ட்ரீம் வாரியர் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ராட்சசி’. அறிமுக இயக்குநர் எஸ்.ஒய்.கெளதம்ராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஜோதிகா அரசு பள்ளி ஆசிரியையாக நடித்திருக்கிறார்.
அரசு பள்ளி மாணவர்களின் தேவை உள்ளிட்ட கல்வி குறித்து பல விஷயங்களை பேசியிருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய ஜோதிகா, அரசு பள்ளி மாணவர்களுக்கு போதிய வசதி செய்துக் கொடுக்காமல் நீட் தேர்வு எழுத சொன்னால் எப்படி எழுதுவார்கள், என்று நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து படம் குறித்து பேசிய ஜோதிகா, “சூர்யா, கார்த்தியை மட்டும் வைத்து ட்ரீம் வாரியர் நிறுவனம் படம் பண்ணிட்டு இருந்தார்கள். நானாக தான் போய் கேட்டேன். ட்ரீம் வாரியர் நிறுவனத்தைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர்கள் எந்த சின்ன படங்கள் தயாரித்தாலும் வெற்றியடைகிறது. அவர்களது கதைத் தேர்வு அற்புதமாக இருக்கிறது. ஆகையால் தான் முதல் முறையாக புது இயக்குநருடன் பணிபுரிகிறேன். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, பிரகாஷ் இருவருமே அரசுப் பள்ளியில் படித்தவர்கள். அவர்களது உதவி இந்தப் படத்தில் நிறையவே இருந்தது.
இயக்குநர் கெளதம் 2 மணி நேரம் கதை சொன்னார். அரசாங்க பள்ளி எப்படி நடக்க வேண்டும் என்ற மெசேஜ் ஏற்கனவே வந்திருக்கிறது. ஆனாலும், இந்தக் கதை அவ்வளவு புதிதாக இருந்தது. இதிலிருக்கும் சின்ன சின்ன விஷயங்கள் அற்புதமாக இருக்கும். இதிலுள்ள காதல் ட்ராக் புதிதாக இருக்கும். ஒரு அப்பா, பெண்ணோட ரிலேஷன்சிப் புதிதாக இருக்கும். இயக்குநர் கல்யாணத்துக்கு முன்பு எப்படி இவ்வளவு அனுபவமாக வாய்ந்தவராக இருக்கிறார் என்று தெரியவில்லை. புதிய இயக்குநர்கள் கதைச் சொல்லும் போது, ஒரு தெளிவுடன் படம் மூலமாக சமூகத்துக்கு என்ன கருத்துச் சொல்லப் போகிறோம் என்று தெளிவாக சொல்கிறார்கள். நடிகர்களின் மார்க்கெட், வியாபாரம் பற்றி யோசிக்காமல் கதைக்கு உண்மையாக இருக்கிறார்கள். இந்தப் படத்தில் எனது புதிய நடிப்பைப் பார்க்கலாம். நீங்கள் நடிக்கலாம், ஆனால் அதில் கீதாராணி டீச்சர் இருக்க வேண்டும் என்று சொல்வார் இயக்குநர். அவரது கோபம் தெரிய வேண்டும் என்பார். பாரதி தம்பி சார் வசனம் எழுதியிருக்கார். அவருக்கு நான் ஒரு வட இந்தியப் பெண் என்ற யோசனை வரவில்லை என நினைக்கிறேன். அவ்வளவு கடினமாக வசனங்கள் இருந்தது. இந்தப் படத்தின் முகமாக இருந்ததில் மகிழ்ச்சி.
ஒளிப்பதிவாளர் கோகுல் என்னை ஒல்லியாக காண்பிக்க ரொம்பவே கஷ்டப்பட்டார். அவர் பணிபுரியும் படத்தில் மீண்டும் நடிக்க ஆசையாக இருக்கிறது. அவரது உழைப்பு அபாரமாக இருந்தது. மதிய உணவு இடைவேளை கூட இல்லாமல் படப்பிடிப்பு செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், எனக்கு இடைவேளை உண்டு. இந்த மாதிரியான ஒரு பெரிய உழைப்பு, எந்தவொரு பெரிய படத்திலும் பார்த்ததில்லை. படம் மீது அவர்களுக்கு இருந்த காதல் அற்புதமானது. இந்தப் படத்தின் நாயகன் ஷான் ரோல்டன். ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் பாடல்கள் கேட்டேன். கேட்டவுடனே பிடித்திருந்தது. அவர் படித்ததை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியுள்ளார். படத்தின் எடிட்டிங்கே புதுமையாக இருந்தது.
ட்விட்டரில் சிலர் பெண் சமுத்திரக்கனி, சாட்டை படம் என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். இந்தப் படத்தில் அதே அரசாங்கப் பள்ளிகள் தொடர்பான கருத்து இருக்கலாம். ஆனால், படம் அப்படியில்லை. 100 படங்கள் இதே போன்று வந்தாலும் கூட, இது தேவை தான். சமூகத்துக்கு தேவை தான். பெரிய பட்ஜெட் படங்களில் கூட ஒரே கதையை வேறொரு பார்வையில் சொல்கிறார்கள். அதைப் பற்றி பேச யாருமே தயாராக இல்லை. நாயகன் வருவார், 2-3 நாயகிகளை காதலிப்பார், இடைவேளை, எமோஷன், க்ளைமாக்ஸ் என இருக்கும். அதைப் பற்றி யாருமே பேசுவதே இல்லை. அதை விட்டுவிட்டு இந்தப் படம் மட்டும் ஏன் பள்ளிக்கூடம், சாட்டை மாதிரி இருக்கிறது என சொல்வது ஏன் என தெரியவில்லை.
அகரம் பவுண்டேஷனில் 99% மாணவர்கள், அரசுப் பள்ளியிலிருந்து வந்திருக்கிறார்கள். அதில் சுமார் 35% மாணவர்களிடம் பேசும் போது, அவர்களது வகுப்பறைக்கு ஒரு வருடமளவுக்கு ஆசிரியர்களே வரவில்லை. ஆசிரியர்களே இல்லாமல் இருக்கிறார்கள். அந்த மாதிரியான ஒரு சூழலைக் கொடுத்துவிட்டு, எப்படி நீட் தேர்வு எழுதச் சொல்ல முடியும். தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அரசாங்க பள்ளியில் படித்தவர்கள் தான். ஆகவே, இதே மாதிரியான கருத்துகள் 100 படத்தில் வந்தால் கூட நிம்மதியாக உட்கார்ந்து பார்க்கலாம்.
இந்தப் படத்தில் நடித்துள்ள பூர்ணிமா பாக்யராஜ் மேடம் தான் படப்பிடிப்பில் என் துணை. ஒரு எமோஷன் காட்சியில் இருவரும் இணைந்து நடித்துள்ளோம். அவர் ஒரு அற்புதமான நடிகை. இதர நாயகிகளுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு அமையவில்லை. பெண்ணோடு ஒரு காட்சியில் நடித்தால், அதன் அனுபவமே புதுமையாக இருக்கும். இப்படத்தில் என்னோடு நடித்த டீச்சர்கள் அனைவருக்குமே நன்றி. அவர்கள் ரொம்ப எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். அதற்கு ஈடுகொடுத்து நடிப்பதே கடினமாக இருந்தது.

5 ஆண்டுகளுக்கு முன்பு என் பெண்ணுடைய பள்ளி ஆண்டுவிழாவில் டீச்சர் ஒருவர் பேசியதை இங்கு கூறலாம் என நினைக்கிறேன். ஏனென்றால் அந்த வார்த்தைகளை கேட்டவுடன் அதனை என் வாழ்க்கையில் கடைப்பிடித்து வருகிறேன். மலையில் உயரமான இடத்துக்கு ஏறிவிட்டு, கீழே நிற்பவர்களை பார்ப்பதற்கு பெயர் வெற்றி என இருக்கலாம். அது வாழ்க்கையில் ஒரு சாதனை கிடையாது. எது முக்கியம் என்றால், மலை ஏறும் போது கிடைத்த அனுபவம் தான் அழகாக இருக்க வேண்டும். சுற்றியிருப்பவர்களும் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருக்க வேண்டும். இந்த வார்த்தைகளை என் 2-வது திரையுலக பாதையில் ஏறும் போது, எனக்கு ரொம்பவே அழகான கதைகள் வருகிறது. நான் அதிலிருந்து சிறந்ததை தேர்வு செய்கிறேன். அதுக்கு மேல் பெண்களுக்கு மரியாதை கொடுக்கிற ஆண்களை அதிகமாக இந்தப் பயணத்தில் தான் சந்தித்திருக்கிறேன். அம்மா, பெண், நடிகை என்ற வரிசையில் இப்போது தான் ரொம்ப திருப்தியாக இருக்கிறது. அதுவே என் வாழ்க்கையில் மிகப்பெரிய் சாதனையாக நினைக்கிறேன்.” என்றார்.
இப்படத்தில் ஆசிரியையாக நடித்திருக்கும் ஜோதிகா, சண்டைக்காட்சிகளிலும் நடித்திருக்கிறாராம். குறிப்பாக சிலம்பம் சண்டை ஒன்றில் அவர் நடித்திருப்பது அனைவரும் கவரும் விதத்தில் வந்திருக்கிறதாம்.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...