழ்த்தப்பட்ட மக்களின் குரலை அவர் பதிவு செய்வதின் வழியாக எங்களுக்குப் பெரிய உந்துதலைக் கொடுக்கிறார்.” என்றார்.

 

இயக்குநர் சீனு ராமசாமி பேசும் போது, “எனக்கு ராஜு முருகன் மீது ஒரு தனிப்பட்ட அன்பு உண்டு. ஜனாதிபதியை விமர்சனம் செய்து ஜனாதிபதி விருது வாங்கியவர் அவர். ஒரு நேர்மையான பத்திரிகையாளராக பல பயணங்கள் மேற்கொண்டு பல அனுபவங்களைச் சேர்த்திருக்கிறார். இந்த ட்ரைலர் பார்த்து மிரண்டுவிட்டேன். ஜீவா தான் நடிக்க வந்த காலத்தில் இருந்து இப்படியான பெரிய பெரிய  கதாபாத்திரங்களையும்  ஏற்று நடித்து வருகிறார். ஜிப்ஸி என்றால் பயணி. அந்த வகையில் இப்படம் உலகத்தில் சிறந்த பயணமாக இருக்கும் என்று நம்புகிறேன். நாம் இந்தப் படத்தின்  தயாரிப்ப்பாளர் அம்பேத்குமாரை  சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்க வேண்டும்.” என்றார்.

 

கரு.பழனியப்பன் பேசும்போது, “ராஜு முருகன் யுகபாரதிக்கு எப்படி ஒரு தம்பியோ அதுபோல் என்னைப் போல பலபேருக்கு அவர் தம்பி. ஜீவா, இசை அமைப்பாளர் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த தயாரிப்பாளர் அம்பேத்குமார் பெரிதாக ஜெயிக்க வெண்டும். அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர். ஒரு பையனுக்கு ஒரு மருத்துவ உதவி தேவைப்பட்டது. நான் தயங்கி கேட்டேன். ஆனால் அதை செய்து கொடுத்தார். நான் ஆஸ்பிட்டல் போகும் முன்பே அவர் அங்கிருந்தார். முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் இப்படியான உதவிகளால் தான் இன்னும் சட்டமன்ற உறுப்பினராக  இருக்கிறார்.  மக்கள் மீது எப்படி ஈடுபாட்டோடு இருப்பாரோ அப்படித்தான் அவர் படங்களும் இருக்கும்.ராஜு முருகன் அரசியல் பேசாமல் இருக்க மாட்டார். அதனால் அவரும் சட்டமன்றத்திற்குச் செல்ல வாழ்த்துகிறேன்.” என்றார்.

 

மலையாள இயக்குநர் லால்ஜோஸ் பேசும்போது, ”முதலில் என்னை நடிக்க அழைத்தார்கள். நான் ஆள்மாத்தி என்னை அழைத்து விட்டார்கள் என்று நினைத்தேன். சென்னை தான் என்னை இயக்குநர் ஆக்கியது. இந்தப்படத்தில் சின்ன ரோல் தான் என்று நினைத்தேன். ஆனால் பெரிய ரோல். ஸ்பாட்டில் நடிகராக இருக்கும் போது பெரிய பதட்டம். படிச்ச டயலாக்ஸ் எல்லாம் மறந்து போனது. சூட்டிங் முடிந்த போது இனி நான் தப்பித்தேன் என்று நினைத்தேன். ஆனால் டப்பிங்கும் நான்தான் பேசணும் என்றார்கள். பேசி இருக்கிறேன். இந்த ஜிப்ஸி  ஒரு அபூர்வ சினிமா. பெரிய இயக்குநர்களின் பெயரைப் பார்த்து தான் நாங்கள் படம் பார்ப்போம். அதேபோல் வருங்கால சந்ததியினர்  ராஜு முருகன் பெயரைத் தேடுவார்கள்.” என்றார்.

 

ஜிப்ஸி படத்தில் நடித்துள்ள பாந்த்சிங் அவர்களின் "துணிவின் பாடகன் பாந்த்சிங்" என்ற நூலை சந்தோஷ் நாராயணனோடு இணைந்து வெளியீட்ட தேனிசை செல்லப்பா பேசும்போது, ”இந்தத் திரைப்படத்தில் நாடோடியாக வரும் ஜீவா மிகச் சிறந்த நடிகர். சாதி இல்லாமல் மதம் இல்லாமல் மனிதனால் வாழ முடியுமா? என்றால் முடியும். அதை தொடர்ந்து உரக்கச் சொல்லுங்கள். அதை அம்பேத்குமார் போன்றவர்கள் ராஜு முருகன் போன்றவர்கள் தொடர்ந்து செய்யும் போது நாங்கள் அவர்களுக்கு துணையாக இருப்போம்.” என்றார்.

 

Gypsy Audio Launch

 

பாடலாசிரியர் யுகபாரதி பேசும்போது, “ஜீவா எத்தனையோ படங்கள் நடித்திருக்கிறார். ஆனால் இதுதான் அவர் பெயருக்கான படம். என் தம்பி ராஜு முருகனுக்கு அண்ணனாக நன்றிச் சொல்லிக்கொள்கிறேன். அவன் தேசியவிருது வாங்கி இருக்கிறான் வாங்க இருக்கிறான். அதைவிட எல்லாம் பெருமை இந்தப்படத்தில் பாந்த்சிங் போன்றவர்களை  வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறான் அதுதான் பெருமை. நான் சந்தோஷ் நாராயணன் சாரின்  பெரிய ரசிகர். இந்தப்படத்தின் காரணி அம்பேத்குமார். அவர் இனிஷியல் S. அவர் எதற்குமே நோ சொன்னதே கிடையாது. தேனிசை செல்லப்பா பற்றி இன்றைய தலைமுறைக்கு தெரியாது. ஈழத்தில் நடந்த கொடுமைகளை உலகுக்கு சொல்ல பாடல்கள் மூலமாக நிதி திரட்டியவர். மேலும் இந்த ஜிப்ஸி மிகப்பெரிய வெற்றியை அடையும்.” என்றார்.

 

இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும்போது, ”முதல்முறையாக என் ஸ்டுடியோவில் குக்கூ படத்தின் இசைப்பதிவு தான் நடந்தது. ராஜுமுருகன் ஒரு மாமனிதன். இந்தப்படத்திற்கு ஜிப்ஸி என்ற பெயரை கேட்டதும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஏன்னா எல்லா கலைகஞர்களும் ஒரு ஜிப்ஸியாக இருக்க ஆசைப்படுவார்கள். அந்த அனுபவத்தை மொத்தமாக கொடுத்த ராஜு முருகன் அவர்களுக்கு நன்றி. தயாரிப்பாளர் அம்பேத்குமார் இதுவரை எங்கள் வேலைகளில் தலையிட்டதே இல்லை. எல்லாவிதமான கல்ச்சர் உள்ள மக்களுக்கும் கர்நாடக இசையை கொண்டு சேர்க்கும் திரு.டி.எம் கிருஷ்ணா இந்தப்படத்தில் பாடி இருக்கிறார். இந்தப்படத்தில்  பாடகர்கள் உள்பட 200 இசை கலைஞர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். இந்த ஜெனரேஷனின் பெஸ்ட் ரைட்டராக அறிவு அவர்களைப் பார்க்கிறேன். அவர் எழுதிய பாடல் எனக்குப் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது. ஜீவா உள்பட எல்லோரும் பயங்கரமாக உழைச்சிருக்காங்க. இந்தப்படம் உணர்வு ரீதியாகவும் டெக்னிக்கலாகவும் சிறப்பாக வந்திருக்கிறது.” என்றார்.

 

தயாரிப்பாளர் அம்பேத்குமார் பேசும்போது, “ஒலிம்பியா மூவிஸின் ஜிப்ஸி படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் நன்றி. நானும் ராஜு முருகனும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சின்னபட்ஜெட் படம் ஒன்று பண்ணலாம் என்று பேசினோம். யுகபாரதி வீட்டில் இருந்து யாரை ஹீரோவாகப் போடலாம் என்று பேசினோம். யுகபாரதி ஜீவாவைச் சொல்லவும் உடனே முடிவு செய்தோம். அதன் பின் இந்தப்படம் பெரியபடமாக வளரத் துவங்கியது. எனக்கு எல்லாத் தரப்பிலும் நண்பர்கள் உதவி வருகிறார்கள். அவர்களுக்கும் என் குடும்பத்திற்கும் நன்றி.” என்றார்

 

நடிகர் ஜீவா பேசும்போது, “ஜிப்ஸி எனக்கு ஒரு பெரிய பயணம். என் வீட்டிலே நான் ஜிப்ஸி போல தான். இந்தமாதிரி ஒரு படம் கிடைத்ததும் மிகப்பெரிய மகிழ்ச்சி ஆனேன். ஜிப்ஸி ரசிகனை முன்மொழிபவன். இன்னைக்கு நம்ம போன் நியூஸ் சேனல் எல்லாத்தையும் பார்க்காமல் இருந்தால் பிரச்சனைகள் இல்லாமல் இருப்பது போல இருக்கும். இந்தப்படத்திற்கு நான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணித்து இருக்கிறேன். இந்தப்படத்தில் ராஜுமுருகன் சார் எனக்கு நல்ல தீனி கொடுத்து இருக்கிறார். ஒரு நடிகன் நல்ல பெயர் வாங்குறான்னா அதற்கு காரணம் இயக்குநரின் எழுத்து தான். ராஜு முருகன் எழுத்து உணர்வைச் சரியாக வெளிப்படுத்தும். ராம், கற்றது தமிழ் படங்கள் எப்படி எமோஷனை வெளிப்படுத்தியதோ ஜிப்ஸி அதைவிட அதிகமாக எமோஷனை வெளிப்படுத்தும். ராஜு முருகன் ஒரு கம்ப்யூனிஸ்ட். இந்தமாதிரியான ஆடியோ லாஞ்ச்கள் தான் நிறைய நடக்க வேண்டும். பாந்த்சிங் போன்றவர்களை அறிமுகப்படுத்திய இந்தமேடை மிகச்சிறப்பான மேடை. இந்தப்படத்தில் உழைத்த அனைவருமே உண்மையாக உழைத்திருக்கிறார்கள்.  எனக்கு நல்ல ஒரு ஆல்பத்தை இந்தப்படம் மூலம் தந்த இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு நன்றி.” என்றார்.

Related News

4901

‘Thandakaaranyam’ Now Streaming on Amazon Prime Video!
Sunday November-23 2025

VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்க திரைப்படமாக தேர்வான ‘அமரன்’!
Saturday November-22 2025

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...

ரசிகர்கள் நிராகரிப்பு, காட்சிகள் ரத்து! - படுதோல்வியடைந்த கவினின் ‘மாஸ்க்’!
Saturday November-22 2025

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...

Recent Gallery